அரசாங்கம் செய்ய வேண்டியதை அப்துல் கலாம் செஞ்சுட்டார்!



‘‘21 நாள்ல 21 வீடுகள் கட்டிக் கொடுக்குறதெல்லாம் நம்பவே முடியாத விஷயம். இந்தியாவின் பலமே இளைஞர்கள்தான்னு அப்துல் கலாம் ஐயா பேசி கேட்டிருக்கோம். இப்பதான் அதை நேர்ல பார்க்கறோம்!’’ - கடலூர் மாவட்டம், வடலூரை அடுத்த பூசாரிக்குப்பத்தைச் சேர்ந்த வடிவேலுவின் கண்களில் நெகிழ்ச்சி. புரட்டிப் போட்ட பேய் மழையில் வீட்டைப் பறிகொடுத்து நின்றவர்கள் இவர்கள். இந்தப் பொங்கலன்று அதே இடத்தில் புது வீட்டுக்குக் குடிபோயிருக்கிறார்கள். காரணம், ராமநாதபுரத்தில் இயங்கும் அப்துல் கலாம் லட்சிய இந்தியா இயக்கமும் அதில் பணியாற்றும் இளைஞர்களும்!

‘‘சென்னை, திருவள்ளூர், காஞ்சி புரம், கடலூர்னு பாதிக்கப்பட்ட ஏரியாக்களில் எல்லாம் உதவி செய்ய தன்னார்வலர்கள் குவிஞ்சது உங்களுக்கே தெரியும். அப்படிப்பட்ட ஒரு குழுவாதான் நாங்களும் இந்தப் பகுதிக்கு வந்தோம். டிசம்பர் 5ம் தேதி பாய், போர்வை எல்லாம் இந்த மக்களுக்குக் கொடுத்தப்போ, ‘ஐயா, இதை வச்சி நாங்க எங்கே படுப்போம்? வீடே இல்லையே’னு ஒருத்தர் கேட்டார். மனசு பாரமாகிடுச்சு!’’ - இதயத்திலிருந்து வார்த்தைகளை எடுத்துப் பேசுகிறார் ஷேக் சையது புகாரி. இந்த இயக்கத்தின் தன்னார்வலர்களில் ஒருவர்.

‘‘உதவி செஞ்சுட்டோம்னு திருப்தியா நாங்க ஊருக்குப் போயிட்டிருந்தப்பதான் புகாரி இந்த விஷயத்தை என்கிட்ட சொன்னார். வீட்டை இழந்தவங்களுக்கு நம்மால என்ன செய்ய முடியும்னு யோசிச்சிட்டிருந்தப்பவே அமெரிக்காவுல இருந்து என் மாணவர் ஒருத்தர் போன் பண்ணினார். ஒரு லட்சம் ரூபாய் உதவித்தொகை கலெக்ட் பண்ணி அனுப்பி வச்சிருக்கறதா சொன்னார். ‘அதை வச்சி இன்னும் ஏதாவது நல்லவிதமா உதவி செய்யுங்க’னு கேட்டுக்கிட்டார். நாமே இவங்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கலாம்ங்கிற தைரியம் அப்பதான் வந்துச்சு!’’ என்கிறார் அப்துல் கலாம் லட்சிய இந்திய அமைப்பின் நிர்வாகி, முனைவர் கார்த்திகேயன். 

‘‘ஊருக்குப் போனதும் ரோட்டரி கிளப் ஆஃப் கோல்டன் ராம்நாடு நண்பர்களோட விவாதிச்சோம். அவங்களும் இதில் இணைஞ்சாங்க. வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மூலமா இது குறித்த தகவல்களை வெளியிட்டோம். எதிர்பார்த்ததை விட கூடுதலாவே நிதியும் ஆதரவும் கிடைச்சது. பூசாரிக்குப்பத்தில் பாதிக்கப்பட்ட வீடுகளை ஆய்வு செய்து 21 வீடுகளைத் தேர்ந்தெடுத்தோம்.

