ஐந்தும் மூன்றும் ஒன்பது



மர்மத் தொடர் 54

‘‘வள்ளிமுத்துவின் சிரிப்பு எனக்கு கூச்சத்தோடு கோபத்தையும் உண்டாக்கியது. அதைக் கண்டுகொள்ளாமல் வள்ளிமுத்து எனக்கு பதில் கூறினார்.‘ஐயா! நீங்க கேட்ட இதே கேள்விய நானும் சித்தர்சாமிகிட்ட கேட்கணும்னுதாங்க இருக்கேன். ஆனா இந்தக் கேள்வியை சித்தர் சாமிங்ககிட்ட கேட்டு, அதுக்கு அவங்க பதில் சொன்னதா ஒருத்தர் சொன்னாருங்க. அதை நான் சொன்னா உங்களால புரிஞ்சுக்க முடியுமான்னு தெரியல!’
‘சரி, எதுக்கு கேலியா சிரிச்சீங்க?’

‘சிரிக்காம என்னங்க பண்றது... சிகரெட் பிடிச்சா உடம்புக்குக் கேடுனு நல்லா தெரியும். ஆனா புகைக்கு அடிமையானவங்க, பிடிக்காம இருக்காங்களா? சாராயம் குடிச்சாலும் ஆபத்துதான். யாரு இப்ப குடிக்காம இருக்கா? திருடறது, பொய் சொல்றதுன்னு எல்லாமே பாவம். நாட்டுல திருட்டும் பாவமும் நடக்காம இருக்குதா?’‘என் கேள்விக்கும் உங்க கேள்விகளுக்கும் என்ன சம்பந்தம்?’

‘சரிதான்... எல்லாம் தப்புன்னு பளிச்னு தெரிஞ்சிருந்தும் தப்பு நடக்கற ஊர்தானே இது?’‘அதனால?’‘சித்தர் சாமிங்க இதனாலதான் மனுஷங்களோட இல்லாம இந்த மலைக்கு வந்துட்டாங்க!’‘சரி... அங்கயே இருந்து திருத்தக் கூடாதா?’‘இந்த மக்கள்கிட்டதான் ரெண்டாயிரம் வருஷமா திருக்குறள், ஆத்திச்சூடி, விதுர நீதினு நல்லதைச் சொல்ற புத்தகமெல்லாம் நிறைய இருக்கே... திருந்திட்டாங்களா?’‘அப்ப வெறுத்துப் போய் காட்டுப் பக்கம் வந்துட்டாங்களா?’

‘விருப்பு, வெறுப்புல்லாம் அவங்களுக்கு இல்லீங்க... அவங்கவங்க சரியாயிட்டா ஊரும் உலகமும் தானா சரியாயிடும்ங்கறது அவங்க நம்பிக்கை. அதனால நாம நம்ம வழிய பாப்போம்னு வந்துட்டாங்க!’‘சரி... பெரிய அழிவுகள்ல இருந்து அப்பாவிகளை மட்டுமாவது காப்பாத்தலாமே. அப்ப ஊருக்குள்ள வரலாமே?’‘அதுக்குத்தான் ஒரு ஏற்பாடு செய்திருக்காங்க!’‘அது என்ன ஏற்பாடு?’‘காலாலங்கிரியே அதுக்காகத்தான் இருக்காம்!’
‘புரியும்படி சொல்லுங்க!’

‘காலாலங்கிரிங்கறது காலக்கணக்கு சொல்லித் தர்ற இடம். அங்க மொழிப்பாடமே கிடையாது. எல்லாமே கணக்குப் பாடம்தான்!’
‘அந்தக் கணக்குப் பாடம் எதுக்கு?’‘அதெல்லாம் எனக்குத் தெரியாதுங்க. நானும் அங்க போய் ‘என் மக கல்யாணம் எப்ப நடக்கும்?’, ‘என் மகனுக்கு வேலை எப்ப கிடைக்கும்?’, ‘நான் எப்ப சாவேன்’னு இப்படி நிறைய கேள்விகளுக்கு பதில் தெரிஞ்சுக்க விரும்பறேங்க. ஆனா, என்னால எல்லையையே தாண்ட முடியல!’

