அஜித்தின் புது ஹாபி!
வாவ் தகவல்கள்
‘‘இன்னும் மூன்று மாதங்களில் எல்லாம் சரியாகிடும்... நலம் விசாரிக்க நேர்ல வரவேண்டாம். நானே உங்களைக் கூப்பிடுறேனே ப்ளீஸ்!’’ - தன்னை நலம் விசாரிக்க விரும்புபவர்களிடம் அஜித் சொன்ன வார்த்தைகள் இவை.
 அவரது திடமான நம்பிக்கை போலவே, இப்போது அஜித் நிஜமாகவே ஆல்ரைட். ‘வேதாளம்’ ரிலீஸுக்குப் பின்னர் கால் மூட்டு வலி ஆபரேஷன். அதன் பிறகு இப்போது வீட்டில் ரெஸ்ட். இந்த இடைப்பட்ட காலத்தில் அஜித்தின் பொழுது எப்படிப் போனது? மீண்டும் மீண்டு சிவாவுடன் கை கோர்க்க அஜித் விரும்புவதன் காரணம் என்ன என விசாரித்தால், அட! ஆரம்பமே அமர்க்களமாக இனிக்கிறது.
* ஆபரேஷனுக்குப் பிறகு ஆரம்ப நாட்களில் வீட்டில் பிசியோதெரபி செய்து வந்தார் அஜித். ‘‘பிசியோதெரபி போதும்... இனி கொஞ்சம் ரெஸ்ட்டில் இருந்தா நல்லது’’ என மருத்துவர்கள் ஆலோசனை கொடுக்க, புன்முறுவலுடன் ஏற்றுக்கொண்டிருக்கிறார் அஜித். ‘இப்போ எப்படி இருக்கீங்க... நலம் விசாரிக்க வரலாமா?’
 என அஜித்தின் மொபைலுக்கு அவரது நலம் விரும்பிகளிடமிருந்தும், சக நடிகர் - நடிகைகளிடமிருந்தும் எஸ்.எம்.எஸ் குவிந்தது. அஜித்திடம் இருந்து யாருக்கும் க்ரீன் சிக்னல் வரவில்லை. ‘‘அவங்கவங்க ஒவ்வொரு வொர்க்ல பிஸியா இருப்பாங்க... நாம யாரையும் சிரமத்திற்கு ஆளாக்கக் கூடாது... பர்ஃபெக்ட் ஆனபிறகு, நானே அவங்களை நேர்ல போய் சந்திச்சு, சர்ப்ரைஸ் மீட் பண்ணப் போறேன்’’ என நெருங்கிய வட்டத்திடம் சொல்லியிருக்கிறார் அஜித்.
* ஷூட்டிங் இல்லாமல், கால் வலியுடன் வீட்டில் ஓய்வெடுப்பது அஜித்துக்கு ஒரு பக்கம் வருத்தத்தைத் தந்தாலும், இன்னொரு பக்கம் செம ஹேப்பி. மகள் அனோஷ்காவுடன் விளையாடுவது, ஹோம் வொர்க் செய்து கொடுப்பது, ஆத்விக்கை கொஞ்சுவது எனப் பொறுப்பான அப்பாவாக மாறியதுதான் காரணம். குழந்தைகளின் பாச மழையில் ஆசை தீர நனைந்ததில் மூட்டு வலி போயே போச்!
* ஓய்வு கிடைக்கும்போதெல்லாம் ஆங்கிலப் படங்கள் விரும்பிப் பார்ப்பது அவரது ஹாபி. இந்த ரெஸ்ட்டில் புது ஹாபியாக கார்டனிங்கும் ஒட்டிக்கொண்டது. வீட்டில் இருக்கும் தொட்டிச் செடிகள், அழகுச் செடிகள் ஒவ்வொன்றையும் ரசித்துப் பராமரிக்க ஆரம்பித்திருக்கிறார். ஆங்கில நூல்கள் வாசிக்க ஆரம்பித்திருக்கிறார்.
