கட்டையைக் கட்டிட்டா நான் கூத்தாடி!



கலக்கும் திலகவதி

மின்னொளியில் ஜொலிக்கிறது களம். ஆயிரக்கணக்கான மக்கள் சூழ்ந்து அமர்ந்திருக்கிறார்கள். கனத்த வேஷத்தோடு களத்தில் குதிக்கிறான் துச்சாதனன்.
‘நடக்கத்தான் வந்தேன் வந்தேன்
அரை நாழிகை தனிலே உன்னை
அடக்கத்தான் வந்தேன்
எங்கள் அண்ணன் முன்
கொண்டு போய்
விடுக்கத்தான் வந்தேன்
வேந்தர்கள் சபையில்
வெட்கம் கெடுக்கத்தான்
வந்தேன் போடி
கர்வம் ஏன் எழுந்து வாடி...’
- ஆவேசம் ததும்ப பாடுகிற துச்சாதனனை மொத்தக் கூட்டமும் வியந்து பார்க்கிறது. உடல்மொழியில் கம்பீரம். குரலில் பெண்மை!
கட்டைக்கூத்து என்பது ஆண்களின் கலை. அந்த சரித்திரத்தை மாற்றி  எழுதியிருக்கிறார் திலகவதி. பிரதான நாடகங்களில் ஆண்களுக்கு நிகராக  கட்டை வேஷம் கட்டுவது மட்டுமின்றி, பெண்கள் நிரம்பிய கட்டைக்கூத்து குழு  ஒன்றையும் நடத்துகிறார்.

சிறு வயது முதலே கூத்தில் பற்றுகொண்ட திலகா, பல தடைகளைத் தாண்டி, முதல் பெண் கட்டைக்கூத்துக் கலைஞராக வளர்ந்திருக்கிறார். திலகவதிக்கு சொந்த ஊர் காஞ்சிபுரத்தை அடுத்துள்ள மேட்டுமுள்ளுவாடி. நாடகக் கலையில் ஊறிய குடும்பம். அப்பா பழனியும், அவரது சகோதரர்களும் இணைந்து ‘தென்னாட்டு நாரையூர் கூத்து’ என்ற கலைநிகழ்ச்சியை நடத்தி வருகிறார்கள்.

‘‘கூத்தையும், எங்க வாழ்க்கையையும் பிரிச்சுப் பாக்க முடியாது. எங்க ஊர்ல பலருக்கு கூத்துதான் வாழ்க்கை. ‘கூத்து அழிஞ்சிடுச்சு... சினிமா எல்லாத்தையும் தின்னு செரிச்சிடுச்சு’ன்னு சொல்றவங்களைப் பார்க்கும்போது எனக்குக் கோபம் வரும். உண்ைமயில், கூத்து எக்காலத்திலும் அழியாது. அந்தக் காலத்தை விட இப்ப இன்னும் வீரியமா நடக்குது. திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள்ல இன்னைக்கும் 35 கூத்துக் கம்பெனிங்க இருக்கு. ஒவ்வொரு கம்பெனியும் வருஷத்துக்கு 100 கூத்துக்கு மேல போடுறாங்க.

நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாமே கூத்துச் சூழல்லதான். அப்பா, சித்தப்பா, பெரியப்பா எல்லாரும் கூத்துக் கலைஞர்கள். வீட்டுக்குள்ள 10 வார்த்தை பேசினா 5 வார்த்தை கூத்து பத்தினதா இருக்கும். சின்ன வயசுல இருந்தே கூத்து எனக்கு உயிர். பிற கூத்துகள்ல பெண்கள் இருக்காங்க. கட்டை வேஷத்தைப் பொறுத்தவரை ஆண்களே பெண் வேஷம் கட்டி ஆடுவாங்க.

குடும்பத்துல நான்தான் மூத்த பொண்ணு. எனக்குக் கீழே நாலு தங்கச்சிங்க. கூத்துதான் ஜீவனம். அப்பா நடத்துற குழுவுக்கு முத்துமாரியம்மன் நாடக மன்றம்னு பேரு. தென்னாட்டு நாரையூர் கூத்து, டிராமா மாதிரியும் இல்லாம, கட்டைக்கூத்து மாதிரியும் இல்லாம வித்தியாசமா இருக்கும்.  
கட்டைக்கூத்தை என் குரு ராஜகோபால் தாத்தாதான் ஒரு வடிவத்துக்குக் கொண்டு வந்தார்.

