அட்வைஸ்



நாத்தனார் சித்ரா தனது புருஷனிடம் காரணமில்லாமல் கோபித்துக்கொண்டு, அடிக்கடி அண்ணன் வீட்டுக்கு வந்து மாதக்கணக்கில் தங்குவது, அண்ணி அம்பிகாவிற்கு எரிச்சலைத் தந்தது.நாத்தனாரிடம் நேரடியாகச் சொல்ல முடியாமல் அம்பிகா கையைப் பிசைந்துகொண்டிருந்தபோது, வேலைக்காரி வேலம்மா வந்தாள். ‘‘அட, இவ்ளோதானா? நான் பார்த்துக்கறேன்!’’ என்றவள் சித்ராவிடம் என்ன சொன்னாளோ தெரியவில்லை... அடுத்த அரை மணி நேரத்தில் சித்ரா புகுந்த வீட்டுக்குப் புயலாகப் புறப்பட்டாள்.

அம்பிகாவிற்கு ஆச்சரியம். ‘‘வேலம்மா, சித்ராகிட்ட அப்படி என்ன சொன்னே?’’‘‘ ‘இப்படி புருஷனை விட்டு அடிக்கடி இங்கே வந்து மாசக்கணக்கா இருக்கிறியே, பொண்டாட்டி இல்லாத குறைக்கு, உன் புருஷன் அங்கே வேற யாரையாவது தேடிக்கிட்டா நீ என்ன பண்ணுவே? உன் பொழப்பு கஷ்டமாயிடுமே’னு சொன்னேன். அவளுக்கு ‘திக்’னு ஆகிடுடிச்சு. உடனே கிளம்பிப் போயிட்டா!’’ என்றாள் வேலம்மா.

அம்பிகா மலர்ச்சியுடன், ‘‘நீ பக்குவமா எடுத்துச் சொன்ன அட்வைஸை என் நாத்தனார் சரியா புரிஞ்சிக்கிட்டா!’’ என்றாள்.தலையாட்டிய வேலம்மா, ‘இப்ப நான் உங்க நாத்தனாருக்கு சொன்ன அட்வைஸை, இருபத்தைந்து வருஷத்துக்கு முன்னாடி எனக்கும் யாராவது சொல்லியிருந்தா, நான் ஏன் இப்படி தனிமரமா கஷ்டப்படறேன்!’ என்று மனதுக்குள் சொல்லிக் கலங்கினாள்.

ஜெயா மணாளன்