ஐந்தும் மூன்றும் ஒன்பது



மர்மத் தொடர் 38

ஜோசப் சந்திரனை நான் மிக ஆச்சரியமாகப் பார்த்தேன். சற்று முன்வரை ஒரு பகுத்தறிவாளராக, சக ஆய்வாளராக, சிந்தனையாளராக என்று பல பரிமாணங்களில் எனக்குக் காட்சி தந்தவர், இப்போது புதிரான மனிதராகவும் காட்சி தர ஆரம்பித்தார்.

‘எல்லாமே கணக்குதான்’ என்று அவர் சொன்னதையும், அதை வைத்து அவர் ஒரு கொடியில் இருக்கும் பூக்களை முன்கூட்டியே கிட்டத்தட்ட சரியாகச் சொன்னதையும் நான் எண்ணிப் பார்த்து ஆச்சரியப்பட்டேன். ‘இந்தக் கணக்கை எந்த சூத்திரத்தின் அடிப்படையில் போட்டீர்கள்’ என்று கேட்டேன். ‘அதை விளக்குவது கடினம்’ என்றவர், ‘நான் இந்த கணிதப் பயிற்சியில் பல வருடங்களாக இருக்கிறேன்’ என்றார்.‘விஞ்ஞானத்தை மறுக்கவில்லை. கணிதத்தையும் ஒப்புக் கொள்கிறீர்கள்... ஆனால் உங்களால் எப்படி அமானுஷ்யத்தை நேசிக்கவும் ஏற்கவும் முடிகிறது’ என்று கேட்டேன்.

‘விடிய விடிய கதை கேட்டுவிட்டு சீதைக்கு ராமன் சித்தப்பாவா? என்று கேட்டால் எப்படி இருக்குமோ, அப்படி இருக்கிறது உங்கள் பதில்’ என்றார் ஜோசப்.
எனக்கு சற்று நிரடியது. அவர் என் முன்னால் ஒரு மேதையாக மாறி என்னை இகழ்வதுபோல் கூட உணர்ந்தேன்.  ஜோசப் சந்திரனும் புரிந்து கொண்டு பதில் கூறினார்.
‘கணபதி... இந்த உலகில் ஒன்று எங்கேயும் இல்லவே இல்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த இல்லாத ஒன்றுக்கு நாம் நம் வழக்கப்படி ‘எக்ஸ்’ என்று பெயரிடுவோம். அந்த எக்ஸைப் பற்றி எங்காவது யாராவது ஒரு வார்த்தையாவது பேச முடியுமா?’

‘அது எப்படி முடியும்? அதுதான் இல்லவே இல்லாத ஒன்றாயிற்றே?’
‘நல்லது... நினைத்துப் பார்க்கவாவது முடியுமா?’
‘நினைக்க முடிந்தால்தான் பேசிவிட முடியுமே?’

‘என்றால், இல்லாத ஒன்றை நினைக்கவும் முடியாது; பேசவும் முடியாது என்பதுதானே சத்தியம்?’‘அதிலென்ன சந்தேகம்?’‘இப்போது நான் உங்களைக் கேட்கிறேன். ஒரு விஷயம் கால காலமாக பேசப்படுகிறதென்றால், அது ஏதோ ஒரு வகையில் இல்லாமல் பேசப்பட்டிருக்குமா?’‘நிச்சயமாக இருந்தாலன்றி பேசப்பட வாய்ப்பே இல்லை...’‘என்றால், காலகாலமாக பேசப்படும் அமானுஷ்ய விஷயங்களிலும் இதுதானே உண்மை?’‘ஆம்... இதுவே உண்மை!’

