‘ரஜினி முருகன்:விமர்சனம்
வருஷம் கடந்து வந்தாலும் கிச்சுகிச்சு மூட்டி சிரிக்க வைக்கிறவனே ‘ரஜினி முருகன்’.ஊரில் வேலைக்கு ஆகாத உதார் பார்ட்டி சிவகார்த்திகேயன். தாத்தாவுக்கு மூணு வேளை சாப்பாடு கொடுப்பதும், பால்ய சிநேகிதிக்கு காதல் தொல்லை கொடுப்பதும்தான் அவருக்கு முழுநேர வேலை. துணைக்கு அவர் மாதிரியே இருக்கும் சூரியும் சேர்ந்துகொள்ள, வகைதொகை இல்லாமல் அடிக்கும் கூத்துகளே மீதி.
 ஆகப் பழைய கதையில் கவலைப்படாத திரைக்கதைக்கு அச்சாணியாக இருப்பது சிவகார்த்திகேயன். பைசா பெறாத காரணத்துக்காக பிரிந்த நண்பர்களின் பிள்ளைகள், லட்சத்து ஒன்றாவது தடவையாக காதலிக்கிறார்கள். தாத்தாவின் பூர்வீக வீட்டை சாமர்த்தியமாக விற்று, தன் பங்கைச் சேர்த்துக்கொண்டு, பிரியப்பட்ட காதலி கீர்த்தியை மணக்கிறாரா, இல்லையா? அடடா, இதுதான் மீதிக்கதை!
இந்தத் தடவை மதுரைக் களத்திற்கு திரும்பியிருக்கிறார்கள். அரிவாளைத் தூக்கினாலும் நம்ப மாட்டார்கள் என்பதால்... பழைய கதையில் சிரிப்புவெடி வெடிக்கும் வேலையில் சிவகார்த்தி. துள்ளலில் வெளுத்துக் கட்டியிருக்கிறார்.
இரண்டு ஜோக் அடித்துவிட்டு, மூன்றாவதாக ‘இன்றைக்கு திங்கள்கிழமை’ என்றாலும் சிரித்துவிடுகிறார்கள். சூரியோடு வீதிகளில் கிடந்து சலம்புவதில் ஆகட்டும்... காதல் கை கூடுமோ எனத் துவளுவதில் ஆகட்டும்... மனிதர் நிஜ ஃபீலிங்கே காட்டுகிறார். காதல் கைகூட காதலியின் வீட்டுக்கு எதிரே டீக்கடை வைப்பது கூட காதல் உத்திகளில் ஒன்றாம். பொன்ராம் சார், கொஞ்சம் முழிச்சிக்குங்க! அதையும் சிவகார்த்தி காமெடி செய்துவிட்டதால் தப்பித்தது கதையும் படமும்.
சிவாவைப் போட்டுத் தாக்கி கலாய்த்து எகிறும்போதெல்லாம் ஜாலி ரைடு அடிக்கிறார் சூரி. ஆனால், அவர் என்ன சொல்லிக் கேட்டாலும் எங்கோ கேட்ட மாதிரி தோன்றுகிறதே ஏன்? அவ்வப்போது சிரித்து வைத்து திரும்பிப் பார்த்தால் எதற்கு சிரித்தோம் என்ற கேள்வி வருவது நிச்சயம்! சிவாவின் அனைத்து சேட்டைகளுக்கும் சரியான பக்க வாத்தியம் வாசித்து, அவருக்கு பக்கா வாத்தியமாக மாறுகிறார் சூரி.
கீர்த்தி... அழகு முகம்! இன்னும் கொஞ்சம் நவரசங்களைக் கற்றுக்கொண்டால் காதலிக்கும் வரை கரையேறலாம். பாவாடை, தாவணி, சேலை என எதில் வந்தாலும் பச்சரிசி பல் சிரிப்பில் அழகும் பொலிவும் அள்ளுகிறது. அந்த ரஜினி ரசிக மாமனார் அச்சுதகுமார் நிஜமாகவே கவனிக்கும்படி செய்கிறார்.
ஒவ்வொரு பேச்சுக்கும் இடையில் தலைமுடியைக் கோதிக்கொண்டு, தலையைச் சிலுப்பிக்கொள்ளும் ரியாக்ஷன் நச்!யாருமே எதிர்பார்க்காத வில்லன் சமுத்திரக்கனி. வழக்கமாக கருத்துச் சொல்பவர், கடுமையான வார்த்தைகளில் டெர்ரர் போஸ் தருகிறார். உடல்மொழியும், முகம் நிறைய கோபமும், வந்து போகும் வேகமும்... கிட்டத்தட்ட ஆல் ரவுண்டர் ஆகிவிட்டார் கனி. ராஜ்கிரண் அருமைத் தாத்தாவாக அடக்கமாக வருகிறார். சென்டிமென்ட் கண்ணீருக்கு அவர்தான் படம் முழுக்க அத்தாரிட்டி!
ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியெம் பாடல்களில் தன் வித்தையைக் காட்டுகிறார். இமான் பாடல்கள் சிறக்கிறது. பின்னணிக்கெல்லாம் பெரிய வேலையில்லை. நன்றாகவே இருந்தாலும், அடிக்கடி சமுத்திரக்கனி வந்து கலாட்டா செய்துவிட்டுப் போவது கொஞ்சமாய் அலுக்கிறது. படம் மொத்தத்திலும் பழைய படம் பார்ப்பது போன்ற நினைவு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. ஒரு வீடு விற்பது அவ்வளவு கடினமானது என நம்புவதும் கடினமாக இருக்கிறது.காமெடியை வைத்தே கரை சேர நினைத்திருக்கிறார்கள். சேர்ந்துவிட்டார்கள் என்றே தோன்றுகிறது!
- குங்குமம் விமர்சனக் குழு
|