ஃபேன்டஸி கதைகள்



லென்ஸ்களைப் பார்த்திருக்கிறீர்கள்தானே? தமிழில் கூட ‘பூதக்கண்ணாடி’ என்று சொல்வார்களே? சின்னச் சின்னப் பொருட்களை எல்லாம் பெரிதாக்கிக் காட்டும் இல்லையா? அதே லென்ஸ்தான். ஒரு சிற்றெறும்பை எடுத்து பூதக்கண்ணாடி என்று செந்தமிழிலும் லென்ஸ் என்று லோக்கல் தமிழிலும் சொல்லப்படும் அந்தக் கண்ணாடியின் வழியாகப் பார்த்தாலும் கூட அது கட்டெறும்பின் அளவிற்குப் பெரிதாகத் தெரியும். அப்படி ஒரு லென்ஸின் கதைதான் இது.

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு மாபெரும் காட்டில் வாழ்ந்துவந்த சிறுவன் ஒருவன், வட்ட வடிவமாக இருந்த ஒரு கண்ணாடியினைக் கண்டெடுத்தான். அதன் வழியாகப் பார்க்கும்போது ஒவ்வொரு பொருளும், உயிரும் அதன் நிஜ உருவத்தைவிட நான்கைந்து மடங்குகள் பெரிதாகத் தெரிவதைக் கண்டு ஆச்சரியம் அடைந்தான். தன் கண்ணில் படும் எல்லா உயிர்களையுமே அந்தக் கண்ணாடியின் வழியாகப் பார்த்துப் பார்த்து அதிசயித்துக் கொண்டிருந்தான்.

தன் வாழ்நாளில் தான் கண்ட உயிர்களிலேயே மிகவும் நுண்ணியது என்று நினைத்துக்கொண்டிருந்த ஒரு எறும்பினை எடுத்துத் தனது உள்ளங்கையில் வைத்து, அதனை அந்தக் கண்ணாடியின் வழியாகப் பார்த்தான். அதுவும் தனது இயல்பான உருவத்தைவிட நான்கைந்து மடங்கு பெரிதாகத் தெரிந்தது. இரண்டாவது முறையாகப் பார்த்தபோது, அது முன்னர் தெரிந்ததை விடவும் நான்கைந்து மடங்குகள் பெரிதாகத் தெரிந்தது.

‘அட, என்ன ஆச்சரியம்’ என்று வியப்போடு மீண்டும் ஒரு முறை அந்தக் கண்ணாடியின் வழியாகப் பார்த்தான். இப்பொழுது அந்த எறும்பு அவனது உள்ளங்கையின் முழுக் கொள்ளளவையும் வியாபித்திருந்தது. பிரமிப்போடு கண்ணாடியை அகற்றிவிட்டு தன் கண்களால் உள்ளங்கையைப் பார்த்தான். அது முதலில் இருந்ததைப் போல நுண்ணிய எறும்பாக இல்லை. அவன் அந்தக் கண்ணாடியில் பார்த்த அதே அளவில் பெரும் எறும்பாக மாறியிருந்தது. பயந்து போய் கையை உதறினான். ‘சொத்’தென்று கீழே விழுந்தது.

ஆமாம். அந்த லென்ஸின் வழியாகப் பார்க்கப்படும் எல்லாமே, அதில் தெரிகின்ற அளவிற்கு உருப்பெருக்கம் அடைந்து பெரிதாக மாறின. சிறிய எறும்புகள் பெரிதாக மாறின. சின்னச் சின்னப் பூச்சிகள் பெரிய பெரிய பூச்சிகளாக மாறின. சிறிய செடிகள் மரங்களாகின. அதில் தெரிந்த மண் துகள்கள் எல்லாம் பெரிய பெரிய பாறைகளைப் போல உருமாறின. அந்த பூதக் கண்ணாடியின் வழியாகச் சென்ற ஒளி எதன் மீதெல்லாம் விழுகிறதோ, அதெல்லாமே பூதாகரமான உருவத்தை அடைந்தன.

ஒரே எறும்பினை நான்கைந்து முறை பார்ப்பதன் மூலம், அதை கிட்டத்தட்ட யானையின் அளவிற்குக்கூட பெரிதாக்கி விடலாம் என்று தோன்றியது. ‘சரி, அதையும் முயற்சிக்கலாம்’ என்று தன் கையிலிருந்து விழுந்த அந்த எறும்பினையே மறுபடியும் நான்கைந்து தடவைகள் அந்தக் கண்ணாடியின் வழியாகப் பார்த்தான். அவன் நினைத்தது சரிதான். கண்ணுக்குத் தெரியாத சைசில் இருந்த அந்த எறும்பு, இப்பொழுது அவனுக்கு நிகரான உயரத்தில், அவனை விடவும் பெரிய உடலமைப்பில் அவன் முன்னால் சிலிர்த்துக்கொண்டு நின்றது.

