பீட்டா அமைப்புக்கு விலங்குகள் நலன் மட்டும்தான் நோக்கமா?
‘‘உச்ச நீதிமன்றம் இதுவரை சந்தித்திராத பரபரப்பு அது’’ என்கிறார்கள் டெல்லி பத்திரிகையாளர்கள். சீனியர் கவுன்சில்கள் எனப்படும் மூத்த வழக்கறிஞர்கள் 11 பேர், 42 வழக்கறிஞர்கள், 17 இளநிலை வழக்கறிஞர்கள்...
 அத்தனை பேரும் விலங்குகள் நல அமைப்புகளின் சார்பில் நீதிமன்றத்தில் குவிந்தார்கள். எவ்வித மனத்தடையும் இல்லாமல், அவர்களின் வாதத்தை ஏற்று, ‘ஜல்லிக்கட்டு நடத்த அனுமதியளித்த’ மத்திய அரசின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது நீதிமன்றம்.
ஜல்லிக்கட்டை எதிர்த்து தொடக்கத்திலிருந்தே முன்நின்றது பீட்டா (People for the Ethical Treatment of Animals -PETA) அமைப்புதான். ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த அமைப்பின் பின்னணி பற்றி பல்வேறு அதிர்ச்சியான செய்திகள் விவாதிக்கப்படுகின்றன.
பீட்டா அமைப்பு ஏராளமான விலங்குகளைக் கொலை செய்வதாகவும்; இறைச்சி நிறுவனங்கள், கலப்பினக் கால்நடை உற்பத்தி நிறுவனங்கள், மருந்துக் கம்பெனிகள், செல்லப்பிராணி விற்பனை நிறுவனங்கள், பால் உற்பத்தி நிறுவனங்களின் முகமூடியாக செயல்படுவதாகவும் சமூக வலைத்தளங்களிலும் இணைய இதழ்களிலும் கட்டுரைகள் எழுதப்படுகின்றன.
 பீட்டா அமைப்பு, 1980ல் அமெரிக்காவின் வர்ஜினியாவில் தொடங்கப்பட்டது. பெரும்பாலான நாடுகளில் இந்த அமைப்புக்கு கிளைகள் உண்டு. இந்தியப் பிரிவுக்கு பூர்வா ஜோஷிபுரா தலைவராக இருக்கிறார். விலங்குகள் வதையைத் தடுத்து சுதந்திரமான வாழ்க்கையை உறுதிப்படுத்துவதுதான் இதன் கொள்கை. பிரபல நடிகைகளையும், மாடல்களையும் நிர்வாணமாகவோ, அரைகுறை ஆடையுடனோ நிறுத்தி கவனம் ஈர்ப்பது பீட்டாவின் பிரசார யுத்திகளில் ஒன்று.
பீட்டாவின் பின்னணி என்ன? உண்மையிலேயே அதற்கு விலங்குகள் நலன் மட்டும் தான் நோக்கமா? ‘‘கண்டிப்பாக இல்லை. விலங்குகள் நலன் என்ற பெயரில் பன்னாட்டு நிறுவனங்களின் வணிகத்தைப் பரப்புவதையே முதன்மை நோக்கமாகக் கொண்டு பீட்டா செயல்படுகிறது” என்று அழுத்தமாகச் சொல்கிறார், ஐ.நா. சுற்றுச்சூழல் கழகத்தின் தென்கிழக்கு ஆசிய பிராந்திய உறுப்பினரும், காங்கேயம் மாடுகள் ஆராய்ச்சி மையத்தின் நிறுவனருமான கார்த்திகேயா சிவசேனாபதி.
‘‘அமெரிக்காவுக்கு என்று எந்த நாகரிகமும் இல்லை. குடும்பம் என்ற கட்டமைப்போ, கட்டுப்பாடோ இல்லை. தனித்த வாழ்க்கை. தனிமையால் மன உளைச்சலுக்கு உள்ளாகும் அமெரிக்கர்கள் ‘பெட் அனிமல்’ கலாசாரத்தைக் கொண்டு வந்தார்கள். பல்லாயிரம் கோடி வணிகம் அது. வளர்க்கும்போது காணாமல் போகும் அல்லது கைவிடப்படும் வளர்ப்புப் பிராணிகளுக்கு ஆதரவு தரும் அமைப்பாகவே ‘பீட்டா’ உருவானது. உண்மையில், பீட்டாவிடம் விலங்குகளைக் காப்பாற்ற சிறு அறைகூட இல்லை என்று சர்வதேச பத்திரிகைகள் அம்பலப்படுத்தியிருக்கின்றன. ஒரு வாகனம்... சில கூண்டுகள்.
