அலசல் கல்வி உரிமைச் சட்டம்?



அலசல்

கல்வி ஒவ்வொரு குழந்தைக்கும் அடிப்படை உரிமை என்று கல்வி உரிமைச் சட்டம் மூலம் இந்திய அரசு உறுதி செய்திருக்கிறது. சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகள் கழித்தே வந்திருக்கும் இந்த அறிவிப்பை அங்கலாய்ப்பதா, இப்போதாவது இது நிகழ்ந்ததே என்று மகிழ்வதா என்று தெரியவில்லை.

அது ஒரு பக்கம் இருக்க, வெறும்  எழுத்துவடிவில் மட்டுமே இருக்கும் உரிமைகளும் சட்டங்களும் உள்ள நீண்ட பட்டியலில் இந்த கட்டாயக் கல்வித் திட்டமும் இணைந்துவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நம்நாட்டில் பள்ளிக் கல்வியில் சேரும் மாணவர்களில் 53 சதவீதம் பேர் ஆரம்பக் கல்வியோடு நின்றுவிடுகின்றனர். இதற்கு வறுமை, கல்வி நிறுவனங்களின் கட்டமைப்பு, கல்விக்கான கட்டணம், கல்விச்சூழல் எனப் பல காரணங்களைச் சொல்லலாம்.

இந்நிலையை மாற்றி அனைவருக்குமான கல்வியை உறுதி செய்ய இலவச மற்றும் கட்டாயக் கல்விச் சட்டம் 2009,  ஆகஸ்ட்  மாதம் 4ம் தேதி இந்திய நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டது. 2010 ஏப்ரல் 1ல், ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலம் தவிர இந்தியா முழுவதும் இச்சட்டம் நடைமுறைக்கு வந்தது. இதன்மூலம், இந்தியாவில் 6 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இலவசக் கல்வி பெறுவது உரிமை என இந்திய அரசியல் அமைப்பு சட்டம் வரையறுத்தது.

அனைத்துத் தனியார் பள்ளிகளும் நலிவடைந்த குழந்தைகளுக்கு 25 விழுக்காடு இடங்களை ஒதுக்க வேண்டும்; இந்தக் குழந்தைகளுக்கான கட்டணத்தை அரசே செலுத்தும் என்பது இந்தச் சட்டத்தின் சிறப்பம்சம்.

நலிவடைந்தவர் என்கிற வகையில் எந்தப் பாதுகாப்பும் இல்லாதவர், குழந்தைத் தொழிலாளி, மனவளர்ச்சி குன்றியவர், எச்ஐவி பாதித்தவர், தலித் மற்றும் பழங்குடியினர், சமூகத்தால் ஒதுக்கப்பட்டவர், குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்திற்கும் குறைவாக உள்ள குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் பயனடையமுடியும். அதுமட்டுமில்லாமல் தனியார் பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்ப்பதற்காகக் குழந்தைகளுக்கோ பெற்றோருக்கோ எந்த நேர்காணலும் வைக்கக்கூடாது.

தேசிய அளவில் நிலை கட்டாயக் கல்விச் சட்டத்தின் அமலாக்க நிலை குறித்து கல்வி உரிமைச் சட்ட அமைப்பு என்ற அரசு சாரா நிறுவனம் செய்த ஆய்வில் பல உண்மைகள் வெளிவந்திருக்கின்றன. இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆறு ஆண்டுகளில் 3.5 லட்சம் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன; கிராமங்களில், 99 விழுக்காடு பேருக்கு, 1 கிலோ மீட்டர் தொலைவுக்குள் பள்ளி வசதி உள்ளது; 84.4 விழுக்காடு பேருக்கு பள்ளியில் மதிய உணவு அளிக்கப்படுகிறது; 48.2 சதவீத பள்ளிகளில் கழிப்பறை வசதிகள் உள்ளன; பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தியவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்று இந்த அறிக்கை தெரிவிக்கிறது.

இருப்பினும், ஆரம்பக் கல்வித் துறைக்கான குறைவான நிதி ஒதுக்கீடு, நிதியை மாநில அரசுகள் முறையாகப் பயன்படுத்தாதது, தனியார் பள்ளிகளுக்கு ஆதரவான அதிகாரிகள் செயல்பாடு போன்றவற்றால் இன்றும், 60 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்குக், கல்வி உரிமை கிடைக்கவில்லை என்றும் இதில் 76 விழுக்காடு பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர், சிறுபான்மையினர் என்றும் ஆய்வறிக்கை கூறுகிறது.