- அன்று இப்படி எங்களுக்குள் அமானுஷ்யம் குறித்தும், மனித உயிரின் போக்கு குறித்தும் பலவிதமான பேச்சுக்கள்! இறுதியாக நான் கஞ்சமலை தங்கம் குறித்து ஒரு கேள்வியை எழுப்பினேன். ‘தங்கமோ, வைரமோ, மனிதர்களுக்கு அது பணமதிப்பும் அந்தஸ்துமுள்ள ஒரு பொருள். பூமியில் வாழ்பவர்கள் இதன்பால் பற்று வைத்து இதைப் பயன்படுத்த விழைவதில் ஆச்சரியப்பட எதுவுமேயில்லை. ஆனால் அப்படி ஒரு தேவையே இல்லாத, இந்த உலோகத்தைப் பயன்படுத்த வழியுமில்லாத, சுவேத உடம்பு கொண்ட சித்தர்கள் எதற்காக இதைப் புதையல் போல பாதுகாக்க வேண்டும்? இதனால் அவர்களுக்கு என்ன கிடைத்துவிடும்?’ - என்று கேட்டேன். அப்போது ஜோசப் சந்திரன் ஒரு அரிய செய்தியைச் சொன்னார்.

‘சூட்சும வடிவில் திரியும் சித்தர்கள் இதுபோல் தங்கத்தை மட்டுமல்ல... பல அரிய மூலிகைகளையும், பல அரிய ஏடுகளையும் காவல் காக்கின்றனர். அது தெரியுமா உங்களுக்கு?’ என்று கேட்டார்.’’- கணபதி சுப்ரமணியனின் ஆய்வுக் கட்டுரையிலிருந்து...நந்தி அடிகள் என்னும் அந்த சித்த புருஷரின் முகத்தில் பரவிய கவலை ரேகை ஈங்கோய்க்கு ஆச்சரியமளித்தது. அவன் பார்க்க அவர் கவலைப்பட்டதேயில்லை. அவன் வரையில் அவர் கவலையை வெற்றி கொண்டவர். கவலை ஒரு மனநோய் என்பவர்.

‘‘ஒரு நல்ல சித்தன் என்பவனுக்கு அவன் உடம்பை விடவே மனம்தான் மிக பலமான ஒன்றாகும். ஏனென்றால் அவனுக்கு சில உண்மைகள் கசடறத் தெரியும். மேலே வீசப்படுகிற ஒரு கல் எப்படி எறிந்த வேகத்துக்கு மேலே சென்றுவிட்டு கீழே வந்து விழுமோ, எப்படி இதை யாராலும் மாற்ற முடியாதோ, அப்படியேதான் ஒவ்வொரு விஷயமும் ஒரு கணக்கோடு செயல்படுகிறது. எனவே எதையும் ஒரு மனிதன் மாற்ற முடியாது’’ என்பார்.

‘‘சாமி! புதுசு புதுசா விஞ்ஞானிங்க என்னென்னவோ கண்டுபிடிச்சிருக்காங்களே, இவங்கள்லாம் உங்களை மாதிரி நினைச்சிருந்தா அதையெல்லாம் கண்டுபிடிச்சிருப்பாங்களா?’’ - என்று ஈங்கோய் அவரிடம் பதிலுக்குக் கேட்டதற்கு நந்தி அடிகள் திருப்பிச் சொன்ன பதில் அவன் வாயை அடைத்து விட்டது.
‘‘ஈ! இங்க இருக்கிறதைத்தான் கண்டுபிடிக்க முடியும். இல்லாததைக் கண்டுபிடிக்கவே முடியாது.

எதை எதையோ கண்டு பிடிக்கறது இருக்கட்டும்.  அவங்களால அவங்க உடம்புல ஒரு முடி நரைக்கறதைத் தடுக்க முடியுமா? பசிக்காதபடி வயிற்றைக் கட்டிப்போட முடியுமா? நாளைக்கு என்ன நடக்கும்னு இன்னிக்கே சொல்ல முடியுமா?’’ - என்று அவர் கேட்டதற்கு அவனால் பதில் சொல்லத் தெரியவில்லை. அப்படிப்பட்ட நந்தி அடிகள் இன்று கவலைப்படுகிறார். ஆச்சரியப்பட்ட ஈ, அவரிடம் அதைக் கேட்கவும் செய்தான்.

