குட்டிச்சுவர் சிந்தனைகள்



புலிப்பார்வை, பனிப்பார்வை, ஓரப்பார்வை, தூரப்பார்வை, கழுகுப்பார்வைன்னு பல பார்வைகள் இருக்கலாம். ஆனா, நாட்டுல ஒரு நிகழ்வு நடந்தா போதும், இந்த அரசியல்வாதிகள் பார்க்கிற பார்வை மட்டும் புரியவே மாட்டேங்குது. படிப்பு வராத மாணவர்களின் பரீட்சை பேப்பர் மாதிரி, ஒவ்வொண்ணும் ஒவ்வொரு மாதிரி மண்டையக் குழப்புது. இப்ப, கவர்ச்சி நடிகை கிளுகிளு பாத்ரூம்ல வழுக்கி விழுந்துட்டாங்கன்னு வச்சுக்குவோம், இதுக்கு எப்படியெல்லாம் அறிக்கை வரும்னா...

* நடிகை கிளுகிளு வழுக்கி விழுந்ததன் பின்னணியில் பாகிஸ்தான் இருக்கிறது - அருண் இட்லி
* இதற்கு பொறுப்பேற்று பிரதமர் பதவி விலக வேண்டும் - குமுதா பானர்ஜி
* நடிகை கிளுகிளு வழுக்கி விழுந்ததுக்கு முந்தைய அரசு, நடிகை வீட்டில் நல்ல டைல்ஸ் போடாததே காரணம் - நாஞ்சில் சர்பத்
* நீங்கள் தவறாக நினைக்க வேண்டாம் தோழர்களே, இந்த வயதில் கிளுகிளு ஒரு கால் வழுக்கித்தான் விழுந்திருப்பார், ஓடியாடி விளையாண்டு  இருக்கமாட்டார் - இளங்கோபன்
* கீழே விழுந்த கிளுகிளு ஒரு வழுக்கிய புலி, வாழ வேண்டிய புலி, வருத்தமில்லா புலி, வாலிப புலி, வள்ளல் புலி, வரமொளகாய் புளி... - விஜய.டி.லாந்தர்
* நடிகை கிளுகிளு கண்ணைத் துடைத்துக்கொண்டு  கவலைப்படாமல் வந்தால் கூட்டணியில் சேர்த்துக்கொள்வோம் - தமிழிசை சவுண்ட்ராஜன்
* நடிகை கிளுகிளு வழுக்கி விழுந்த விவகாரத்தில் என்ன கருத்து சொல்வதென, பொதுக்குழு கூடி முடிவெடுப்போம் - ஜி.கே.தாசன்
* நடிகை கிளுகிளு வழுக்கி விழுந்தது துக்கப்படவும், அவரை தூக்கப்படவும் வேண்டிய விஷயம், இப்படித்தான் ஏதென்ஸ் கரையோரம், ஆறுன பணியாரம், தின்னா புரையேறும்.... - அண்ணன் மைக்கோ
* நடிகை கிளுகிளு வழுக்கி விழுந்தபோது, அவர் நைட்டி அணிந்திருப்பதும் அணியாமல் இருப்பதும் அவரது சுதந்திரம் - நடிகை புஷ்கூ
* நடிகை கிளுகிளு வழுக்கி விழுந்த விஷயத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட
முதல்வரிடம் மனு கொடுப்போம் - குருமாவளவன்
* நடிகை கிளுகிளுக்கு எலும்பு முறிவில்லாமல் போகக் காரணம், நடக்கும் நல்லாட்சியே - உண்மை விசுவாசி சுப்ரீம்குமார்
* கணக்கு வேணுங்க, நடிகை கிளுகிளு எத்தனை தடவை வழுக்கி விழுந்தாருன்னு கணக்கு வேணும்.  நாங்க நடிகர் சங்க பாத்ரூமை கட்டாம விட மாட்டோம் - நடிகர் குசால்
* ஆங், லகலக நல்லா ஆடுவாரு. வால் டியூப்ல பசங்க போட்டுக் காமிச்சாங்க. அடுப்புல கிண்டுற மாதிரி இடுப்பை சுண்டுவாரு... ஆங், முக்கியமா அவரு தமிழன், ஏன் விழுந்தாங்க? - எம்டன்
* என்னங்க, அது லகலக இல்ல, அறுபது வயசான அம்மா நடிகை கிளுகிளு; அது வால் டியூப் இல்ல, யூ டியூப் - அண்ணி எம்டன்
* நடிகை கிளுகிளு வழுக்கி விழுந்தது இருக்கட்டும், 50 வருஷமாக இருக்கும் திராவிடக் கட்சிகளின் ஆட்சியில், ஏன் கிளுகிளு வீட்டுக் கழிவறைக்கு கதவில்லை? - வம்புமணி
* என்னம்மா இப்படிப் பண்றீங்களேம்மா - நடிகை கிளுகிளு