இந்தச் சட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தியுள்ள ஒரு சில மாநிலங்களில், தமிழகமும் ஒன்று. கரும்பலகைகள், ஆசிரியர் - மாணவர்கள் விகிதாச்சாரம், இலவச பாடப்புத்தகம், குடிநீர், கழிப்பறை வசதி ஆகியவற்றில், தமிழகம் முன்னேறியுள்ளது. அதே நேரத்தில், தனியார் பள்ளிகளுக்குக் குழந்தைகளை அதிக அளவில் அனுப்பும் மாநிலங்களில், தமிழகமும் ஒன்று. தமிழகத்தில், 54.95 சதவீதம் பேர், அதாவது படிக்கும் மாணவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் தனியார் பள்ளிகளில் படிக்கின்றனர்.

மாணவர் அனுமதி அகமதாபாத் இந்திய மேலாண்மையியல் நிறுவனத்தில் செயல்பட்டு வரும் கல்வி உரிமைச் சட்ட வள மையம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், 2014-15 ஆம் ஆண்டில் கல்வி உரிமைச் சட்டப்படி, தமிழகத்தில் தனியார் பள்ளிகள் ஒதுக்க வேண்டிய இடங்களில் வெறும் 37.75 விழுக்காடு இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

மீதி இடங்களில் வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது எனவும் கொள்ளலாம். ஆனால் தமிழக நர்சரி மற்றும் தொடக்கப் பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்ட இட ஒதுக்கீட்டின் கீழ் உள்ள இடங்களில் 47 விழுக்காடு நிரப்பப்பட்டதாக மெட்ரிக் பள்ளி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

மெட்ரிக் பள்ளிகளில் 64 விழுக்காடு இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன என்று மெட்ரிகுலேசன் பள்ளி இயக்குநரகம் தெரிவித்திருக்கிறது. தமிழகத்தில் இட ஒதுக்கீட்டின் மொத்த இடங்களில் 94 விழுக்காடு நிரப்பப்பட்டுள்ளது என்று பள்ளிக் கல்வித்துறை செயலர் டி.சபிதா தெரிவித்திருந்தார்.

94 விழுக்காடு... 64 விழுக்காடு.... 47 விழுக்காடு... இப்படி மூன்று புள்ளி விவரங்களில் வெவ்வேறு முரண்பட்ட விவரங்களைத் தமிழக அரசின் கல்வித்துறை தெரிவிக்கிறது.இதன்மூலம் 37.75 விழுக்காடு இடங்களே நிரப்பப்பட்டுள்ளன என்ற  கல்வி உரிமைச் சட்ட வள மையம் சொல்லும் செய்தியே சரியானது என்கிறார்கள் கல்வியாளர்கள்.எட்டாக்கனி.. ஏன்?தமிழ்நாடு கட்டாயக் கல்வி உரிமைச் சட்ட விதிகள் 2011ன் படி, தனியார் பள்ளிகளில்  இட ஒதுக்கீட்டில் காலியாகவுள்ள இடங்களை அறிவிப்புப் பலகையில் விளம்பரப்படுத்த வேண்டும்.

இட ஒதுக்கீட்டின்படி பயிலும் மாணவர்களின் பட்டியலை பள்ளிக் கல்வித்துறை தொடர்ந்து மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும். பள்ளிக் கல்வித்துறை இயக்குநர், ஆரம்பப் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர், மெட்ரிக்குலேசன் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் ஆகியோர் தலைமையில் உள்ள குழுக்களால் இந்த இடஒதுக்கீடு கண்காணிக்கப்பட வேண்டும். குழுக்கள் மட்டும் ஒரு சடங்காக அமைக்கப்பட்டாலும் அவை தமிழ்நாட்டில் சரியாகச் செயல்படுவதில்லை. 

ஒதுக்கீட்டின் கீழுள்ள இடங்களில் கட்டணம் செலுத்தும் மாணவர்களைச் சேர்த்துக்கொண்டு, அந்த இடங்கள் இலவசமாக நிரப்பப்பட்டதாகக் கணக்கு காட்டப்படுகிறது. ஏழைகளுக்கு தரமான கல்வி வழங்குவதற்காக கொண்டு வரப்பட்ட இச்சட்டம் தமிழகத்தில் மோசடியால் வீணடிக்கப்படுகிறது.

இச்சட்டம் பற்றிய அடிப்படை விழிப்புணர்வு பெரும்பான்மையான மக்களுக்கு இல்லை. அப்படியே இருந்தாலும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மாணவர்களைச் சேர்க்க மறுக்கும் தனியார் பள்ளிகளைப் பற்றி யாரிடம் புகார் செய்வது? புகார் செய்தாலும் நன்மை விளையுமா? - இவை பெற்றோர்களின் கேள்விகள்.