மறுமுறையும் பார்க்கலாம் என்றபோதுதான் அந்த எறும்பு இவனை நோக்கி நகர்ந்ததைக் கண்டான். விரல்நுனியால் நசுக்கிக் கொன்றுவிடும் அளவிற்குச் சின்ன உருவமாக இருக்கும்போதே எறும்புகள் நம்மை எப்படியெல்லாம் கடித்துத் துன்புறுத்துகின்றன! இவ்வளவு பெரிய எறும்பு என்ன செய்யுமோ! அவனுக்கு அப்பொழுதுதான், ‘நாம் எவ்வளவு பெரிய தவறைச் செய்து விட்டோம்’ என்று தோன்றியது. ஓட்டமெடுத்தான். வேறென்ன செய்ய முடியும்? டக்கென்று அதற்குப் பக்கத்தில் போய் ஒரு செல்ஃபி எடுத்து ஃபேஸ்புக், வாட்ஸ்அப்பிலா அனுப்பிக்கொண்டிருக்க முடியும்?

தான் கண்டெடுத்த அந்த லென்ஸை மட்டும் தூக்கிப் பிடித்துக்கொண்டு மின்னலை மிஞ்சிவிடும் வேகத்தில் ஓடினான். எறும்பும் அவனை விடாது துரத்தியது. மூச்சு முட்டிக் கீழே விழுந்துவிடுவோமோ என்ற நிலை வந்த சமயத்தில் பின்னால் திரும்பிப் பார்த்தபோது அவனைத் துரத்தி வந்த எறும்பினைக் காணவில்லை. எங்கே போயிருக்கும்? குழப்பத்தோடு எதிரில் பார்த்தான். அவன் ஓடி வந்து கொண்டிருந்த அந்த மாபெரும் காட்டையும் இப்போது காணவில்லை. தலை சுற்றியது! தான் காண்பது கனவு உலகமா...

இல்லை, நிஜ உலகம்தானா என்று புரியவில்லை. அவ்வளவு பெரிய காடு அதற்குள்ளாக எங்கே மறைந்து போயிருக்கும்? நிமிர்ந்து பார்த்தாலும் கூட உச்சியைப் பார்க்க முடியாத அளவிற்கு உயரமான மரங்கள் எங்கே போயின?

யோசித்தபடியே நடந்தான். முழங்கால் அளவிலான செடி கொடிகளின் நடுவே நடந்துகொண்டிருந்தபோது ஒரு செடியின் உச்சியில் குட்டியூண்டு பட்டம் ஒன்று சிக்கிக் கொண்டிருந்தது. நின்று, நிதானித்து அதைக் கையில் எடுத்துப் பார்த்தான். அது அவனது பட்டம்தான். அன்றைக்குக் காலையில் அவன் பட்டம் விட்டுக் கொண்டிருந்தபோது அது நூலறுந்து பறந்து, அவனது ஊரிலிருந்த மாபெரும் மரமொன்றின் உச்சியில் போய் மாட்டிக் கொண்டது. அவ்வளவு பெரிய மரத்தில் ஏறி அந்தப் பட்டத்தினை எடுக்க முடியாதென்பதால் போகட்டுமென்று விட்டுவிட்டான்.

இப்பொழுது அந்தப் பட்டம் எப்படி இந்தச் செடியில் வந்து விழுந்தது? அந்தச் செடியினை உற்றுப் பார்த்தான். அது காலையில் அந்தப் பட்டம் சிக்கிய அதே மாபெரும் பெரிய மரம்தான். அது மரமா, செடியா என்று குழம்பினான். சுற்றிலும் பார்த்தபோது அவனுக்கு நடந்தது என்னவென புரிந்தது.

விஷயம் என்னவென்றால், அந்த எறும்பு துரத்தியதில் பயந்துபோய் ஓடிவந்தான் இல்லையா? அப்பொழுது அந்த லென்ஸை தனது தலைக்கும் மேலாகப் பிடித்துக்கொண்டே ஓடிவந்ததில் அந்தக் கண்ணாடியின் வழியாகப் பாய்ந்த ஒளி இவனை அத்தனை பெரிய உருவத்திற்கு மாற்றிவிட்டது. மிரட்சியோடு நின்ற இடத்திலிருந்தே சுற்றும் முற்றும் பார்த்தான். அவனது கிராமமே அவனது சுண்டு விரல் அளவில் இருந்தது. அவனது ஊரும் உறவுகளும் கூடி நின்று அவனை பயத்தோடு பார்த்துக்கொண்டிருந்தனர்.

தான் இத்தனை பெரிய உருவத்திற்கு மாறிவிட்டதை நினைத்து ஒரு பக்கம் சந்தோஷமாகவும், இன்னொரு பக்கம் துக்கமாகவும் இருந்தது. தன் இனத்தில் தன் அளவிற்கு யாரும் பெரிய மனிதர்களாக இல்லையே என்று ஏக்கமாகவும் இருந்தது. சாப்பிட, தூங்க என்று எதற்குமே போதுமான வசதிகள் இல்லை. இத்தனை பெரிய உருவத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வது? மீண்டும் சின்ன உருவமாக மாறி விடலாம் என்று செய்த எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை.

