முகங்களின் தேசம் 3
கலையும் அறமும் ‘ஜால்ரா’ என்ற சொல் எங்கிருந்து வந்தது என்னும் தெளிவு, நான் என் நண்பர்களுடன் 2009ம் ஆண்டில் ஜாலர்பதான் என்னும் ஊருக்குச் சென்றபோது கிடைத்தது. அப்பெயரை நம்மூர் மொழியில் சொல்லவேண்டும் என்றால், ஜால்ராப் பட்டணம். ‘மணிகளின் நகர்’.
 ராஜஸ்தானின் கோட்டா மாவட்டத்தில் உள்ள ஆலய நகரம் இது. கோட்டா மாவட்டத்தின் வழியாக சம்பல் ஆறு ஓடுகிறது. நாங்கள் சென்ற அந்தப் பருவத்தில், கால்வாய்களில் நீல நீர் கரைததும்பி ஓடிக்கொண்டிருந்தது.
கோட்டா மாவட்டம் ஒரு காலகட்டத்தில் கொலைகளுக்குப் பெயர் பெற்றது. அன்றெல்லாம் அணைகளும் கால்வாய்களும் நீரும் இருந்திருக்காது. நாங்கள் சென்றபோது முண்டாசுகளுக்குக் கீழே சுருக்கங்கள் நிறைந்த முகங்களும் மெலிந்த உடல்களுமாக மக்கள் சாதுவாகத்தான் தெரிந்தார்கள்.
நாங்கள் மாலைநேரத்தில் ஜாலர்பதானைச் சென்றடைந்தோம். வழக்கம் போல புழுதி மூடிய சாலை வழியாக புழுதி மூடிய மனிதர்களிடம் வழி கேட்டுக்கொண்டே சென்றோம். சந்திரபாகா (அல்லது சந்திரவாஹா... அதாவது சந்திரனை வகித்து ஒழுகுபவள்) நதிக்கரையில் இருக்கிறது இந்த சிறிய ஊர். சிறிய கடைவீதிகள். நெரிசலான சந்துகள். சாலையெங்கும் பருத்த பசுக்கள் திரிந்தபடி இருந்தன.
உண்மையில் எங்கள் பயணத்திட்டத்தில் அந்த ஊர் இல்லை. நாங்கள் தமிழ்நாட்டிலிருந்து காரில் கிளம்பி, சமண ஆலயங்களை மட்டும் பார்த்துக்கொண்டு, வடக்கே ராஜஸ்தானின் மறு எல்லை வரை சென்றுவிட்டு திரும்பிக்கொண்டிருந்தோம். கோட்டா போன்ற வெறும் நகரில் தங்குவதற்கு பதிலாக, ஒரு ஆலய நகரில் தங்கலாமே என்று நினைத்தோம். ஜாலர்பதானில் ஓரிரு சமண ஆலயங்கள் இருப்பதாகத் தெரிந்தது. ஆனால் எந்த ஆலயம் என்றெல்லாம் தெரிந்திருக்கவில்லை.
வழக்கமாக ‘ஆலயம்’ என்றால் புதியதாகக் கட்டப்படும் கான்க்ரீட் கட்டிடத்திற்குக் கூட்டிச் சென்றுவிடுவார்கள். ஆகவே எப்போதுமே ‘புராணா மந்திர்’ என்று கேட்டுக்கொண்டே செல்வது வழக்கம். அந்தக் கேள்வியையே ஜாலர்பதான் மக்கள் புரிந்துகொள்ளவில்லை. ‘‘இங்கே புராணமாக ஏதுமில்லை’’ என்று ஒருவர் சொன்னார். ‘ஜைனர்களின் ஆலயம்’ என்றோம். அங்கிருந்த துணிக்கடையை ஒருவர் சுட்டிக்காட்டினார். அது சாந்திநாத் ஜெயின் நடத்துவது.
ஒருவழியாக சமண ஆலயத்தைச் சென்றடைந்தோம். அது புதிதாகக் கட்டப்பட்ட ஆலயம் போலிருந்தது. பெரிய கோட்டை போல சுற்றுமதில். அதையொட்டி சிவந்த சிமென்ட் போடப்பட்ட வழவழப்பான திண்ணை. ‘‘தரிசன நேரம் முடிந்துவிட்டது. ஐந்து மணிக்கு மேல் இங்கு எவரையும் அனுமதிப்பதில்லை’’ என்றார் வாயிற்காவலர். நண்பர் முத்துக்கிருஷ்ணன் நாங்கள் பயணத்தைத் தொடங்கும்போதுதான் இந்தி கற்கத் தொடங்கியிருந்தார். சரளமாகப் பேசி, ‘‘நாங்கள் கன்னியாகுமரியில் இருந்து வருகிறோம்’’ என்றார்.