இது ஒரு புறம் இருக்க,பல தனியார் பள்ளி நிறுவனங்களும், சிறுபான்மையினர் பள்ளி நிறுவனங்களும் இந்தச் சட்டத்தை எதிர்த்துத் தங்கள் உரிமைகள் பறிபோவதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுத்துள்ளன. தமிழகத்தில் கல்வித்தந்தையாக இருப்பவர்களில் பெரும்பான்மையோர் அரசியல்வாதிகள். கல்வி குறித்தான அரசின் கொள்கை முடிவுகளின்போது அவர்களின் நலனும் கவனிக்கப்படுகிறது.

தனியார் பள்ளி வளருகிறதுதமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 1 லட்சத்து 39 ஆயிரத்து 805 பேர் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவிக்கிறது. இதனால் அரசுக்குச் சேரவேண்டிய பணம் தனியார் பள்ளிகளுக்குப் போகிறது. கல்வியைத் தனியார் கையில் தரும் முடிவில்தான் அரசு பயணித்துக் கொண்டிருக்கிறது. பெற்றோர் மத்தியில் அரசுப் பள்ளி பற்றி மோசமான மதிப்பீடுகள் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளன.

மாணவர்கள் வருகைக் குறைவால் அரசு பள்ளிகள் மூடப்படுகின்றன. இது “இணைப்பு” என்ற வார்த்தையால் பூசி மெழுகப்படுகிறது. தமிழகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் இப்படி இணைக்கப்பட்டிருக்கின்றன. 2500 பள்ளிகளின் கட்டிடங்கள் தரமிழந்து விட்டதாகவும் அவற்றை இடிக்கும்படியும் தொடக்கக் கல்வித்துறை இயக்குநர் உத்தரவிட்டிருந்தார். அந்தப் பள்ளிகளில் படித்த குழந்தைகள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை.

ஒதுக்கீட்டு அடிப்படையில், தனியார் பள்ளிகளில் மாணவர்களைச் சேர்க்க அந்தப் பள்ளிகளுக்கு அரசு பணம் வழங்கி வருகிறது. இப்படித் தரவேண்டிய பணத்தில் பலகோடி ரூபாய் பாக்கி இருப்பதால் தனியார் பள்ளிகள் இந்த ஒதுக்கீட்டினை அமல்படுத்துவதில் தயக்கம் காட்டுகின்றன. குழந்தைகளுக்கெல்லாம் கட்டாயக் கல்வி அளிக்க வேண்டிய அரசு,  25 விழுக்காடு இடத்துக்காகத் தனியார் பள்ளிகளிடம் கையேந்தி நிற்கிறது. இது அரசுக்கும் பெற்றோருக்கும் ஒருசேர அவமானம் என்பதை அரசு ஏனோ உணரவில்லை.

தீர்வு இந்தச் சட்டம் நிறைவேற்றப்படும்போதே கோளாறுடனும் குறைபாடுகளுடனும் நிறைவேற்றப்பட்டது என்கிறார்கள் கல்வியாளர்கள்.  கட்டாய இலவசக் கல்வியை வலியுறுத்தும் அரசியலமைப்புச் சட்டம் வழிகாட்டு நெறிமுறையில் 45வது பிரிவு ஒரு புறம் இருக்க, கல்வியை அடிப்படை உரிமையாகக் கொண்டு வருகிறோம் என்று சொல்லி 21 ஏ பிரிவு உருவாக்கப்பட்டது. அதில், ‘எந்த முறையில் கல்வியை இலவசமாகக் கொடுக்கமுடியுமோ அரசு கொடுக்கலாம்’ என்று வரையறுக்கப்பட்டது. இதனால், பிரிவு 45-க்கு வேலை இல்லாமல் போனது. புதிய சட்டப்பிரிவில் எந்தத் தெளிவும் இல்லை.

சென்னை உயர்நீதிமன்றமும் ஒரு வழக்கில், அரசு கல்வி உரிமையை நீர்த்துப் போகச் செய்திருக்கிறது என்றது.இந்தச் சட்டத்தின் கீழ் விளிம்புநிலை மக்களின் குழந்தைகள்தான் பயனடைந்தார்களா என்பது குறித்த விவரங்கள் இல்லை.

 தனியார் பள்ளிகள் சொல்வதை அரசு ஏற்றுக்கொண்டாகவேண்டிய நிலை. சரியான கண்காணிப்பும் இல்லை. இதற்கெல்லாம் தீர்வு என்பது அரசு, அருகாமைப்பள்ளி அமைப்பில் பொதுப்பள்ளி முறைமை மூலம் கல்வி வழங்குவதுதான்.வளர்ச்சி என்று மார்தட்டிக்கொண்டு கல்வியை மட்டும் புறந்தள்ளுவதில் அர்த்தம் ஏதுமிருப்பதாகத் தெரியவில்லை.தனியார் பள்ளிகளுக்கு குழந்தைகளை அதிக அளவில் அனுப்பும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று

ப. திருமலை