தமிழகத்தில் பரவி வரும் மர்ம ஜுரம்!



தெரிஞ்ச விஷயம் தெரியாத விஷயம்

அலர்ட் டிப்ஸ்


‘லே சான ஜுரம் இருக்கும்... முழங்கால், முழங்கையில் சிறு கொப்புளங்கள் தோன்றும்... தொண்டையில் விழுங்க முடியாத வலி இருக்கும்... ஆனால் இந்த நோய் அம்மை அல்ல... போலியோவுக்கு நெருங்கிய சொந்தக்காரன்’ - ஏதோ விடுகதை போல இருக்கிறதா? கடந்த மாதம் தொடங்கி தமிழகம் முழுக்க பரவி வரும் வினோத காய்ச்சலின் ப்ரொஃபைல் ஸ்டேட்டஸ் இதுதான்!

கை, பாத, வாய் நோய் (Hand,Foot and Mouth Disease-HFMD) என்று சொல்லப்படும் இந்தத் தொற்றுநோய் குறித்த முழுமுதல்
தகவல்களைத் தருகிறார் குழந்தைநல மருத்துவரான டாக்டர் ஜெகதீசன்.
HFMD என்றால் என்ன?

 ஒரு வித வைரஸ் கிருமியால் பரவக்கூடிய தொற்று நோய் இது. காக்ஸ்சாக்கி (coxsackie) மற்றும் என்டெரோ (entero) எனும் இருவித வைரஸ்களில் ஏதாவது ஒன்றால் இது பரவலாம். மரபணுக்களில் மிகவும் பழமையானதும், சக்தி குன்றியதுமான எஸ்.எஸ்.ஆர்.என்.ஏ எனும் மரபணுவைக் கொண்ட வைரஸ்கள் இவை. அதாவது இவை மிகவும் பலம் குறைந்த, சாஃப்ட்டான வைரஸ் கிருமிகள். ஆனால், நாம் பலவீனமாக இருந்தால் இவை பலம் பெற்றுவிடும்... ஜாக்கிரதை.

நம்மூர் குழந்தைகளிடையே காணப்படும் நோய் அறிகுறிகளையும் பின்விளைவுகளையும் சேர்த்துப் பார்க்கும்போது, இப்போது பரவும் ஜுரம், காக்ஸ்சாக்கி வகை கிருமியால் ஏற்படுகிறது என்றுதான் சொல்ல வேண்டும். இந்த காக்ஸ்சாக்கி வைரஸ்களிலேயே 23 வகைகள் உள்ளன. சமீபத்தில் வெளிநாடுகளில் இதே நோய் பரவியபோது அவர்கள் நோய்க்கிருமியை சோதனை செய்து, இது ‘டைப் 16’ காக்ஸ்சாக்கி வைரஸ் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். ஆக, இங்கேயும் அதுதான் பரவியிருக்க வேண்டும் என்பதே அனுமானம்!

டைப் 16 வகை வைரஸ் தொற்றின் அறிகுறிகள்...
முதலில் லேசான ஜுரம் ஏற்படும். இரண்டு நாட்களுக்குப் பிறகு முழங்கை, முழங்கால், பாதத்தின் அடிப்பகுதி, தொண்டை அல்லது பிட்டப் பகுதியில் சிறிய நீர்க்கொப்புளங்கள் தோன்றும். எச்சில் விழுங்க முடியாத அளவுக்கு தொண்டை வலி இருக்கும். சிலருக்கு உதட்டின் மேலும் கொப்புளங்கள் ஏற்படலாம்.

யாரைத் தாக்கும்?

5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளையே இந்நோய் 90 சதவீதம் தாக்குகிறது. காரணம், இந்த காக்ஸ்சாக்கி கிருமி வகைகள் ஒருவரை ஒருமுறைதான் தாக்கும். முதல்முறை தாக்கும்போதே, இந்தக் கிருமிக்கு எதிரான எதிர்ப்பு சக்தி நம் உடலில் உருவாகிவிடும். மீண்டும் மீண்டும் ஒருவரைத் தாக்கும் வீரியம் இந்தக் கிருமிகளுக்கு இல்லை. பெரியவர்களான நமக்கு ஆயிரம் முறை தொண்டை வலியும் ஜுரமும் வந்திருக்கும். அதில் ஏதாவது ஒன்று இந்தக் கிருமித் தொற்றால் ஏற்பட்டிருக்கலாம். நமக்கே தெரியாமல் இந்தக் கிருமிக்கான எதிர்ப்பாற்றல் நம் உடலில் உருவாகியிருக்கலாம். ஆனால், குழந்தைகள் புதிய வரவுகள் என்பதால் இந்தக் கிருமிகளில் ஏதாவது ஒரு டைப் அவர்களை உடனடியாகத் தாக்கிவிடுகிறது.

