எந்த நாட்டில் என்ன படிக்கலாம்?



வெளிநாட்டுக் கல்விக்குச் செய்யும் செலவு, முதலீடாக இருக்க வேண்டும். ‘படிப்பு முடிந்ததும் அங்கேயே வேலை வாங்கி, அப்படியே செட்டிலாகி விடவேண்டும்’ என்ற மனோபாவம் உள்ளவர்களுக்கே வெளிநாட்டுக் கல்வி உகந்தது.

பல நாடுகளில் இப்படியான வாய்ப்புகள் உண்டு. படிப்பு முடிந்ததும் வேலை தேடுவதற்காக குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு PSW (Post-Study Work) விசா தருகிறார்கள். குறிப்பிட்ட ஆண்டுகள் பணிபுரிந்த பிறகு குடியுரிமை வழங்கும் நாடுகளும் உண்டு. இப்படி PSW விசா வழங்கும் நாடுகளுக்குப் படிக்கச் செல்வது பாதுகாப்பானது.

‘‘வெளிநாட்டில் இளநிலை படிப்புகளை விட முதுநிலை டிகிரி படிக்கச் செல்வது நல்லது’’ என்கிறார் வெளிநாட்டுக் கல்வி ஆலோசகர் னிவாஸ் சம்பந்தம்.‘‘வெளிநாடுகளில் கல்விக்கட்டணத்துக்கு இணையான செலவு தங்குவதற்கும், உணவுக்கும் ஆகும். பேச்சிலர் டிகிரி முடிக்க மூன்று முதல் நான்கு ஆண்டுகள் ஆகும். ஆனால் முதுநிலை படிப்புகள் பெரும்பாலும் 2 ஆண்டுகள்தான். அதனால் எல்லா செலவுகளும் மிச்சமாகும்.

வெளிநாட்டில் படிக்கச் செல்வதற்கு வெறும் ஆர்வமும் பணமும் மட்டும் போதாது. நிறைய அடிப்படை விஷயங்கள் உண்டு. பெற்றோரை விட்டு தனித்திருக்கப் பழக வேண்டும். புதிய கலாசாரத்தை எதிர்கொள்ளும் பக்குவம் வேண்டும். கண்காணிப்பற்ற சுதந்திரமும் வெவ்வேறு நாட்டு மாணவர்களின் நட்பும் தரும் வித்தியாசமான சூழலில் இயல்பாக இருக்க மிகுந்த பொறுப்புணர்வு வேண்டும். அந்நாட்டின் சட்டங்களுக்கு உட்பட்டு நடக்க வேண்டும். எந்த சூழலிலும் படிப்பை முடிக்காமல் நாடு திரும்ப மாட்டேன் என்கிற உறுதியும், விடாமுயற்சியும், சகிப்புத்தன்மையும் வேண்டும்’’ என்கிறார் னிவாஸ் சம்பந்தம்.

மருத்துவம் தவிர்த்து இதர படிப்புகளுக்காக வெளிநாடு செல்வதில் பிரச்னை ஏதுமில்லை. ஆனால் எங்கே எதைப் படிப்பது நல்லது என்பதைப் புரிந்துகொண்டு படிப்புகளைத் தேர்வு செய்யவேண்டும். ஆஸ்திரேலியாவில் சுரங்கத்துறையில் ஏராளமான வேலைவாய்ப்புகள் இருக்கின்றன. ‘மைனிங்’ சார்ந்த படிப்புகளை அங்கே படிக்கலாம். கனடா இன்னும் பத்தாண்டுகளில் ஏராளமான முதியவர்களை சமாளிக்க வேண்டியிருக்கும். அந்நாட்டில் நர்சிங், ஹெல்த்கேர் சயின்ஸ் படித்தவர்களுக்கு ஏக தேவை இருக்கிறது. அங்கு அது சார்ந்த படிப்புகளைத் தேர்வு செய்யலாம். எந்த நாட்டுக்குச் செல்ல விரும்புகிறீர்களோ, அந்த நாட்டில் வேலைவாய்ப்பு பிரகாசமாக உள்ள படிப்பையே தேர்வு செய்யவேண்டும்.

