கெத்து - விமர்சனம்
அப்பாவின் மீது விழுந்த கொலைப் பழியைத் துடைத்து, நிஜக் கொலையாளன் முகமூடியைக் கிழிப்பதே ‘கெத்து’.சந்தோஷமும், கலகலப்புமாக வாழ்வின் இனிய கணங்களை அனுபவித்துத் திளைத்திருக்கிறது சத்யராஜ் ஃபேமிலி. மகன் உதயநிதி யார் வம்பு தும்புக்கும் போகாத, போகத் துணியாத அமைதியே உருவானவர்.
 பெண்கள் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியரான சத்யராஜ், பள்ளிக்கு அருகிலேயே பெரும் தொல்லையாய் உருவெடுக்கும் ‘பார்’ பற்றி போலீஸுக்கு புகார் செய்கிறார். திடீரென அந்த பாரின் உரிமையாளர் கொலை செய்யப்பட, பழி சத்யராஜ் மீது விழுகிறது. உதயநிதி களமிறங்கி கொலையாளியைக் கண்டுபிடித்தாரா என்ற பரபரப்பே இந்த த்ரில்லரின் அழுத்த திருத்த க்ளைமேக்ஸ்.
தொடக்கத்திலேயே கொலைகாரனை பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்திவிட்டு, அவன் எப்படி, எதற்கு, யார் உத்தரவிட்டு வருகிறான் என்ற அடுக்கு வரிசையில் மெல்ல மெல்ல சொல்லிப் போகிறது திரைக்கதை. ஒரு சாதாரண உதயநிதி சூப்பர் ஹீரோவாக உருவாகும் வித்தையை, அதன் தேவையை, முன்பாதியில் அழுத்தமாக விதைத்து விட்டு... பின்னாலும் அதை தக்க வைக்கிறார் இயக்குநர் திருக்குமரன்.
சிரிப்புப் படங்களில் வேடிக்கை காட்டி அசத்திய உதயநிதி இதில் அப்படியே மாற்றம். எமியோடு காதலில் இழைவதும், பின்பு அதிரடியாக சூழ்நிலைக்கு மாறி அப்பாவின் பாரம் சுமக்கும்போதும் உடல்மொழியில் வெரைட்டி வித்தியாசம். பாரில் நடக்கும் சண்டையில் தலையை லேசாக சிலுப்பிக்கொண்டு நடந்து வருவதாகட்டும், எந்த சூழ்நிலையிலும் பதறாமல் எதிராளியின் சைக்காலஜியைச் சிதைப்பதாகட்டும்... உதயநிதி கச்சிதம். அதிரடியான அறிமுகத்தில் கொஞ்ச நேரமே வந்தாலும் கனத்த பார்வை வீசுகிறார் விக்ராந்த்.
லொகேஷன் ஆஸ்திரேலியா அல்லது அயர்லாந்து போன்ற வெளிநாடா என சந்தேகம் வருவது உண்மை. அப்பாவாக சத்யராஜ் சாந்தமும், கோபமும், விவேகமுமாகப் பொருந்துகிறார். குடும்பத்தின் மொத்த கெமிஸ்ட்ரியும் அவரிடம் இயற்கையாக வந்து நிற்கிறது. மதுவிலக்கின் இன்றைய தேவையை வைத்தே முதல் திருப்பம் நிகழ்வது காலத்திற்கு ஏற்ற பொருத்தம்.
கொஞ்சம் விட்டால் எமி தமிழ் நடிகையாகவே மாறிவிடுவார் போலிருக்கிறது. சுடிதார், சேலையில் உதயநிதியோடு கொஞ்சும்போது, அவர் பூர்வீகம் சத்தியமாக மறந்துவிடுகிறது. கருணாகரன் நகைச்சுவைக்கு மட்டுமில்லாமல் கேரக்டர் ரோலையும் சுலபமாக ஏந்தி நிற்கிறார். ஆனாலும், உதயநிதிக்கு ஏற்படும் சந்தேகங்கள் காவல்துறைக்கு ஏற்பட்டிருக்கலாம்.
முதல் ஃப்ரேமில் இருந்தே விக்ராந்த் என்ட்ரியால் உருவாகும் பகீர் ட்விஸ்ட்... பின்னர் அவரைக் கண்டுபிடிக்கும் உதயநிதி என மிகச் சில நிமிடங்களிலேயே தீப்பிடிக்கிறது திரைக்கதை. அந்த ‘டாப் கியர் டெம்போ’விலேயே முழுப்படமும் பயணப்பட்டிருப்பதால் ஈர்க்கிறது. அந்த டெம்போவை கொஞ்சமும் குறையாமல் தக்க வைத்துக்கொள்வது ஹாரிஸ் ஜெயராஜின் பின்னணி.
சார் மறுபடியும் உற்சாகமாகத் திரும்பி வந்திருக்கிறார். பாடல்களில் ‘தேன் காற்று...’, ‘அடியே அடியே’ இரண்டுமே தேன். இரண்டே இரண்டு சண்டைக் காட்சிகள் தூள் பறக்கிறது. பைட் இரட்டையர்கள் அன்பறிவு, சமீபகால கவன ஈர்ப்பில் முன் வரிசையில் நிற்கிறார்கள். இதிலும் அவ்விதமே. படமாக்கிய விதத்திலும் ஒளிப்பதிவாளர் சுகுமார் நெஞ்சுக்கூட்டில் நிற்கிறார். பாடல் காட்சிகளில் ஓவியம் போன்ற வண்ணக் கலவையைக் காட்டுவது சிறப்பு.இன்னொரு த்ரில்லர் கதை என ஒதுக்கிவிட முடியாமல் முன் பாதி கலகலப்பு, பின் பாதி பரபரப்பு!
- குங்குமம் விமர்சனக் குழு
|