‘‘சாமி, நீங்களா வருத்தப்படறீங்க?’’
‘‘என்ன ஈ... ஆச்சரியமா இருக்கா?’’
‘‘ஆமாம் சாமி... பட்சி வந்தது நல்ல விஷயம் இல்லீங்களா?’’
‘‘அப்படித்தான் சொல்லணும்!’’

‘‘இந்தக் காட்டுல எவ்வளவோ பட்சிங்க. இதுல சாயாவாகினி புதுசுன்னு சொல்லலாம். இந்தப் பட்சிக்கும் நீங்க கவலைப்படறதுக்கும் என்ன சாமி சம்பந்தம்?’’
‘‘நிறைய இருக்கு ஈ... நாலு திசைகள்ல ஈசானத்துல மேகம் திரண்டா பெருமழை! அதேபோல விடிவெள்ளிக்கு பக்கத்துல சப்தரிஷி மண்டலம் தெரிஞ்சா பூமியில ராஜ மரணம். தீயில விழுந்து பசு மாடு இறந்தா ஒரு தலைமுறையே பாதிப்புக்கு ஆளாகப் போறதுக்கு அறிகுறி... இப்படி பூமில நடக்கப் போற சம்பவங்களுக்கும் நடக்கற சம்பவங்களுக்கும் ஒரு தொடர்பு உண்டுப்பா...’’

‘‘எல்லாமே ஒரு கணக்குன்னுதான் நீங்க எப்பவும் சொல்வீங்களே சாமி...’’‘‘கணக்குல சமயத்துல தப்பு நடந்து, தப்புக் கணக்கு போடறதும்  உண்டுதானே?’’
‘‘நீங்க என்ன சாமி சொல்றீங்க?’’‘‘உன்கிட்ட என்னால இப்ப விளக்கமா பேச முடியாது. பேசினா உனக்குப் புரியவும் புரியாது. நீ உச்சி முகட்டுக்குப் போய் உக்காந்துக்கோ. நான் மணியை அனுப்பும்போது நீ கீழ வந்தா போதும். அங்க இருந்துக்கிட்டு எப்பவும் நாலா பக்கமும்  பார். சிலர் இந்த காலாலங்காரகிரி நோக்கி வரப்போறாங்க. அவங்கள கிரி மேல ஏறவிடக் கூடாது.

அவங்கள பார்த்துட்டா நீ உடனே எனக்குத் தகவல் சொல்ல இறங்கி வா. நான் சொல்ற இந்த விஷயம் இன்னும் மூணு ராத்திரி, மூணு பகல்ல நடந்துடும். அதுவரை உனக்குப் பசியும் தாகமும் தெரியாம இருக்க நான் அமில பந்தன சூரணத்தையும் கார சூடத்தையும் தர்றேன்.  கார சூடம் உன்னை சுறுசுறுப்பா வெச்சிருக்கும். தூக்கமும் வராது’’ - என்று அருகிலுள்ள குகை போன்ற கற்பாறை பிராந்தியத்துக்குள் நுழைந்தார். வெளியே முயல்கள் விளையாடியபடி இருந்தன. புறாக்கள் மேய்ந்து கொண்டிருக்க, நாய் ஒன்றும் அங்கே இருந்தது. ஈங்கோய் அதைப் பார்க்கவும், அது அருகில் ஓடி வந்தது.