வருங்கால ஜனாதிபதி முருகேசன் வாழ்க’ என ஒருவர் கோஷமிட, ‘என்னமா கூவுறாண்டா இவன்’னு லிவிங்ஸ்டன் சொல்லும் வடிவேலு காமெடி ஒன்று உண்டு. பா.ம.க.வின் வரைவு தேர்தல் அறிக்கையை படிக்க நேர்ந்தபோது அதுதான் ஞாபகத்துக்கு வந்தது. அதில் சிந்தியிருந்த முத்துக்களில் சில...
‘வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்’‘அரசு ஊழியர்களுக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை சம்பளம்’
‘பிறந்த குழந்தைகளுக்கு ஒரு வயது நிறைவடையும் வரை தினமும் ஒரு லிட்டர் பால் இலவசம்’

அள்ளித் தெளிக்கிறதுன்னு முடிவு பண்ணிட்டீங்க... இந்தாங்க, இன்னமும் வாக்குறுதிகளால வாசல் தெளிச்சு  புள்ளி வச்சு கோலம் போட எங்களால் ஆன ஐடியாக்கள்... பள்ளிச் சிறுவர்களுக்கு பரீட்சை பேப்பரில் நாங்களே கேள்விக்கு பதில் எழுதி பாஸ் பண்ண வைப்போம். பஸ்ஸில் பயணிப்போருக்காக பஸ் நிறுத்தம் வருவதற்கு 2 நிமிஷம் முன்பே விசில் கொடுப்போம்.

புதுப்படம் ரிலீசானால், நாங்களே அடித்துப் பிடித்து வரிசையில் நின்று டிக்கெட் வாங்கிக்கொடுப்போம். ரயிலில் தூங்கிக்கொண்டு பயணிப்பவர்களை, ஸ்டேஷன் வந்தவுடன் இலவசமாக எழுப்பி விடுவோம். பெண்களிடம் காதல் சொல்லத் தயங்குபவர்களுக்காக நாங்களே சென்று காதல்சொல்லுவோம். சாப்பிட அடம் புடிக்கும் குழந்தைகளுக்கு நாங்களே நேரில் சென்று சோறு ஊட்டி விடுவோம். அப்பவும் சாப்பிடாத குழந்தைகளுக்கு நாங்கள் மூணு கண்ணன் வேஷத்தில் வந்து பயங்காட்டி சாப்பிட வைப்போம்.

வங்கிகள் மட்டுமில்லாமல் பங்க் கடை, மளிகைக் கடை மற்றும் ரேஷன் கடையிலும் உங்களுக்கு அக்கவுன்ட் ஆரம்பித்துக் கொடுப்போம்.
உங்கள் சைக்கிளோ, டூ வீலரோ பங்க்சரானால், நாங்களே நேரில் வந்து பங்க்சர் ஒட்டிக் கொடுப்போம். டீக்கடைகளில் நீங்கள் குடிக்கும் டீ சூடாக இருந்தால், நாங்களே ஆற்றிக்கொடுப்போம். பஜ்ஜியில் எண்ணெய் இருந்தால், நாங்களே வந்து பேப்பரில் பிழிஞ்சு கொடுப்போம்.

