பசியே இல்லாத உலகம்!
ஐ.நா. அசைன்மென்ட்டில் அசல் தமிழர்
‘‘உலக நன்மைக்காக நீங்க எந்தத் திட்டத்தைக் கையில எடுத்தாலும் அது கடைசியில உணவு, பசி, பஞ்சம்ங்கிற இடத்துலதான் வந்து முட்டி நிற்கும்!’’‘‘இப்போ உலகம் முழுக்க 79 கோடியே 50 லட்சம் மக்கள் பசியாலயும் ஊட்டச்சத்துப் பற்றாக்குறையாலயும் வாடுறாங்க. ஆனா, இன்னொரு பக்கம் வருஷத்துக்கு 130 கோடி டன் உணவு வீணாகி குப்பைக்குப் போயிட்டு இருக்கு.
 இதை சரியா பேலன்ஸ் பண்ணினாலே உலகத்தில் பசியோ, பட்டினியோ, பஞ்சமோ எதுவும் இருக்காது. இதை நோக்கித்தான் என் பயணம்!’’ - மெல்லிய குரலானாலும் அழுத்தமாகப் பேசுகிறார் பரசுராமன். ‘Zero Hunger Challenge’ எனும் பெயரில் ஐக்கிய நாடுகள் சபை தொடங்கியிருக்கும் பசியில்லா சமுதாயத் திட்டத்தின் உயர்மட்ட ஆலோசகர் பொறுப்பில் ஒரு தமிழர் எனும் பெருமையை நமக்கெல்லாம் தந்திருப்பவர்! ‘உலகில் அதிகம் பேர் பட்டினியில் தவிக்கும் தேசம்’ என்ற சிறுமைப் பெயரை இந்தியாவின் அடையாளத்திலிருந்து அழிக்க உத்தேசித்து இருப்பவர்.
‘‘நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னை, வேளச்சேரியில. குன்றத்தூர் பக்கம் இருக்கிற தண்டலம் கிராமத்துல ஸ்கூல் படிப்பு. எங்க வீட்ல ஏழு குழந்தைகள். நான், அஞ்சாவது. ரொம்ப வறுமை. அதனால, பசியோட அருமை எனக்கு நல்லாவே தெரியும். அப்போ படிப்போட அருமைதான் தெரியல. பத்தாம் வகுப்புல ஃபெயில்.
குடும்பச் சூழலால வேற வேற வேலைக்கு மாறி மாறிப் போயிட்டிருந்தேன். பிறகு சென்னை ஐ.ஐ.டியில வேதியியல் துறை லேப் அசிஸ்டென்ட் வேலை கிடைச்சது. அங்க, 1989ல விசிட்டிங் புரொபஸரா எம்.எஸ்.சுவாமிநாதன் சார் வந்தார். அதுதான் என்னோட தலையெழுத்து மாறிய தருணம். என்னை அவர் வேலைக்கு அழைச்ச மறு நிமிஷமே அவரோட வந்துட்டேன். அவர் ஆசீர்வாதம்தான் இன்னைக்கு நான் இந்தளவுக்கு வரக் காரணம்!’’ என்கிற பரசுராமன், இதன் பிறகு பி.ஏ., எம்.ஏ., பிஹெச்.டி என முடித்து டாக்டர் பட்டம் வாங்கியது தனிக்கதை!
‘‘ஐ.ஐ.டி. வந்த பிறகுதான் நான் படிப்போட முக்கியத்துவத்தை உணர்ந்தேன். ஆனா, அது போதுமா? என்னைப் போல பின்தங்கியிருக்குற மற்ற மாணவர்களும் படிக்க வேண்டாமா? அதுக்காக நண்பர்களோட சேர்ந்து ‘அம்பேத்கர் இலவச இரவுப் பாடசாலை’னு ஒரு இலவச டியூஷன் சென்டரை தொடங்கினோம். இதுக்கிடையில ஃபவுண்டேஷன் வழியா நிறைய வொர்க் பண்ணிட்டே இருந்தேன். உலகம் முழுவதும் பல்வேறு தொடர்புகள் கிடைச்சது.
