ஒபாமாவே வர்றார்...
‘அங்க கேப்பியா? அவங்ககிட்ட கேப்பியா?’ எனக் காறித் துப்பப்படுகின்றன மீடியாக்கள். ‘‘உங்க முதலமைச்சர் பிரஸ் மீட்டுக்கு வர மாட்டேன்றார்... உங்க பிரதமர் இந்தியாவுக்கே வர மாட்டேன்றார்...’’ என ஆளாளுக்கு நம்மை நக்கலடிக்கிறார்கள். இந்த இனிய தருணத்திலா அமெரிக்க அதிபர் ஒபாமா இவ்வளவு எளிமையாக இறங்கி வந்து ஒரு டி.வி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டும்? அதையும் மறு மறு ஒளிபரப்புகளாகப் போட்டு அவர்கள் நம் மானத்தை வாங்க வேண்டும்?
 காடுகளில் வாழ்வது எப்படி என தவளை, பல்லியையெல்லாம் கடித்து டெர்ரர் டெமோ காட்டுவாரே பேர் கிரில்ஸ்... அவருடன் அலாஸ்கா பகுதியில் ஓடித் திரியும் துணிவு ஒபாமாவுக்கு வந்தது ஆச்சரியம். நிகழ்ச்சி பெயர் ‘ரன்னிங் வைல்டு இன் அலாஸ்கா’.‘‘அச்சச்சோ... பிரசிடென்ட் ஒரு வாய் உணவு சாப்பிட்டாலும் அதை அவரின் செஃப் அங்கீகரிக்க வேண்டுமே... அவர் எப்படி காட்டுக்குப் போவார்?’’ எனப் பதைபதைத்தது வெள்ளை மாளிகையின் பாதுகாப்பு டீம். ஆனால் அதையும் தாண்டி கிரில்ஸும் ஒபாமாவும் அன்று சாப்பிட்ட லன்ச், ஒரு கரடி வேட்டையாடி வைத்திருந்த சால்மோன் மீன்.
‘‘ஒரு சரிவான இடத்தை ஓடிக் கடக்க வேண்டும் என்று நான் ஒபாமாவை அழைத்தேன். ‘இது ஆபத்தானது, கூடவே கூடாது’ எனப் பாதுகாப்பு அதிகாரிகள் மறுத்தார்கள். ஆனால் நான் அதிபரின் காதுக்குள், ‘உங்களால் இதைச் செய்ய முடியாது என அவர்கள் முடிவு கட்டி விட்டார்கள்’ என்று உசுப்பேற்றினேன். உடனே அவர், ‘இல்லை! என்னால் முடியும். இதோ, செய்து காட்டுகிறேன் பாருங்கள்’ என இறங்கிவிட்டார்!’’ என்று நெகிழ்ந்திருக்கிறார் கிரில்ஸ்.
‘‘வெள்ளை மாளிகையிலேயே அடைந்து கிடக்காமல் இப்படி இயற்கையை நெருங்கி வந்தது புத்துணர்ச்சி தருகிறது. கடந்த ஏழு வருடங்களில் இதுதான் எனக்கு சிறப்பான நாள்!’’ என மகிழ்ந்திருக்கிறார் ஒபாமா.பேர் கிரில்ஸுக்கு இது வழக்கமான ஷோ இல்லை. பாதுகாப்புக்காக 60க்கும் மேற்பட்ட சீக்ரெட் ஏஜென்ட்டுகள் ஹெலிகாப்டரில் கண்காணித்துக்கொண்டே இருந்தால் வேறு எப்படி இருக்கும்?
இந்தக் களேபரத்திலும் அந்த ஷோ அடிக்கடி எட்டிப் பார்த்தது மனிதம். உதாரணத்துக்கு ஒன்று...கரடிகள் வாழும் தடயத்தைக் கண்டதும் ஆர்ப்பரிக்கிறார் ஒபாமா. பேர் கிரில்ஸ் அவரை அமைதிப்படுத்துகிறார். ‘‘தன் குட்டிகளைப் பாதுகாக்கும் தருணத்திலும் அவற்றுக்கு உணவளிக்கும் நேரத்திலும் கரடிகள் மிக ஆபத்தானவை!’’ என கிரில்ஸ் விளக்கம் சொன்னதும் ஒபாமா சொன்னது...‘‘ஆமாம், மனிதர்களுக்கும் இது பொருந்தும்!’’ஆழ்ந்த பொறாமைகள் மிஸ்டர் பிரசிடென்ட்!
- நவநீதன்
|