இதை கட்டிக் காப்பாத்துறதுக்காக தன்னோட வாழ்க்கையையே அர்ப்பணிச்சிருக்கார் அவர். இளம் தலைமுறை மூலமா கட்டைக்கூத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு போறதுக்காக நிறைய திட்டங்களை உருவாக்கினார். ஆர்வமுள்ள கலைஞர்களை தேர்வு பண்ணி, நிதி கொடுத்து, ஒரு நாடகத்தையும் கொடுத்து, அந்தப் பகுதியில இருக்கிற பிள்ளைகளுக்கு கத்துக்கொடுக்கச் சொன்னார் தாத்தா. சித்தப்பா எங்க பகுதியில இருந்த 15 பிள்ளைகளைத் திரட்டி கத்துக்கொடுத்தார். அதுல நானும் ஒருத்தி.

அப்பவே கட்டை வேஷம்தான் போட்டேன். அந்த நேரத்துலயே ‘பொம்பளைப் புள்ளைங்க கட்டவேஷம் போடக்கூடாது’ன்னு சில பேர் சொன்னாங்க. நான் சின்னப்பிள்ளையா இருந்ததால விஷயம் பெரிசாகலே. ஒருநாள் தாத்தா முன்னாடி நாடகத்தைப் போட்டோம். அதைப் பார்த்து சந்தோஷப்பட்ட தாத்தா, ‘சீக்கிரமே ஒரு குருகுலப் பள்ளி தொடங்கப் போறேன். நீங்கள்லாம் வந்து சேரணும்’னு சொன்னார். 2002ல சொன்ன மாதிரியே குருகுலப் பள்ளியைத் தொடங்கினார். அப்போ எனக்கு 12 வயசு.

எனக்கு படிப்பு சரியா வராது. கூத்துதான் எதிர்காலம்னு அப்பவே முடிவு செஞ்சுட்டேன். குருகுலப் பள்ளியில சேத்து விடச்சொல்லி அழுது புரண்டேன். ஒரு வழியா சேத்து விட்டாங்க. மொத்தம் 21 மாணவர்கள். அதுல என்னையும் சேத்து 3 பெண்கள். ரெண்டு பேருக்கு இடையிலேயே கல்யாணம் முடிஞ்சிடுச்சு. முழுசா முடிச்சுட்டு வெளியில வந்தது நான் மட்டும்தான். காலையில இருந்து மதியம் வரைக்கும் பள்ளிப் பாடம். 1 மணியில இருந்து 5 மணி வரைக்கும் கூத்துப் பயிற்சி.

உறவுக்காரங்கள்லாம் ஒரு மாதிரி பேச ஆரம்பிச்சுட்டாங்க. அம்மாவுக்கும் பிடிக்கலே. ஆனாலும் நான் தீவிரமா இருந்தேன். 8 வருஷம் பயிற்சி. கட்டியக்காரன்ல இருந்து அத்தனை பாத்திரங்களையும் தாத்தா சொல்லிக் கொடுத்தார். அடவுகள், பாட்டுகள், மேக்கப், உடைகள்னு எல்லாத்திலயும் ஆர்வம் காட்டுனேன். பயிற்சி முடிச்சு, 2 வருஷம் ஸ்கிரிப்ட் எழுதித் தர்றது, உடை தயாரிக்கிறதுன்னு தாத்தாவுக்கு உதவியா இருந்தேன்.

என் குரு மாதிரி கட்டைக்கூத்து பயிற்சியாளரா, இயக்குனரா ஆகணும்ங்கிறதுதான் என் லட்சியம். பரத நாட்டியக் கலைஞர் சங்கீதா ஈஸ்வரன் சென்னையில சில வாய்ப்புகளை உருவாக்கித் தந்தார். குருவின் ஆசீர்வாதத்தோட சென்னைக்கு வந்தேன். நிறைய குழந்தைகளுக்கு பயிற்சி கொடுத்தேன். மாற்றுத் திறனாளி குழந்தைகளை கூத்து மூலமா செயல்படச் செய்ய முடியுமாங்கிற பரிசோதனை முயற்சிகளும் செஞ்சுக்கிட்டிருக்கேன். இடையிடையே கூத்துகளுக்கும் போறதுண்டு. பிரான்ஸ், அமெரிக்கா, பிரிட்டன் எல்லாம் போய் நிகழ்ச்சிகள் செஞ்சிருக்கேன்.

கட்டைக்கூத்துல பெண்கள் நிராகரிக்கப்பட்டதுக்கு நிறைய காரணங்கள் இருக்கு. முதல்ல, பெண்கள் யாரும் வரத் தயாரா இல்லே. கட்டைக்கூத்து ராத்திரி 10 மணிக்கு ஆரம்பிச்சா காலை 6 மணி வரைக்கும் இடைவிடாம நடக்கும். கல்யாண முருங்கை மரத்துல செய்த 20 கிலோ ஆபரணங்களை உடம்புல வச்சு கட்டிக்கிட்டு எட்டு மணி நேரம் ஆடுறது சவாலான வேலை.

