இந்திய மாணவர்களுக்கு உதவித்தொகைகளை அள்ளித்தரும் அயர்லாந்து!



வெளிநாட்டுக் கல்வி

உயர்கல்வி தனியார்மயமான பிறகு, கிராமப்புற, ஏழை, அடித்தட்டுக் குடும்பத்து மாணவர்கள் பெரும்பாலும் பின்தங்கிப் போனார்கள். +2 முடித்தவர்களில் சொற்ப மாணவர்களே உயர்கல்வியைத் தொட்டார்கள். இன்று, மத்திய, மாநில அரசுகள் உருவாக்கியுள்ள பல்வேறு திட்டங்கள் இந்த நிலையை ஓரளவுக்கு மாற்றியிருக்கிறது.

குறிப்பாக, கல்விக்கடன் திட்டம். இன்றைக்கும் பெரும்பாலான வங்கி மேலாளர்கள் கடன் கொடுக்காமல் இழுத்தடிப்பதும், அலையவிடுவதும் நடக்கிறதுதான். ஆனால், இந்திய அளவில் அதிக கல்விக்கடன் பெற்றவர்களில் கேரளாவும் நாமும்தான் முன்னே நிற்கிறோம். அந்த வகையில் பிற மாநிலங்களோடு ஒப்பிடும்போது, அத்திட்டம் தமிழகத்தில் சிறப்பாகவே செயல்பட்டுள்ளது என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

வெளிநாட்டில் படிக்க, 20 லட்சம் வரை கல்விக்கடன் கிடைக்கிறது. இந்திய வங்கிகள் அசோசியேஷன் கல்விக்கடனுக்கு ஏராளமான சலுகைகளைத் தந்திருக்கிறது. அவற்றைப் பயன்படுத்தி பல மாணவர்கள் கல்விக் கடன் பெற்று வெளிநாடு சென்று படிக்கிறார்கள். இன்றுள்ள சூழலைக் கணிக்கும்போது, வருங்காலங்களில் வெளிநாட்டில் படிக்கும் தமிழக மாணவர்களின் எண்ணிக்கை பல மடங்கு உயரும் என்பதில் சந்தேகமில்லை.

அயர்லாந்தைப் பொறுத்தவரை பெரும்பாலான உயர்கல்வி நிறுவனங்களை அரசாங்கமே நடத்துகிறது. அங்குள்ள தனியார் கல்வி நிறுவனங்கள் பெரும்பாலான மாணவர்களை ஈர்ப்பதில்லை. அரசே கல்வி நிறுவனங்களை நடத்துவதால், தரம் உயர்வதோடு, நிறைய உதவித்தொகைகள், மானியங்களும் கிடைக்கின்றன. அதிலும் சர்வதேச மாணவர்களை ஈர்ப்பதற்காக அயர்லாந்து அரசு ஏகப்பட்ட சலுகைகளை வழங்குகிறது.

அண்மைக்காலமாக இந்திய மாணவர்களின் மீது அயர்லாந்து அரசின் கனிவுப் பார்வை பட்டிருக்கிறது. அதனால் ஆங்கில வழி நாடுகளில் படிக்க விரும்பும் மாணவர்கள் முதலில் அயர்லாந்தைப் பரிசீலித்து விட்டு பிற நாடுகளைப் பரிசீலிக்கலாம் என்பது என் பரிந்துரை. அயர்லாந்தின் டாப்-4 கல்லூரி என்றால், Dublin City University (www.dcu.ie). இந்தப் பல்கலைக்கழகம் 1975ல் உருவாக்கப்பட்டது. 72 ஏக்கர் பரப்பில் டப்ளின் நகரில் விரிந்து கிடக்கிறது. இங்கு 120 வகையான படிப்புகள் வழங்கப்படுகின்றன. 12 ஆயிரம் மாணவர்கள் படிக்கிறார்கள்.

சர்வதேச தரப்பட்டியலில் 50வது இடத்தில் இருக்கிறது இக்கல்வி நிறுவனம். ஹெல்த் டெக்னாலஜி, இன்பர்மேஷன் டெக்னாலஜி, சஸ்டைனபிள் அண்ட் சோசியல் சயின்ஸ் ஆகிய துறைகளின் ஆராய்ச்சிக்குப் பேர் பெற்ற நிறுவனம் இது. டெக்னாலஜி, எஞ்சினியரிங், பிசினஸ், கம்யூனிகேஷன், ஹியூமனிட்டீஸ், அறிவியல், மருத்துவம் ஆகிய படிப்புகளை இக்கல்வி நிறுவனத்தில் படிப்பது சிறப்பு. அயர்லாந்தின் டாப்-5 கல்வி நிறுவனம், University of Limerick (www.ul.ie). இந்தக் கல்வி நிறுவனம் 1972ல் தொடங்கப்பட்டது. 3400 ஏக்கர் பரப்பளவு கொண்ட வளாகத்தைக் கொண்டது இந்நிறுவனம்.

அயர்லாந்தின் மிகப்பெரிய கல்வி நிறுவனங்களில் இதுவும் ஒன்று. இங்கு மட்டும் 11 ஆயிரம் இளங்கலை மாணவர்களும் 1300 முதுகலை மாணவர்களும் 800 ஆராய்ச்சி மாணவர்களும் படிக்கிறார்கள். 420 பேராசிரியர்கள் பணிபுரிகிறார்கள். பிசினஸ், எஜீகேஷன், ஹெல்த் சயின்ஸ், எஞ்சினியரிங், ஆர்ட்ஸ் அண்ட் ஹியூமனிட்டீஸ், சோசியல் சயின்ஸ் ஆகிய படிப்புகள் இந்தக் கல்வி நிறுவனத்தில் புகழ் பெற்றவை.

இப்பல்கலைக்கழகத்தில் 70 மாணவர் மன்றங்கள் செயல்படுகின்றன. மெட்டீரியல்ஸ், அட்வான்ஸ்டு மேனுபேஃக்சரிங், சாப்ட்வேர், ஹெல்த், அப்ளைடு மேத்தமேடிக்கல் சயின்ஸ் ஆகிய துறைகளில் இந்நிறுவனம் ஏராளமான ஆராய்ச்சிகளைச் செய்துவருகிறது. அயர்லாந்தின் டாப்-6 கல்வி நிறுவனம் National University of Ireland, Galway  (www.nuigalway.ie). பல்வேறு தனித்தன்மைகளைக் கொண்ட இக்கல்வி நிறுவனம் பற்றி அடுத்த இதழில் பார்ப்போம்.                           

னிவாஸ் சம்பந்தம்
வெளிநாட்டுக் கல்வி ஆலோசகர்