‘எல்லைன்னு நீங்க எதைச் சொல்றீங்க?’‘நான் ஒரு பாறை சொன்னேனே, அதைத்தாங்க! அங்க நீங்க ‘சிவாயநம’னு சொல்லிக்கிட்டே நிக்கணும். சித்தர் சாமிங்க வந்து கூட்டிப் போனாதான் உள்ள போக முடியும்!’‘பாறையைத் தாண்டி நாமளா போனா?’‘சிலர் போயிருக்காங்க. ஆனா அவங்க யாரும் அப்புறமா உயிரோட இல்லீங்க...’‘யாராவது கொன்னுட்டாங்களா?’

‘சேச்சே... ‘சித்தன் தயவின்றி எத்தர் எவர் வந்தாலும் கத்தரிப்பாகும் அவர் வாழ்வு’னு அந்தப் பாறை மேல கல்வெட்டுலயே பொறிச்சு வச்சிருக்குங்க...’‘எல்லாமே விநோதமா இருக்குதே... போகட்டும்! உள்ள போய்ட்டு வந்தவங்களால எதாவது நல்லது நடந்திருக்குதா?’
‘நடக்காம..? ஆனா ஓட்டைவாய் ஆசாமிங்ககூட உள்ள போய்ட்டு வந்ததும் மாறிடறாங்க. எப்பவும் சிரிச்சுக்கிட்டே இருக்காங்க. கொஞ்சம் எந்திரன் மாதிரியும் நடந்துக்கறாங்க!’

‘எந்திரன் மாதிரின்னா?’‘மெஷின் மாதிரிதான். துளியும் சிரிக்காம ‘உம்’முன்னே இருப்பாங்க. அதுல ஒருத்தர் சுனாமி வரப் போறதை முன்கூட்டியே சொன்னாரு. ஆனா யாரும் நம்பலை. நடந்த பிறகு ஒத்துக்கறாங்க...’’வள்ளிமுத்து எல்லா கேள்விகளுக்குமே கச்சிதமாக பதில் கூறினார். எனக்குள்ளேயும் காலாலங்கிரிக்குள் நுழையும் வேட்கை, ஜோசப் சந்திரனைத் தேடுவதை மீறி தலைதூக்கியது!’’
- கணபதி சுப்ரமண்யனின் ஆய்வுக் கட்டுரையிலிருந்து...

விபா எதற்காக அதிர்ந்தாள் என்று சர்வருக்குத் தெரியவில்லை. ஆனால், அவன் அவளைப் பார்த்து அதிர்ந்தான்.
அவள் ஒட்டுக் கேட்டபடி இருக்க, போனில் கணபதி சுப்ரமண்யன் - வள்ளுவர் பேச்சு தொடர்ந்து கொண்டிருந்தது.
‘‘வள்ளுவரே... உங்க பிரடிக்‌ஷன் இதுவரை தப்பானதே இல்லைன்னா இப்பவும் நீங்க எச்சரிக்கையா இருக்கறதுதான் சரி!’’
‘‘எப்பவும் எச்சரிக்கையோடதானே இருக்கோம். எச்சரிக்கையா இருக்கறதோ, இல்லாததோ இப்ப பிரச்னை இல்லை. குறிப்பா, எங்களுக்கு இல்லவே இல்லை. பாவம், பின்தொடர்ந்து வந்துக்கிட்டிருக்கறவங்க!’’

‘‘அவங்களுக்காக நீங்க ஏன் கவலைப்படறீங்க?’’‘‘சாகப் போறாங்களே... எப்படிங்க கவலைப்படாம இருக்க முடியும்?’’
‘‘ஓ... உங்களுக்கு அந்தக் கவலையா? நான் கவலைப்படத் தயாரில்லை வள்ளுவரே! சுயநலமுள்ள அவங்க இருக்கறத விட சாகறதே நல்லது...’’
‘‘நீங்க சொன்னாலும் சொல்லாட்டாலும் அப்படித்தான் நடக்கப் போகுது. இருந்தாலும் என் மனசுதான் கேட்க மாட்டேங்குது!’’
வள்ளுவரும் கணபதி சுப்ரமண்யனும் பேசுவது விபாவை அங்கேயே சாகச் செய்துவிடும் என்றுகூடத் தோன்றியது.
‘‘மேடம்! என்ன சாப்பிடறீங்க?’’ - திரும்ப இடையிட்டான் சர்வர். இம்முறை கலைந்தவள், ‘‘ஒரு நெய் ரோஸ்ட்!’’ என்று மிக வேகமாக அவனைக் கத்தரித்தாள்.

