நினைவோ ஒரு பறவை 13
சீட்டுக்கட்டின் ராணிகள்
காதல் என்பது குழந்தையின் கையில் உள்ள முட்டை போன்றது. எப்போது நொறுங்கும் என்று யாராலும் சொல்ல முடியாது.
- ரஷ்யப் பேரறிஞர் நிக்கோலய் உடான்ஸ்கி
 (‘யாரோ’ என்று எழுத விரும்பாததால் கற்பனையாக வைத்த பெயர்)ஹார்ட்டின் ஆறுக்கும் ஹார்ட்டின் எட்டுக்கும் நடுவில் விசிறி வாழை போல தரையில் கலைந்து பரவியிருந்த சீட்டிலிருந்து எடுத்த ஜோக்கரைச் சொருகி, ‘டிக்’ என்று கீழே வைத்தபோது கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. எழுந்து சென்று கதவைத் திறந்தேன். ‘‘என்ன... கட்டு போட்டாச்சா? நீங்க எல்லாம் உருப்படவே மாட்டீங்களா?’’ என்றபடி சண்முகசுந்தரம் உள்ளே நுழைந்தான்.
நான் அப்போது சென்னை பச்சையப்பன் கல்லூரியில் எம்.ஏ. தமிழ் இலக்கியம் முதலாமாண்டு படித்துக்கொண்டிருந்தேன். ஆயா வீட்டில் தங்கி தினமும் கல்லூரி சென்று கொண்டிருந்தேன். மதியத்திற்குள்ளாக கல்லூரி முடிந்து விடும். மீதி நேரம் கல்லூரி மாணவர் விடுதியில் நண்பர்கள் அறையில் அரட்டையடித்துக் கொண்டிருப்போம்.
பச்சையப்பன் கல்லூரி விடுதி, மரங்கள் அடர்ந்து புராதனக் கட்டிடங்களுடன் ஒரு புதிரைப் போல; நகர மறுக்கும் நிராசையைப் போல; வெடித்துச் சிரிக்கும் குறும்பைப் போல; கல்லில் எழுந்த சோகம் போல; இள ரத்தத்தின் உஷ்ணம் போல; தாய் மடியின் கதகதப்பைப் போல... ஒவ்வொரு சமயமும் ஒவ்வொரு வடிவம் காட்டும்.
விடுதிக்குப் பக்கத்திலேயே நுங்கம்பாக்கம் மற்றும் சேத்துப்பட்டு ரயில் நிலையங்கள் இருக்கும். விடுதியின் ஜன்னல் வழி பார்க்கையில் கட்டம் கட்டமாக ரயில் மனிதர்கள் கம்பியைப் பிடித்தபடி கடந்து போவார்கள். விடுதியை ஒட்டி நூற்றாண்டுகள் கடந்த ஒரு ஆலமரம் கிளிகளுடன், நாங்கள் படிப்பதற்கும் பந்தாடுவதற்கும் நிழல் கொடுத்துக் கொண்டிருக்கும்.
சில வெறுமையான பொழுதுகளில் மஞ்சள் சுண்ணாம்பு அடித்த கட்டிடத்தைப் பார்க்கையில் சட்டென்று மருத்துவமனை தோற்றம் ஞாபகம் வந்துவிடும். எல்லா கல்வி நிலையங்களின் சுவர்களுக்குள்ளும் மஞ்சள் நிறம் ஒரு நோய்த்துகளைப் போல படிந்து விடுவதாய்த் தோன்றும். மாலையில் விடுதி முழுவதும் மொட்ைட மாடியில் கும்பல் கும்பலாகத் திரண்டுவிடும்.
கூம்பு வடிவத் தூணில் சாய்ந்தபடி எதிர்காலம் பயமுறுத்த, தனித்த தண்டவாளங்களையும், சாம்பல் மேகங்களையும் உற்றுப் பார்த்துக் கொண்டிருப்போம். அல்லது கேரம் போர்டு பலகையின் கறுப்பு வெள்ளைக் காய்களைத் துரத்திக் கொண்டிருப்போம். காலம் எங்கள் ஸ்டிரைக்கரைக் குழியில் தள்ளி மைனஸ் போட்டுவிட்டுப் புன்னகைக்கும்.
