நிறைவு



‘‘கணேசா... உன் ரிட்டயர்மென்ட் ஃபங்ஷனுக்கு வர முடியல. விழா நல்லபடியா நடந்ததா?’’ - விஸ்வநாதன் கேட்டார்.‘‘விழாவுக்கென்ன கொறச்சல்? சிறப்பா நடந்துச்சு. உங்கிட்ட சொல்றதுக்கென்னப்பா, விசு. நீயும் நானும் ஒரே பள்ளிக்கூடத்துல ஒண்ணா வாத்தியாரா வேலை பாத்தவங்க.

உண்மையிலேயே நீ அர்ப்பணிப்பு உணர்வோட வேலை பார்த்தே. நான் நோகாம நோம்பு கும்புட்டவன்தான். ஆனா... போன வருஷம் உன்னப் பாராட்டுனதை விட ஒரு பங்கு அதிகமாத்தான் என்னைப் பாராட்டி பேசுனாங்க. அதுவும் தலைமை ஆசிரியர் உட்பட அதே ஆசிரியருங்கதான் பேசுனாங்க. இதான் உலகம்ங்கிறது!’’ - சொல்லிவிட்டு சத்தமாக சிரித்தார் கணேசன்.

விஸ்வநாதன் இதற்கு அசரவில்லை. ‘‘கணேசா... கூட வேல பாக்குறவங்க வருஷா வருஷம் இப்படி ஒரு விழா எடுத்துட்டுத்தான் இருப்பாங்க. காலப்போக்குல உன்னையும் என்னையும் மறந்துருவாங்க. ஆனா, நம்மகிட்ட படிச்ச புள்ளைங்க என்னையும் மறக்க மாட்டாங்க, உன்னையும் மறக்க மாட்டாங்க.

என்னை எப்படி நினைப்பாங்கன்னு எனக்குத் தெரியும். ஆனா... உன்னை எப்படி மனசுல வச்சிருப்பாங்கனு நான் சொல்ல விரும்பல. உனக்குக் கெைடச்சது பணி ஓய்வு. எனக்குக் கெடைச்சது பணிநிறைவு. அவ்வளவுதான்..!’’ - சொல்லிவிட்டு நடையைக் கட்டினார் விஸ்வநாதன்.                                    

பவித்ரா நந்தகுமார்