 சனி, ஞாயிறை பிரித்து, சனிக்கிழமையை புதன் கிழமைக்கு நடுவில் வைத்து, 3 நாட்களுக்கு ஒரு நாள் விடுமுறை எனக் கொண்டு வருவோம்.
(அடுத்த வாக்குறுதிகள் வந்தபின் தொடரும்...)

தமிழர்களை தரம் தாழ்த்திப் பேசுவதையே வரமாக வாங்கிக்கொண்டு வந்திருக்காங்க பலர். இணையத்துல தமிழரோட கணையத்தை உடைக்கிறதே அவங்க வேலையா போச்சு. ‘அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகுத்தி குறுகத் தரித்த குறள்’ என்றார் ஒளவையார். நாம அப்பவே அணுவைப் பற்றியும் ராக்கெட் பற்றியும் அறிவைக் கொண்டுள்ளோம். தமிழர்கள் கண்டுபிடித்தது பற்றி பிறகு பேசுவோம், மொதல்ல உலகத்தின் பல கண்டுபிடிப்புகளுக்கு தமிழர்கள் எவ்வளவு உதவி இருக்காங்க தெரியுமா? நமக்கு சாதாரணமா தெரியுற ஒரு இட்லி குண்டான், உலகத்தின் எத்தனை கண்டுபிடிப்புகளுக்கு காரணமா அமைந்தது தெரியுமா?

* இட்லி குண்டானில் பிரசவிக்கப்படும் இட்லிகள் எப்படி ஒரே மாதிரியாக இருக்கிறதோ, அதே அடிப்படையில் உருவானதுதான் சென்ற நூற்றாண்டின் சிறந்த கண்டுபிடிப்பான க்ளோனிங் டெக்னாலஜி.
* இன்னைக்கு வெளிநாட்டுல இருந்து காப்பியடிச்சு நம்முடைய பெரு நகரங்களில் கட்டிக்கிட்டு இருக்கோமே மல்டி லெவல் கார் பார்க்கிங் கட்டிடங்கள், அதெல்லாம் நம்முடைய இட்லி குண்டானில் வரிசையாக அடுக்கப்பட்ட தட்டுகளில் ஊத்தப்பட்ட இட்லிகளை வைத்து வெள்ளைக்காரன் சுட்டுட்டு போனதுதான்.
* ஜேம்ஸ் வாட் கண்டுபிடிப்பதற்கு முன்பே நீராவி இயந்திரம் ஒன்று இருந்தது என்றால், அது நம்ம இட்லி குண்டான்தான்.
* இட்லி குண்டான் தட்டுகளில் ஒவ்வொரு இட்லி கேப்ஸ்யூலிலும் இருக்கும் நாலு ஓட்டைகள்தான் இன்றைய வென்டிலேஷன் வசதிக்கு முக்கிய காரணி.
* அணு மின் நிலையம், அனல் மின் நிலையங்களுக்கு மாதிரி வடிவமே நம்ம இட்லி குண்டான்தான்.
* திரவ நிலையில் இருக்கும் இட்லி மாவை, நீராவி மூலம் திடப் பொருளாக்கி, பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இயற்பியலில் வரும் state of matterரை சோதித்துப் பார்த்தவன் தமிழன்.
* இன்றைக்கு விமானத்துக்குள் ஆக்ஸிஜன் விடும் ஐடியாவை வெள்ளைக்காரன், இட்லி குண்டானிலிருந்து வெளி வரும் ஆவியை வைத்தே டிசைன் செய்தான்.
இப்படிப்பட்ட இட்லி குண்டானை நாம் ஆயிரம் வருஷங்களாகப் பயன்படுத்தி வருகிறோம். எங்கே, நெஞ்சை நிமிர்த்தி சொல்லுங்கள், தமிழன்டா!

ஆல்தோட்ட பூபதி

ஓவியங்கள்: அரஸ்