குறும்பு எப்போது குற்றமாகிறது?
விழிப்புணர்வுத் தொடர்
எதிரில் உட்கார்ந்திருப்பவர்கள் கற்றல் நடவடிக்கைக்காக உருவாக்கப்பட்ட பொம்மைகள் அல்லர். ஒவ்வொருவரும் தங்களுக்கான சொந்த நோக்கங்களை, இயல்புகளைக்கொண்ட, வளர்ச்சிப் படிநிலையில் உள்ள விருப்பு வெறுப்புகள் வேறுபடும் இளம் உயிர்கள்..! - டேனியல் கோல்மன்
சிறு வயதில் குழந்தைகள் செய்யும் குறும்புகளை ரசிக்காதவர்கள் உண்டா..? கையில் கிடைப்பதை உடைப்பது... தண்ணீரை இறைப்பது எனத் தொடங்கி, வீட்டில் ஒரு குழந்தை செய்யும் அனைத்தையுமே நாம் ரசிக்கிறோம். ‘தத்தக்கா பித்தக்கா’ என நடந்து, படுக்கை அறைக்குள் நுைழந்து தெரியாமல் கதவை தாழ்ப்பாள் போட்டு பெற்றோரைச் செய்வதறியாது திகைக்க வைக்கும் ஒரு குழந்தையின் குறும்புத்தனம் பற்றி பிறகு சொல்லிச் சொல்லி சிரிக்காதவர் உண்டா..?
ஒரு கூட்டுக்குடும்பத்தில் சித்தி, அத்தை, தாத்தா எனப் பலரோடு வளரும் வாய்ப்பைப் பெற்ற ஒரு குழந்தை செய்யும் குறும்புகளுக்கும், தனிக் குடும்பங்களில் தாய் தந்தையோடு மட்டுமே வளரும் ஒரு குழந்தை செய்யும் குறும்புகளுக்கும் இடையே வித்தியாசம் உள்ளது. கூட்டுக்குடும்பச் சூழலில் குழந்தைகள் சற்றே சுதந்திரமாக விடப்படுவது உண்மை. தனிக் குடும்பங்களில் ஒரு இருக்கையில் டி.வி. முன் மணிக்கணக்கில் அது காலங்கழிக்கிறது. கூட்டுக்குடும்பக் குழந்தைகள் ஒப்பீட்டளவில் முன்னதாகப் பேசிவிடுகின்றன. எளிதில் பழகுகின்றன.
பள்ளிப்பருவத்தை அடைந்தபிறகு பொறுப்புகளைக் கற்கும் படிநிலைகளில் இக்குறும்புகள் மெல்ல உதிர வேண்டும். அங்கே கூட்டுக்குடும்பம், தனிக்குடும்பம் என வேறுபாடு இருப்பதை போலவே, பள்ளிக்கூடத்தில் ‘கையைக் கட்டு, வாயைப் பொத்து’ என்கிற ‘கறார்’ ஆசிரியர் வகுப்பறை வேறு; சற்றே சுதந்திரமாய் அளவளாவி வெறும் பார்வையாளராக அன்றி கற்றலின் பங்கேற்பாளராக மாறும் கனிவான ஆசிரியர் வகுப்பறை வேறு என்பதும் கவனத்தில் எடுக்க வேண்டிய விஷயம்.
இந்த இரண்டு சூழல்களில், மாணவர் பருவத்தில் ஒருவர் எந்த வகுப்பறையில் அதிகம் வளர்கிறார் என்பதைப் பொறுத்து அவரது வருங்காலம் அமைகிறது என்கிறார் டேவிட். ஜெ.லிண்டேன், அமெரிக்காவின் மிகப் பிரபலமான ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக நரம்பியல் துறை வல்லுநர். (ஒவ்வொரு ஆசிரியரும் இவரது ‘Accidental mind’ புத்தகத்தை வாசிக்க வேண்டும் என்று தாழ்மையோடு கேட்டுக் கொள்கிறேன்)பார்வையாளர் வகுப்பறை மற்றும் பங்கேற்பாளர் வகுப்பறைகளின் பிரதான வேறுபாடுகளைப் பார்க்கலாம்.
