கிரிக்கெட் தான் என் ஹீரோ



அண்டர் 19 அணியில் ஒரு தமிழக புயல்

சுந்தர் என்ற பெயர் பின்னால் வரவில்லையெனில் இந்த வாஷிங்டனை நாம் வெள்ளைக்கார துரை என்றுதான் நினைத்திருப்போம். ஆனால், இவர் பக்கா சென்னை பையன். 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய கிரிக்கெட் அணியின் அசைக்க முடியாத தூண். சமீபத்தில் நடந்த முத்தரப்பு ஒருநாள் போட்டியில் பரபரப்பு சதத்தால் இந்தியாவுக்கு வெற்றி தேடித் தந்த வாஷிங்டன் சுந்தர், வரப்போகும் அண்டர் 19 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் வலுவாக இடம் பிடித்திருக்கிறார்!

சென்னை புதுப்பேட்டையில் ஒரு பளிச் ஃப்ளாட்... பேட், பால் மற்றும் கிரிக்கெட் கிட் என ஒரு பெவிலியன் டிரஸ்ஸிங் ரூம் போலத்தான் இருக்கிறது அந்த ஹால். இருக்காதா பின்னே... ஒன்றுக்கு மூன்று கிரிக்கெட் வீரர்கள் இருக்கும் வீடாச்சே.‘‘எங்க அப்பா சுந்தர் ஸ்டேட் லெவல் விளையாடினவர். அக்கா ஷைலஜா தமிழ்நாடு பெண்கள் கிரிக்கெட் டீம்ல இருக்காங்க. இப்ப என்னோட டர்ன்!’’ தன்னம்பிக்கை மிளிரப் பேசுகிறார் வாஷிங்டன் சுந்தர்.
அது என்னங்க வாஷிங்டன்?

‘‘எங்க அப்பாவுக்கு கோச்சாகவும் வழிகாட்டியாவும் இருந்தவர் பேர் அது. அவர் நினைவா எனக்கு வச்சிருக்கார். பேரைக் காப்பாத்தணும்னு எல்லாரும் சொல்வாங்களே... அது எனக்கு ரொம்பப் பொருந்தும். அப்பா பேரை மட்டுமில்லாம என் பேரையும் சேர்த்து நான் காப்பாத்தணும்!’’ என்கிற வாஷிங்டன், இடதுகை பேட்ஸ்மேன். பெரும்பாலும் துவக்க வீரராக இறங்கும் இவரது பேட்டிங் ஆல்வேஸ் அதிரடி. பவுலிங்கிலும் நெடிதுயர்ந்த ஆங்கிளில் இருந்து விக்கெட்டைத் தாக்கும் ஆஃப் ஸ்பின் இவர் வசம்.

‘‘கிரிக்கெட்ல எனக்கு யார் ஹீரோன்னு கேக்காதீங்க. கிரிக்கெட்தான் என் ஹீரோ! நடக்கக் கத்துக்கிட்ட வயசுல இருந்து அப்பா கூட கிரவுண்டுக்குப் போறேன். ‘கிரிக்கெட் வேற, என் லைஃப் வேற’னு பிரிச்சுப் பார்த்ததில்ல. பப்ளிக் எக்ஸாமைக் கூட பிரைவேட்லதான் எழுதறேன். ஏழே நாள் படிச்சி, பத்தாம் வகுப்புல 76 பர்சன்டேஜ் எடுத்தேன். இந்த வருஷம் அதே மாதிரிதான் பிளஸ் 2 எழுதப் போறேன்!’’ என்கிற வாஷிங்டனுக்கு வீட்டில் ஃபுல் சப்போர்ட்.