வட இந்தியா முழுக்கத் தெரிந்த தென்னகப் பெயர்கள், இரண்டு. ஒன்று மெட்ராஸ்; இன்னொன்று கன்னியாகுமரி. மெட்ராஸ் என்றால், ‘ஏதோ வேலையாக வந்திருக்கிறோம்’ என்று நினைப்பார்கள். கன்னியாகுமரி என்றால் உடனே கண்களில் ஒரு பவ்யம் வரும். நாம் ஒருவகையான ஞானிகள் எனக் கருதப்படுவோம். காவலர் எங்களிடம் விஷயங்களைக் கேட்டறிந்து உள்ளே விட்டார்.
பன்னிரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஆலயம். பதினாறாவது தீர்த்தங்கரரான சாந்திநாதருக்குரியது. செந்நிறமான கல்லால் மிக நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகளுடன் அமைந்தது. ஆனால் அதை முடிந்தவரை அசிங்கமாகப் புதுப்பித்திருந்தனர். முகப்பில் இரண்டு சிமென்ட் யானைகள் வெண்ணிறமாக நின்றன. மேலே ஆஸ்பெஸ்டாஸ் போட்ட கூம்பு வடிவக் கூரை. பொதுவாக சமணர்கள் இப்படி தோன்றியது போல திருப்பணிகள் செய்வதில்லை. அது தமிழகத்திற்கு மட்டும் உரிய கலாச்சாரம்.
மாலை வேளையில் ஆலயம் பொன்னாலானது போல சுடர் விட்டது. கோயிலின் நிர்வாகி ஒருவர் வந்து எங்களுக்கு ஆலயத்தைப் பற்றி விளக்கிச் சொன்னார். நாங்கள் அங்கே தங்குவதற்கு இடம் கிடைக்குமா என்று கேட்டோம். அந்தப் பயணம் முழுக்க சமணர்களின் இலவச தங்குமிடங்களில் இரவுறங்கி இலவச உணவை உண்டு சென்றுகொண்டிருந்தோம்.
அவர், அருகே உள்ள தர்மசாலைக்குச் செல்லும்படிச் சொன்னார்நாங்கள் தர்மசாலைக்குச் சென்றோம். அங்கே ஒரு சிறுவன் மட்டும்தான் இருந்தான். ஜாலார்பதான் சமணர்களுக்கு பெரிய புனிதத்தலம் அல்ல. ஆகவே அங்கே அதிகமாகப் பயணிகள் எவரும் வருவதில்லை. அந்த தர்மசாலை, ‘சமணர் ஆலயம் என்றால் தர்மசாலை வேண்டுமே’ என்ற மரியாதைக்காக அமைக்கப்பட்டது. நகருக்கு சில்லறை வணிகத்திற்காக வரும் சிலர் எப்போதாவது தங்குவதுடன் சரி!
அங்கே நான்கு சிறிய அறைகள்தான் இருந்தன. ஒரே ஒரு அறைதான் காலியாக இருந்தது. அதில் ‘மெத்தையோ போர்த்திக்கொள்ள ரஜாயோ இல்லை’ என்றான் சிறுவன். திரும்ப சாந்திநாதர் ஆலயம் வந்து அந்த நிர்வாகியிடம் விஷயத்தைச் சொன்னோம். ‘‘அடடா, சமணர்கள் அப்படி மறுக்கக் கூடாதே. அங்கே நிர்வாகிகளுக்குரிய மெத்தைகள் இருக்கும். இருங்கள், நானே வருகிறேன்’’ என்றார். அவரே வந்து உள்ளறையிலிருந்து மெத்தைகளையும் ரஜாய்களையும் எடுத்துத் தந்தார். அவை, அவர் பயன்படுத்துபவை.
நாங்கள் ஒரே அறையில் மெத்தையை விரித்து படுத்துக்கொண்டோம். எங்களிடம் தரையில் விரிக்கும் பிளாஸ்டிக் பாய்கள் இருந்தன. அவற்றில் இருவர் படுத்தோம். குளிருக்கு அந்த ரஜாயுடன் எங்களிடமிருந்த சில போர்வைகளைக் கொண்டு சமாளிக்கலாம் என முடிவுசெய்தோம். நான் குளிக்கத் தொடங்கினேன். சில்லென்ற நீர். ஆனால் புழுதியில் வந்தபின் குளித்துவிட்டுப் படுப்பது பெரிய இன்பம்.
