ரிஷப லக்னத்துக்கு கிரகங்கள் கூட்டு தரும் யோகங்கள்



கிரகங்கள் தரும் யோகங்கள் 22

இந்தத் தொடரில் ரிஷப லக்னத்தைப் பற்றியும், லக்னாதிபதியான சுக்கிரன் தனித்து நிற்கும்போது கிடைக்கும் பலன்கள் பற்றியும், இரண்டிரண்டு கிரகங்களாக பன்னிரெண்டு ராசிகளுக்குள்ளும் நிற்கும்போது கிடைக்கும் பலன்கள் பற்றியும் பார்த்துக்கொண்டே வருகிறோம்.

இப்போது இதில் மூன்று முதல் ஐந்து கிரகங்கள் வரை சேர்ந்திருந்தால் என்ன மாற்றம் நிகழும் என்பதையும் பார்ப்போம். ஏனெனில், இரட்டைக் கிரகங்கள் இதுதான் செய்யும் என்று சொல்லலாம். ஆனால், பல கிரகங்கள் கூட்டாக இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யும்.

கூட்டுக் கிரகங்களைப் பற்றி பிரஹத் ஜாதகம், நந்தி வாக்கியம், கர்க்க ஹோரை முதலிய நூல்கள் விரிவாகப் பேசுகின்றன. இவற்றில் கூட்டுக் கிரகங்களின் பலம், பலவீனம் குறித்தெல்லாம் விவரமாக பதிவு செய்யப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக கர்க்க மகரிஷி அருளிய கர்க்க ஹோரை எனும் நூல் அபூர்வமான விஷயங்களை வகைப்படுத்துகிறது.

இப்போது நாம் பார்த்துக் கொண்டு வரும் ரிஷப லக்னம் என்பது பகவான் கிருஷ்ணர் அவதரித்த லக்னமாகும். அவர் ரோகிணி நட்சத்திரம், ரிஷப ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்தவராவார். மேலும்  ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவெனில், கர்க்க மகரிஷியே கிருஷ்ணரின் குலகுருவும் ஆவார். அதாவது வசுதேவப் பரம்பரையின் குருவும் ஆவார். எனவே, இவரே கிருஷ்ணர் பிறந்த சில நாட்களில் நந்தகோபருடைய இல்லத்திற்கு வந்து ‘கிருஷ்ணா’ என்று பெயரிட்டு வாழ்த்திச் சென்றார். இவரால்தான் பல அபூர்வ ஜோதிட நூல்கள் எழுதப்பட்டன.

உலகளாவிய அளவில் ரிஷப லக்னத்தில் பல்வேறு தலைவர்களும் பிரபலங்களும் பிறந்துள்ளனர். ஓஷோ, அடல் பிஹாரி வாஜ்பாய், ஜெகதீஷ் சந்திரபோஸ், முதல் அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் வாஷிங்டன், அதே போல ஜனாதிபதிகளின் வரிசையில் தியோடர் ரூஸ்வெல்ட், ட்ரூமன், ரிச்சர்ட் நிக்ஸன் போன்றோர்கள் உள்ளனர்.

சங் பரிவார் ஸ்தாபகர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜி, நடிகர் நாகார்ஜுனா, அரசியல்வாதி பிரமோத் மஹாஜன், டோனி ப்ளேர், ஒசாமா பின் லேடன், பாடகி லதா மங்கேஷ்கர், முன்னாள் கிரிக்கெட் விரர் ரவி சாஸ்திரி என்று இன்னும் பல்வேறு துறைகளில் சாதித்த சாதனையாளர்களும் இடம்பெற்றுள்ளனர். இப்போது நாம் அதில் சில முக்கிய சாதனையாளர்களின் ஜாதகத்தில் கூட்டுக் கிரகங்களின் தாக்கம் என்ன என்பதைப் பற்றிக் காண்போமா?

முதலில், தத்துவஞானியும் புரட்சியாளரும் சிந்தனையாளருமான ஓஷோவின் ஜாதகத்தைப் பார்ப்போம். இவரின் ஜாதகத்தில் ரிஷப லக்னத்திற்கு எட்டாம் இடத்தில் குரு இருக்கிறார். அதாவது அஷ்டமாதிபதியும் பதினோராம் இடமான லாப ஸ்தானத்திற்கு அதிபதியுமான குரு தனக்கு எட்டாம் இடத்தில் இருப்பதாலேயே தத்துவஞானியாகவும், அதிலும் புரட்சியாளராகவும் செயல்பட முடிந்தது.

