நியூஸ் வே



‘தல பட டைட்டில் ‘வேதாளம்’, எங்க தல மனசு தாராளம்’ என அஜித்தின் ரசிகர்கள் ரைமிங் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். ‘இப்படி ஒரு அழகான டைட்டிலைக் கொடுத்த சிவாவுக்கு நன்றி’ என அஜித், ட்விட்டி மகிழ்ந்திருக்கிறார்.

படத்தில் டான் கெட்டப் அஜித்தின் பெயரே வேதாளம் என்கிறது கோலிவுட். சாய் பாபாவிற்கு உகந்த ஒரு வியாழனன்று படத்தின் பூஜை தொடங்கியது. அதே போல வியாழக்கிழமையே டைட்டில் வெளியீடு என்பதால் படத்தின் ரிலீஸும் வியாழனன்று இருக்கும் என எதிர்பார்க்கலாம்!

வியாபார நிறுவனங்களின் விளம்பரங்களில் இதுவரை நடிக்காத கமல், முதன்முறையாக ‘போத்தீஸ்’ நிறுவன விளம்பரத்தில் நடிக்கிறார். ‘ஃபைவ் ஸ்டார்’ படத்தில் நடித்த கிருஷ்ணாதான், விளம்பரப்பட இயக்குநர். இதில் கிடைக்கும் வருமானத்தை எய்ட்ஸ் நோயாளிகள் நலனுக்காக அளிக்கவிருக்கிறார் கமல் எனத் தகவல்.

ரஜினி, ஷங்கர் காம்பினேஷனில் ‘எந்திரன் 2’ பட ஷூட்டிங் விரைவில் தொடங்குகிறது. ‘கபாலி’யை முடித்துவிட்டு, வருகிற ஜனவரி மாதமே ரஜினி அதில் பங்கேற்பார் என்கிறார்கள். அதுவரை அவர் சம்பந்தப்படாத போர்ஷன்களை எடுக்கத் திட்டமிட்டுள்ளாராம் ஷங்கர்.

‘‘நடிகர்களைப் பின்பற்றுவதையும், அவர்களைப் போல நடந்துகொள்வதையும் விட்டுவிடுங்கள். இந்தச் சமூகத்தைத் தெரிந்துகொண்டவன் என்ற முறையில் இந்த வேண்டுகோளை வைக்கிறேன்’’ - ரசிகர்களைப் பார்த்து சமீபத்தில் இப்படிச் சொல்லியிருப்பவர் மோகன்லால்!

சிவகார்த்திகேயனும், ஸ்ருதிஹாசனும் ஜோடியாக நடிக்க பேச்சு வார்த்தை நடக்கிறது. ஸ்ருதியின் சம்பள விஷயத்தில்தான் இன்னும் சமாதானம் ஏற்படவில்லை. டைரக்ட் செய்யப்போவது, அறிமுக இயக்குநர் பாக்கியராஜ்.

‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ வெற்றியில் மிரண்டுவிட்டார் ஜி.வி.பிரகாஷ். ‘அதே’ மாதிரி ரோல்களில் அவரை ‘டிக்’ செய்ய வரிசை கட்டி நிற்கிறார்கள். ‘‘இனிமேல் ‘இப்படி’யான படங்களில் நடிக்கமாட்டேன்... ஸாரி!’’ எனச் சொல்லி திருப்பி அனுப்புவதற்குள் அவர் தாவு தீர்ந்துவிடுகிறதாம்.

பா.ரஞ்சித்தின் ‘அட்டகத்தி’, ‘மெட்ராஸ்’ படங்களைத் தொடர்ந்து ‘கபாலி’க்கும் பாடல் எழுதுகிறார் கபிலன். ‘‘ஷூட்டிங்கில் ரஜினி சாரோட நிறைய பேசினேன். என் மகன் பெயர் பௌத்தன் என்பதைக் கேள்விப்பட்டவுடன், பௌத்தம் பற்றியும் நிறைய பேசினார். ‘கபிலன் என்னுடன் சாப்பிடட்டும்’ என்று சொல்லி அவரோடு கேரவனில் என்னை சாப்பிட வைத்தது மறக்க முடியாதது!’’ என நெகிழ்கிறார் கபிலன்.

இப்போதும் தமிழில் பிஸி நடிகை ஹன்சிகாதான்! உதயநிதியுடன் ஒரு படம், ஜீவாவுடன்  ‘போக்கிரி ராஜா’, வெங்கட்பிரபு படம், சித்தார்த்துடன் ‘அரண்மனை 2’ என கை  நிறைய படங்கள் வைத்திருக்கிறார் ஹன்சிகா.  

‘தனி ஒருவன்’ ஹிட்டுக்குப் பிறகு இயக்குநர் மோகன்ராஜா, ஹிப்ஹாப் ஆதி இருவரின் நட்பு ரொம்பவே இறுகிவிட்டது. இருவரும் ஒரே காரில் சென்னையில் வலம் வருகிறார்கள்.

விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் எழுதிய புத்தகங்களை விரும்பிப் படிக்க ஆரம்பித்திருக்கிறார் சமந்தா. ‘புத்தகங்கள் என் பயணங்களையும், நாட்களையும் இனிதாக்குகிறது’’ என மகிழ்கிறார் அவர்.

‘ஓகே கண்மணி’க்குப் பிறகு மணிரத்னம் இயக்கும் படத்தில் துல்கர் சல்மான் மீண்டும் கமிட் ஆகியிருக்கிறார். அவரது ஜோடியாக தேவியின் மகள் ஜான்வி நடிப்பார் என நியூஸ் பரபரக்க, உடனே அதை மறுத்திருக்கிறார் தேவி.