விஜய் கிட்டத்தட்ட சூப்பர் ஸ்டார்!



சொல்கிறார் சுதீப் 

‘சுதீப்ப்ப்ப்’ என்று அலறுகிறது கர்நாடகா!கர்நாடகாவின் நம்பர் ஒன் அதிரடி வசூல்ராஜா. ‘நான் ஈ’, ‘மை ஆட்டோகிராஃப்’, கெம்பே கவுடா’ என்று எகிடுதகிடாய் ஓடுகின்றன இவர் படங்கள். புரியும்படி சொன்னால், இவர்தான் கர்நாடக விஜய்! இப்போ ‘புலி’யில் பயம் காட்டும் வில்லன்!
‘‘தமிழ் தெரியுமா?’’

‘‘என்னங்க, இப்படிக் கேட்டுட்டீங்க! எக்கச்சக்கமா தமிழ்ப்படம் பார்த்து வளர்ந்தவன் நான். நல்லா தமிழ் பேசுவேன். தமிழ் சினிமாவையும், நடிகர்களையும், அதன் ரசிகர்களையும் எனக்கு ரொம்பப் பிடிக்கும். நம்ம ரஜினி சார் படங்களை விசிலடிச்சு ரசிச்சவன். என் ஃபேவரைட் ஹீரோக்களில் கணிசமானவங்க இங்கேதான் இருக்காங்க. ‘நான் ஈ’ படத்தை தமிழ் மக்கள் கொண்டாடினாங்களே... அதை மறக்க முடியுமா? எங்கே போனாலும் ‘ ‘நான் ஈ’யில பின்னிட்டீங்க பிரதர்’னு கை குடுத்தாங்களே... அந்தப் பாசமும் நேசமும் அப்படியே இருக்கே. இப்போ விஜய் சார் படத்திற்கு கூப்பிட்டாங்க... உடனே வந்துட்டேன்!’’

‘‘ ‘புலி’யை எல்லோரும் எதிர்பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க! எப்படி வருது படம்?’’‘‘இதில் எனக்கு ஏதோ இரண்டு நாள் செய்திட்டு போற கேரக்டர் இல்லை. நிறைய நாள் கால்ஷீட் கொடுத்திருக்கேன். இந்த சந்தர்ப்பத்திற்காக சொல்லலை, சிம்பு தேவன் வந்து கதையைச் சொன்னபோது அதில் எனக்கான வேலை இருந்தது. அப்புறம் தேவி மாதிரி பெரிய ஆர்ட்டிஸ்ட் இருக்காங்க.

அவங்க திரும்பி வருவதற்கான படமா இதைத் தேர்ந்தெடுக்கிறது சாதாரண விஷயமில்லை. நிறைய வருஷம் அவங்க சினிமாவில் இருந்து, அதனோட பல்ஸ் பார்த்தவங்க. அவரை மாதிரி ஐகான்கள் ‘புலி’யைத் தேர்ந்தெடுக்கும்போது நானும் அதை ஃபாலோ பண்றதுதானே சரி!
ஆனால், அப்போ சிம்புதேவன் கேட்ட டேட்ஸ் என்கிட்டே இல்லை. சில சொந்தப் பிரச்னைகள் வேறு. எல்லாத்தையும் சரிக்கட்டி நடிக்க முடியுமான்னு சந்தேகம் இருந்தது.

ஆனா, சிம்புதேவனோட அக்கறை, நம்ம பிரதர் விஜய் வேற நடிக்கிறார்... எப்படி விட முடியும்? எல்லாத்தையும் சரி பண்ணி நடிச்சிட்டேன். பணத்தை வாரி இறைச்சு செலவு பண்ணியிருக்காங்க. விஜய் ‘புலி’யில் ரொம்ப நம்பிக்கையா இருக்கார். எனக்கு அவரை ரொம்பவும் பிடிக்கும். செட்ல அதிகமா பேச மாட்டார். ஆனால், பேசுற ஒவ்வொரு வார்த்தையும் அன்பா இருக்கும்.  என்னை குழந்தை மாதிரி பார்த்துக்கிட்டார்.

எனக்கு செய்து கொடுத்த வசதிகளில் ஒரு குறையும் இல்லாத மாதிரி பார்த்துக்குவார். அவர்கூட இருந்தது கிரேட் ஃபீலிங். அவர் கிட்டத்தட்ட சூப்பர் ஸ்டார்தான். அதில் என்ன அழகுன்னா, அவர் சினிமாவையும் நல்லா அரவணைச்சுப் போறார். அன்பா ஒரு ஃபேமிலியை வச்சுக்கிட்டு சந்தோஷமா இருக்கார். எனக்கு அவரோட ஸ்டைல், அப்ரோச் ஒரு சினிமாவை சின்ஸியராக எடுக்கிறது... எல்லாமே பிடிக்குது!’’