குழந்தைகளை வரிசையாக உட்கார வைத்து வெறும் பார்வையாளர்களாக (கை கட்டி, வாய் பொத்தி) கட்டளைகளுக்குக் கீழ்ப்படிபவர்களாக ஆக்குதல் என்பது பார்வையாளர் வகுப்பறையின் பிரதான அம்சம். ராணுவக் கெடுபிடியோடும் ஒருவகை அச்சமான இறுக்கத்தோடும் இந்த வகுப்புகள் நடப்பதைக் காணலாம். இங்கே ஆசிரியரின் அதிகாரம் எல்லாவற்றையும் இயக்குகிறது.
எனக்குத் தெரிந்த ஒரு ஆசிரியர் இருக்கிறார். மிகவும் கறாரானவர். மாணவர்கள் அசைந்தாலும் அவருக்குப் பிடிக்காது. நாற்பது நிமிடம் என்றால் நாற்பது நிமிடமும் நிமிர்ந்தே உட்கார்ந்து இருக்க வேண்டும். ‘டேக்-டவுன்’ என்றால் எழுத வேண்டும். ‘ஸ்டாப்’ என்றால் நிறுத்த வேண்டும். கரும்பலகை அழிக்கப்படும். யாராவது தெரியாமல் வாட்சில் மணி பார்த்துவிட்டால் அல்லது ஜன்னல் வழியே வெளியே பார்த்து விட்டால், தேள் மாதிரி கொட்டிவிடுவார். பத்து நாளைக்கு வலிக்கும். இந்தமாதிரி வகுப்பறைகளைத் தீவிர கண்காணிப்பு வகுப்பறைகள் (Extreme Inspectional) என டேவிட் லிண்டேன் அழைக்கிறார்.
அவரைப் பொறுத்தவரை பள்ளிப்பருவம் என்பது நாம் நினைப்பது போலப் பாடங்களைக் கற்று ேதர்வில் எழுதி சான்றிதழ், மதிப்பெண் பெறுகிற பருவமல்ல. அது மேல்பூச்சுதான். ‘பள்ளிப்பருவத்தின் பிரதான நோக்கம், குழந்தைகள் பெரியவர்களாக ஆகும் அந்த இடைநிலைப் படியில் மன(mind) உருவாக்கமே. ‘மனதைச் சரியாகக் கட்டமைத்தல்’ என்பதே பள்ளிக் கல்வியின் நோக்கம்.
அதில், இந்தத் ‘தீவிர கண்காணிப்புத் தண்டனை வகுப்பறை’ எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்துகிறது’ என்கிறார் அவர். மாணவர்களின் நோக்கம் கற்றல் அல்ல. தண்டனை பெறாது தப்புதல். முழுக் கவனமும், ஆசிரியர் பார்க்க ‘தவறு’ என அவர் கருதுவதைச் செய்யாது இருத்தல் என்பதன் மீதே குவிவதால் மனம் கட்டமைக்கப்படும் விதம் மாறுபடுகிறது.
இப்படியான வகுப்பறைகள் அதிகம் கொண்ட ஒரு நாட்டில் ராணுவ ஆட்சியே அமைதியை ஏற்படுத்த முடியும். சாலை முனை சிக்னலை கடந்திருக்கிறீர்களா? அங்கே போலீஸ் இருந்தால் எல்லாம் சரியாக வேலை செய்யும். இல்லை என்றால் எப்படி இருக்கும்? நம்நாடு இதற்கு உதாரணம். இப்படியான கறார் வகுப்பறைகள் மூலம் இளம் வயதில் உருவாக்கப்பட்ட மனம் நம்முடையது. கொஞ்சம் விரிவாக யோசித்துப் பாருங்கள்.