வழக்கம் போல் சமையலையும் விட்டு வைக்கவில்லை. புதுப்புது ரெசிபிகள் செய்து அசத்தியிருக்கிறார். ‘‘வீட்ல இருக்கும்போது ஒரு நாள் கூட அவர் பெயினை முகத்துல காட்டிக்கிட்டதே இல்லை. இந்த ஒரு கட்ஸ்தான் அஜித்!’’ என நெகிழ்கிறார் அவர் நண்பர் ஒருவர். அஜித் ரெஸ்ட்டில் இருந்தபோது அவரை அடிக்கடி சந்தித்த முக்கிய கெஸ்ட், டைரக்டர் சிவா. அடுத்து அவர்கள் இணையப் போகும் படத்திற்கான கதையை இன்ச் பை இன்ச்சாக அஜித்திடம் சொல்லிவிட்டார் சிவா. ‘வேதாள’த்தை விட இரு மடங்கு ஸ்பீடை அதில் எதிர்பார்க்கலாம் என்கிறார்கள்.
* பொதுவாக ஒரு படத்தின் வெற்றி, தோல்வி... எதையும் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார் அஜித். ‘வீரம்’, ‘வேதாளம்’ படங்களுக்குப் பிறகு சிவாவை ரொம்பவே பிடித்துப் போய்விட்டது அஜித்திற்கு. வெளியே எங்கும் அதிகம் பேசாத, செயல் வீரரான சிவாவின் பண்பு, அஜித்தை அதிகம் கவர்ந்திருக்கிறது. ‘வேதாளம்’ ஷூட்டிங்கில் ‘‘அடுத்தும் நாம சேர்ந்து வொர்க் பண்ணலாம். ஸோ, நீங்க இப்பவே கதை ரெடி பண்ண ஆரம்பிச்சிடுங்க’’ என சிவாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருந்தார் அஜித். சென்னையின் அடைமழையிலும் ‘வேதாளம்’ ஹிட் அடித்தது அவர்களுக்கு இன்னும் உற்சாகத்தை அளித்திருக்கிறது.
* ஃபேமிலி சென்டிமென்ட் ப்ளஸ் ஆக்ஷன் கதைகளே அஜித்தின் முதல் சாய்ஸ். ‘வீரம்’ படத்தில் அண்ணன் - தம்பிகள் பாசம், ‘வேதாளம்’ படத்தில் அண்ணன் - தங்கையின் பாசம் போல, இப்போது இணையும் படத்தில் கூட ஒரு அண்ணன் கேரக்டரை எதிர்பார்க்கலாம். ‘சென்டிமென்ட்டையும், ஆக்ஷனையும் சரிவிகிதமாகக் கலந்து கொடுப்பதில் சிவா கெட்டிக்காரர்’ என்கிறது தெலுங்குப் பட உலகமும்! முக்கியமான ஒரு கேரக்டருக்காக மோகன்லாலிடம் பேசி வருகிறார்கள். இப்போது தெலுங்குப் படம் ஒன்றில் வில்லனாக நடித்து வரும் மோகன்லால், அதை முடித்துவிட்டு சிவா ப்ராஜெக்ட்டிற்கு வரலாம் என்கிறார்கள். அஜித் - சிவா காம்பினேஷன் பட ஷூட்டிங் அனேகமாக வருகிற ஜூன் மாதத்தில் தொடங்கும் எனத் தகவல்.
* அஜித் இரண்டு மாதங்கள் லண்டனில் ஓய்வு எடுப்பது குறித்த தகவல்கள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ஆனால், தன் உடல்நலம் முழுவதும் பர்ஃபெக்ட் ஆன பின்னரே களத்தில் இறங்குகிறார். ‘வேதாளம்’ வெற்றிக்கும், ஆபரேஷன் திருப்தியாக முடிந்ததற்கும் திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசித்த பின்பே தன் அடுத்த பட வேலைகளை ஆரம்பிக்கும் ஐடியாவில் இருக்கிறார் அவர்!
‘‘இத்தனை ஆண்டுகளில் ரசிகர்கள் பலம் கூடிக்கொண்டே இருப்பது கடவுள் ஆசீர்வாதம்தான். என் ரசிகர்களுக்கு வெறும் நன்றி சொன்னால் அது முழுமையாகாது. உண்மையைச் சொன்னா... தினமும் காலையில் கடவுளை வேண்டும்போது என் ரசிகர்களுக்காகவும் வேண்டிக்கறேன்!’’ என இப்போதும் நெகிழ்கிறார் அஜித்!
- மை.பாரதிராஜா
|