‘‘மணி, ஏன் தூரவே நிக்கறே... கிட்ட வர்றதுக்கென்ன?’’ என்று கேட்டான் ஈ. அதன் வாலில் அசாத்திய ஆட்டம். கண்களில் ஒரு பளபளப்பு.... ஈர நாக்கில் ஒரு சீரான இளைப்பு. அதன் கழுத்தை வளைத்து வருடினான் ஈ. அதுவும் சுகமாய் ஈடு கொடுத்து இழைந்தது. அதன் காலில் மருந்துக்கட்டு போடப்பட்டிருந்தது. அதை கவனித்த ஈ, ‘‘அடடே... என்னடா ஆச்சு?’’ என்று கேட்க, ‘‘நான் சொல்றேன்’’ என்றபடியே வந்தார் நந்தி அடிகள். அவர் கையில் பீங்கான் குப்பிகளில்  மூலிகை மருந்துகள்.
‘‘என்ன சாமி?’’

‘‘மலைப்பாம்பு வாயில மாட்டத் தெரிஞ்சான். நல்லவேளை, நான் பார்த்தேன். தூபம் போட்டு பாம்பை மயக்கி, அதன் வாயில இருந்து மணியை விடுவிச்சேன்.’’
‘‘சாமி... நான் கூட வழில ஒரு பாம்பை பாத்தேன். இப்படி எல்லாம் கண்ணுல அதுங்க படவே படாது...’’‘‘உண்மைதான் ஈ... நம்ம காலாலங்கார கிரிக்கு பத்து மைலுக்கு அப்பால இருந்து எல்லாமே மாறிடிச்சு. ஆயிரக்கணக்கான தோகை மரங்களை இழந்துட்டோம். அறுபது மைலுக்கு அப்பால் வந்துருக்கற சிமென்ட் தொழிற்சாலையோட தூசு, இந்த கிரிக்குள்ள இருக்கற அவ்வளவு குகைக்குள்ளயும் படிஞ்சிருக்குன்னா சுற்றுச்சூழல் ரொம்பவே கெட்டுப்போச்சுன்னுதானே அர்த்தம்?’’
‘‘ஏன் சாமி இப்படி எல்லாம் நடக்குது?’’

‘‘இப்படிக் கேட்டா என்னத்த சொல்ல... பூமில மாற்றம்ங்கறது ஏற்பட்டுக்கிட்டேதான் இருக்கும். அதனாலதானே அது சுத்திக்கிட்டே இருக்கு?’’
‘‘எப்பவும் உங்க பதில் எனக்குப் பாதிதான் புரியுது; மீதி குழப்பமாவே இருக்கு...’’‘‘உனக்கு பாதி புரியறதே பெருசுப்பா! சரி... சரி... இந்தா, இதை எடுத்துக்கோ. நான் சொன்னது கவனத்துல இருக்கட்டும்.’’

- அவனும் அவர் தந்த குப்பிகள் இரண்டைக் கையில் எடுத்து தன் பையில் போட்டுக் கொண்டான். அவன் சுமந்து வந்த கூடையை அவர் எடுத்துக் கொண்டார். அவன் உச்சிப் பாறை நோக்கி செல்லத் தொடங்கவும், பார்த்தபடியே நின்றார். நந்தி அடிகளுக்கு புரத சக்தி அதிகமோ என்னவோ, உடம்பில் எல்லா பக்கங்களிலும் ஊட்டமாக முடி வளர்ந்திருந்தது. அதிலும் தாடை முடியான தாடியின் கூம்பிய முடிவுப் பகுதி அவர் தொப்புளைக் கடந்து விட்டிருந்தது. தலைமுடியும் கோபுரம் போல் காணப்பட்டது.

அப்போது வெள்ளை ஜிப்பாவும் வேட்டியுமாக ஒருவன் வந்தான். அவன் கையில் லேப்டாப் இருந்தது.‘‘வா ஜீவா...’’‘‘சாமி! கணக்குப் போட்டுட்டேன்...’’
‘‘இவ்வளவு சீக்கிரமாவா?’’‘‘அதான் சாமி இந்த கம்ப்யூட்டரோட சக்தி. இது கூட கொஞ்சம் பழைய மாடல். போன வாரம் ஜப்பான்ல ரிஸ்ட் கண்ட்ரோல்ல இயங்கற ஸ்பேஸ் விசிபிள் கம்ப்யூட்டரே வந்தாச்சு சாமி...’’‘‘அப்படின்னா?’’