தொடங்கின அரை மணி நேரத்திலேயே முடிச்சு போட்ட இடமெல்லாம் வலியெடுக்க ஆரம்பிச்சிடும். தலையில போடுற முடிச்சை கொஞ்சம் பலமா போட்டுட்டா வாந்தி, மயக்கமெல்லாம் வந்திடும். பெண்களோட உடல்வாகு அந்த சிரமத்தை ஏத்துக்காதுன்னு நம்பிக்கை. அடுத்து, இந்த தெய்வீகக் கலை பெண்களால தீட்டு பட்டுடும்னு ஒரு மனோபாவம். இதை உடைக்கணும்ங்கிறதுக்காகவே நிறைய பெண்களை வச்சு ஒரு கூத்து மன்றம் ஆரம்பிக்க ஆசைப்பட்டேன். 9 பெண்களை ஒருங்கிணைச்சேன். 23 பேர் கொண்ட கிருஷ்ணா கட்டைக்கூத்துக் குழுவை ஆரம்பிச்சேன். வெள்ளி, சனிக்
கிழமைகள்ல மட்டும் கூத்து. மற்ற நேரங்கள்ல பயிற்சி.

கட்டைக்கூத்து அற்புதமான கலை. மகாபாரதம், ராமாயணம், புராணப் பாத்திரங்களை கண் முன்னே உலவ விடுற கலை. அலங்காரம், ஆபரணங்கள், பாத்திரங்களோட வடிவமைப்பு எல்லாமே பாரம்பரியமானது. மக்கள் தெய்வீகமா பாப்பாங்க. கலவை குமாரசாமி வாத்தியார், கோனமேடை ராமசாமி வாத்தியார், செங்காடு தங்கவேல் வாத்தியார்னு பல ஆளுமைங்க வடிவமைச்சு வச்ச கலை இது. இன்னைக்கு பல கலைகள்ல ஆபாசமும், மலிவான வசனங்களும் புகுந்திடுச்சு. ஆனா, கட்டைக்கூத்து, தன்மை இழக்கலே. துளியளவும் மரபு மாறலே. அதுக்கான ரசிகர்களும் மாறாம இருக்காங்க. இன்னைக்கும் நாங்க நடத்துற ஒவ்வொரு கூத்துக்கும் ஆயிரம் பேருக்குக் குறையாம ரசிகர்கள் வர்றாங்க.

இந்தக் கலைக்கு ஆண், பெண் பேதமெல்லாம் இல்லை. கட்டையைக் கட்டிட்டா நான் கூத்தாடி. அதுதான் என் அடையாளம். துரியோதனனா, கர்ணனா, தர்மனா, பீமனா மாறிடுவேன். என் ஆர்வத்துக்கும் தீவிரத்துக்கும் முன்னால கற்பிதங்களும் பலவீனங்களும் நிக்கலே. எங்க கொள்ளுத் தாத்தா பொன்னுசாமி வாத்தியார் பிரபலமான கூத்துக் கலைஞர். மேடையில கிருஷ்ணனா வேஷம் கட்டி ஆடும்போதே அவரோட உயிர் பிரிஞ்சிடுச்சு. இருக்கும் வரைக்கும் பேர் சொல்ற மாதிரி கூத்து, கடைசியில பொன்னுசாமி வாத்தியார் மாதிரி  ஒரு மரணம்... இப்போதைக்கு இதுதான் என் கனவு!’’

இடைவிடாத சாரல் போல தொய்வின்றி வந்து விழுகின்றன திலகாவின் வார்த்தைகள். கட்டியங்காரன் களத்துக்குள் இறங்குகிறான்.‘கோடிட்ட இடங்களிலே கோமகனாய் வாழ்ந்து வந்தேன் கோலோச்சும் என்னைக் கண்டு - ஐயா கோமாளி என்றனரே...தந்தோம் தந்தோம் தனதன தந்தோம் தனதோம்...’உக்கிரம் தணித்து இயல்புக்குத் திரும்புகிறது களம்!

கல்யாண முருங்கை
 மரத்துல செய்த 20 கிலோ
 ஆபரணங்களை உடம்புல வச்சு கட்டிக்கிட்டு
 எட்டு மணி நேரம் ஆடுறது
சவாலான வேலை.
முடிச்சு போட்ட
இடமெல்லாம் வலியெடுக்க  ஆரம்பிச்சிடும்...

- வெ.நீலகண்டன்
படங்கள்: ஆர்.சந்திரசேகர்