நண்பர்கள் நகரைச் சுற்றிப் பார்க்கச் சென்றார்கள். நான் எழுதிக்கொண்டிருக்கும்போது ஆனந்தப் பரவசத்துடன் கூச்சலிட்டபடி நண்பர் கிருஷ்ணன் வந்தார். ‘‘சார், இந்தப் பயணத்தோட கடைசியிலதான் ஜாக்பாட் அடிச்சிருக்கு. இதுவரை பாத்ததிலேயே அற்புதமான கோயில் இங்கதான் சார்...’’ என்றார். ‘‘இங்க இருக்கிற சூரியர் கோயில் மாதிரி இந்தியாவிலேயே கெடையாது’’ என்று கொந்தளித்தார்நான் நண்பர்களுடன் கிளம்பிச் சென்றேன்.
பேருந்து நிலையம் அருகிலேயே இருந்தது சூரியர் கோயில். நாகரபாணியில் ஒரு பெரிய கல்நகை போல நுணுக்கமான சிற்பங்களுடன் அமைந்த இந்தப் பேராலயம், ‘பதம்நாத் மந்திர்’ என அழைக்கப்படுகிறது. அதாவது, பத்மநாதர் ஆலயம். எட்டாம் நூற்றாண்டில் ராஜஸ்தானை ஆண்ட சௌகான் குலத்து ஆட்சியாளர்களால் கட்டப்பட்டது. டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜி ஆட்சியில் இடிக்கப்பட்டது. நெடுங்காலம் கைவிடப்பட்டுக் கிடந்த பின்னர், பதினான்காம் நூற்றாண்டில் முகலாயர்களின் நட்பு நாடாக ஆன ஜெய்ப்பூரின் ராஜபுத்திர மன்னர்களால் மீண்டும் கட்டப்பட்டது. நின்று நின்று நோக்கிக்கொண்டிருந்தோம்.
மின்விளக்குகள் அமைத்திருந்தனர். ஒரு மாபெரும் கிரீடம் என்று தோன்றியது. கனவா என்று மனம் மயங்கியது. சிவந்த கல்லில் அமைக்கப்பட்டது. 96 அடி உயரமான கோபுரத்துக்கு முன்னால் அழகிய மண்டபம். மேல் பக்கம் இடிந்த நிலையில் இருந்ததை, அன்றைய கட்டிடக்கலை பாணியில் புதுப்பித்திருக்கிறார்கள். முகலாய கட்டிடக்கலை பாணியில் வளைவான கும்மட்டம், அதே சிவந்த கல்லால் அமைக்கப்பட்டுள்ளது. முகப்பின் இரு சிறிய கோபுரங்களும் முகலாய பாணியில் அமைந்தவை. ராஜபுதன - முகலாய பாணிகள் மிக வெற்றிகரமாகக் கலந்து அழகிய கட்டிடமாக இன்று இந்த ஆலயம், நகர் நடுவே உள்ளது.
மலரின் அல்லியடுக்குகள் போல சிற்பங்கள் செறிந்த முகமண்டபம் ஒரு மாபெரும் கலைக்கூடம். தோரண வளைவுகள், அடுக்குத் தூண்கள் என எங்கும் சிற்பம். பல காலம் கைவிடப்பட்டு மேலே நீர் ஒழுகக் கிடந்தமையால் சிற்பங்கள் மழுங்கியிருந்தன. அதுவும் ஓர் கலையம்சமே எனத் தோன்றியது. அவை கடந்துவந்த காலத்தை அவை நினைவூட்டிக்கொண்டே இருந்தன.
நினைத்துப் பார்க்க முடியாத விசித்திரமான சிற்பங்கள் இருந்தன. பாய்கலைப்பாவையாக துர்க்கை. லட்சுமியை சம்போகித்தபடி ஆடிய நிலையில் நின்றிருக்கும் நரசிம்மரை எங்குமே பார்த்ததில்லை. எந்தக் கோணத்தில் நின்று நோக்கினாலும் முழுமையான ஆலயம். பருகப் பருக தாகம் பெருகும் அனுபவத்தையே எந்தக் கலைப்படைப்பும் அளிக்கின்றது.