அப்போதைய முன்னணி நடிகைகளின் புகைப்படங்கள் தொடங்கி, விவேகானந்தர், அம்பேத்கர், பெரியார் புகைப்படங்கள் வரை ஒவ்வொரு அறையின் சுவரும் தன் முகத்தை, அங்கு தங்குபவர்களின் முகமாக மாற்றிக்கொண்டு ஸ்பீக்கர்கள் அலற சினிமா பாடல்களால் அதிர்ந்து கொண்டிருக்கும். அநேக அறைகளில் ஃபில்டர் கிங்ஸில் ஆரம்பித்து மணியார்டர் வராத வாரங்களில் துண்டு பீடி வரை புகைத்து ஆஷ்ட்ரேயின் வயிறு எப்போதும் கர்ப்பிணி போலவே இருக்கும். அப்படியான ஒரு புகை மதியப் பொழுதில்தான் சண்முகசுந்தரம் கதவைத் தட்டினான்.
சண்முகசுந்தரம் பி.ஏ. வரலாறு மூன்றாமாண்டு படிப்பவன். கறுப்பிற்கும் சிவப்பிற்கும் இடைப்பட்ட நிறம். விடுதியிலேயே விதவிதமாக உடை உடுத்துபவன் அவன் மட்டுமே. வருடங்கள் முன் நகர்ந்து வந்துவிட்ட பிறகும், வலுக்கட்டாயமாக அவன் பால்யத்தில் அறிமுகமாயிருந்த ஸ்டெப் கட்டிங் சிகை அலங்காரத்தை விடாமல், தேயிலைச் சரிவுத் தலையுடன் அதே பாணியில் வலம் வந்து கொண்டிருப்பான்.
அறிமுகமான அடுத்த நிமிடமே உங்களிடம் அன்றைய அவனது நிலவரப்படி, கடன் கேட்டு விடுவான்; அல்லது உங்களுக்காக ஆயிரக்கணக்கில் செலவு செய்வான். அவனுக்காக உங்களுடைய ராஜ்யத்தில் பாதியை எழுதிக் கொடுக்குமளவிற்கு நீங்கள் அவனது பேச்சிலும், தொற்றிக்கொள்ளும் உற்சாகத்திலும் மாறி விடுவீர்கள். சண்முகசுந்தரம் என்பதை விட ‘காதல் சுந்தரம்’ என்றால்தான் விடுதியில் அனைவருக்கும் தெரியும்.
இருபத்தி நான்கு மணி நேரமும் காதல் அலைவரிசையில் நீந்திக் கொண்டிருப்பான். மாநகரத்தில் இருக்கும் அனைத்து பெண்கள் கல்லூரிகளும் (சில முக்கியமான பெண்கள் பள்ளிகளும்) எத்தனை மணிக்கு திறந்து எத்தனை மணிக்கு மூடும் என்று தொடங்கி, காலியான நாற்காலிகள் உள்ள படம் ஓடும் திரையரங்குகள், கொசு கடிக்காத கார்ப்பரேஷன் பூங்காக்கள் எனத் தொடர்ந்து, பெண்களுக்கு ஐஸ்க்ரீம் அதிகம் பிடிக்குமா? சாக்லெட் அதிகம் பிடிக்குமா? என்பது வரை தரும் ஒரு நடமாடும் பெண்கள் மனவியலாளனாக அவனை நாங்கள் அங்கீகரித்திருந்தோம்.
அவனது அறையின் மேல் தாஜ்மஹால் என்று யாரோ பெயின்ட்டில் எழுதிவிட்டுச் செல்ல, அவனுக்கும் பிடித்திருந்ததால் அப்படியே விட்டுவிட்டான். சண்முகசுந்தரத்தின் சொந்த ஊர் தர்மபுரிக்குப் பக்கத்தில் ஒரு கிராமம். அப்பா விவசாயி. மாதம் தவறாமல் மணியார்டர் வந்துவிடும். மணியார்டர் வராத மாதங்களில் மஞ்சள் பை நிறைய பச்சை வேர்க்கடலையுடனும், வேட்டிக்கு தம்பி மாதிரி இருக்கும் அழுக்கு வேட்டியுடனும் அவனது அப்பா விடுதிக்கு வந்து பணம் கொடுத்துவிட்டுப் போவார். அவர் வரும் சமயங்களில் சண்முகசுந்தரம் உற்சாகம் குன்றி, யாரோ போல நடந்துகொள்வான். விடுதியில் தங்கிப் படிக்கும் எல்லோருடைய தந்தைகளும், அவர்களுடைய பொருளாதார நிலையும் அவனுடையதைப் போலத்தான் இருந்தது என்பதை அவன் மனம் உணர மறுத்தது. ஓரிரு நாட்களில் மீண்டும் சகஜமாகிவிடுவான்.