தெருக்களில் சுற்றும் பிராணிகளை 15 நாட்கள் வரை கூண்டுக்குள் அடைத்து பராமரிப்பார்கள். அதன்பிறகு அவற்றைக் கொலை செய்து புதைத்து விடுவார்கள். தங்களுக்கு சாதகமாக இதற்கென ஒரு சட்டத்தையும் இயற்றச் செய்து விட்டார்கள். இவ்விதம் பல ஆயிரம் விலங்குகளை பீட்டா அமைப்பு கொன்று குவித்திருப்பதாகச் சொல்கிறார்கள்.
ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் கால்நடைகள் சமூகச் சொத்து. காங்கேயம் மாடு, ஓங்கோல் மாடு என பகுதிக்கொரு ரகம் இருக்கும். ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் கால்நடைகள் கம்பெனிகளின் சொத்து. ஒரு ரகத்தை ஒரு கம்பெனி சொந்தம் கொண்டாடும். ஒவ்வொரு கம்பெனியும் 50 ஆயிரம், 1 லட்சம் என ஏராளம் மாடுகள் வளர்ப்பார்கள். இறைச்சி, பால் வணிகமெல்லாம் அவர்கள் கையில்தான் இருக்கும். அந்த கம்பெனிகள் தங்கள் வணிகமுறைக்கு இந்தியாவை மாற்ற முயற்சிக்கின்றன. இதற்கு துணைபோகிறது பீட்டா.
இயற்கையை மேய்ந்துதான் நம் மாடுகள் வளரும். மேயப் போகும் இடத்தில் கோயில் மாடுகள், பொலிகாளைகளோடு தானாக இணைந்து பிரசவிக்கும். இவற்றின் வீரியம் குறையாமல் இருக்கத்தான் ஜல்லிக்கட்டு, ரேக்ளா போன்ற விளையாட்டுகளை நடத்துவார்கள். பொலிகாளைகள், கோயில் காளைகள் இருக்கும் வரை நம் நாட்டு மாட்டினங்களை அழிக்கவே முடியாது. அவைதான் மாடுகளுக்கு விதை.
உரம், பூச்சிக்கொல்லிகள் வழியாக நம் விவசாயத்தை அழித்து பாரம்பரிய விதைகளை ஒழித்து, பாதி சந்தையை ஆட்கொண்டுவிட்ட பன்னாட்டு நிறுவனங்கள் அடுத்து கண் வைத்திருப்பது நம் கால்நடைகள் மேல். அதற்கு மூன்று விதமான காரணங்கள் உண்டு. ஒன்று, இந்தியாவின் பிரமாண்டமான பால் சந்தையைக் கைப்பற்றுவது. இரண்டாவது காரணம், இறைச்சி.
உலக அளவில் மாட்டிறைச்சி ஏற்றுமதியில் முன்னிலை வகிப்பது இந்தியாதான். 35 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடக்கிறது. மாட்டிறைச்சி வர்த்தகத்தில் இருப்பது மொத்தம் 8 நிறுவனங்கள். ஆச்சரியம் என்னவென்றால், இதில் 7 நிறுவனங்களை மேல்தட்டு சமூகத்தினர் நடத்துகிறார்கள். உலகெங்கும் ஆர்கானிக் மாட்டிறைச்சியை தேடுகிறார்கள்.
இந்திய நாட்டு மாடுகள், இயற்கையாக விளையும் செடி, கொடிகளை மேய்ந்து வளர்வதால் அவற்றிற்கு ஏக வரவேற்பு. ஜல்லிக்கட்டு போன்ற கேளிக்கைகளை அழித்துவிட்டால் மக்கள் தங்கள் மாடுகளை அடிமாட்டுக்கு விற்றுவிடுவார்கள். மூன்றாவது, கலப்பின மாட்டு ரகங்களை இந்தியாவுக்குள் கொட்டுவது. ஜெர்ஸி உள்ளிட்ட பல கலப்பினங்கள் ஏற்கனவே இந்தியாவை ஆக்கிரமித்து விட்டன. இந்தக் கலப்பின மாடுகளில் பெரும் காசு பார்க்கின்றன அன்னிய நிறுவனங்கள்.
