புத்தாண்டு வந்தா போதும், பீரு குடிக்க மாட்டேன் பீடி அடிக்க மாட்டேன்ல ஆரம்பிச்சு, நல்லா படிப்பேன், சிறப்பா நடிப்பேன் வரை கலர் கலரா புத்தாண்டு உறுதிமொழிகள எடுக்க ஆரம்பிச்சிடுவாங்க. இந்தா, நம்ம விஐபிகளும் இப்படி கீழ்கண்ட உறுதிமொழிகளை எடுத்தா எப்படி இருக்கும்னு பார்ப்போம். இதை அவங்க எடுக்கணும்ங்கிறது இல்ல, எடுத்தா நல்லா இருக்கும்னு சொல்றோம்.
தோனி: இனி விளம்பரங்களில் மட்டும் சிக்ஸ் அடிக்க மாட்டேன், ஸ்டேடியத்துலையும் சிக்ஸ் அடிப்பேன்னு சத்தியம் பண்ணலாம்.நரேந்திர மோடி: கட்சியோடு மாரடிச்சாலும் பரவாயில்ல, போரடிச்சுதுன்னு வெளியூருக்கு டூர் போக மாட்டேன்னு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சத்தியம் செய்யலாம்.ஓ.பி.எஸ்: அடுத்த ஆறு மாசத்துக்குள்ள ஒரு தடவையாவது யாருமில்லாதப்பவாவது ‘முதல்வர்’ என்கிற வார்த்தையைச் சொல்லிப் பார்ப்பேன்னு உறுதிமொழி எடுக்கலாம்.
ராகுல் காந்தி: ‘அன்னை ஓர் ஆலயம்’, ‘தாய் சொல்லை தட்டாதே’ போன்ற டி.வி.டிகளை தூக்கிப் போட்டுட்டு, இனி சொந்தமா முடிவு எடுப்பேன்னு உறுதிமொழி எடுக்கலாம்.
அண்ணன் மைக்கோ: பாட்டனி புத்தகத்த மனசுல வச்சாலும் வைப்பேனே தவிர, தேசியக் கட்சிகளோட கூட்டணி நினைப்ப கொஞ்சமும் வைக்க மாட்டேன்னு அழுகை சாட்சியா ஆணையிடலாம்.
கேப்டன்: செவுத்துல ஏறி அடிக்கிற வெள்ளந்தி மனுஷனையே எகிறியடிக்கிற மீடியாகிட்ட இந்த வருஷம் முழுக்க மூக்குல இருந்து நாக்கு வரை எதையும் காட்ட மாட்டேன்னு உறுதிமொழி எடுத்துக்கலாம்.தமிழக மக்கள்: கற்காலம் போல கரன்ட் இல்லாமல் வாழப் பழகி, கலிகால மின் கட்டண உயர்வுக்கு கலங்க மாட்டேன்னு உறுதி ஏற்கலாம்.
மிஸ்டு கால் கொடுத்தா தமிழகத்தில் என்னவெல்லாம் நடக்கும்? பொண்ணுங்க நம்பரா இருந்தா திருப்பிக் கூப்பிடுவோம். டி.வி விளம்பரங்களின் படி, அமேசான் காட்டில் பறிக்கப்பட்ட அரிய வகை மூலிகைகளால் ஆன தலைமுடி வளர வைக்கும் தைலம் கிடைக்கும்.எதிர் வீட்டுல, பக்கத்து வீட்டுல, மேல் வீட்டுல, கீழ் வீட்டுல இருந்து, நம்ம வீட்டுல மட்டும் இல்லாத டேபிள் மேட் கிடைக்கும். இதெல்லாம் நார்மலான விஷயம். ஆனா, தமிழக பா.ஜ.க உறுப்பினர் அட்டை கிடைக்குமா?
அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்குள் ஒரு கோடி உறுப்பினர்களைப் பிடிக்கணும்னு தமிழக பா.ஜ.க தலைகீழா தண்ணி குடிக்குது. ப்ரீ.கே.ஜி, எல்.கே.ஜி, யூ.கே.ஜி படிக்கிற குழந்தைங்களுக்கு ஓட்டு உரிமை கொடுத்தாக்கூட ஒரு கோடி உறுப்பினர்களை பா.ஜ.கவால சேர்க்க முடியாது என்பதுதான் உண்மை. ஆனாலும், ஏதோ நம்மளால முடிஞ்ச சில ஐடியாக்களை கொடுப்போமே...
*ஆறுதல் பரிசா அபிநய சுந்தரி சரோஜாதேவி பயன்படுத்திய சோப்பு டப்பா கிடைக்காட்டியும், பானுப்ரியா பயன்படுத்திய பவுடர் டப்பா கிடைக்காது?
*சீனியர் சிட்டிசன் வாக்காளர்களைக் கவர, பழைய கதைகள் பேசி பாக்கு - வெத்தலை மடித்து கொடுக்கலாம்.