அடுத்து, நாட்டின் தட்பவெப்பம் உங்களுக்குப் பொருந்த வேண்டும். கனடா மிகுந்த குளிர் நிலவும் நாடு. அங்கு சென்று ஒரு வருடம் கூட தாக்குப்பிடிக்க முடியாமல் திரும்பியவர்கள் உண்டு. அதனால் உங்கள் உடல்நிலைக்கும் மனநிலைக்கும் பொருந்தும் நாட்டைத் தேர்வு செய்வது நல்லது. நீங்கள் படிக்கச் செல்லும் கல்வி நிறுவனம் உலகத் தரப்பட்டியலில் இருக்கிறதா, அதற்கு சர்வதேச அங்கீகாரம் இருக்கிறதா, இதற்கு முன்பு அங்கு படித்த வெளிநாட்டு மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்கிறதா என்பதையெல்லாம் ஆராயவேண்டும்.

இதை இணையதளத்தில் ஆய்வு செய்யலாம். ஃபேஸ்புக்கில் அக்கல்லூரியின் பழைய மாணவர்கள் சிக்குவார்கள். அவர்களிடம் ‘ஒப்பீனியன்’ கேட்கலாம். பல நாடுகள், தங்கள் நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களை இணைய
தளத்தில் வரிசைப்படுத்தி வைத்துள்ளன. அதையும் ஆய்வு செய்யலாம்.  

ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்ட  நாடுகளுக்குச் செல்ல, ஆங்கிலத் திறனை வெளிப்படுத்தும் TOEFL (Test of English as a Foreign Language), IELTS (International English Language Testing System) ஆகிய தேர்வுகளில் ஒன்றை எழுதித் தேர்ச்சி பெறவேண்டும். ஆங்கிலம் பேசும் நாடுகளில் உள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் இந்தத் தேர்வுகளை அங்கீகரிக்கின்றன.

இதுதவிர, இளநிலை படிப்பு மாணவர் சேர்க்கைக்காக SAT (Scholastic Aptitude Test) என்ற நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகள் இந்தத் தேர்வுகளின் அடிப்படையில் மாணவர்களை சேர்க்கின்றன. முதுநிலை படிக்கச் செல்லும் மாணவர்கள் Graduate Record Examination தேர்வை எழுதித் தேர்ச்சி பெற வேண்டும். நியூசிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட 110 நாடுகளில் மேலாண்மைக் கல்வி நிறுவனங்களில் ேசர GMAT (Graduate Management Admission Test) தேர்வை எழுத வேண்டும். இந்தத் தேர்வுகளில் சிறப்பிடம் பெறும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகைகளும் கிடைக்க வாய்ப்புள்ளது.
சரி... எந்த நாட்டில் என்ன படிக்கலாம்? எவ்வளவு செலவாகும்?

‘‘ஆஸ்திரேலியாவில் மெக்கானிக்கல், சிவில், மைனிங், எனர்ஜி, ஐ.டி, கம்ப்யூட்டர் சயின்ஸ், மேலாண்மை படிப்புகளுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. இங்கு ஒரு ஆண்டுக்கு ரூ.12 லட்சம் செலவாகும். கனடாவில் ஐ.டி, கம்ப்யூட்டர் சயின்ஸ், டூரிசம், ஹாஸ்பிடாலிட்டி, ஹோட்டல் மேனேஜ்ெமன்ட், நர்சிங், ஹெல்த்கேர், மெக்கானிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், எனர்ஜி எஞ்சினியரிங் படிக்கலாம்.

ஆண்டுக்கு ரூ.11 லட்சம் செலவாகலாம்.  பிரான்சில் டூரிஸம், ஹாஸ்பிடாலிட்டி படிப்புகள், மேனேஜ்மென்ட், டெலிவிஷன் மீடியா ஆர்ட்ஸ், லாஜிஸ்டிக், எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி. படிக்கலாம். ஆங்கிலத்தில் திறன் உள்ளவர்களுக்கு பிரான்சில் ஏகப்பட்ட வாய்ப்புகள் உண்டு. ஆண்டுக்கு ரூ.10 லட்சம் செலவாகும். அயர்லாந்தில் ஒரு ஆண்டுக்கு ரூ.7 லட்சம் செலவாகும். ஐ.டி., கம்ப்யூட்டர் சயின்ஸ், எனர்ஜி, மேனேஜ்மென்ட், நர்சிங் படிப்புகளுக்கு இது உகந்த நாடு. ஆராய்ச்சி வாய்ப்புகள் நிறைய உண்டு. டூரிஸம், ஹாஸ்பிடாலிட்டி படிப்புகள், டெலி கம்யூனிகேஷன், ஃபுட் அண்ட் டெய்ரி, மேலாண்மைப் படிப்புகளுக்கு நியூசிலாந்து சிறந்த நாடு. ஆண்டுக்கு ரூ.12 லட்சம் செலவாகும்.