நான்கு வயதில் மகன் அணிந்த சின்னஞ்சிறு ஹெல்மெட்டைத் தேடி எடுத்து நம்மிடம் காட்டியபடியே பேசுகிறார் அப்பா சுந்தர்...‘‘நாலு வயசுல ஒரு முறை இவனுக்கு தலையில பால் பட்டு காயம். 4 தையல் போட்டோம். ‘நீ கிரிக்கெட் பைத்தியம் பிடிச்சி அலைஞ்சதே போதும், இப்ப இவனையும் கெடுக்காதே’னு அப்பவே எங்க அம்மாவெல்லாம் திட்ட ஆரம்பிச்சிட்டாங்க. அடுத்த நாளே இவன் டீமுக்கு ஒரு மேட்ச். நான் கோச்சா போயாகணும். ‘நீ வர வேண்டாம்... ரெஸ்ட் எடு’னு சொன்னாலும் இவன் கேக்கல. ‘சும்மா பார்க்கவாவது வர்றேன்’னு அடம் பிடிச்சி வந்துட்டான். அங்க போய் எப்படியோ தாஜா பண்ணி கிரவுண்ட்ல இறங்கிட்டான். அந்த மேட்ச்ல 32 ரன் எடுத்து பவுலிங்ல 2 விக்கெட்டையும் சாய்ச்சான்.

கிரிக்கெட்ல நாம என்ன ப்ராக்டீஸ் பண்ணினாலும், அதைத் தாண்டி கடவுள் சில விஷயங்களைத் தரணும். அந்த விதத்தில் எனக்குத் தந்ததை விட அதிகம் இவனுக்குத் தந்திருக்கார். நான் மட்டுமில்ல... இவன் பாட்டி, அத்தைங்க, அம்மானு இவனுக்கு ஃபேமிலி சப்போர்ட் நிறைய. பதினோரு வயசுல லீக் மேட்ச் ஆடின சென்னைப் பையன்னா அது இவன்தான்.

கூட ஆடினவங்க எல்லாம் பெரும்பாலும் 20 வயசுக்கு மேற்பட்ட பசங்க. அந்த டோர்னமென்ட்டில் இவன்தான் அதிகபட்ச ஸ்கோரர். 598 ரன் அடிச்சி  37 விக்கெட் எடுத்தான். எம்.ஆர்.எஃப் டீமுக்கு 14 வயசுல இருந்து ஆடுறான். இந்த வருஷம் ஐ.பி.எல் ஏலத்தில் வந்துடுவான். வருங்கால இந்திய அணியில ஸ்ட்ராங்கா கால் பதிப்பான். அதுக்கான அடித்தளம் இவன்கிட்ட இருக்கு!’’ என்கிறார் அவர் பெரும் நம்பிக்கையுடன்.

‘‘அதிரடிதான் இப்ப கிரிக்கெட் ட்ரெண்ட்னு சொல்வாங்க. ஆனா, நான் அதையெல்லாம் மைண்ட்ல ஏத்திக்கறதில்லை. கவாஸ்கர் காலத்துலயே கபில்தேவ் அதிரடி காட்டியிருக்கார். எந்தக் காலத்திலும் ப்ளேயர்ஸ் அவங்கவங்க இயல்புப்படிதான் ஆடணும். என்னோட இயல்பே வேகமா ரன் எடுக்கறதுதான்.

அதே சமயம் விக்கெட்டை பறி கொடுக்காமலும் கவனமா இருப்பேன். இந்த ரெஸ்ட்ரிக்டட் அக்ரஸிவ்னஸ் ஜெயிக்கும்னு என்னோட இப்போதைய கோச் ராகுல் டிராவிடே சொல்றார். சர்வதேச கிரிக்கெட்ல நான் பெரிய அளவுல சாதிக்கணும்னு எல்லா சீனியர்ஸும் வாழ்த்துறாங்க... வெளிநாடுகள்ல சந்திக்கற தமிழர்களும் விரும்புறாங்க. அதை செய்து காட்ட வேண்டியது மட்டும்தான் பாக்கி!’’ - அண்ணாந்து பார்க்கும் உயரத்தில் அழகாகச் சிரிக்கிறார் வாஷிங்டன்!

இந்த வருஷம் ஐ.பி.எல் ஏலத்தில்  வந்துடுவான். வருங்கால இந்திய அணியில ஸ்ட்ராங்கா கால் பதிப்பான். அதுக்கான  அடித்தளம் வாஷிங்டன்
சுந்தர்கிட்ட இருக்கு!

- நவநீதன்
படங்கள்: ஆர்.சி.எஸ்