கதகளி :விமர்சனம்
யார் கொலை செய்தது என அறியாமல் செத்துக் கிடக்கிற தாதா... கொலை செய்தது விஷால்தானோ என சந்தேகப்படுகிற போலீஸ்... இந்த சிக்கல்களிலிருந்து விஷால் குடும்பத்தோடு தப்பித்தாரா என்பதே ‘கதகளி’.தில் ஹீரோ, ஜில் ஹீரோயின், கல்நெஞ்ச வில்லன் எனக் காதலுக்கு முன்னால் தோன்றிய கதையை ஹைவே ஸ்பீடில் ஓட விட்டிருப்பதால் கிடைக்கிறது விறுவிறு துறுதுறு திரைக்கதை.
 பிரதான கதாபாத்திரங்களை அடுத்தடுத்த நிமிடங்களில் ‘நச் நச்’ என அறிமுகப்படுத்தி, பத்தாவது நிமிடத்திலேயே படத்தில் நம்மை இழுப்பதில் வெற்றி பெறுகிறார் ‘சைல்டு ஸ்பெஷலிஸ்ட்’ பாண்டிராஜ். ரொம்ப முத்திரை குத்திடாதீங்க என பயந்து ஆக்ஷன் ஏரியாவில் அதகளமாய்ப் புகுந்திருக்கிற பாண்டிராஜுக்கு வெல்கம்!
இன்னும் நான்கே நாட்களில் விஷாலுக்கும், கேத்தரின் தெரஸாவுக்கும் திருமணம். அந்த நிலையில் அதே ஊர் தாதா கொல்லப்பட, முன்விரோதம் காரணமாக விஷால் குடும்பத்தினர் மீது சந்தேகம் எழுகிறது. குடும்பத்தினரின் பாதுகாப்பு, போலீஸின் மிரட்டல், பகையாளியின் கொலைவெறி என மூன்றிலும் புகுந்து புறப்படும் விஷால் என்ன ஆனார், அசல் கொலைகாரர் யார் என்பதே த்ரில்லர் கம் ஆக்ஷன் மீதிக் கதை.
தனது தோற்றத்திற்கு ஏற்ற கதையில், சட்சட்டென முடிவெடுத்து காரியம் சாதிக்கும் நேர்த்தியில், விஷால் இந்தத் தடவை செய்திருப்பது கச்சிதமான அண்டர் ப்ளே. தெரஸாவின் குரலில் மட்டுமே மயங்கி அவர் காதல் கடலை போடுவதெல்லாம் ஏற்கனவே பாண்டிராஜ் படங்களில் ரசித்தது என்றாலும், இன்னும் புளிக்கவில்லை என்பதுதான் விசேஷம்.
ஒவ்வொரு தடவையும் விஷாலை ஊரிலிருந்து இன்ஸ்பெக்டர் செல்போன் மூலம் தன் கட்டுப்பாட்டு எல்லைக்குள் கொண்டு வரும்போது அவரோடு நமக்கும் தொற்றிக்கொள்கிறது படபடப்பு. அதே மாதிரி தெரஸாவிடம் காதல் மூடில் இருந்த விஷால், நண்பன் உஷார்படுத்தும் கணத்திலிருந்து அதிரடி களத்துக்கு மாறுவது படத்தின் பெரிய ரிலாக்ஸ். ஹீரோவின் நண்பர்களை ‘செட் ப்ராப்பர்ட்டிகள்’ மாதிரி ஆக்காமல் கலகலப்புக்கும் காமெடிக்கும் பயன்படுத்தியது நன்றாக இருக்கிறது. கருணாஸ் கம்பேக் அவருக்கும் நமக்கும் ஃபீல் குட்.
ரசிக்க ரசிக்க குறையாத அழகில் மிளிர்கிறார் கேத்தரின் தெரஸா. ஆனாலும், இன்னும் கொஞ்சம் நடிக்கிற அம்சத்திற்கு நெருங்கி வரலாமே! அப்படி உத்தரவாதம் கொடுத்தால் இன்னும் எதிர்காலத்தில் பல படங்களில் நீங்கள்தான் ஹீரோயின் என எதிர்பார்க்கலாம்.
அதெல்லாம் சரி, யாரடா கொலைகாரன் என்று மனசெல்லாம் புகுந்து புறப்படும்போது, கொஞ்சம் பேசியே பழக்கப்பட்ட டைரக்டர், ஆக்ஷனில் இறங்கியிருக்க வேண்டாமா? ஹீரோவிற்கு தெரிந்த விவரத்தை நமக்கே மறைத்து, அண்ணனிடமும் அதைத் தீவிரமாக மறைப்பது ஏன்? ஃபாரீன் ரிட்டர்னாக விஷாலை அவ்வளவு எளிதாக நம்ப முடியவில்லை. அத்தனை விரட்டல், மிரட்டல், பில்டப்போடு வரும் இடைவேளைக்குப் பிறகு ஏன் அவ்வப்போது குழப்பம்? விஷால் - தெரஸா காதல் ஃபிளாஷ்பேக்கில் கத்தரி வைத்திருக்கலாம்.
ஆனால், எட்டி உதைக்க ரௌடிகளை அதிகம் தந்துவிடாமல் விஷாலையும் காப்பாற்றி, நம்மையும் மீட்டெடுப்பது பாண்டிராஜின் கைவண்ணம். எடுத்ததற்கெல்லாம் பாட்டைக் கொடுத்து கெடுத்து வைக்காமல் இருப்பதும் பெரும் ஆறுதல். எண்ணி இரண்டே பாடல்களில் மெல்லிசை கொடுத்து பின்னணிக்குப் புறப்பட்டு விடுகிறார் ஹிப் ஹாப் தமிழா. பாலசுப்பிரமணியெம்மின் கேமராவிலும் இருக்கிறது பரபரப்பு. ‘கதகளி’, ரசிக்கிற ஆட்டமே!
- குங்குமம் விமர்சனக் குழு
|