குறிப்பா, இளைஞர்களை விவசாயத்துக்குக் கொண்டு வரவும், அதில் தக்க வைக்கவும் பல வேலைகள் செஞ்சோம். ஏன்னா, எல்லாத்துக்கும் உணவுதான் அடிப்படை. உலக நன்மைக்காக நீங்க எந்தத் திட்டத்தைக் கையில எடுத்தாலும் அது கடைசியில உணவு, பசி, பஞ்சம்ங்கிற இடத்துலதான் வந்து முட்டி நிற்கும். தமிழ்நாட்டுல கிராமங்கள்தோறும் பள்ளிக்கூடம்னு ஒரு திட்டத்தைக் கையில் எடுத்த காமராசர்,
‘சாப்பாடு போட்டு படிக்க வச்சாதான் பையன் பள்ளிக்கூடத்துக்கு வருவான்’னு உணர்ந்தார். அப்போ துவங்கின மதிய உணவை அடுத்து வந்த முதல்வர்களும் சிறப்பா செய்திட்டு வர்றாங்க. எல்லாத்துக்கும் அடிப்படை உணவுங்கறதுக்கு இதுவே சிறந்த உதாரணம்!’’ என்கிற பரசுராமன், ஏழைகளின் கல்விக்காக உழைத்து வருவதால் ‘சிறந்த இந்தியக் குடிமகன்’, ‘கரம்வீர் புரஸ்கார்’ உள்ளிட்ட பல்வேறு விருதுகளை இந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் ெபற்றிருக்கிறார்.
சரி, அதென்ன ‘பசியில்லா சமுதாயத் திட்டம்’?‘‘பிரேசிலை பசியில்லாத நாடாக மாத்தணும்னு நினைச்சு, அதன் முன்னாள் அதிபர் லூலா ஆரம்பிச்ச திட்டம் இது. இதைப் பத்தி, 2012ம் வருஷம் ரியோ டி ஜெனிரோவில் நடந்த ஐ.நா மாநாட்டுல பேசினாங்க. அது, ஐ.நா பொதுச் செயலாளர் பான் கி மூனுக்கு பிடிச்சுப் போய் ஐ.நா சார்பில் ‘Zero Hunger Challenge’னு இந்தத் திட்டத்தை ஆரம்பிச்சார். அதாவது, உலகம் முழுக்க எந்த ஒரு மனிதனும் பசியால வாடக் கூடாது என்பதுதான் இதன் நோக்கமே! அதேபோல, உணவை வீணாக்குவதை முழுவதும் குறைக்கிறதும் இதன் குறிக்கோள். இதுக்குத்தான் என்னை உயர்மட்ட ஆலோசகரா நியமிச்சிருக்காங்க.
இதுல என்னோட முதல் கட்டப் பணியே, பள்ளிகள் வழியா குழந்தைகள்கிட்டயும், அவங்க மூலமா பெற்றோர் மத்தியிலும் உணவை வேஸ்ட் பண்ணக் கூடாதுங்கிற விழிப்புணர்வை ஏற்படுத்துறதுதான். அப்புறம், விவசாயிகள் உற்பத்தி பண்ணும்போதே உணவை ஊட்டச் சத்துள்ளதா மாற்ற ஒரு கான்செப்ட் உருவாக்கணும். அதுக்கு இப்போ சில அமைப்புகளெல்லாம் சேர்ந்து இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்க தேசம் போன்ற நாடுகள்ல ‘ஊட்டச் சத்துள்ள வேளாண்மை’னு ஒரு ஆய்வு பண்ணிட்டு இருக்காங்க. மண்ணுக்கு சத்து கொடுக்குறது உட்பட நிறைய விஷயங்கள் அதுல அடங்கியிருக்கு. இதையெல்லாம் எங்க திட்டத்துல முன்மொழிந்து ஊக்கப்படுத்தப் போறேன்.