‘‘இனி கம்ப்யூட்டர்னு சொல்லி இந்த மாதிரி ஒரு பெட்டியையே சுமக்கத் தேவையில்லை. கைல கடிகாரத்தைக் கட்டிக்கற மாதிரி ஒரு வளையத்தைப் போட்டுக்கிட்டு அதை அசைச்சா அதிகபட்சம் ஐந்தடி தூரத்துக்குள்ள சுவர் இருந்தா அதுல கம்ப்யூட்டர் திரை, சினிமா மாதிரி தெரியும். அதுவும் இல்லேன்னாலும் இதோ வெட்டவெளி... இதுலகூட தெரியும்!’’‘‘அப்ப பார்வை குறைவானவங்களுக்கு இந்த நவீனம் வசப்படாதா?’’

‘‘அதுக்கும் எதையாவது கண்டுபிடிச்சிடுவாங்க சாமி.’’
‘‘சரி... நான் கொடுத்த கணக்கோட விடை என்ன?’’
‘‘அது பின்னத்துல வருது... வகுத்தா மிச்சம் விழுது. ஒத்தப்
படையை இரட்டைப்படையால வகுத்தா மிச்சம் விழுந்துதானே சாமி தீரணும்?’’
‘‘அப்ப பின்னம் விழறதால தீர்வு காண முடியாதுன்னு சொல்றியா?’’

‘‘அதுதானே யதார்த்தம்..?’’‘‘சரி... நீ ஊருக்குப் புறப்படு.’’‘‘என்ன சாமி! பொசுக்குன்னு ஊருக்குக் கிளம்பச் சொல்லிட்டீங்க?’’‘‘நீ இந்த மெஷினை நம்பி கணக்கு போடறவன். பிறர் போற வழியில போறவன்... இந்த கணிதவாடிக்கு பின்னம் இல்லாதவங்கதான் வேணும். அவங்களால மட்டும்தான் யுகக் கணக்கை சரியா போட முடியும். அது மட்டுமில்லை... பருவநிலை மாற்றம், பூமி சுழலும் வேகம், இதையெல்லாம் உணர இந்த மெஷினால முடியாது. நுட்பமான உணர்வு தேவை. பூ மலரும்போது கூட ஓசை எழும்பும். அதை நமக்கு இப்ப இருக்கற காதுகளால கேட்க முடியாது.

 ேயாக உடம்பு நமக்கு இருந்தா அந்த சப்தத்தைக் கேட்க முடியும். உனக்கு இருக்கறது யோக உடம்பு இல்ல. நீ வென்னீர்ல குளிக்கறே... சோப்பு உபயோகப்படுத்தறே. தினமும் உனக்கு நீயே சவரம் பண்ணிக்கறே. செருப்பில்லாம எங்கேயுமே போறதில்ல. குகைக்குள்ள ஃபேன் வெச்சுக்க முயற்சி செய்தே... இப்படி நீ உடம்போட அடிமை ஆயிட்டே! நீ லோகாயதமா இந்த உலகத்ைத வெற்றி கொள்ளலாம்.