சண்முகசுந்தரத்தைக் கண்டால் நான் மட்டும் உள்ளூர நடுங்குவேன். அதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று, சண்முகசுந்தரம் பார்க்கிற பெண்களை எல்லாம் காதலித்துக் கொண்டிருந்தான். காதல் என்றால் அப்படி ஒரு காதல். ஏதாவது ஒரு பெண்ணைப் பார்த்துவிட்டால், அவள் வீட்டைக் கண்டுபிடித்து, அவள் தெருவிலேயே பழியாய்க் கிடந்து, பின்னால் அலைந்து அவளை வழியனுப்பி வைத்து, இரவெல்லாம் விடுதி நண்பர்களிடம் அவளைப் பற்றிப் புலம்பிக்கொண்டிருப்பான். அவர்களும் ‘‘உன்னைத் தாண்டா பார்க்குறா...
உன்னைப் பார்த்து சிரிச்சாடா!’’ என்று எண்ணெய்க் குடத்தில் தீக்குச்சி உரசிப் போடுவார்கள். காலுக்கடியில் பள்ளம் தோண்டப்படுவது ெதரியாமல் ‘‘ஆமாம்டா’’ என்று வெட்கப்படுவான்.ஒரு வாரம்தான் அந்தக் காதல் இருக்கும். அடுத்த வாரம் வேறு பெண்ணின் வரலாறு சொல்லத் தொடங்குவான். விடுதிக்குச் செல்லும் வழி முழுக்க அவனது ஒருதலைக் காதல்களின் சுவடுகள் கணக்கற்றுப் பதிந்து இறைந்து கிடந்தன.
நாங்கள் கூட்டமாக வெளியே செல்லும்போது ஏதாவது அழகான பெண் எதிரே வந்துவிட்டால் எங்களுக்கு முன்பாகவே, ‘‘அது என் ஆள்டா... விட்டுடு’’ என்பான். அவனுடன் இருக்கும்போது மட்டும், ‘‘இந்தியா என் தாய்நாடு. இந்தியர்கள் யாவரும் என் சகோதர, சகோதரிகள்!’’ என்ற கொள்கைக்கு வந்துவிடுவோம். ‘‘ஏன்டா இப்படி இருக்கே?’’ என்றால் ‘‘என் ஜாதகத்தில் இன்னும் நாப்பது லவ்வு இருக்குனு போட்டிருக்கு பாஸ்’’ என்பான். அவனது ஜோதிடக்கிளி நெல்லைத் தின்றுவிட்டு பெண்களின் படமாகவே எடுத்து வெளியே வீசிக்கொண்டிருந்தது.
இரண்டாவது காரணம், சண்முகசுந்தரம் கவிதைகள் எழுதுவான். அவனது தமிழ்க் கொலைக்கு என்னை வேறு சாட்சி வைத்துக்கொள்வான். அவன் காதலிக்கும் பெண்களுக்குக் கல்யாணமாகிவிட்டால், ‘நீ அரிசி சாப்பிட்டதால்தான் உன் கல்யாணத்தில் மழை பெய்தது என்கிறார்கள்... அவர்களுக்குத் தெரியாது, நீ சாப்பிட்டது அரிசி அல்ல... என் மனதை’ என்று கிறுக்குவான்.
ஒருமுறை அவன், ‘நீ ஹமாம் சோப்பில் குளிக்கிறாயா? ஆசைக்கடலில் குளிக்கிறாயா?’ என்று கவிதை எழுதி ஒரு பெண்ணிடம் கொடுக்க, அவள் ‘‘ஆறு மாசமா முழுகாம இருக்கேன்’’ என்று பதில் சொன்னதாக விடுதியில் ஒரு வதந்தி உண்டு.கொஞ்ச காலமாக சண்முகசுந்தரத்திற்கு காதல் முற்றி ஒரே நேரத்தில் நான்கு பெண்களைக் காதலித்துக்கொண்டிருந்தான். பள்ளியில் படிப்பவள், கல்லூரி மாணவி, வங்கியில் வேலை செய்பவள், விநாயகர் கோயிலுக்கு வருபவள் என ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு வரலாறு.
‘‘நாலு பொண்ணுமே ஒத்துக்கிட்டாங்கன்னா என்னடா பண்ணுவ?’’ என்றதற்கு, ‘‘நாலு பேரையுமே கல்யாணம் பண்ணிக்குவேன்’’ என்றான். ‘‘எப்படிடா?’’ என்றேன். ‘‘உனக்கு இதெல்லாம் புரியாது. ஒருத்தியை அழகுக்காக காதலிக்கிறேன். ஒருத்தியை சிரிப்புக்காக காதலிக்கிறேன். ஒருத்தி எனக்கு பஸ்ஸில் டிக்கெட் வாங்க ஹெல்ப் பண்ணினதுக்காக. (கூட்டத்தில் டிக்கெட் பாஸ் செய்து வாங்கித் தந்தாளாம்!) இன்னொருத்தியை பூர்வ ஜென்ம பந்தத்திற்காக’’ என்றான். எனக்குத் தலை சுற்றியது.