இப்படி பெரிய உருவத்தில் இருந்தாலும் வாழ முடியாது என்பதைப் புரிந்துகொண்டான். எப்படியும் தனது உயிரைக் காப்பாற்றிக் கொண்டாக வேண்டுமென்பதற்காக நீண்ட நேரம் யோசித்து ஒரு முடிவிற்கு வந்தான். அது, எல்லோரையும் தன்னைப் போலவே பெரிய உருவங்களாக மாற்றி விடுவது. அவன் நினைத்ததைப் போலவே எல்லோரையும் அந்த பூதக் கண்ணாடியின் துணை கொண்டு பெரும் உருவங்களாக மாற்றினான்.

மனிதர்களை மட்டும் மாற்றினால் போதுமா? வாழ முடியாதுதானே? ரொம்பவும் குட்டியான உருவத்தில் இருந்தபோது என்னென்ன தேவைகள் இருந்தனவோ, அதே அனைத்துத் தேவைகளும் இந்தப் பெரிய உருவத்திற்கும் தேவைப்படும்தானே?

அப்படியானால் மொத்த உலகத்தையுமே தான் அடைந்த அத்தனை மடங்கு பெரிய உருவத்திற்கு மாற்றியாக வேண்டும். வேறு வழியே இல்லையென்பதால் அந்த பூதக் கண்ணாடியை எடுத்துக் கொண்டு உலகெங்கும் சுற்றி வந்தான். இப்பொழுது இருக்கும் மனிதர்களாகிய நமது உருவம் அந்த லென்ஸின் மூலமாகப் பெரிதானதுதான். இதற்கும் முன்பாக இப்போதைய எறும்புகளை விடவும் சின்ன உருவத்தில் நாம் வாழ்ந்து வந்தோம்.

உலகில் உள்ள அத்தனை கோடி உயிருள்ள, உயிரற்றவைகளையும் அந்தக் கண்ணாடியைக் கொண்டு அவன் பெரிதாக்கினான். அந்தக் கண்ணாடியின் ஒளி படாத இடத்தில் மறைந்து நின்ற உயிரினங்கள் அதே சிறிய உயிரினங்களாகவே இருந்தன. உதாரணமாக, எறும்புகளில் எத்தனையோ வகைகள் இருக்கின்றன இல்லையா?

கண்ணுக்கே தெரியாத மஞ்சள் எறும்புகள், அவற்றை விடக் கொஞ்சம் பெரிய எறும்புகள், எல்லாவற்றையும் விடப் பெரிய கட்டெறும்புகள் என்று எறும்புகளில் இத்தனை வகைகள் இருப்பதற்குக் காரணமே, அந்த மஞ்சள் எறும்புகள் எல்லாமும் அந்தக் கண்ணாடியின் ஒளி படாதவை.

கொஞ்சம் மீடியம் சைசில் இருக்கும் எறும்புகள் எல்லாமும் ஒரு முறை மட்டும் லென்சின் ஒளி பட்டவை. கட்டெறும்புகள் அனைத்தும் நான்கைந்து முறைகளுக்கும் மேலாக லென்சின் ஒளி பட்டதால் பெரிதானவை. இப்பொழுது புரிகிறதா எறும்புகளில் ஏன் இத்தனை வகைகள் என்று! அதே போலத்தான் ஒரே இனத்தின் பெரிய, சிறிய உருவங்களில் வாழும் உயிரினங்களின் வரலாறும்.

இன்றோ, நாளையோ, நாளை மறுநாளோ, உங்கள் குழந்தைகள் கேட்டால், தயைகூர்ந்து மேற்கண்ட டுபாக்கூர் கதையைச் சொல்லிவிடாதீர்கள். சார்லஸ் டார்வின் என்ற விஞ்ஞானியைப் பற்றியும், அவர் கண்டுபிடித்துச் சொன்ன பரிணாமவியலைப் பற்றியும் விளக்கிச் சொல்லுங்கள். ஏனென்றால், இதுபோன்ற டுபாக்கூர் கதைகள் நம் ஊரில் ஆயிரக்கணக்கில் உலா வருகின்றன. அதைக் கேட்டுக் கேட்டு, சொல்லிச் சொல்லி, அறிவியல் என்றொரு இயலை இல்லாத ஒன்றாக மாற்றிக் கொண்டிருக்கிறோம்.                                

அளவில் சின்ன உருவமாக இருக்கும்போதே எறும்புகள் நம்மை எப்படியெல்லாம்  கடித்துத் துன்புறுத்துகின்றன! இவ்வளவு பெரிய எறும்பு என்ன செய்யுமோ!