+2 முடித்த மாணவர்கள் இந்திய மருத்துவம் படிக்க விண்ணப்பிக்கலாம்!



+2க்குப் பிறகு

BSMS BAMS BNYS BUMS BHMS



சென்னை, அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்தில் உள்ள இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்ககம், B.S.M.S., B.A.M.S, B.N.Y.S ஆகிய இந்திய மருத்துவப் படிப்புகள் மற்றும் B.U.M.S, B.H.M.S போன்ற மாற்று மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் வழங்கப்படும் படிப்புகள்

*Bachelor of Siddha Medicine & Surgery - BSMS
*Bachelor of Ayurveda Medicine & Surgery - BAMS
*Bachelor of Naturopathy & Yogic Sciences - BNYS
*Bachelor of Unani Medicine & Surgery - BUMS
*Bachelor of Homeopathy Medicine & Surgery - BHMS

யாரெல்லாம் இப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்?

*a +2ல் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் அல்லது உயிரியல் பாடங்களைப் படித்து, முதல்முறை தேர்விலேயே தேர்ச்சி மொத்த சரா
சரியாக 50% மதிப்பெண் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
*விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டைப்  பூர்வீகமாகக் கொண்டிருக்க வேண்டும். 8ம் வகுப்பு முதல் +2 வரை தமிழ்நாட்டில் படித்திருக்க வேண்டும். வெளி மாநிலங்களில் பள்ளிப்படிப்பை முடித்த தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள், நேட்டிவிட்டி சர்ட்டிபிகேட் சமர்ப்பிக்க வேண்டும்.
*BSMS படிப்பிற்கு 10ம் வகுப்பு அல்லது +2 வரை தமிழ் வழியாகப் படித்தவர்கள் அல்லது தமிழை ஒரு பாடமாக எடுத்துப் படித்தவர்கள் அல்லது BSMS படிப்பின் முதல் ஆண்டில் தமிழைப் படிக்கத் தயாராக உள்ளவர்களே விண்ணப்பிக்க வேண்டும்.
*BUMS படிப்பிற்கு 10ம் வகுப்பு அல்லது +2 உருது மொழி வழியாகப் படித்தவர்கள் அல்லது இவ்வகுப்புகளில் ஏதேனும் ஒன்றில் உருதுமொழியை ஒரு பாடமாக எடுத்துப் படித்தவர்கள் அல்லது உருதுமொழி நுழைவுத் தேர்வை எழுதி தேர்ச்சி பெறத் தயாராக உள்ளவர்களே விண்ணப்பிக்க வேண்டும்.

மொத்தம் எத்தனை இடங்கள்?
அரசுக்கல்லூரிகளைப் பொறுத்தவரை, பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் B.S.M.S. படிப்பிற்கு 100 இடங்களும்,சென்னை அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் 50 இடங்களும் உள்ளன. நாகர்கோவில் கோட்டாரில் உள்ள அரசு ஆயுர்வேத கல்லூரியில் B.A.M.S படிப்பிற்கு 50 இடங்களும், சென்னை அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியில் B.N.Y.S. படிப்பிற்கு 60 இடங்களும்,சென்னை அரசு யுனானி மருத்துவக் கல்லூரியில் B.U.M.S. படிப்பிற்கு 26 இடங்களும், மதுரை திருமங்கலம் அரசு ஹோமியோபதி மருத்துவக்கல்லூரியில் B.H.M.S. படிப்பிற்கு 50 இடங்களும் உள்ளன.

தனியார் சுயநிதி அரசு ஒதுக்கீட்டு இடங்களைப் பொறுத்தமட்டிலும், அனைத்துப் படிப்புகளுக்கும் சேர்த்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன.
மாணவர்கள் எந்த அடிப்படையில் சேர்க்கப்படுவார்கள்?+2ல் எடுத்த மதிப்பெண் தரவரிசை அடிப்படையில் ஒற்றைச் சாளர முறையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

ஒரே கட்-ஆப் மதிப்பெண்ணை ஒன்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் எடுத்திருப்பின் +2ல் உயிரியல் அல்லது தாவரவியல் அல்லது விலங்கியல் அதிக மதிப்பெண் விழுக்காடு, வேதியியல் மதிப்பெண் விழுக்காடு, இயற்பியில் மதிப்பெண் விழுக்காடு, நான்காவது பாடத்தில் மதிப்பெண் விழுக்காடு, வயதில் மூத்தவர், ரேண்டம் எண் என்ற வரிசையில் முன்னுரிமை தரப்படும். அரசு விதிகளின்படி இட ஒதுக்கீடு உண்டு.

எவ்வாறு விண்ணப்பிப்பது?
மேற்கண்ட அரசுக் கல்லூரிகளில் ஜூலை 28 வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும். நேரடியாகச் சென்று பெற்றுக்கொள்ளலாம். அல்லது www.tnhealth.org என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்தும் பயன்படுத்தலாம்.

விண்ணப்பக் கட்டணம் பொதுப்பிரிவினருக்கு ரூ.500. மாற்றுத்திறனாளிகள்,
முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், இந்திய அரசினால் பரிந்துரைக்கப்பட்டவர்கள், விளையாட்டு வீரர்கள், பதிவு பெற்ற இந்தியப் பாரம்பரிய மருத்துவர்களின் வாரிசுகள், +2ல் சித்த மருத்துவத்தைப் பாடமாக எடுத்துப் படித்தவர்களுக்கு ரூ.100. எஸ்.சி.,

எஸ்.டி. பிரிவினருக்குக் கட்டணம் இல்லை. இணையத்தில் விண்ணப்பத்தைத் தரவிறக்கம் செய்து பயன்படுத்துவோர் விண்ணப்பக் கட்டணத்தை ‘Director of Indian Medicine and Homeopathy, Chennai’ என்ற பெயருக்குச் சென்னையில் மாற்றத்தக்க வகையில் டிடி எடுத்து இணைத்து அனுப்ப வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் அதற்குரிய சான்றிதழ் நகலை இணைக்க வேண்டும். விண்ணப்பிக்க இறுதிநாள் 29.7.2016.
 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அனுப்ப ேவண்டிய முகவரி :‘‘The Secretary, Selection Committee, Director of Indian Medicines and Homeopathy, Aringnar Anna Govt. Hospital of Indian Medicine Complex, Arumpakkam, Chennai - 600 106.

ஆர்.ராஜராஜன்