‘‘நல்ல கதைன்னா ஈகோ பார்க்காம வந்துடுறீங்க...’’‘‘நான் ப்ளான் பண்றதில்லை. நல்ல மனசோட ஒர்க் பண்றவங்க கூட இருக்கேன். எனக்குக் கிடைக்க வேண்டியது என்னவோ, அது எனக்குக் கிடைச்சிடும். அப்படியொரு நம்பிக்கை, கொள்கை எனக்குள்ளேயே இருக்கு. அதுதான் என்னைக் கொண்டு போய் இப்ப நல்லபடியா சேர்த்திருக்கு. நல்ல ப்ராஜெக்ட் என்றால் ‘சுதீப் நல்லா செய்வார்’னு நிறைய பேருக்குத் தோணுது.

இந்த சுதீப்புக்கு இருக்கிற ஒரே பெருமை என்னன்னா, இன்னிக்கு கன்னடம், தமிழ்னு டைரக்‌ஷனில் நுழைகிற ஒவ்வொரு இளைஞனும், பெரிய டைரக்டர்களும் கூட, தான் யோசிக்கிற கதையில சுதீப்பிற்கும் ஒரு இடம் கொடுத்திருக்காங்க. இவ்வளவு நல்ல நடிகர்கள், திறமைசாலிகள் இருக்கிற தமிழ் சினிமாவில் எனக்கும் ஒரு சேர் போட்டு வச்சிருக்கிறது பெருமைதானே சார்!

அதில் போய் ஈகோ, இதெல்லாம் என்னத்துக்கு? பைசா பெறுமா சார் அது? ஹாலிவுட்ல ஒரு படைப்பாளி சொன்னாரு... ‘சினிமாவை உருவாக்கக் கூடாது. அதை வாழ்க்கை மாதிரி வாழணும்’னு! அதுதான் சுதீப்! அதனாலதான் நல்ல விஷயமா வச்சுக்கிட்டு யார் கூப்பிட்டாலும் வர்றேன்!’’‘‘அங்கேயே ராஜ்குமார் சார் ஃபேமிலி மாதிரி பெரிய இடங்கள் இருக்கே... அதில் உங்க ஸ்பேஸ் எப்படி?’’

‘‘உங்க திறமையை முதலீடா வச்சா எங்கேயும் உங்களுக்கு இடம் இருக்கு. போதும்டான்னு நினைச்சால் உங்களுக்கு சரிவு அந்தப் புள்ளியிலிருந்து ஆரம்பம். யாரும் யாருக்கான இடத்தையும் அபகரிக்க முடியாது. அப்படி யாராவது சொன்னால் அவங்க சரியாக உழைக்கிறதில்லைனு அர்த்தம். ஜெயிச்சாச்சுன்னு தூங்கிடக் கூடாது. இந்த வெற்றிங்கறது இருக்கே... வந்த சுவடு தெரியாமல் போறதில் அதுக்கு அப்படி ஒரு சந்தோஷம். அப்படி நாம் அதை விட்டுடக் கூடாது. என்னை நம்பி வருகிற ஒவ்வொரு ரசிகனுக்கும் ஒவ்வொரு முறையும் நல்ல படம் கொடுக்கணும்ங்கிறதுதான் என் சிங்கிள் லட்சியம். சுதீப்பால் யாருக்காவது நல்லது செய்ய முடிந்தால் சரி! ஆனா, கெடுதல் எதுவும் என் பக்கமிருந்து போயிடக் கூடாதுனு இருக்கேன்!’’

‘‘தமிழில் எந்த ஹீரோக்களோட பழக்கம்?’’‘‘சொல்லப் போனா எனக்கு இங்கே ஃப்ரெண்ட்ஸ் அதிகம். எனக்கு தமிழில் பழக்கமான முதல் ஹீரோ அஜித். நான் கன்னட ‘வாலி’ செய்துக்கிட்டு இருக்கும்போது, அவரை ஊட்டியில் சந்தித்தேன். அப்புறம் விஷால், சிம்பு ரொம்ப ஃப்ரண்ட்ஸ். பெங்களூரு பக்கம் வந்தால் எங்கள் சந்திப்பு அவசியம் உண்டு. நான் இங்கே வந்தால் என்னை வீட்டுக்குக் கூட்டிட்டுப் போயிடுவாங்க. ஒரு சந்தோஷமான நண்பர்கள் கூட்டத்தில் நான் இருக்கிறேன். என்னிடம் ‘எந்த தமிழ் நடிகரின் நடிப்பு பிடிக்கும்’ எனக் கேட்பார்கள்.

இங்கே ஒவ்வொருவரும் வேற வேற விதம். எவரும், எவரையும் காப்பியடித்து விட முடியாது. நடிப்பது என்பது அனுதினமும் கற்றுக்கொள்கிற விஷயம் என நினைக்கிறேன். இப்போ பாருங்க... நான் இங்கே இருந்த நாளில் எல்லாம் விஜய் கவனித்துக்கொண்டார். வீட்டிற்குப் போகும்போது ‘என் நண்பனை நல்லபடியா கவனிங்க’ என ஒவ்வொருத்தரிடமும் சொல்லிவிட்டுத்தான் போவார். அப்படியெல்லாம் சொல்லாமல், கவனிக்காமல் போனாலும் குற்றம் இல்லை. ஆனால், விஜய்யின் அன்பு அப்படிப்பட்டது!’’

- நா.கதிர்வேலன்