குட்டிச்சுவர் சிந்தனைகள்



ஜல்லிக்கட்டு நடத்தணும்னு தமிழ்நாட்டு மக்கள் மல்லுக்கட்டினாலும், ‘போய் மாட்டுக்கு புல்லுக்கட்டு வச்சுட்டு, புள்ளை குட்டிங்கள படிக்க வைங்க’னு சுப்ரீம் கோர்ட்டு சொல்லிடுச்சு. பொன்ன வைக்கிற இடத்துல பூவ வைக்கிற மாதிரி, பொங்கலுக்கு ஜல்லிக்கட்டு நடத்தாம விட்டா என்ன..?

நாம குடியரசு தினத்துக்கு கோலிவுட்ல ஜல்லிக்கட்டு நடத்துவோம். கொம்புக் காளை, கோபக் காளை பாத்திருப்போம்... இப்ப வருது கோலிவுட் காளை. ‘‘இது ஒரு அசத்துற காளை, இது அட்டகாச காளை, இது ஆக்ரோஷ காளை, இது அட்ராசிட்டி காளை, இது அபூர்வ காளை, இது அடங்காத காளை’’ - கமென்ட்ரி மைக்கை டி.ஆர். புடிக்க, காளை  மாட்டைப் புடிக்க வர்றார், அண்ணன் நாஞ்சில் சர்பத்.

‘‘நயன்தாரா என்னும் ஏஞ்சலு, அந்த ஏஞ்சல விட ஃபேமஸ் நம்ம நாஞ்சிலு... இப்போ காளையை குப்புறப் போட்டு, அது காலுல கயிறு கட்டி ஆடப்போறாரு ஊஞ்சலு... வாங்க சர்பத்து, காட்டுங்க கெத்து!’’ என டி.ஆர் அழைக்க, நாலா திசைகளிலும் காளை ஓட, அடுக்குமொழி பேசற நாஞ்சில் சர்பத்து அடக்க மொழி பேசிக்கிட்டு அமைதியா இருக்காரு. பத்து நிமிஷம் பேசச் சொன்னாலே பெரிய புராணம் பாடுற ஆளு, காளை துள்ளிக்கிட்டு திரிவதை கைய கட்டி பார்க்கிறத பார்த்து டென்ஷனாகுற டி.ஆர் கேட்கிறாரு, ‘‘என்ன சர்பத்து காளையை அடக்கலையா?’’

‘‘காளை டயர்ட் ஆகட்டுமேனு காத்திருக்கோம்’’னு பதில் சொல்ற நாஞ்சிலு மூஞ்சில ஒரு ஸ்டிக்கர ஒட்டி, OLXல வாங்குன ஒரு இன்னோவா காருல ஏத்தி அனுப்பி விட்டுடுறாங்க. அடுத்த ஆளை அழைக்கிறார் அண்ணன் டி.ஆர். ‘‘நட்புக்கு நீதான் வரமா? நம்பிக்கைக்கு நீதான் கரமா? நண்பர்களில் உன்னைப் போல வருமா? ஏதாவது பண்ணணும் பரமா!’’ என பசிகுமாரை அழைக்கிறார்.

பசிகுமார் வந்தா கூடவே அவர் நண்பர் சரித்திரகனியும் வந்துடுவாரே. வரும்போதே ‘‘பெத்தவங்க உங்களை திட்டுறதே, மத்தவங்க உங்களை திட்டிடக் கூடாதுனுதான்’’னு அறிவுரை டயலாக்கோடு, அடங்காத காளையை அடக்க வர்றாரு அண்ணன் சரித்திரம். காளையோட காலை பசிகுமார் புடிச்சுக்க, காளையோட கொம்ப புடிச்சுக்கிட்டு அதன் காதுக்குள்ள கருத்துக்களை ஓதுறாரு சமுத்திரம். ‘‘தம்பி காளை, முரண்டு பிடிக்கிறது முக்கியமில்ல,
மொத்தமா நீ எத்தனை friend புடிக்கிறங்கிறதுதான் முக்கியம். ஃபிரண்ட்ஷிப்ப புண்ணாக்கா நினைக்கிறவனுக்கும், புண்ணாக்க மட்டுமே ஃபிரண்ட்ஷிப்பா நினைக்கிற உனக்கும் என்ன வித்தியாசம்? தம்பி காளை, நீ ஓடுறப்ப உன்னைப் பிடிக்க நினைக்கிறவன் வீரன். ஆனா உன்னை யாரும் அடிச்சிடக் கூடாதுன்னு நினைக்கிறான் பாரு, அவன்தான் தோழன். ஏணி வச்சு ஏறி நின்னு சாணி போட்டாலும் அது கீழதான் விழும்.