இவர் தனுசு ராசியில் பிறந்திருப்பதால், இந்த ராசிக்கு அதிபதியான குருவே ராசிநாதனாகவும் இருந்ததால்தான் மாறுபட்ட ஆன்மிகத்தை போதிக்க முடிந்தது. மேலும், நாம் இப்போது பேசிக் கொண்டிருக்கும் கூட்டுக்கிரக அமைப்பும் இவரின் ஜாதகத்தில் மகத்தான அளவில் பங்காற்றியிருக்கிறது. அதாவது ரிஷப லக்னத்திற்கு எட்டாம் இடத்தில் - அதாவது தனுசு ராசியில் சுக்கிரன், சனி, சந்திரன், புதன், செவ்வாய் போன்ற ஐந்து கிரகங்களும் ஒன்றாக அமர்ந்திருக்கின்றன. இது ஒரு அபூர்வமான அமைப்பாகும். எட்டாமிடம் சூட்சும ஸ்தானமாகும். எனவேதான் இவர் மாறுபட்ட கோணத்தில் மக்களைச் சிந்திக்க வைத்தார்.

மேலும், கர்க்க ஹோரையில் கர்க்க மகரிஷி ‘சந்திரன், சுக்கிரன், சனி போன்ற மூன்று கிரகங்களின் கூட்டும் எட்டில் இதுபோன்று அமைந்திருந்தால் வாழ்க்கைத்துணை அமையாது’ என்கிறார். ‘சந்திரனும் புதனும் செவ்வாயும் இணைந்திருந்தால் பிரச்னைகளைச் சந்திப்பார்கள்’ என்றும் அந்த நூல் கூறுகிறது. ‘சந்திரன், செவ்வாய், சுக்கிரன் இணைந்திருந்தால் அரசனுக்கு இணையாக எல்லாவற்றையும் பெற்றிருப்பார்கள்’ என்கிறது. ஓஷோவின் வாழ்க்கையும் இப்படித்தான். எல்லாமுமே அவருக்கு கிடைத்தும் அதையெல்லாம் பொருட்படுத்தாது வாழ்ந்தார்.

அதுவும் காலபுருஷனின் கணக்குப்படி மேஷத்திலிருந்து ஒன்பதாவது வீடாக தனுசு வருகிறது. இதில் இவ்வாறு கூட்டாக கிரகங்கள் சேர்ந்திருப்பதென்பது விசேஷமானதாகும். அதனாலேயே ஓஷோ தனக்கென மதமல்லாத மதத்தை உருவாக்கினார். ஓஷோவிற்குக் கீழ் லட்சக்கணக்கில் மக்கள் இணைந்தனர். ஒரு மார்க்கத்தையே அவர் உருவாக்கினார் என்று கூட சொல்லலாம்.

ஏனெனில். இந்த கூட்டுக் கிரகத்தில் சனியும் இடம் பெற்றதால்தான் பிரமாண்டமாக உருவாக்க முடிந்திருக்கிறது. சனியால்தான் பாகுபாடு பார்க்காமல் அனைவரையும் சேர்க்க முடிந்தது. ஐந்தில் கேது இருப்பதாலேயே ஞான புருஷனாக இருந்தார். விருச்சிகத்தில் சூரியன் தனித்து நின்றதால்தான் திருமண பந்தத்தில் இல்லாமல் இருந்தார். சூரியன் தனித்தும், குரு வக்கிரமாகவும் இருப்பதால் ஆன்மிகவாதிகளுக்கும் அரசுக்குமே அச்சுறுத்தல் தருபவராக இருந்தார்.

