தாரை தப்பட்டை:விமர்சனம்
இனி திருவிழாக் கூட்டத்தில், தெரு முக்கில், நாற்சந்தியில், இடை நெளிந்து, நெளித்து, குட்டிப்பாவாடை உயர உயர பெண்கள் சுழற்றி ஆடும்போதெல்லாம் நெஞ்சம் பதற வைக்கும் இந்த ‘தாரை தப்பட்டை’!தென் மாவட்டங்களில் பரவிக் கிடக்கும் பாரம்பரியக் கலைஞர்களின் வரலாற்றை, அவர்களின் பெரும் துயர வாழ்க்கையை, வீரியமாகவும் பெரும் கோபத்தோடும் படைத்ததற்காக பாலாவுக்கு வணக்கம்!தஞ்சையின் கிராமத்தில் ஒரு கலைக்குழுவை தலைமையேற்று நடத்தும் சசிகுமார்.
 அவரைக் காதலிக்கிற முதன்மை ஆட்டக்காரி வரலட்சுமி. நல்லவனாக நடித்து வரும் ஆர்.கே.சுரேஷோடு வரலட்சுமி திருமணமாகிப் போகிறார். அதன் பிறகு அந்தக் கலைக்குழுவின் சந்தோஷமும், துயரக் கணங்களும் காட்சிகளாக நகர... காதலில் பிரிந்தவர்கள் மறுபடியும் பார்த்துக்கொண்டார்களா, சேர்ந்தார்களா என்பது கண்ணீர்க் கதை.
பார்க்கிற கண் எல்லாம் உடம்பின் மீது விழுந்து புறப்பட ஆடும் பெண்களின் காதல், மனசு, சொந்த உணர்ச்சிகள் என சுட்டிச் செல்கிறது படம். நாம் பார்க்காத எளிய மக்களின் இருண்ட பக்கங்களை இதோ இதோ எனத் திறந்து காட்டுகிறார். பொறுக்க முடியாத வறுமைக்கு மத்தியிலும் மகிழ்ச்சி கணங்களைத் தேடிக் கண்டெடுத்து காமெடியும், கலகலப்புமாகப் போகும் அந்த வாழ்க்கையில் வில்லன் சுரேஷ் வரும்போது அடுத்த இடத்திற்கு நகர்கிறது படம்.
வரூவின் பிரியத்தைத் தாங்க முடியாமல் மருகும்போதும், வரூ திருமணமாகிப் போகும் தருணத்தில் துளிக் கண்ணீரை ஓர இமையில் தேக்கும்போதும், அந்தமானில் காலில் ஆணி பட்டு தவிக்கும் அவரை குழந்தை மாதிரி ஏந்தி வரும்போதும் சசிகுமார் அத்தனை அழகு. அந்தப் பொறுப்பு, அக்கறை, அப்பாவித்தனம், ஆவேசம் அத்தனையிலும் ஜீவன் தளும்புகிறது.
ஆட்டக்காரியாக சூறாவளி வரலட்சுமி அப்படியே செம ஃபிட். சூட்டிகையும், வேகமும், கொஞ்சலுமாக சசியிடம் தன் அன்பைப் பரிமாறும்போதும், கொஞ்சம் ஆண் தன்மையோடு அந்தமானில் ‘தன்னைக்’ கேட்ட பொறுப்பாளர்களைப் புரட்டி எடுக்கும்போதும், திருமணத்தின்போது பேசாது கொல்கிற அமைதியிலும் வரலட்சுமியா... ஆஹா! எப்படிப்பா?
வில்லன் சுரேஷ் ரணகளம். அம்மாஞ்சி மாதிரி ஆரம்பத்தில் பெண் கேட்பது, பிறகு அதிகபட்ச பொறுக்கித்தனத்தில் புரண்டு எழுவது... ஹேட்ஸ் ஆஃப்! அடுத்து வில்லனாக பெரிய ரவுண்டு காத்திருக்கிறது பிரதர். ஜி.எம்.குமார்... போதையிலும் சரி, நிதானத்திலும் சரி... உங்களையும் ஞாபகத்திலிருந்து பிரிக்க முடியவில்லை.செழியனின் கேமரா பெருமைப்படும் விதத்தில் படத்தை அழகுபடுத்துகிறது. 1000மாவது படம் என்ற அபார மைல்கல். அதில் இளையராஜா பின்னணியிலும் பாடல்களிலும் முன்னணியில் இருக்கிறார்.
இடைவேளைக்குப் பிறகு வரலட்சுமியை மறந்துவிட்டு கதை பயணிப்பது எப்படி? வரூவை மனசுக்குள்ளே வைத்து மருகிய சசிகுமார், அவரது வாழ்க்கையை விசாரித்தறிய வேண்டாமா? ஆறு மாதங்களாக குடும்பத்தினரால் கண்டுபிடிக்க முடியாத வரலட்சுமியின் இருப்பிடத்தை சசி உடனே கண்டுபிடிப்பது எப்படி?
இப்படிக் கேள்விகள் நீள்கின்றன. ரத்தமும் சதையுமாக வாழ்வைக் காட்சிப்படுத்துவது தேவைதான். ஆனாலும் இவ்வளவு இறுதிக்கட்ட வன்முறை ஏன்? கொஞ்சம் குறைத்திருக்கலாமே! இன்னும் அவர்களின் வலி நிறைந்த, குதூகலமான வாழ்க்கையைப் பார்வைக்கு வைத்திருக்கலாமே! இன்னும் அந்தக் கலையின் அருமை, பெருமைகளை கதையின் ஊடே செருகியிருக்கலாமே! ஆனாலும், இது இருட்டில் இருக்கும் எளிய மனிதர்களின் வெளிச்சப் பதிவு!
- குங்குமம் விமர்சனக் குழு
|