தோணில போய் ஆத்துக்குள்ள அமுக்கி பந்தை தொலைக்க நினைச்சாலும் அது மேலதான் வரும். ஓடாம ஒரு ஓரமா நின்னு நீ தோஸ்தை காட்டு, உன்னை அடக்கிட்ட மாதிரி நான் போஸ் காட்டிக்கிறேன்’’னு காளையோட earக்குள்ள fire வைக்க, கடுப்பான காளை சிலுப்பிக்கிட்டு தாவிடுது. சரித்திரகனிய தோளுல தாங்கிக்கிட்டு கிளம்புற பசிகுமார்ட்ட கிளம்புற காரணத்த டி.ஆர் கேட்க, ‘‘குத்தினது நண்பனா மட்டும் இல்ல... கொம்பனா இருந்தாலும் வெளிய சொல்லக் கூடாது’’னு சொல்லிட்டுப் போறாரு பசி.

‘‘இவரு இடக்கையிலயே ரெண்டாயிரம் பேர அடிப்பாரு, இஞ்சின் இல்லா ஜீப்புல கூட இருநூறு மீட்டர் பறப்பாரு, பஸ் பம்பரையே பத்து விரல்ல கிழிப்பாரு, ஆனா எல்லா படத்துலயும் ஒரே மாதிரிதான் நடிப்பாரு’’னு  மதுரைக்காரன் குஷாலை அழைக்கிறார் டி.ஆர். ‘‘வேணும் சார், ஜல்லிக்கட்டு நடத்தின கணக்கு வேணும், மொத்தம் எத்தனை சேர் எடுத்தீங்க, வேடிக்கை பார்க்க வந்தவங்களுக்கு மொத்தம் எத்தனை மோர் கொடுத்தீங்க, ஜல்லிக்கட்டு பார்க்க வெயில்ல உட்கார்ந்தவங்க எத்தனை பேரு, வெளிய உட்கார்ந்தவங்க எத்தனை பேரு. வேணும் சார்... எனக்கு கணக்கு வேணும். நானும் மதுரைக்காரன்டா!’’னு பொங்கிக்கொண்டே வருகிறார்.

‘‘இப்ப என்னதான் வேணும் உனக்கு, ஏன் எப்ப பார்த்தாலும் கேட்கிற கணக்கு? நீ அடக்க வேணாம் காளையை, நான் இப்ப எஸ்.ஜே.கூர்யா கழுத்துல போடப்போறேன் மாலையை’’ என டென்ஷனில் எகிறி அடிக்கிறார் டி.ஆர். எஸ்.ஜே.கூர்யாவோ, காளைக்கு எங்கடா சேலையக் காணாம் எனக் கடுங்கோபத்துடனும் கேள்விக்குறியுடனும் களத்தில் குதிக்கிறார்.

காளையை அடக்கும் உத்தேசத்துடன் கைகள் ரெண்டும் காளையைப் பிடிக்க ரெடியா இருக்க, கண்கள் ரெண்டும் காளையின் மடியில் இருக்கிறது. ‘இருக்கு ஆனா, இல்ல... இருக்கு ஆனா இல்ல’ என முணுமுணுத்துக்கொண்டே முன்னே செல்ல, அது கறவை மாடு அல்ல, காளை மாடெனக் கண்டுபிடித்துவிட்டு, ‘‘உடம்புல வடு வாங்கினாலும் அது மடியில மடுவுள்ள மாடுகிட்டதான்’’னு சொல்லிட்டு தனது கொள்கையை விட்டுக்கொடுக்காமல் சட்டெனக் கிளம்புகிறார்.