சட்டம் இயற்றும்போதே அதில் உள்ள ஓட்டைகளின் மீதே நம் கவனம் குவிகிறது. ஒரு ஓட்டுநர் உரிமம் பெறுவதிலிருந்து, ரயில் டிக்கெட் ரிசர்வேஸன் வரை நாம் ‘யாருக்கு தெரியப்போகுது’ என பட்டவர்த்தனமாக செய்யும் சமரசங்கள், ‘யாரும் அபகரித்துவிடக்கூடாது’, ‘யாரும் நம்மை ஏமாற்றிவிடக் கூடாது’ என எப்போதும் ‘கண்காணிப்பு’ செய்தபடி வாழும் பதற்றம். ‘எல்லாரும் பார்த்தாலும் யாரும் பார்க்கவில்லை’ என்பது போல நடந்தேறும் நுங்கம்பாக்கம் ரயில் பிளாட்ஃபாரக் கொலை ேபான்ற சம்பவங்கள். ‘எல்லாம் செய்தும் செய்வது தவறல்ல...
மாட்டிக்கிட்டது தான் தப்பு’ என சொத்துக்குவிப்பு, வங்கி மோசடி எனப் படரும் இந்தச் சமூக நோய்களின் உயிர்நாடி எது? அது இந்த மாதிரி தவறான அணுகுமுறை வகுப்பறைகளால் வரும் கேடு என்பது டேவிட் லிண்டேனின் நியாயமான விவாதம்.ஆசிரியர் எனும் ஒருவரைத் திருப்திப்படுத்திவிட்டால் போதும் என்கிற ஒரு ஆபத்தான நிலையை வகுப்பறைகள் விரைவில் அடைகின்றன. அதிகாரத்திற்குக் காக்காய் பிடித்தல் முதல், அவருக்காக வேவு பார்ப்பது வரை கற்றல் செயல்பாட்டை விடுத்து குழந்தைகளின் அடிப்படையையே அது மாற்றி விடுகிறது. குறும்புகள் குற்றங்களாக மாறுகின்றன.
குழந்தைத்தனம் முற்றிலும் களவிடப்படுகிறது. அடிமைத்தனமும், வஞ்சகமும் அதன் இடத்தை நிரப்புகின்றன. சுய வெறுப்பு விருப்புகளைச் சென்றடைய குறுக்குவழியை தேட வேண்டியவர்களாக குழந்தைகளை கறார் வகுப்பறை மாற்றிவிடுகிறது. ஆசிரியர், அச்சத்தை ஏற்படுத்தும் அதிகாரத்தைப் பயன்படுத்தி கற்றல் நடவடிக்கையைப் புறந்தள்ளுகிறார்.
அவர்மீதும், அமைப்பின் மீதும் ஏற்படும் கோபத்தால் குழந்தைகள் பொதுச் சொத்துக்களை (பள்ளி வளாகப் பொருட்கள்) உடைப்பது முதல் நாம் நினைத்துப் பார்க்க முடியாத பலவற்றைச் செய்கிறார்கள். எப்படியாவது சான்றிதழ் பெற்றால் போதும் எனத் தேர்வுகளில் குறுக்குவழிகளைக் கடைப்பிடித்தல் முதல் போலிச் சான்றிதழ் எனப் பல குற்றங்கள்.
சமூகத்தில் இவ்வகை வகுப்பறைகளின் பின்விளைவாகத்தான் போலி மருத்துவர்கள், போலி சாமியார்கள் என பலவும் போலிகளாக பெருகுகின்றன. அதனால்தான், டேவிட் லிண்டேன், ‘இவ்வகை கறார் வகுப்பறை நடத்துபவர் கூட உண்மையான ஆசிரியர் அல்ல, ஒரு வகை போலி’ எனச் சாடுகிறார்.இதற்கு நேர்மாறானது பங்கேற்பாளர் வகுப்பறை (Participant classrooms) இவ்வகை வகுப்பறைகளில், குழந்தைகள் வெற்றுப் பார்வையாளர்கள் அல்ல. கற்றலில் பங்கேற்பவர்கள். வகுப்பு விதிகளைவிட கற்றல் நடவடிக்கைக்கே இங்கே முக்கியத்துவம்.
இங்கே மாணவர்கள் விதவிதமாகத் தங்களைக் கற்றலில் ஈடுபடுத்தி இனிமை காணுகிறார்கள். இவ்வகை வகுப்பறையின் அடித்தளம், அதற்கான சுதந்திரம். இங்கே கட்டுப்பாடுகளை ஆசிரியர் தனது அதிகாரத்தால் கட்டமைப்பது இல்லை. சுயக் கட்டுப்பாடு மற்றும் பங்கேற்பில் ஜனநாயகம் என்கிற இரு அம்சங்களால் ஆனது இந்தப் பங்கேற்பாளர் வகுப்பறை.