நள்ளிரவில்தான் திரும்ப விடுதிக்கு வந்தோம். களைப்பில் கால்கள் பின்னின. அங்கே ஆலயத்தின் அறங்காவலர் நின்றிருந்தார். முதியவர். பணிவுடன் கைகளைக் கூப்பியபடி ஓடி வந்தார். ‘‘மன்னிக்க வேண்டும், மன்னிக்க வேண்டும். கன்னியாகுமரியிலிருந்து விருந்தினராக வந்திருக்கிறீர்கள். போதிய வசதி செய்ய முடியவில்லை. இப்போதுதான் பையன் சொன்னான். இங்கே வசதிகள் மிகக்குறைவு. நான் சொந்தமாக லாட்ஜ் நடத்துகிறேன். நவீன அறைகள் உள்ளன. அங்கே வந்து என் விருந்தினராகத் தங்குங்கள்’’ என்றார்.
‘‘பரவாயில்லை. நாங்கள் தெருவில்கூட படுத்துத் தூங்குவோம். இதுவே எங்களுக்கு அதிகம். நன்றாகத் தூக்கம் வருகிறது’’ என்றோம். ‘‘இல்லை, நீங்கள் பணம் ஏதும் தரவேண்டியதில்லை. ஜாலர்பதானின் சமணராக உங்களை உபசரிக்கவேண்டியது எங்கள் கடமை... தயவுசெய்யுங்கள்’’ என்று அவர் கெஞ்சும் குரலில் சொன்னார். ‘‘மறுபடியும் அத்தனை பெட்டிகளையும் எடுத்துக்கொண்டு கிளம்பமுடியாது. இதுவே சிறந்த அறை... போதும்’’ என்றோம்.
அவர் மன்றாடிக்கொண்டே இருந்தார். நாங்கள் மறுத்துவிட்ட பின்னரும் நின்றுகொண்டிருந்தார். அறைக்குள் நாங்கள் படுத்தபின், ‘‘சரி! அப்படியென்றால் நான் இன்னொரு ரஜாய் கொண்டுவருகிறேன்’’ என்றார். தன் வீட்டிலிருந்து போர்வைகளும் ரஜாயும் கொண்டுவந்து தந்தார். நாங்கள் படுத்தபின் கொஞ்ச நேரம் நின்றுவிட்டுத்தான் திரும்பிச் சென்றார்.
மறுநாள் காலையிலேயே எங்களுக்கு தன் வீட்டிலிருந்து காபி கொண்டு வந்தார். மீண்டும், ‘‘மன்னிக்கவேண்டும், நான் இப்படி எதிர்பார்க்கவில்லை. இனிமேல் தர்மசாலையை சீரமைத்து வைக்கவேண்டும் என்று முடிவு செய்திருக்கிறேன்’’ என்றார். மீண்டும் சூரியர் கோயிலைப் பார்த்துவிட்டுக் கிளம்பினோம். எங்கள் கார் கிளம்பும்வரை கூடவே வந்தார்.
‘‘அற்புதமான கோயில் சார். என்ன ஒரு நுணுக்கம். என்ன ஒரு ஒருமை. கலைன்னா அதைக் கடந்துசெல்லவே முடியாம இருக்கணும் சார்’’ என்று கிருஷ்ணன் பரவசம் கொண்டபடியே வந்தார். நான் அந்த தர்மகர்த்தாவை நினைத்துக்கொண்டே வந்தேன். அவரது அந்த கூப்பிய கையை நான் கடந்துபோகவே முடியாது என எண்ணிக்கொண்டேன்.
செந்நிறமான கல்லால் மிக நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகளுடன் அமைந்தது. ஆனால் அதை முடிந்தவரை அசிங்கமாகப் புதுப்பித்திருந்தனர்.பல காலம் கைவிடப்பட்டு மேலே நீர் ஒழுகக் கிடந்தமையால் சிற்பங்கள் மழுங்கியிருந்தன. அதுவும் ஓர் கலையம்சமே எனத் தோன்றியது.
‘‘இல்லை, நீங்கள் பணம் ஏதும் தரவேண்டியதில்லை. ஜாலர்பதானின் சமணராக உங்களை உபசரிக்க வேண்டியது எங்கள் கடமை... தயவு செய்யுங்கள்’’ என்று அவர் கெஞ்சும் குரலில் சொன்னார்.
(தரிசிக்கலாம்...)
ஜெயமோகன்
ஓவியம்: ராஜா
|