திரும்பப் பேச்சைத் தொடர்ந்தார் கணபதி சுப்ரமண்யன். இம்முறை அவர் தீர்க்கமாகப் பேசுவது போல் தோன்றியது.
‘‘வள்ளுவரே! அந்த சதுரகிரில காலாலங்கிரினு ஒரு இடம் இருக்கு. நான் அங்க போக முயற்சி செய்தேன். ஆனா முடியல. என் நண்பர் ஜோசப் சந்திரன்ங்கறவர் அங்கதான் இருக்காரு.

அந்தக் காலாலங்கிரிலதான் காலப் பலகணி இருக்குன்னு நீங்க சொல்லும்போது எனக்கு குபீர்னு வேர்த்துடுச்சு. நான் அப்ப ரொம்ப நாத்திக எண்ணங்களோடவும் அவநம்பிக்கையோடவும் இருந்தேன். அது கூட நான் அங்கே போக முடியாம போனதுக்குக் காரணமா இருக்கலாம். இப்பவும் என்னால உங்க கூட வரமுடியாததை நினைச்சா ரொம்ப கஷ்டமா இருக்கு. எனக்கு இல்லாத விதி என் பேத்திக்கு இருந்தா போதும். அது அவளோட பாக்கியம்!’’

‘‘கவலைப்படாதீங்க... நல்லதே நடக்கும். அதே சமயம் இயற்கை எப்படிப்பட்ட சக்தி படைச்சதுன்னு நிரூபிக்கப் போற நாட்களாதான், இனி
வரும் நாட்கள் இருக்கும்!’’‘‘இங்கயும் வானம் மூட்டமாதான் இருக்கு. சென்னையைக் கடல் விழுங்கினா ஆச்சரியப்பட மாட்டேன். தாம்பரம் வரை மூழ்கிப் போய் இப்ப திருவல்லிக்கேணி இருக்கற மாதிரி பெருங்களத்தூர் சென்னையின் கடலோரப் பகுதியா மாறலாம்னு கூட தோணுது!’’
‘‘ரொம்பவே பயப்படறீங்களே... அப்படியெல்லாம் ஆகாது. அதுக்குத்தான் நாங்க போறோம். ப்ரியா கண்ணு சொன்ன மாதிரி நாங்க அதைத் தேடலை. காலப் பலகணிதான் எங்களைத் தேடுது. தைரியமா இருங்க!’’

பேச்சை முடித்தார் வள்ளுவர். விபாவும் காதிலிருந்து இயர் ப்ளக்கை வெளியில் எடுத்தாள். ‘அவர்கள் பேசிக் கொண்டபடி பின்தொடரும் நாங்கள் இறந்து விடுவோமோ! எவ்வளவோ ரகசியமாகத் தொடர்ந்தும் அந்த வள்ளுவர் யாரோ தொடர்கிறார்கள் என்று கச்சிதமாகக் கூறிவிட்டாரே..?’
விபா தனக்குள் கேள்விகளில் மூழ்கினாள். நெய் ரோஸ்ட் வந்தது. பிய்த்து வாயில் போட்டாள். ருசிக்க முடியவில்லை. சதுரகிரி, காலாலங்கிரி என்று மலைப் பெயர்கள் மனதுக்குள் பளிச்சிட்டன.

‘அங்கே போய்ச் சேர்ந்ததும் எப்படியாவது சதுர்வேதியை சிக்க வைத்து விட்டு நாம் தப்பி விட வேண்டும். இங்கே இப்போதே தப்பிக்க நினைத்தாலும் முடியாது. இவன் விட மாட்டான். சரியான தருணத்துக்குக் காத்திருக்க வேண்டும்!’ அவளுக்குள் சரமாரியாக எண்ண ஓட்டங்கள். பசி மறந்தது. நெய் ரோஸ்ட்டில் பாதியை வைத்துவிட்டு அப்படியே எழுந்தாள்.

