பாலியல் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வேண்டும்!



இந்தியாவைச் சுற்றும் பைக் இளைஞர்

மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்குத்தான் இந்தக் கவலை வர வேண்டுமா என்ன? இன்னும் திருமணமாகாத, மீசை கூட முளைக்காத 24 வயது பெங்களூரு இளைஞர் யோகேஷ் குமாருக்குள் கிளைத்திருக்கிறது, இந்தியாவின் மகள்கள் பற்றிய வேதனை. பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறையைத் தடுக்கவும் குற்றவாளிகளைக் கடுமையாக தண்டிக்கவும் வலியுறுத்தி இந்தியா முழுவதும் பைக் பயணம் கிளம்பிவிட்டார் யோகேஷ்.

கடந்த வாரம் சென்னை பார்டரைத் தொட்ட அவரை ஒரு ‘ஷார்ட் பிரேக்’கில் சந்தித்தோம்...‘‘டெல்லி மாணவி நிர்பயா தொடர்பான ‘இண்டியாஸ் டாட்டர்’ ஆவணப்படத்தை அரசு தடை செய்த நிகழ்வு எல்லோருக்கும் தெரியும். ஒரு வருடம் கழித்து அதுபற்றி பெங்களூரு வானொலியில் நடந்த ஒரு விவாதத்தைக் கேட்டபோதுதான் எனக்குள் ஆதங்கம் பொங்கியது... ‘இன்னுமா பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் விவாதப் பொருளாக இருக்கின்றன’ என்று! அந்த ஆதங்கம்தான் இந்த விழிப்புணர்வுப் பயணத்துக்குக் காரணம்!’’ என்ற யோகேஷிடம் தெரிந்தது உண்மையான அக்கறை.

23 நாட்களில் 10 ஆயிரம் கிலோமீட்டர் என தன் பயணத்தை வரையறுத்திருக்கும் யோகேஷ், பெங்களூருவில் பயணத்தைத் துவங்கி மதுரை, நெல்லை, சென்னை, ஐதராபாத், ஜான்சி, நாக்பூர், ஆக்ரா, டெல்லி, சண்டிகார், ஜம்மு, நகர், கார்கில், லடாக், மணாலி, ஜெய்ப்பூர், அகமதாபாத், மும்பை, புனே எனப் பயணித்து பெங்களூருவிலேயே முடிக்கிறார். விழிப்புணர்வு பிரசாரத்துக்கு எத்தனையோ வழிகள் இருக்க, ஏன் பைக் பயணம்? ‘உலகின் டஃபஸ்ட் பைக் ரைடர்’ என்ற பட்டத்தை யோகேஷ் கைவசம் வைத்திருப்பதுதான் காரணம். ஒரே நாளில் 1620 கிலோ மீட்டரை பைக்கில் கடந்து பெற்ற பெருமை இது.

‘‘எனக்கு சகோதரி என்று யாரும் இல்லை. ஒரு சகோதரன்தான். அப்பா பிசினஸ்மேன், அம்மா ஹவுஸ்வொய்ஃப். நான் பி.பி.எம் படித்து பெங்களூருவில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். நிர்பயா பற்றிய விவாதங்கள் எனக்குள் எழுப்பிய தாக்கத்தால்... சட்டப் புத்தகங்களைப் புரட்டினேன். பாலியல் பலாத்காரம் செய்த ஒரு குற்றவாளிக்கு அதிகபட்சமாக 14 வருடம்தான் சிறைத் தண்டனை என்று வாசித்தபோது, அது போதாது என்று எனக்குப் பட்டது. மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் எனத் தெரிந்துகொள்ள ஆசைப்பட்டேன். மக்களுக்காகவே ஒரு கோரிக்கை மனுவை உருவாக்கினேன்.

 ‘பாலியல் பலாத்காரம் செய்தவர்களுக்கு தூக்கு அல்லது 20 வருட சிறை என தண்டனையைக் கடுமையாக்க வேண்டும்; பாலியல் குற்றங்களுக்காக ஒவ்வொரு மாநிலத்திலும் விரைவு நீதிமன்றங்கள் அமைத்து அதிகபட்சம் 2 மாதத்துக்குள் தீர்ப்பு வழங்க வேண்டும்’ என அதில் கோரிக்கைகளை அடுக்கினேன். இதற்கு நீங்கள் ஆதரவு தெரிவித்தால் கையெழுத்து போடுங்கள் எனக் குறிப்பிட்டு ஆன்லைனில் வெளியிட்டேன். அதையே நேரடியான பெட்டிஷனாகவும் கையில் வைத்திருக்கிறேன்!’’ என்று சொல்லும் யோகேஷ், தான் செல்லும் நகரங்களில் எல்லாம் அந்த மனுவைக் கொடுத்து குறைந்தபட்சம் 30 ஆயிரம் கையெழுத்துகளைப் பெற திட்டமிட்டிருக்கிறார்.

‘‘மழைதான் பைக் பயணத்தின் ஒரே பிரச்னை. மற்றபடி உடல் வலியும், நரம்புகளில் சோர்வும் ஏற்படுவது சகஜம். இருந்தாலும் ஒரு குறிக்கோளை நினைத்துப் பயணம் செய்வதால் வேதனை தெரிவதில்லை. ஓய்வு தேவைப்பட்டால் ஆங்காங்கே உள்ள பைக் ரேஸ் க்ளப் உறுப்பினர்கள் இடம் கொடுத்து உதவுகின்றனர். டார்கெட்டான பத்தாயிரம் கிலோ மீட்டரை 23 நாளில் முடிப்பேனா என்பதுதான் கொஞ்சம் சந்தேகம். காரணம், போகும் இடங்களில் மக்களிடம் எனக்குத் தெரிந்த ஆங்கிலம், இந்தி, ஓட்டைத் தமிழில் பேசி விஷயத்தைப் புரிய வைத்து ஆதரவைத் திரட்டவே நிறைய நேரம் தேவைப்படுகிறது’’ என்கிறார் யோகேஷ் புன்னகையுடன்!

அதெல்லாம் சரி, தூக்குத் தண்டனைக்கு எதிராக உலகம் முழுவதும் கருத்துகள் பரவி வரும் சமயத்தில் பாலியல் குற்றங்களுக்கு மட்டும் தூக்கை அனுமதிக்க முடியுமா?
‘‘இப்போது இருக்கும் தண்டனை குறைவு என்பதுதான் எனது கருத்தே தவிர, தூக்கில்தான் போட வேண்டும் என வலியுறுத்தவில்லை.  சட்டம் பலவீனமாக இருப்பதாலேயே பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தைரியமாக அரங்கேற்றப்படுகின்றன.

இதை மாற்ற வேண்டும் என நினைக்கிறேன்’’ எனச் சொல்லும் யோகேஷ், 30 ஆயிரம் கையெழுத்துகள் பெற்றவுடன் இந்தக் கோரிக்கை மனுவை பிரதமர் மற்றும் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்க இருக்கிறாராம்.மகன்கள் தங்கள் சகோதரிகளைப் பற்றி கவலைப்படத் துவங்கிவிட்டால் மகள்களை ஏன் டென்ஷன் எனப்போகிறோம்!சட்டம் பலவீனமாக இருப்பதாலேயே பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தைரியமாக அரங்கேற்றப்படுகின்றன. இதை மாற்ற வேண்டும்!

- டி.ரஞ்சித்