டி.என்.பி.எஸ்.சி.



போட்டித் தேர்வு டிப்ஸ்

அனைத்துப் போட்டித் தேர்வுகளையும் எதிர்கொள்ள சூப்பர் டிப்ஸ்


கடந்த இதழில் புராணங்கள், காப்பியங்கள் சார்ந்த பாடங்களைப் பார்த்தோம். இந்த இதழில் தரும் பகுதி அதிக முக்கியத்துவம் வாய்ந்தது.  அதே சமயம் இன்ட்ரஸ்டிங் ஏரியா. தமிழ் அறிஞர்கள் பற்றிய பாடப்பகுதி, அதுவும் சம காலத்துத் தமிழறிஞர்கள். கொஞ்சம் ஆர்வத்துடன் படித்துவிட்டால் அல்வா மாதிரி 30 மதிப்பெண்கள் வரை அள்ளிவிடலாம். அதாவது, இந்தப் பகுதியில் இருந்து 20 கேள்விகள் மினிமம் கியாரன்டி...

ஒன்றை நினைவில் வைத்துக்கொண்டு வாசிக்கத் தொடங்குங்கள். நான் இங்கே சொல்கிற, வர்ணித்து எழுதுகிற, எக்ஸ்ட்ராபிட்டிங் கொடுக்கிற எல்லா விஷயங்
களுமே முகக்கியமானவை. எனவே, கொடுக்கப்பட்டிருக்கும் எல்லாச் செய்திகளையுமே நன்றாக படித்துக் கொள்ளுங்கள், இதிலிருந்து மிக முகக்கியமானது என்று நீங்களாகச் சில வரிகளை அடிக்கோடிட்டு அதை மட்டும் படிக்க வேண்டாம். இன்ஸ்ட்ரக்சன் போதும் என்று நினைக்கிறேன்.

முண்டாசுக் கவிஞர் பாரதியார் மரபுக் கவிதைகளை உடைத்து புதுக்கவிதைகளை, தமிழகத்திற்குத் தந்தவர். விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு சிலருடைய பாடல்கள்தான் உற்சாக டானிக். “அச்சமில்லை, அச்சமில்லை” என்று இவர் பாடியபோது விடுதலைப் போராட்டம் தேர்தல் களம் போலச் சூடுபிடித்தது. “தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செய்வீர்”, “தேமதுரத் தமிழோசை உலகம் முழுவதும் பரவச் செய்திட வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

பாரதியாரின் தந்தை சின்னச்சாமி, தாயார் லட்சுமி அம்மாள், இவருடைய அறிவு மற்றும் தமிழ்ச் சேவை காரணமாக, இவரை “சின்னச்சாமி பெற்றெடுத்த பெரியசாமி, லட்சுமி பெற்றெடுத்த சரஸ்வதி” என்று கூறுவார்கள். எட்டி விடும் தூரம்தான், எட்டயபுரம். பாரதியார் இந்த ஊரில்தான் பிறந்தார்.குயில்பாட்டு, கண்ணன் பாட்டு, பாப்பா பாட்டு, புதிய ஆத்திசூடி ஆகியவை இவருடைய மாஸ்டர் பீசஸ். ஞானரதம், சந்திரிகையின் கதை, தராசு போன்ற உரைநடை நூல்களையும் எழுதியிருக்கிறார். சுதேசமித்ரன், சக்கரவர்த்தினி ஆகிய இதழ்களில் சில ஆண்டுகள் பணியாற்றினார்.

பாட்டுக்கொரு தலைவன், நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா, தற்கால இலக்கியத்தின் விடிவெள்ளி, தேசியக்கவி, மகாகவி, விடுதலைக் கவிஞன் போன்றவை எல்லாம் இவரைத் தேடிவந்த பட்டங்கள். 11.9.1882-இல் பிறந்த இவர், 39 ஆண்டுக் காலம் வாழ்ந்தார். 11.12.1921 அன்று பாரதியாரின் போராட்ட வாழ்வு தன் இயகக்கத்தை
நிறுத்திக் கொண்டது.

பாரதிதாசன்

பாரதியாரின் தலைமைச் சீடர். கனக சுப்புரத்தினம் என்ற தனது இயற்பெயரை பாரதிதாசன் என்று மாற்றிக் கொள்கிற அளவுக்கு பாரதியாரின் மீது அன்பு கொண்டிருந்தார். இவருடைய தாயார் பெயரும் லட்சுமி அம்மாதான்.