*கோபால் மறுபடியும் பொண்டாட்டிகிட்டயே திரும்புவானா? நதியா தன் நத்தனார் சோத்துல விஷத்தை வைப்பாளா? மாலா தன் மாமியார் தலையில ஆட்டுக்கல்ல தூக்கி அலேக்கா போடுவாளான்னு லேடீஸ் பார்க்கும் மெகா சீரியல்களில் அடுத்த நாள் என்ன நடக்கும்னு எங்கள் கட்சில உறுப்பினர் ஆனா சொல்வோம்னு பிட்டைப் போடலாம்.
*கட்சியில் உறுப்பினராகும் ஒவ்வொருவருக்கும் பரிசு கூப்பன் கொடுத்து, மாதம் ஆயிரம் அதிர்ஷ்டசாலிகளுக்கு அயர்ன் பாக்ஸ், நான் ஸ்டிக் தவா, ரைஸ் குக்கர், பால் குக்கர் எனப் பரிசுகள் தரலாம்.
*கட்சியில் உறுப்பினராகும் குடிமகன்களுக்கு மாசம் 30 பிளாஸ்டிக் / பேப்பர் யூஸ் அண்ட் த்ரோ டம்ளர் தருவோம் என உறுதியளித்து கட்சியில் ஒட்ட வைக்கலாம்.
*கட்சியில் உறுப்பினர்களாகும் அனைவருக்கும் தீபாவளி நகைச் சீட்டு, தீபாவளி இனிப்பு சீட்டு நாங்களே போட்டு தருவோம் என கூறி லபக்கலாம்.
*கட்சியில் உறுப்பினராகும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் (குறைந்தது 4 ஓட்டுகள்) கரன்ட் பில் / டெலிபோன் பில் / மொபைல் பில் / மளிகை பில் என ஏதோ ஒன்றை கம்பெனி ஏத்துக்கும் எனலாம்.
*கட்சியில் உறுப்பினராகும் நபரின் குடும்பத்தில் குழந்தைகள் இருந்தால், இலவசமாக டியூஷன் சொல்லிக் கொடுப்போம் என சத்தியம் பண்ணலாம்.
*கைப் பக்குவத்தோடு கமலாலயத்தில் அரைக்கப்பட்ட ஸ்பெஷல் பிராண்டு இட்லிப் பொடி, சாம்பார் பொடி, பருப்பு பொடி கொடுத்து உறுப்பினர்களைக் கவரலாம்.
*பொங்கல், புத்தாண்டு, தீபாவளிக்கு ரிலீஸாகும் புதுப்பட டிக்கெட்களைக் கொடுத்து இளைஞர்களைக் கவரலாம்.
கேஸ் சிலிண்டர் மானியத்துக்கு ஆரம்பிச்சு பாஸ்போர்ட் எடுக்கிறது வரை எல்லாத்துக்கும் ஆதார் கார்டு வேணும்னு சொல்றாங்க. இப்படியே போனாக்கா, இன்னமும் எது எதுக்கெல்லாம் ஆதார் கேட்பாங்கன்னு யோசிச்சுப் பார்த்தேன், கொஞ்சம் நல்லாத்தான் இருக்கு...டாஸ்மாக்கில் சரக்கு வாங்க ஆதார் கார்டு அவசியம்னு சொல்லிடுங்க.
அப்படியே கொடுத்த கடன வசூல் செய்ய வங்கி ஊழியர்கள் வர்றப்ப, பொண்டாட்டிங்க மாசத்துல ரெண்டாவது தடவ பியூட்டி பார்லர் போறப்ப, ஒரு ஊரே இலவச தரிசனத்து வரிசைல நிக்கும்போது துட்டு இருக்குனு சிலர் மட்டும் கோயில் சிறப்பு தரிசன டிக்கெட் வாங்கறப்ப, டிரிங்க் அண்ட் டிரைவ்ல போற பைக்கை நிறுத்தி போலீஸ் ஊதச் சொல்றப்ப, எடுத்த டிசைன் சரியில்லன்னு துணிக்கடைக்குப் புடவை மாத்த போறப்ப ஆதார் கார்டு கண்டிப்பா வேணும்னு சொல்லிட்டா கொஞ்சம் கும்பலக் குறைக்கலாம்; வம்புகளத் தடுக்கலாம்.
அதே சமயம், சலூன் கடையில கட்டிங் - ஷேவிங் பண்றப்ப, டீக்கடை பஜ்ஜில எண்ணெய் புழிய பேப்பர் வாங்கறப்ப, ரஜினி, கமல், அஜித், விஜய் படங்களைப் பார்க்க முதல் நாள் டிக்கெட் வாங்குறப்ப, பிடிச்ச பாட்ட டி.விக்கு போன் பண்ணிக் கேக்குறப்ப, பக்கத்து வீட்டுக்காரன் தன் பொண்டாட்டியோட சண்டை போடுறத பார்க்கிறப்ப, பசங்க ஹோம்வொர்க் செய்யலைன்னா ‘உன் அப்பாவ கூட்டிக்கிட்டு வா’ன்னு டீச்சர் சொல்றப்ப, அம்மா ‘காய்கறி வாங்கிட்டு வா’ன்னு சொல்றப்ப எல்லாம் ஆதார் கார்டு கேட்க ஆரம்பிச்சா, சில பல வம்புகளை புதுசாவும் வளர்க்கலாம்.
ஆல்தோட்ட பூபதி