சதுர்வேதியைச் சந்தித்து காதில் விழுந்ததைக் கூறி அவன் என்ன செய்கிறான் என்றும் பார்க்கத் தோன்றியது! ஒரு ஐந்நூறு ரூபாயை தண்ணீர் டம்ளர் கீழ் பில் பணமாக வைத்து விட்டு காரை நோக்கி நடக்கத் தொடங்கினாள்!மதுரை - ராஜபாளையம் நான்கு வழிச்சாலை! தார்ச்சாலையில் நிறையவே குண்டு குழிகள். மையத்தில் சரியாக வளர்ந்திராத அரளிச் செடிகள்.

ஒருவேளை ரோடு போட முற்பட்டால் கான்ட்ராக்டர் காட்டில் பண மழைதான் என்று அந்தப் பள்ளங்களைப் பார்த்தபோது வர்ஷன் நினைத்தான். ப்ரியா சாலையைப் பார்த்தபடியே ‘‘வர்ஷ்... உன் ஃப்ரெண்ட்கிட்ட இருந்து போன் வரவே இல்லையே...’’ எனும்போதே சென்னையில் இருந்து ரஞ்சித் போன் செய்தான்.ப்ரியா உற்சாகமானாள். காருக்குள் அவன் குரல் ஸ்பீக்கரில் சத்தமாகவே கேட்டது.

‘‘ஹாய் வர்ஷன்...’’‘‘சொல்லு ரஞ்சித்... எல்லாத்தையும் கண்டுபிடிச்சிட்டியா?’’‘‘நான் இப்ப சைபர் க்ரைம் டிபார்ட்மென்ட் கம்ப்யூட்டர் ஆபரேட்டரோட சாட்டிலைட் டிவைசர்கிட்டதான் இருக்கேன்.அந்த சுகுமார் அதிகம் டெல்லிக்குதான் பேசியிருக்கான். அவன் பேசினது சதுர்வேதிங்கற சாமியாரோட பி.ஏ.கிட்ட. அந்த பி.ஏ. இந்த சுகுமாருக்கு நிறைய பணத்தை இம்மீடியட்டா நெட்ல ட்ரான்ஸ்ஃபர்லாம் பண்ணியிருக்கான். பல லட்சங்கள், ஏன் கோடிகள் கூட இருக்கலாம். கை மாறியிருக்கு! ஏதோ ஒரு பெரிய அசைன்மென்ட் நடுவுல இருக்கு. அனேகமா அரசியல் தலைவர்களைக் கொலை செய்வது, கலகத்தை உருவாக்குறதுனு ஏதாவது இருக்கணும்.

அந்த சதுர்வேதி எது சொன்னாலும் சொன்னபடி நடந்துடுமாம். அவனுக்கு அரபு நாடுகள்ல பல ஷேக்குகள் கூட கஸ்டமர்ஸ். அவனோட நெட்வொர்க் உலக அளவிலானது. ‘ஈ.எம்.டி. கேந்திரா’னு ஒரு அமைப்புக்கு அவன்தான் தலைவர். ஈ.எம்.டி.க்கு எனக்கு சரியா விளக்கம் தெரியல. அவனை சிலர் ரொம்பவே சந்தேகமும் படறாங்க. குறிப்பா, பத்திரிகைக்காரங்க சிலருக்கு அவன் மேல சந்தேகம் இருக்கு. தன்னைப் பத்தி புகழ்ந்து எழுதச் சொல்லி நிறைய பேருக்குப் பணம் கொடுப்பானாம். அதனாலேயே பாதி பத்திரிகைக்காரங்களுக்கு அவன் ஒரு சராசரி மனுஷன்ங்கற சந்தேகம்!’’ - ரஞ்சித் விவரித்தபடியே செல்ல, கத்தரித்தாள் ப்ரியா.