அடுத்து, 2030ல் இப்போ இருக்கிறதை விட 50 சதவீதம் கூடுதலா உணவு தேவையிருக்கும். ஆனா, அப்போ விவசாய நிலங்கள் முப்பது சதவீதமா குறைஞ்சிருக்கும். இது மிகப் பெரிய பிரச்னையா வெடிக்கப் போகுது. இதை எதிர்கொள்ளணும்னா இப்பவே நிறைய இளைஞர்கள் விவசாயத்திற்குள்ள வரணும். 2025க்குள் மக்கள்தொகையில 74 சதவீதம் பேர், முப்பத்தைந்து வயதிற்குட்பட்ட இளைஞர்களா இருப்பாங்கன்னு ஒரு புள்ளிவிவரம் சொல்லுது. அவங்களையும் இதுல இணைச்சு பசியில்லாத சமுதாயத்தை உருவாக்க பாடுபடப் போறேன்!’’ என்கிறார் பரசுராமன் முடிவாக!
குப்பைக்குப் போகும் உணவு!
30% அரிசி, கோதுமை போன்ற தானியங்கள் வயிற்றுக்குப் போகாமல் குப்பைக்குப் போகின்றன. பணக்கார நாடுகள் ஆண்டுக்கு 28 கோடி டன் தானியங்களை வீணாக்குகின்றன.
76 ஆயிரம் கோடி பெட்டி பாஸ்தா ஒவ்வொரு ஆண்டும் குப்பைக்குப் போகிறது.
20% பால் பொருட்கள் கெட்டும் கெடாமலும் குப்பையில் போடப்படுகின்றன. ஐரோப்பிய நாடுகள் மட்டுமே ஆண்டுக்கு 3 கோடி டன் பால் பொருட்களை வீணாக்குகின்றன.
57 ஆயிரம் கோடி முட்டைகளும் ஆண்டுதோறும் குப்பையை அடைகின்றன.
45 % பழங்களும் காய்கறிகளும் பசித்தவர்களை அடைவதில்லை. உணவுகளில் அதிகம் வீணாவது பழங்களும் காய்களுமே! விளைவதில் பாதி வீணாகிறது.
3 லட்சம் கோடி ஆப்பிள்கள் ஆண்டுதோறும் குப்பைக்குப் போகின்றன.
20% எண்ணெய் வித்துக்களும் பருப்புகளும் ஒவ்வொரு ஆண்டும் குப்பைக்கே போகின்றன.
11 ஆயிரம் ஒலிம்பிக் சைஸ் நீச்சல் குளங்களில் நிரப்பும் அளவு ஆலிவ் எண்ணெயை தயாரிக்கலாம், வீணாகும் ஆலிவ் விதைகளை சேகரித்தால்.
30% மீன்களும் கடல் உணவுகளும் குப்பைக்குப் போகின்றன. 8 சதவீத மீன்கள் மீண்டும் கடலிலேயே கெட்டுப் போய் கொட்டப்படுகின்றன.
300 கோடி அட்லான்டிக் சாலமன் மீன்களுக்கு இணையான அளவு கடல் உணவுகள் கடலில் வீணாக குப்பையாகின்றன.
20% இறைச்சி ஆண்டுதோறும் உலகில் குப்பைத்தொட்டிகளை அடைகிறது. உற்பத்தியாகும் 26 கோடி டன் இறைச்சியில் இப்படி வீணாவது சுமார் 5.2 கோடி டன்.
7 கோடியே 50 லட்சம் மாடுகளின் எடைக்கு சமமான இறைச்சி ஆண்டுதோறும் குப்பையில் கொட்டப்படுகிறது.
- பேராச்சி கண்ணன் படம்: ஏ.டி.தமிழ்வாணன்
|