சிபாரிசு



‘‘போப்பா, என்னை ரொம்ப ஏமாத்திட்டியே!’’ என்றபடியே வந்தார் நீண்ட நாள் நண்பர் சண்முகம்.‘‘என்னப்பா... வரும்போதே குறை சொல்லிக்கிட்டு வர்றே..?’’ என்றார் ரமணி.‘‘என் உறவினர் பையன் ஒருத்தனை சேல்ஸ் எக்ஸிகியூட்டிவ் வேலைக்கு உன்கிட்ட அனுப்பினேன். பார்க்கலாம்னு சொல்லி அனுப்பிட்டியாமே. இதுதான் நீ எனக்குக் கொடுக்குற மரியாதையா?’’ - படபடத்தார் சண்முகம்.

‘‘நீ அனுப்பின பையன் எம்.ஏ படிச்சவன், அழகா டிப் டாப்பா இருக்கான், நாகரிகமா டிரஸ் பண்றான். அதெல்லாம் சரி... ஆனா, எனக்கு ஒத்து வர மாட்டானே!’’‘‘எப்படிச் சொல்றே?’’‘‘இன்டர்வியூவுக்கு வந்தவன் நெத்தியில விபூதி, குங்குமம் எதுவும் இல்ல. என் அறை முழுக்க இருந்த படங்களைக் காட்டி, ‘இங்குள்ள சாமி படங்களைப் பத்தி என்ன நினைக்கிறே?’னு கேட்டேன். ‘மாலை மாலையா போட்டு வச்சிருக்கீங்க...

சாமிக்குத்தான் வாசனை தெரியாதே’னு கிண்டல் பண்றான். நான் வச்சிருக்குறது பூஜை சாமான்கள் விற்பனை செய்யும் மார்க்கெட்டிங் கம்பெனி. சாமி கும்பிடுறதே வேஸ்ட்னு நினைக்கிற இவன், எப்படி பூஜைப் பொருட்களை விக்கிறதுல ஆர்வம் காட்டுவான். ஒரு விஷயத்தை நாம நம்பினாதானே அதை ஆஹா ஓஹோனு உயர்த்திச் சொல்லி விற்கவும் முடியும்?’’ரமணி சொன்னதில் இருந்த நியாயத்தைப் புரிந்துகொண்டு சாந்தமாக விடை பெற்றார்
சண்முகம்.

சி.ரங்கம்