அடுத்து களம் காணுகிறார் கிராமராஜன். கக்கத்தில் பால் கறக்கிற சொம்பும், கையில கம்புமாக கிரவுண்டுக்கு வந்தவுடனே குந்த வச்சு, ‘‘மதுரை மரிக்கொழுந்து வாசம், மணப்பாறை மாடு கூட என்னோட பேசும்’’னு பாட்டுப் படிக்க ஆரம்பிக்க, ‘‘தம்பி! ஓடித்தான் மாட்டைப் பிடிக்கணும். இப்படி குடலு குரல்ல வர்ற மாதிரி பாடி மாட்டைப் பிடிக்கக் கூடாது’’னு திருப்பி அனுப்பி வைக்கிறது மொத்த கோலிவுட்டும்.

இந்தக் கலவரத்துக்கு நடுவே, பத்தடிக்குப் பத்தடி இடம் கிடைச்சா படுக்கையப் போட்டு படுத்துத் தூங்கி பட்டறையப் போடும் நாடாளும் கட்சி பார்த்தியைத் தூக்கி காளையை அடக்கும் களத்தில் போடுகிறது கொலைகார கும்பல் ஒன்று. அங்கிட்டும் இங்கிட்டும் காளை ஓடுவதில் தெறிக்கும் செம்மண் புழுதியை, தூக்கத்தை கலைக்க எவனோ சாம்பிராணி போடுவதாக எண்ணி, ஒரு கையில் மூக்கை பொத்திக்கொண்டு தூக்கத்தைத் தொடர்கிறார் அதிரச நாயகன் பார்த்தி.

‘‘காளையை அடக்குறதுனாலும் சரி, கலைப்படம் தர்றதா இருந்தாலும் சரி... நான் வெள்ளிக்கிழமைதான் வருவேன்’’ என விமல் விலகிக்கொள்ள, ‘‘மாட்டை அடக்கறது இருக்கட்டும்... மொதல்ல மனுஷனை அடக்குங்கய்யா’’ என கமலும் விலகிக்கொள்ள, ‘சகாப்தம்’ செண்பகப்பாண்டியனைப் பார்த்தா மாடே அடங்கிக்கொள்ளுமென அப்பா பேச்சைக் கேட்டு அடக்க வந்த அவரையும் விலக்கிவிடுகிறது விழா கமிட்டி.

அடுத்து காளையை விரட்டிப் பிடித்தால் லிவருக்கு நல்லதென பேப்பர் ரோஸ்ட் சாப்பிட்ட கையுடன் வருகிறார் அண்ணன் கவுண்டவுன்மணி. ‘‘ஏய், அங்க புடி... ஏய், இங்க புடி...’’ என தோசை சாப்பிட்டும் துடைக்காத கையுடன் சாக்கால் காளையை அமுக்கி சிரிப்பு சிக்சர் அடிக்க, சாக்கை திறந்தால் மாட்டுக்கு பதில் முக்கால் டவுசருடன் செந்தில்.

ஊருல ஒரு ஆளு விடாம அடக்க வந்தாலும் காளையோட தோளுல கை கூட வைக்க முடியலையே, இப்படி ஒரு கலவரக் காளையா கோலிவுட்லனு எல்லோரும் குழப்பமா பார்க்க, காளை மேக்கப்ப கலைச்சுட்டு கை காட்டுறாரு நம்ம ‘ஐ’ சுக்ரம். இத்தனை களேபரத்துக்குப் பின், ஒத்த ஆளில்லாமல் மொத்த கும்பலும் கலைந்து சென்ற பின், ‘உர்ர்ர் உர்ர்ர்’ரென மாடு உறுமும் சத்தம் கேட்டு டி.ஆர் திரும்பிப் பார்த்தால், இடி விழுந்தாலும் எதோ செடி முளைத்த சத்தமாய் நினைக்கும் நவரச நாயகன், அப்பவும் கொறட்டையோடு கண்மூடித் தூங்கிக்கொண்டிருக்கிறார்.                       

ஆல்தோட்ட பூபதி
ஓவியங்கள்: அரஸ்