யூனிவர்சிடில தங்கப்பதக்கமும் வாங்கி இருக்கலாம். ஆனா உனக்கு ஒரு பரிசா தரப்பட்ட இந்த வாழ்வை உன்னால வெற்றிகொள்ள முடியாது. இந்த பூமியில திரும்பத் திரும்ப பிறக்கற அமைப்புக்குள்ள நீ வசமா சிக்கிட்டே. நீ இந்த கணிதவாடியோட எந்த ஒரு காலக்கணக்கையும் போட்டு சரியான விடை கூற முடியாது. எதுக்கு காலத்தை விரயம் பண்ணிக்கிட்டு! புறப்படு?’’- அவரின் விளக்கம் அவனைக் கட்டிப் போட்டது. மௌனமாகப் புறப்பட்டான். சில அடி தூரம் நடந்த அவனிடம், ‘‘இங்க வரும்போது செய்த சத்தியத்தை மறந்துவிடாதே. இந்த கணிதவாடி பற்றி யார்கிட்டயும் எப்பவும் நீ பேசக்கூடாது. கணிதவாடிக்கே இப்ப ஒரு சோதனையான காலகட்டம். உன்னால் அது அதிகமாக வேண்டாம்...’’ என்றார் நந்தி.அவன் அதைக் கேட்டவனாக தொடர்ந்து மௌனமாக நடந்தான்.

இரவு மணி பத்தரை!பத்மாசினி படுக்கை அறைக்குள் போய் கதவைத் தாழிட்டுக் கொண்டாள். காத்திருந்த ப்ரியா, பூனை போல நடந்து படிகளில் ஏறி தாத்தா அறைக்குள் நுழைந்தாள்.கணபதி சுப்ரமணியன் அறை ஜன்னல் முன் நின்று வெளியே பார்த்தபடி இருந்தார். ப்ரியா வரவும், ‘‘வாடா குட்டி’’ என்றார்.
‘‘தாத்தா! நீ இப்படி கூப்பிடறதுதான் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு’’ என்று அவர் வலது கையைப் பற்றினாள். இடது கை, மடக்கு தோள்பட்டையில் பிளாஸ்திரி போடப்பட்ட நிலையில் ஒரு தூலிக்குள் குழந்தை போலக் கிடந்தது.

கணபதி சுப்ரமணியன் ப்ரியாவை ஆழமாக ஊடுருவினார். அந்தப் பார்வையில் ஆயிரம் அர்த்தங்கள். ‘‘என்ன தாத்தா... ரொம்ப ஃபீலிங்கோட இருக்கே போல இருக்கே?’’‘‘ஆமாம் ப்ரியா... நீ உன் அம்மா அப்பாக்கு ஒரே ஒரு பொண்ணு மட்டுமில்ல. எனக்கும் ஒரே பேத்தி...’’‘‘ஒரு பொண்ணா இருந்தா, ஒரு பேத்திதானே இருக்க முடியும்?’’‘‘உனக்கு எல்லாமே ஜாலி. எனக்கு இந்த விஷயத்துல உன்னை இறக்கி விடறோமேன்னு கவலையா இருக்கு!’’‘‘தாத்தா! ரிவர்ஸ் கியர் போடாதே. சென்டிமென்ட்டை தயவுசெய்து மூட்டை கட்டு. நான் டி.வி.லயும் என் டேப்லயும் அதிகம் பார்த்தது அட்வென்ச்சரஸ் மூவிகளைத்தான். இதை நான் ஒரு நல்ல சான்ஸாதான் நினைக்கறேன்.’’

‘‘நல்ல சான்ஸ்தான்... ஆனா ஆபத்துக்கும் இதுல இடமிருக்கே?’’‘‘வீட்டுக்குள்ளயே இருந்தா, ஆபத்து இல்லாமப் போயிடுமா? இரண்டு நாளா முத்தழகு ஆவியா வந்து சுத்தினப்ப இந்த வீடும் ஆபத்தானதாயிடிச்சே... அவ நினைச்சிருப்பாளா, தான் வேலை பார்த்த வீட்டுக்குள்ளயே ஆவியா சுத்துவோம்னு?’’
‘‘கரெக்ட்... இந்த விஷயத்தோட ஆபத்துக்கு முத்தழகு ஒரு நல்ல உதாரணம். அதுதான் எனக்கும் பயமா இருக்கு...’’