எப்படிப் பரவுகிறது?

எச்சில், மலம் போன்ற கழிவு களால் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு இது பரவுகிறது. பள்ளிக்கூடம், ப்ளே ஸ்கூல், பயணம் என நெருக்கமாகப் பல குழந்தைகளோடு பழகும் சூழலில்தான் இந்நோய்த் தொற்று அதிகம் ஏற்படுகிறது. எனவே, பாதிக்கப்பட்ட குழந்தை முழுமையாக குணமடையும் வரை பொது இடங்களுக்கு அனுப்பாமல் பார்த்துக்கொண்டால் இந்நோய் பரவுவதைத் தடுக்கலாம்! மாடுகளுக்கு வரும் கோமாரி நோயின் அறிகுறிகளும் கிட்டத்தட்ட இந்த நோய் போலவே இருப்பதால், சிலர் இது மாடுகளிடமிருந்து பரவுவதாக நினைக்கிறார்கள். உயிரைக் கொல்லும் என்றும் பயப்படுகிறார்கள். கோமாரிக்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. விலங்குகளிடமிருந்து இந்த வைரஸ் பரவுவதில்லை!

பின்விளைவுகள்...

இந்த நோயை போலியோவின் சொந்தக்காரன் என்பார்கள். வந்து செல்வது 5 நாட்கள்தான் என்றாலும் அதன் பின் கை, கால்களை மடக்குவதில் கொஞ்சம் சிரமத்தைக் கொடுப்பதால் இதை அப்படிச் சொல்கிறார்கள். உண்மையில் காக்ஸ்சாக்கி வைரஸ்களிலேயே மோசமான உட்பிரிவுகள் உண்டு. அவை தாக்கினால், முடக்குவாதம், சிறு வயது நீரிழிவு, இதயம், மூளை, நுரையீரல் பாதிப்பு எனப் பெரும் பிரச்னைகள் கூட ஏற்படும் அபாயம் உண்டு.

வெளிநாடுகளில் இந்த பாதிப்பு அதிகம் உண்டு. வருடத்துக்கு சுமார் 500க்கும் மேற்பட்ட குழந்தைகளை அவர்கள் இந்தக் கிருமிக்கு பலிகொடுக்கிறார்கள். இங்கு அந்த நிலை ஏற்படவில்லை. கடந்த மாதத்திலிருந்து 500க்கும் மேற்பட்ட குழந்தைகளை இந்த பாதிப்போடு பார்த்தாகிவிட்டது. யாருக்கும் தீவிர பின்விளைவுகள் இல்லை. அதற்காக அசட்டையாக இருக்க முடியாது. இங்கே பரவுவது என்ன வகை கிருமி என்பதை இன்னும் நாம் ஆராய்ச்சி செய்து கண்டறியவில்லை. எனவே, யாருக்கேனும் பலத்த பின்விளைவுகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை நாட வேண்டும்!

என்ன மருந்து?

எந்தவித மருத்துவ சிகிச்சையும் இல்லாமலேயே இந்த நோய் சுமார் 5 நாட்களுக்குள் மறைந்துவிடக் கூடியது. இதனால்தான் இந்த நோயை ‘மருந்தில்லா நோய்’ என்றும் அழைக்கிறார்கள். கொப்புளங்கள் தோன்று வதால் இதை அம்மை என நினைத்து யாரும் பயப்பட வேண்டாம். அம்மை நோய் போல இந்தக் கொப்புளங்கள் தழும்புகளை ஏற்படுத்துவதில்லை.

எனவே, கிரீம்கள் எதையும் கூட பயன்படுத்த வேண்டாம். தொண்டைப் புண்ணால் சாப்பிட கஷ்டப்படும் குழந்தைகளுக்கு குளிர்ச்சியான உணவுகள் / பானங்களைக் கொடுக்கலாம். 5 நாட்களுக்குப் பின்னும் ஜுரம் குறையவில்லை என்றாலோ, கொப்புளங்கள் மறையவில்லை என்றாலோ மட்டும் மருத்துவரைப் பார்த்தால் போதும். அதுவரை தீவிர வலியை சமாளிக்கவும் ஜுரத்தைத் தணிக்கவும் வலி நிவாரணிகளை டாக்டரின் ஆலோசனையின் பேரில் எடுத்துக்கொள்ளலாம்.

- டி.ரஞ்சித்
படங்கள்: ஆர்.சி.எஸ்