தட்சணை



கழுத்தில் பெரிய டாலர் பதித்த தங்க செயின், நான்கு விரல்களிலும் மோதிரங்கள் மின்னிக் கொண்டிருக்க... ‘‘தட்டுல தட்சணை போடுங்கோ... தட்டுல தட்சணை போடுங்கோ’’ என்று குரல் கொடுத்தால் எப்படி இருக்கும்.

பலரும் முகம் சுளித்தனர்.‘‘ஏண்டி பங்கஜம், குருக்கள் நல்லா வசதியாத்தானே இருக்கார். அவர் ஒரே பையன் அமெரிக்காவுல செட்டில் ஆகியிருக்கான். மாசா மாசம் பணம் அனுப்பிடறான். அப்படி இருந்தும் அல்பமா தட்சணையை இப்படி அல்பமா வாய்விட்டுக் கேட்கறது நல்லாவா இருக்கு?’’ எனக் கேட்டாள் கல்யாணி.

‘‘அடிப் போடி, ‘காசேதான் கடவுளடா’ ஆசாமி அவரு. கோயில் நடை சாத்தற நேரம்... சீக்கிரம் பிராகாரம் சுத்திட்டு கிளம்பலாம்!’’ என்றாள் பங்கஜம்.
சுற்றிய பின் இருவரும் ஓரமாய் உட்கார்ந்தனர்.அப்பொழுது மூச்சிரைக்க ஒரு இளைஞன் கோயிலுக்குள் நுழைந்து, ‘‘சாமி...’’ என அந்த குருக்களை அணுகி, கொஞ்சம் தயங்கி நின்றான்.

கேட்டுக் கேட்டு வாங்கிய மொத்த தட்சணை பணத்தையும் அள்ளி அவனிடம் கொடுத்த குருக்கள், ‘‘கோபாலு! உனக்கு காலேஜ் ஃபீஸ் கட்டற அளவுக்கு போதுமான பணம் சேர்ந்துடுச்சு. ஆதரவற்ற உன்னை படிக்க வைக்கறதுதான் என் பூஜை!’’ என்றார் குருக்கள்.கல்யாணி, பங்கஜம் இருவர் மனதிலும் சற்று முன்பு தரிசனம் செய்த மூலவர் மறைந்து, ‘குருக்கள்’ பளிச்சென பதிந்தார்.              

கே.அசோகன்