உளவியல் மருத்துவராக இருக்கும் நண்பர் ஒருவரிடம் சண்முகசுந்தரம் பற்றிச் சொன்னேன். அதற்கு அவர், ‘‘உங்க நண்பர் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். பெண்களோட சகஜமா பேசற சூழல் அவருக்குக் கிடைக்கல. அதனால சிட்டியில ஏதாவது ஒரு பெண் அவரிடம் பேசினாலே காதலில் விழுந்துவிடுகிறார். ஆணுக்கும், பெண்ணுக்கும் நடுவே எழுப்பப்பட்டிருக்கும் நூற்றாண்டுகளின் சுவர்தான் இதற்குக் காரணம்!’’ என்றார். ‘‘அவனை உங்க கிளினிக்குக்கு கூட்டிட்டு வரவா? ஏதாவது பண்ண முடியுமா?’’ என்றேன்.
‘‘ஐய்யோ, வேணாம்பா... எங்க கிளினிக்ல இரண்டு மூணு நர்சுங்க அழகா இருக்காங்க!’’ என்றார் சிரித்துக்கொண்டே. அதற்குப் பிறகு தேர்வு நெருங்கிவிட்டதால் சண்முகசுந்தரத்தைப் பார்க்க முடியவில்லை. தேர்வுக்கு முந்தின வாரம் அவனது அப்பா, ‘அவசரம்! உடனே வரவும்’ என்று ஒரு தந்தி கொடுத்திருந்தார். விழுந்தடித்துக்கொண்டு ஊருக்குச் சென்றான். ஒரு வாரம் கழித்து தேர்வு நாளன்று சோகமாக வந்தான். ‘‘என்னடா தாஜ்மஹால் தனியா இருக்கு?’’ என்றேன்.
‘‘மோசம் போயிட்டேன்டா. ஊருக்குப் போனா, எங்கம்மா விஷம் குடிச்சிடுவேன்னு வற்புறுத்தி எங்க மாமா பொண்ணை எனக்குக் கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க’’ என்றான். அழுது விடுவான் போலிருந்தது. ‘‘வாழ்க்கைன்னா இப்படித்தான் இருக்கும்’’ என்று நான் என்னுடைய அதிமேதாவித்தனத்தை அறிவுரையாக மாற்றி அவனுக்குள் ஊற்றிக்கொண்டிருந்தேன். தேர்வு முடிந்து திசைக்கொன்றாய் பிரிந்து சென்றோம்.
பத்து வருடங்களுக்கு முன்பு தி.நகர் ரங்கநாதன் தெருவில் சண்முகசுந்தரத்தைப் பார்த்தேன். உடம்பெங்கும் ஊதிப்போய் ஆளே அடையாளம் தெரியவில்லை. அதே பழைய ஸ்டெப் கட்டிங்தான் அவனை இனம் காண உதவியது. கையைப் பிடித்துக்கொண்டு ரொம்ப நேரம் பேசிக்கொண்டிருந்தான். கடந்த காலத்தின் மூடுபனியை விலக்கி எங்கள் கல்லூரி நாட்களை மீட்டுருவாக்கம் செய்துகொண்டிருந்தோம்.
பேச்சின் ஊடாக ஒரு சந்தோஷ தருணத்தில், ‘‘உன் நாப்பது லவ்வு என்னாச்சுடா?’’ என்றேன். வார்த்தைகளை மௌனத்தில் புதைத்துவிட்டு நடைபாதைக் கடைகளை வெறித்துக் கொண்டிருந்தான். ஏன்டா கேட்டோம் என்றாகிவிட்டது. ஒரு வழியாக உரையாடலை வேறு திசைக்கு மாற்றிக் கிளம்பும்போது ‘‘மச்சான்! முந்நூறு ரூபா இருக்குமா?
குழந்தைக்கு பால் டப்பா வாங்கணும்’’ என்றான். நான் பர்ஸைப் பிரித்தேன். மாநகரத்து அழகான பெண்கள், நெரிசலில் சண்முகசுந்தரத்தைத் தள்ளிவிட்டபடி ஜவுளிக் கடைகளை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தார்கள்.கேரம் போர்டு பலகையின் கறுப்பு வெள்ளைக் காய்களைத் துரத்திக் கொண்டிருப்போம். காலம் எங்கள் ஸ்டிரைக்கரைக் குழியில் தள்ளி மைனஸ் போட்டுவிட்டுப் புன்னகைக்கும்.
(பறக்கலாம்...)
நா.முத்துக்குமார்
ஓவியங்கள்: மனோகர்
|