இந்த மூன்று துறைகளைச் சார்ந்த பன்னாட்டு நிறுவனங்களின் அஜெண்டாவை பீட்டா இந்தியாவில் செயல்படுத்துகிறது. இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் விரிவாக விசாரணை நடத்த வேண்டும்’’ என்கிறார் கார்த்திகேயா சிவசேனாபதி. தேசிய கால்நடை ஆணையத்தின் முன்னாள் உறுப்பினர் ஹௌகர் அஜீஸ், பீட்டாவின் செயல்பாட்டை கேள்விக்கு உள்ளாக்குகிறார். ‘‘நானும் பீட்டாவோடு தொடர்பில் இருந்தவள்தான். அவர்களின் நோக்கம் புரிந்தபிறகு வெளியே வந்துவிட்டேன். முரண்பாடுகளின் மொத்த உருவாக மாறிவிட்டது பீட்டா. நாய்கள் இணை சேர்வது அதன் பிறப்புரிமை. ஆனால், பீட்டா குடும்பக் கட்டுப்பாடு செய்ய வலியுறுத்துகிறது. ஆகப் பெரிய வன்முறை இது.
இதில் உள்ளூர் விலங்குகள் நல அமைப்புகளும் பெரும் காசு பார்க்கின்றன. முன்பு வீட்டுக்கு வீடு கோழி வளர்ப்பார்கள். பிராய்லர் கோழியைக் கொண்டு வந்து நாட்டுக்கோழி இனங்களை அழித்தார்கள். இன்று பிராய்லர் கோழி விற்பனையில் இருப்பது உலக அளவில் இரண்டே கம்பெனிகள்தான்.
நாம் சாப்பிடும் ஒவ்வொரு கோழித்துண்டில் இருந்தும் அந்த நிறுவனங்களுக்குப் பணம் போகிறது. விதையை கம்பெனிகளிடம் எப்படி வாங்குகிறோமோ, அதைப்போல வெளிநாட்டில் விந்தணுக்களை வாங்கித்தான் நம் கலப்பின மாடுகளைக் கன்று போட வைக்கமுடியும். அதற்காகத்தான் கோடிக்கணக்கில் செலவு செய்கிறார்கள்’’ என்கிறார் ஹௌகர் அஜீஸ்.
பீட்டா மீது முன்வைக்கப்படுகிற குற்றச்சாட்டுகள் உண்மையா? பீட்டாவோடு இணைந்து செயல்படுபவரும், மத்திய விலங்குகள் நல வாரிய துணைத் தலைவருமான டாக்டர் சின்னி கிருஷ்ணனிடம் கேட்டோம்.‘‘இந்தக் குற்றச்சாட்டுகளை எல்லாம் கேட்டு அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை.
பால், தேன், பட்டு, கம்பளி உட்பட உயிரினங்களிடமிருந்து பெறும் எந்தப் பொருளையும் பயன்படுத்தக்கூடாது என்ற உன்னத நோக்கத்தோடு இயங்கி வருகிறது பீட்டா. இறைச்சி விற்பவர்கள், பால் விற்பவர்களிடம் எல்லாம் பணம் வாங்க வேண்டிய தேவை எங்களுக்கு இல்லை. எங்கள் மீதான காழ்ப்புணர்வில் இப்படியான ஆதாரமற்ற குற்றச்சாட்டை சொல்கிறார்கள்.
அந்தந்த நாடுகளில் உள்ள சட்டத்திற்கு உள்பட்டு செயல்படுகிறோம். பீட்டா இணையதளத்தில் நன்கொடை தருபவர்கள் பற்றியும் எங்களுடைய செயல்பாடுகளைப் பற்றியும் வெளிப்படையாக தகவல்கள் இருக்கின்றன.மத்திய விலங்குகள் நல வாரியம் என்பது மத்திய அரசின் அங்கம். அந்த வாரியத்தில் நிர்வாகிகளாக இருக்கும் நாங்கள் இதுவரை ஒரு ரூபாய்கூட சம்பளம் வாங்கியது கிடையாது.
அலுவலக வாடகையைக் கூட நாங்களே செலுத்துகிறோம். எங்கள் மீதான குற்றச்சாட்டுகள் அடிப்படை இல்லாதவை’’ என்கிறார் சின்னி கிருஷ்ணன்.உரம், பூச்சிக்கொல்லிகள் வழியாக நம் விவசாயத்தை அழித்து பாரம்பரிய விதைகளை ஒழித்து, பாதி சந்தையை ஆட்கொண்டுவிட்ட பன்னாட்டு நிறுவனங்கள் அடுத்து கண் வைத்திருப்பது நம் கால்நடைகள் மேல்.
- வெ.நீலகண்டன்
|