வருத்தம்



நண்பன் ரவியைப் பார்க்கப் போனேன். முகம் சிவந்து ஒரே சோகமாய் இருந்தான் அவன். ‘‘உள்ளே வாங்க’’ எனக் கூப்பிட்ட குரலே சோகமாய் இருந்தது.

‘‘என்ன ஆச்சு ரவி? உடம்புக்கு முடியலையா?’’ - கேட்டதும் உள்ளேயிருந்து ஹாலுக்கு வந்தாள் ரவியின் மனைவி சுமதி. ‘‘நீங்களே கேளுங்க. பையனுக்கு கோயம்புத்தூர் எஞ்சினியரிங் காலேஜ்லதான் சீட் கிடைச்சது. ஹாஸ்டல்ல சேர்த்துட்டு வந்ததிலிருந்து இப்படித்தான்... சரியாக சாப்பிடல, தூங்கல... ஒரே புலம்பல்!’’

‘‘அடடா, இதுதானா விஷயம்? என்ன ரவி... படிக்கற வயசில அவங்க அவங்க அமெரிக்கா, ஆஸ்திரேலியான்னு எங்கெங்கயோ புள்ளைங்களை அனுப்புறாங்க. இங்கே இருக்கற கோயம்புத்தூர்ல விட்டதுக்காக இத்தனை வருத்தப்படறே?’’ என்றேன்.‘‘இல்லப்பா, பொறந்ததில் இருந்து கூடவே இருந்துட்டான். லீவுக்குக்கூட எங்கேயும் அனுப்பினதில்ல. இதுவரை பிரிஞ்சு இருந்ததே இல்லை!’’ - பேசும்போதே அழுகை பீறிட்டு வந்தது ரவிக்கு.

எனக்குள் பழைய நினைவு...‘இத்தனை வருஷமா இவனை வளர்த்துப் படிக்க வச்சு பாடுபட்ட அப்பா - அம்மாவை ஹோம்ல விட்டு இருக்கான். அதுக்காக ஒருநாள் கூட வருத்தப்படாதவன், பிள்ளையைப் பிரிஞ்சானாம்... அழுவுறானாம். இப்படித்தானே இருந்திருக்கும் அவன் அப்பா அம்மாவுக்கும். நன்றி கெட்ட ஜென்மம்!’  

தங்கம் ராமசுவாமி