பயிற்சி



‘‘ஏண்டா ஆறுமுகம்... உன் மேல நம்ம முதலாளி நிறைய மரியாதை வச்சிருக்கார். அவர்கிட்ட உன் மகன் சோமுவுக்கு டிரைவர் வேலை கேட்டா நிச்சயம் தருவார். நல்ல வருமானம் கிடைக்கும். அதை விட்டுட்டு வேற ஒரு கம்பெனியில அவனை நைட் வாட்ச்மேன் வேலைக்கு விட்டிருக்கியே...

 இது நல்லாவா இருக்கு?’’ என்றார் நண்பர் சம்பத்.ஆறுமுகம் அர்த்தப் புன்னகை பூத்தார்.‘‘நம்ம கம்பெனி பஸ் எல்லாமே மதுரை, திருச்சி, கோவைன்னு நைட் சர்வீஸ்தான் ஓடுது. என் மகன் சோமு நல்லாத்தான் வண்டி ஓட்டுறான். ஆனா, ராத்திரி பயணத்துல வண்டி ஓட்ட நம்மை மாதிரி பயிற்சியும் பக்குவமும் தேவை.

ஒரு வருஷம் இந்த வாட்ச்மேன் வேலையைப் பார்த்தா என் மகனுக்கு ராத்திரி கண் விழிக்கிற பயிற்சி வந்துடும். அப்புறம் அவன் நம்ம கம்பெனிக்கு டிரைவரா வந்தா அவனுக்கும் பாதுகாப்பு, அவனை நம்பி பயணம் செய்யிற மக்களுக்கும் பாதுகாப்பு!’’ என்றார்
ஆறுமுகம்.

‘‘நம்ம கம்பெனியில சிறந்த டிரைவர் ஆறுமுகம்தான்னு நம்ம முதலாளி அடிக்கடி பாராட்டுவார். அது நூற்றுக்கு நூறு உண்மைதான்!’’ எனத் தோளில் தட்டி எழுந்து சென்றார் சம்பத்.

எஸ்.விசாலம்