‘‘ரஞ்சித்... இந்த சதுர்வேதி கூட அவன் பேசின விபரம் கிடைக்குமா..?’’‘‘அது கிடைக்காது. ஆனா இனி சதுர்வேதி யார்கூட பேசினாலும் டேப் பண்ணச் சொன்னா பண்ணிடுவாங்க!’’‘‘ரைட்... வேற ஏதாவது முக்கிய தகவல் உண்டா?’’‘‘நிச்சயமா... அந்த சதுர்வேதியோட நம்பரை வச்சு அவன் எங்க இருக்கான்னு பாத்தோம். அவனும் இப்ப மதுரைகிட்டதான் இருக்கான். உங்க நம்பருக்கும் அவன் நம்பருக்கும் நடுவுல ஒரு 30 கி.மீ கூட இருக்காது!’’

ரஞ்சித் சொன்னது ப்ரியாவை அதிரச் செய்ய, உடனே வள்ளுவரைப் பார்த்தாள். அவர் சற்றுமுன் சொன்னதுதான் எவ்வளவு பெரிய உண்மை!
‘‘ப்ரியா... ஜாக்கிரதை! அவன் ஏதோ ஒரு விதத்துல நீங்க போற இடத்தைத் தெரிஞ்சுகிட்டு உங்களை ஃபாலோ பண்ணிக்கிட்டு வர்றான். அவனப் பத்தின இன்னும் பல செய்திகளை நான் கலெக்ட் பண்ணிடுவேன்.

அவன் போட்டோவை நெட்ல போய் எடுத்து வாட்ஸ் அப்ல அனுப்பறேன். அவனைப் பாத்தா சுதாரிக்க உதவியா இருக்கும். அவன் யாரையாவது உத்துப் பார்த்தா, அவனால அப்படி பார்க்கப்பட்டவங்க அவன் சொல்றதை எல்லாம் கேப்பாங்களாம். பத்திரிகைக்காரங்க இதுபத்தி எழுதியிருக்காங்க. இது ஒருவித மெஸ்மரிசம். நீங்க ஜாக்கிரதையா இருக்கணும்! நான் இன்னும் கொஞ்சம் தகவல்கள் சேரவும், திரும்பக் கூப்பிடறேன்!’’ - ரஞ்சித் பேச்சை முடித்தான்.

ப்ரியா வள்ளுவரைப் பார்க்க, ‘‘பயப்படாதேம்மா! அவன் அனுப்புன அம்புகள் எல்லாம் சாகவும், அவனே களத்துல இறங்கிட்டான். அவனுக்கும் அதே முடிவுதான் ஏற்படும். நாம நம்ம வேலையை சரியா செய்வோம். வர்ஷன், நீ கொஞ்சம் வேகமா காரை ஓட்டு!’’ - என்றார் வள்ளுவர்.
பரபரப்பாக காருக்குத் திரும்பிய விபா, கணபதி சுப்ரமண்யன் பேத்தி ப்ரியாவோடு பேசியதை எல்லாம் சொல்லி முடித்திட, சதுர்வேதியிடம் விக்கிப்பு.
‘‘ஜி! அந்த வள்ளுவரும் உங்களைப் போலவே ஒரு பிரடிக்டர் மாதிரிதான் தெரியுது!’’ - என்றாள் அலட்டலே இல்லாமல்!

‘சித்தன்
தயவின்றி
எத்தர் எவர்
வந்தாலும்
கத்தரிப்பாகும் அவர் வாழ்வு’னு அந்தப்
பாறை மேல
கல்வெட்டுலயே
பொறிச்சு
வச்சிருக்குங்க!

ஜோக்ஸ்

‘‘இந்தப் புலவன் பாடினால் மழை கொட்டோ கொட்டென்று கொட்டுமாம் மன்னா...’’
‘‘வருண பகவானையே கதறி அழ வைக்கும் சக்தி இவன் பாட்டுக்கு உண்டு என்று சொல்கிறீரா அமைச்சரே..?’’

ஜோக்ஸ்

 ‘‘யார் அங்கே..?’’
‘‘முதலில் உங்கள் கண்ணாடியைப் போடுங்கள் மன்னா... யார் என்று தானாகத் தெரியும்!’’
- கே.லக்ஷ்மணன்,
திருநெல்வேலி.

- தொடரும்...

இந்திரா சௌந்தர்ராஜன்

ஓவியம்: ஸ்யாம்