மதிப்பெண்கள் பெறுவதைவிட கற்றுக்கொண்டோமா என்பதன் மீது கவனம்... அதில் திருப்தி... இவ்வகை வகுப்புகளில் சுதந்திரமாய் கற்றவர்கள், பட்டம் பெற்றதைவிட அதற்கான தகுதிகளை வளர்த்துக்கொள்வதையே பெருமையாகக் கருதுவர். இவ்வகை மன உருவாக்கமே சமூகத்தின் உயிர்நாடி என்பது டேவிட் லிண்டேனின் கருத்து.
பங்கேற்பாளர் வகுப்பறைக் குறும்புகளை குற்றங்களாக மாற்றுவதில்லை. குறும்புகளை அது கற்றலுக்கான ஆர்வமாக மாற்றி புதிய படைப்பாக்க அறிவாக, தேடலாக விதைக்கிறது. மாணவர்களில் ஒருவராகத் தன்னை உணரும் ஆசிரியர் அதிகாரத்தை விட கற்றல் ஆர்வத்தை தூண்டிவிடுவதைத் தன் பலமாகப் பயன்படுத்துகிறார்.
இவ்வகை வகுப்பறைகள் இந்தியாவிலும் உண்டு. ஆனால் மிகக்குறைவு. பின்லாந்து, கியூபா, ஜப்பான் ஏன் சிங்கப்பூர் உட்பட பலநாடுகளில் இவ்வகை வகுப்பறைகள் அதிகம். சுவிட்சர்லாந்து, கனடா என ஐரோப்பிய நாடுகள் உட்பட இவ்வகை கற்றல் சாத்தியமாகியே உள்ளது. மேற்கண்ட நாடுகளில் பொதுக்குற்றங்கள் மிகக் குறைவு. சாலை சிக்னல் போதும், போலீஸ் தேவை கிடையாது! வளர்ச்சிக்கும் பஞ்சமில்லை.
டேவிட் லிண்டேன் இத்தோடு விடவில்லை. மனதைப் பதப்படுத்தி வளர்த்தெடுக்கும் இடமான பள்ளியில் சேர்க்கப்படும் குழந்தைகளின் குறும்புத் தனங்கள் குற்றங்களாக உருமாறாமல் தடுக்க ஆசிரியர்கள் மூளையின் முன்புறம் இருபக்கமும் அமைந்துள்ள ‘அமைக் டாலா’ எனும் உறுப்பின் வளர்ச்சி குறித்து அறிய வேண்டும் என்கிறார்... இது குறித்து அடுத்த வகுப்பில் விரிவாகப் பார்ப்போம்..!
மாணவர்களின் நோக்கம் கற்றல் அல்ல. தண்டனை பெறாது தப்புதல். முழுக் கவனமும், ஆசிரியர் பார்க்க ‘தவறு’ என அவர் கருதுவதைச் செய்யாது இருத்தல் என்பதன் மீதே குவிவதால் மனம் கட்டமைக்கப்படும் விதம் மாறுபடுகிறது. இப்படியான வகுப்பறைகள் அதிகம்கொண்ட ஒரு நாட்டில் ராணுவ ஆட்சியே அமைதியை ஏற்படுத்தமுடியும்.
ஆசிரியர் எனும் ஒருவரை திருப்திப்படுத்திவிட்டால் போதும் என்கிற ஒரு ஆபத்தான நிலையை வகுப்பறைகள் விரைவில் அடைகின்றன. அதிகாரத்திற்கு காக்காய் பிடித்தல் முதல், அவருக்காக வேவு பார்ப்பது வரை கற்றல் செயல்பாட்டை விடுத்து குழந்தைகளின் அடிப்படையையே அது மாற்றி விடுகிறது. குறும்புகள் குற்றங்களாக மாறுகின்றன. குழந்தைத்தனம் முற்றிலும் களவிடப்படுகிறது.
(பத்தொன்பதாம் பாடவேளை முடிந்தது)
‘ஆயிஷா’ இரா. நடராசன்
|