அடுத்ததாக பிரபல பாடகியான லதா மங்கேஷ்கரைப் பார்ப்போம். சந்திரன் சர்வ கலாபிதம் என்பார்கள். இவர் புதன் கிரகத்தின் நட்சத்திரமான ஆயில்யத்தில் பிறந்திருக்கிறார். புதன் வாக்கு ஸ்தானத்திற்கு அதிபதி; பூர்வ புண்ணியாதிபதியும் ஆவார். சந்திரன் சங்கீதத்திற்கு உரியவர் ஆவார். இவரின் ஜாதகத்தில் சந்திரனுக்கு இரண்டில் சுக்கிரன், சுக்கிரனுக்கு இரண்டில் சூரியன், சூரியனுக்கு இரண்டில் புதன் என்று அடுத்தடுத்து அமையப் பெற்ற கிரக அமைப்புகளே மாபெரும் பாடகியாக உருவெடுக்க துணை புரிந்தன. சுக்கிரன் இனிமையான குரலுக்கு உரியவராவார். ஒரு கவிஞர் எப்படி கவிதைகளை எழுதியிருந்தாலும், இசையை இசையமைப்பாளர் எப்படி அமைத்திருந்தாலும், இசையையும் கவிதையையும் தன் குரலால் காதலிக்க வைத்து கானக் குரலில் கானகக் குயிலாய் கிறங்கடித்தவர்.

இவரின் ஜாதகத்தில் புதன், கேது, செவ்வாய் அமைப்பு சேர்ந்திருக்கிறது. குடும்ப ஸ்தானாதிபதியான புதன் இவ்வாறு சேர்ந்திருப்பதால் குடும்பம் என்கிற அமைப்பு அமையவில்லை. ஆனால், சுக்கிரன் வீட்டில் இந்த மூன்று கிரகங்களும் அமைந்ததால், இசையையே காதலித்து இசையையே திருமணம் செய்துகொண்டு, பாடல்களையே குழந்தைகளாகப் பெற்றெடுத்து பரவசப்படுத்தினார். குருவின் வளைய வீடுகளில் ஒன்றான இந்த லக்னத்திலேயே குரு அமர்ந்ததால் தேசிய அளவில் பெரும் விருதுகளைக் குவித்து, புகழையும் பாராட்டையும் பெற்றார்.

மூன்றாவதாக முன்னாள் பிரதமரான வாஜ்பாய் ஜாதகத்தை பார்ப்போம். இவரது ஜாதகத்தில் ரிஷப லக்னத்தில் எட்டாம் வீட்டில் கூட்டுக் கிரகங்களாக சந்திரன், சூரியன், புதன், குரு போன்றோர் இணைந்திருக்கின்றனர். யோகாதிபதியான சனி ஆறாம் இடத்தில் உச்சம் பெற்றிருக்கிறார். இது தீர்க்காயுளையும் குறிக்கும். இந்த சனியின் அமைப்பே ஆழமான சிந்தனைகளையும், மத சகிப்புத் தன்மையையும், எல்லோரையும் அனுசரித்துச் செல்லும் தன்மையையும் அளிக்கும். களத்திர காரகன் சுக்கிரன், களத்திர ஸ்தானமான ஏழில் தனித்து அமர்ந்து காரகாபாவ நாஸ்தி தோஷம் அடைந்தவரானார்.

 பஞ்சமாதிபதி செவ்வாய் மீனத்தில் நின்றதாலும் திருமணம் முடியாமல் போனது. ஆனால், எட்டாமிடத்தில் நான்கு கிரகங்கள் சேர்ந்திருப்பதால் இயற்கையை ரசிக்கும் ஆற்றலும் கவித்துமான மனோநிலையும் இருந்தது. வீட்டாதிபதி என்றழைக்கப்படும் தனுசு வீட்டிற்கு அதிபதியான குரு, தன் இடத்தில் ஆட்சி பெற்று இருப்பதாலும், கூடவே சூரியனும் சேர்ந்ததாலும்தான், தன் சுகங்களை விட்டுக் கொடுத்து நாட்டு நலனுக்காக, தான் சார்ந்திருக்கும் இயக்க நலனுக்காக இறுதி வரை உழைத்துக் கொண்டேயிருந்தார். இந்த நான்கும் சேர்ந்திருப்பதால் கவிதைகள், மொழிப் புலமை, பேச்சுத் திறமையும் சேர்ந்திருந்தது.