சிங்கப்பூர், போலந்து, ஸ்வீடன், நெதர்லாந்து, பின்லாந்து, நார்வே போன்ற நாடுகளிலும் நல்ல கல்வி கிடைக்கும். இங்கெல்லாம் ஆண்டுக்கு 10 முதல் 15 லட்சம் ரூபாய் செலவாகலாம். துபாயில் வேறெங்கும் கிடைக்காத ஒரு வசதி இருக்கிறது. படிப்பதற்காக இங்கிருந்து செல்லும் மாணவர்கள், அங்கு வேலை தேடிக் கொள்ளலாம். வேலை கிடைத்து விட்டால், வேலையை முழு நேரமாக்கிக் கொண்டு படிப்பை பகுதிநேரமாக்கிக் கொள்ளலாம். அதில் கிடைக்கும் வருமானத்துக்கு வரிச்சலுகையும் உண்டு.

பெரும்பாலான நாடுகளில் படிப்பு முடிந்ததும் அங்கேயே தங்கி வேலை தேட 1 ஆண்டு முதல் 3 ஆண்டுகள் வரை PSW விசா கிடைக்கிறது. இங்கிலாந்தில் இப்படி இல்லை. படிப்பு முடிந்ததும் 4 மாதம் அவகாசம் தருவார்கள். அதற்குள் வேலை கிடைத்துவிட்டால், பிரச்னையில்லை. இல்லாவிட்டால் இந்தியா திரும்பவேண்டியதுதான். அமெரிக்கக் கல்வி நிறுவனங்களில் இடம் கிடைப்பது சிரமம். கிடைத்துவிட்டால், பிரகாசமான எதிர்காலம் உறுதி. அண்மைக்காலமாக போலந்து, லாத்வியா, லிதுவேனியா போன்ற ஐரோப்பிய நாடுகள் மாணவர்களை ஈர்க்கின்றன. இந்தியாவில் ஆகும் செலவுதான் இங்கும் ஆகும்.

ஆண்டுக்கு ரூ.3 லட்சத்துக்குள் ஓராண்டு கல்வியை முடித்துவிடலாம். இந்நாட்டு கல்வி நிறுவனங்கள் உலகத் தரப்பட்டியலில் இடம்பெற்றுள்ள கல்வி நிறுவனங்களோடு ‘ஸ்டூடன்ட்ஸ் எக்சேஞ்ச்’ ஒப்பந்தங்கள் போட்டுள்ளன. நன்கு படிக்கும் மாணவர்கள் இங்கிருந்து சிறப்பான கல்லூரிகளுக்கு பெயர்ந்து விடலாம். அந்த எண்ணத்தில் நிறைய மாணவர்கள் செல்கிறார்கள்...’’ என்கிறார் ீனிவாஸ் சம்பந்தம்.
சரி, செலவுக்கு?

நன்றாகப் படிக்கும் மாணவர்களுக்கு பல கல்வி நிறுவனங்கள், நாடுகள் உதவித்தொகைகளை வழங்குகின்றன. பெரும்பாலான நாடுகளில் சட்டபூர்வமாக வாரத்துக்கு 20 மணி நேரம் பகுதிநேர வேலை செய்யலாம். இதன்மூலம் மாதம் ரூ.40 ஆயிரத்துக்கு மேல் சம்பாதிக்க முடியும். வெளிநாட்டில் படிக்க 20 லட்சம் ரூபாய்க்கு மேல் வங்கிக்கடனும் கிடைக்கிறது. தக்க நாட்டில், தரமான கல்வி நிறுவனத்தில், தகுந்த படிப்பைப் படித்தால் வெளிநாட்டுக் கல்வி நிச்சயம் வாழ்க்கையை வளமாக்கும்.

பெரும்பாலான நாடுகளில் படிப்பு முடிந்ததும் அங்கேயே தங்கி வேலை தேட 1 ஆண்டு முதல் 3 ஆண்டுகள் வரை PSW விசா கிடைக்கிறது.

- வெ.நீலகண்டன்