தந்தையார் பெயர் கனகசபை. தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய மொழிகளில் புலமை பெற்றிருந்தவர்.குடும்பவிளக்கு, பாண்டியன் பரிசு, சேர தாண்டவம், இருண்ட வீடு, தமிழச்சியின் கத்தி, பிசிராந்தையார், குறிஞ்சிப்பாட்டு, அழகின் சிரிப்பு, தமிழ் இயக்கம் போன்ற நூல்கள் பாரதிதாசனின் சிறப்பான நூல்கள். ‘குயில்’ என்ற இலக்கிய இதழை நடத்தினார்.

இந்தக் குயில் பற்றி ஒன்றைக் குறிப்பிட வேண்டும். சமீபத்தில் நடந்த ஒரு டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வில், ‘குயில்’ இதழின் ஆசிரியர் என்று கேட்டிருந்தார்கள், ஆப்ஷனில் பாரதியார் என்ற விடையும் கொடுக்கப்பட்டிருந்தது. நிறைய தேர்வர்கள் ‘பாரதியார்’ என்று தவறாக விடையளித்துவிட்டார்கள். இப்படி ஒரு கேள்வி கேட்டால், தேர்வர்கள் என்ன தவறு செய்வார்கள், எப்படி வடிகட்டலாம் என்ற நோக்கத்தில்தான் வினா எழுப்பப்படும். தேர்வர்கள் மிகக் கவனமாக இருக்க வேண்டும். ‘குயில் பாட்டை’ எழுதியவர் பாரதியார். ஆனால் ‘குயில்’ என்ற இதழை நடத்தியவர் பாரதிதாசன்.

பாரதிதாசனைப் பற்றி இன்னும் சொல்ல வேண்டும் என்றால், இவர் எழுதிய பிசிராந்தையார் என்ற நாடக நூல் ‘சாகித்ய அகாடமி’ பரிசினைப் பெற்றது. விடுதலைப் போராட்டத்தில் இவருடைய பாடல்கள் தேசிய உணர்ச்சியைத் தூண்டின. 29.09.1981 பிறந்து 21.04.1964 வரை வாழ்ந்தவர். இப்புரட்சிக் கவிஞர், பாவேந்தர் போன்ற பட்டங்களுக்கு சொந்தக்காரர்.

நாமக்கல் கவிஞர்

நாமக்கல் கவிஞர் இயற்பெயர் வெ. ராமலிங்கம் பிள்ளை. நாமக்கல் இவருடைய சொந்த ஊர் அல்ல. இவர் பிறந்தது நாமக்கல் அருகில் உள்ள மோகனூர். (நாமக்கல் கவிஞர் பிறந்த ஊர் எது என்று கேள்வி கேட்பார்கள். அடித்துக்கூட கேட்பார்கள், அப்போது கூட புத்திசாலி என்று நினைத்துக்கொண்டு நாமக்கல் என்று எழுதிவிடாதீர்கள், நாமக்கல் கவிஞர் பிறந்த ஊர் மோகனூர்)தமிழக அரசின் முதல் அரசவைக் கவிஞர் என்ற சிறப்பு இவருக்குத்தான் சேரும்.

நடுவண் அரசு வழங்கும் பத்மபூஷண் விருது பெற்றவர். “கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது” என்ற புகழ் பெற்ற பாடலைப் பாடினார். காந்திஜியின் அஹிம்சை போராட்டத்தைப் பற்றியும், அஹிம்சைப் போராட்டத்தில் நம்பிக்கை கொண்டவர்களையும் கூவி அழைக்கும் பாடல் அது. காந்தியக் கொள்கைகளை மையமாக வைத்து நிறைய பாடல்கள் எழுதியதால், ‘காந்தியக் கவிஞர்’ என்று அழைக்கப்பட்டார். மலைக்கள்ளன், சங்கொலி ஆகியவை இவர் எழுதிய நூல்கள் (மலை கள்ளன் பற்றி டி.என்.பி.எஸ்.சி.

தேர்வில் கேட்கப்பட்டது) இவருடைய காலம் 1888 முதல் 1972 வரை.அடுத்த இதழில் இதன் தொடர்ச்சியைப் பார்ப்போம்.  (முனைவர் ஆதலையூர் சூரியகுமார் தரும் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வுக்கான மாதிரி வினா-விடை பக்கம்-46ல்...)

முனைவர் ஆதலையூர் சூரியகுமார்