நான்காவதாக தாவரவியல் தந்தை என்றழைக்கப்படும் ஜெகதீஷ் சந்திர போஸ் அவர்களின் ஜாதகத்தைப் பார்ப்போம். இவருடைய ஜாதகத்தில் ரிஷப லக்னத்திலேயே குரு அமர்ந்திருக்கிறார். ஆயுள் ஸ்தானாதிபதியான குரு இவ்வாறு எட்டில் அமர்ந்து, ஆத்மகாரகனான சூரியன் ஏழாமிடத்தில் அமர்ந்து இருவரும் பரஸ்பரம் பார்த்துக் கொண்டிருப்பதுடன், பூமிகாரகனாகிய செவ்வாய் உச்சம் பெற்றும் இருப்பதால்தான், ‘மனித உயிர்களைப் போல் மண்ணில் தோன்றும் மரம், செடி, கொடி முதல் அனைத்திற்கும் உயிர் உண்டு’ என்று இவரால் கண்டறிய முடிந்தது. சந்திரனுக்கு நான்கில் சுக்கிரன் நின்றதால்தான் தாவரங்களின் தனித்தன்மையை இவரால் உணர முடிந்தது. ராகு பத்தாம் வீட்டில் சனியின் வீட்டில் இருந்ததால்தான் இயற்பியல் ஞானம் வந்தது. சந்திரனின் நட்சத்திரமான ஹஸ்தத்தில் பிறந்ததால்தான் தாவரங்களைக் குறித்து ஆராய முடிந்தது. தாவரவியலில் சாதனைகளை நிகழ்த்த முடிந்தது.

ஐந்தாவதாக அமெரிக்காவின் முதல் ஜனாதிபதியான ஜார்ஜ் வாஷிங்டன் குறித்துப் பார்ப்போம். இவரின் ஜாதக கட்டங்களிலுள்ள நான்கு மூலைகளான உபய வீடுகள் எனப்படும் கட்டங்களில் கிரகங்கள் நிற்பது என்பது ஒரு ராஜயோக அமைப்பாகும். ஏழாம் வீடு முதல் பதினோராம் வீடு வரை கிரகங்கள் நின்றிருப்பதும் இவரை அரசாள வைத்திருக்கிறது.

 சந்திரனுக்கு இரண்டில் புதன், சூரியனுக்கு முன்னே லக்னாதிபதியான சுக்கிரனும், பின்னே தன - பூர்வ புண்ணியாதிபதியான புதனும் ஜாதகத்தில் அமர்ந்து பெரிய ராஜயோக அமைப்பை அளித்திருக்கிறது. லக்னாதிபதியான சுக்கிரனோடு பிரபல யோகாதிபதியும், பாக்கிய ஜீவனாதிபதியுமான சனி சேர்ந்ததும், அந்த வீட்டை குரு பார்வையிட்டதும்தான் அற்புதம். இந்த அமைப்பே, இவரை நினைத்ததை சாதிக்க வைத்தது. மக்கள் செல்வாக்கு அதிகரித்தது. பூமிகாரகன் ஆட்சி பெற்று அமர்ந்ததால்தான் புவியாளும் யோகமும் உண்டானது. 

ரிஷபம் எனப்படுவது நந்தியைத்தான் குறிக்கும். இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் கூட்டுக் கிரகங்களின் தாக்கத்தால் நிச்சயம் நன்மையும் சில தீய பலன்களையும் பெறத்தான் செய்வார்கள். ஏனெனில், ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள் ஒன்று சேரும்போது கிரகங்களைப் பொறுத்தளவில் நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ ஏதேனும் பாதிப்புகள் இருக்கத்தான் செய்யும். எனவே, நந்தி தேவரை வணங்குவது மிகவும் நல்லது. பிரதோஷத்தன்று தரிசிப்பது இன்னும் சிறப்பானது. குறிப்பாக அரியலூருக்கு அருகேயுள்ள திருமழபாடி எனும் தலத்தில் தம்பதி சமேதராக அருளும் நந்திகேஸ்வரரை  வணங்கி வாருங்கள். கூட்டுக் கிரகங்களின் நேர்மறைப் பலன்களை மிகுதியாகப் பெற்றிடுங்கள்.

(கிரகங்கள் சுழலும்...)

ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்

ஓவியம்: மணியம் செல்வன்