‘‘பயப்படாத தாத்தா! ஏதாவது ஆகியிருக்கணும்னா முதல்ல வள்ளுவருக்கு, அப்புறம் உனக்குன்னு, அது எப்பவோ நடந்து முடிஞ்சிருக்கணும். ஆனா உங்க இரண்டு பேரைத் தவிர மத்தவங்களுக்குத்தான் எல்லாம் நடந்தது. அதுவும் அவங்க பேராசைப்பட்டதால... இதுல தொடக்கத்துல இருந்தே நமக்கு எந்த ஆபத்து மில்லங்கறதுதான் உண்மை.’’‘‘உன்னோட வேகம், ஐ.க்யூ எல்லாமே எனக்கு பிரமிப்பா இருக்குடா. நான் ஐம்பது வயதுல இருந்த மாதிரி நீ இருபத்தி அஞ்சு வயசுல இருக்கே...’’

‘‘வயசைக் கூட்டிச் சொல்லாதே... அப்புறம், இந்த எமோஷன்லாம் இப்ப வேண்டாம். வர்ஷன் காத்திருப்பான். கான்ஃபரன்ஸ்ல பேச ஆரம்பிப்போம். அதிகபட்சம் ஒரு மணி நேரத்துல அந்த சுவடியில் இருக்கற குறிப்புகளைக் கொண்டு நாங்க எந்த திசை நோக்கிப் போகணும், அந்த காலப்பலகணி உள்ள இடம் எதுவா இருக்கும்னு எல்லாம் தெரிய வந்தாகணும். கமான் க்விக்!’’

அவள் கான்ஃபரன்ஸ் காலை ஆன் செய்ய, அவர்களோடு வள்ளுவரும் வர்ஷனும் இணைந்துகொள்ள, வர்ஷன் முதல் விஷயமாகக் கூறியதில் ஒரு அதிர்வு. ‘‘ப்ரியா... அந்த சுகுமாரை நான் மிஸ்கைட் பண்ணிட்டு வள்ளுவர் வீட்டுக்கு வந்தா, அவன் எனக்கு முந்தி இந்தத் தெருவுல நுழைஞ்சு, ஒரு டீக்கடைல நின்னு டீ குடிச்சிக்கிட்டிருக்கான்’’ என்றான். கணபதி சுப்ரமணியனின் கிருதாவை ஒட்டி வியர்வை ஓடத் தொடங்கியது.

புரொடியூஸர் ஏன் திடீர்னு மேக்கப் போட்டு ஆளே அடையாளம் தெரியாத மாதிரி மாறியிருக்கார்..?’’‘‘நஷ்ட ஈடு கேட்டு விநியோகஸ்தர்கள் வந்துட்டு இருக்காங்களாம்..!

எதை எதையோ கண்டுபிடிக்கறது  இருக்கட்டும். 
அவங்களால அவங்க ஒரு முடி நரைக்கறதைத் தடுக்க  முடியுமா? பசிக்காதபடி
வயிற்றைக் கட்டிப்போட முடியுமா?

தலைவரே... ஜெயில் கம்பிகளுக்குப் பின்னால நீங்க எடுத்த செல்ஃபியை ஃபேஸ்புக்ல போட்டதுக்கு செம ரெஸ்பான்ஸ்!’’
‘‘எதை வச்சுய்யா சொல்றே?’’‘‘முறுக்குக்கம்பி விளம்பரத்துல நடிக்கக் கேட்டு நிறைய பேர் வந்திருக்காங்க தலைவரே!’’

கட்சி ஆபீசுக்கு தேடி வந்து மாலை போட்ட அந்த ஆள் மேல தலைவர் செம கடுப்புல இருக்காரே, ஏன்?’’
‘‘மாலையை தலைவரோட படத்துக்குப் போட்டுட்டுப் போயிட்டானாம்..!

- தொடரும்...

இந்திரா சௌந்தர்ராஜன்

ஓவியம்: ஸ்யாம்