இவங்களுக்கு அரசாங்கமே வீடு கட்டித் தர்றதா சொல்லியிருக்கு. ஆனா, அதுவரை காத்திருக்க முடியாது. அவங்களுக்கு இப்ப உடனடியா ஒரு இருப்பிடம் தேவை. கூரை வீடு பாதுகாப்பானதில்லை. தற்காலிகமா இருந்தாலும் தரமானதா இருக்கணும்னுதான் கூலிங் ஷீட் வீடுகளைக் கட்ட முடிவு செய்தோம். தரையில் இருந்து ரெண்டு அடி உயரத்துக்கு ஹாலோ பிளாக் சுவர், அதுக்கு மேல நீல நிற கூலிங் ஷீட் சுவர், இரும்பு ஆங்கிள் மூலமா இணைச்சு அதே ஷீட்டில் கூரை...

சிம்பிளா இருந்தாலும் உறுதியா இதைக் கட்டியிருக்கோம். ஒரு வீட்டுக்கு செலவு வெறும் 60 ஆயிரம் ரூபாய்தான். பிற்காலத்துல அரசாங்கம் வீடு கட்டிக் கொடுக்கறதுக்கு தனியா பின்னாடி இடமும் விட்டிருக்கோம்!’’ என்கிறார் கார்த்திகேயன் மனநிறைவுடன்.டிசம்பர் 25ல் துவங்கிய இந்த வேலைகள், ஜனவரி 14ல் முடிந்து திறப்பு விழாவும் கண்டுவிட்டது. இதற்குக் காரணம், ஷேக் சையது புகாரி. அரசு ஊழியராக இருந்தபோதிலும் இந்த மக்களுக்காக 21 நாட்களும் இங்கேயே தங்கியிருந்து, தாயாய் பிள்ளையாய் பழகி, வீடு கட்டும் பணிகளை மேற்பார்வையிட்டது அவர்தான். அவருக்கு பூசாரிக்குப்பத்து மக்கள் கொடுத்த பிரியாவிடையே, இந்த விழாவின் முக்கியமான நெகிழ்ச்சித் தருணம்.

நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளர், அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகரான பொன்ராஜ். ‘‘இங்கே வீடு பெற்றவர்கள் அதற்கு கைமாறாக தங்கள் பிள்ளைகளை நன்கு படிக்க வைத்து சமூகத்தில் முன்னேறச் செய்ய வேண்டும். அதன் மூலம் நாட்டு மக்கள் எதற்காகவும் கையேந்தாத நிலை ஏற்பட வேண்டும்’’ என அவர் பேசியதை அன்போடு நினைவு கூர்கிறார்கள் பூசாரிக்குப்பத்து மக்கள்.

‘‘மழை வெள்ளத்துல பாதிக்கப்பட்ட எல்லா மாவட்டங்கள்லயும் மக்களுக்கு அரசை விட தன்னார்வலர்கள்தான் அதிகம் உதவி செஞ்சாங்க. இங்கே மனிதநேயம் இன்னும் உயிர்ப்பா இருக்கறதைத்தான் இது காட்டுது. ஆனா, அதுக்கும் மேல ஒரு படி போய் நிரந்தரத் தீர்வையும் மறு சீரமைப்பையும் செய்து கொடுத்திருக்கிற இந்த ராமநாதபுரத்து மக்களை வாழ்நாள்ல மறக்கவே முடியாது. அப்துல் கலாம் ஐயா உருவாக்கின உணர்வு இது. அதனாலதான் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் நகர்னே இதுக்குப் பேர் வச்சிருக்கோம். எங்களுக்கு அரசாங்கம் செய்ய வேண்டியதை அப்துல் கலாம் செஞ்சிட்டார்!’’ - உத்வேகமாய் ஒலிக்கின்றன வீடு பெற்றவர்களின் குரல்கள்!

- சேகர்