பிரமிக்க வைக்கிறார் விஜய்!



சொல்கிறார் சதுரங்க வேட்டை நட்ராஜ்

‘பாம்பேல பாட்ஷா... தமிழ்நாட்டுல மாணிக்கம்’ மாதிரி, பாலிவுட்டில் நட்டி... தமிழ்நாட்டில் நட்ராஜ் என வெயிட்டு காட்டுகிறார் நட்ராஜ் சுப்ரமணியம். இந்தியாவிலேயே மிக அரிதான ஒளிப்பதிவாளர் கம் ஹீரோ.

‘சதுரங்க வேட்டை’ ஹீரோவாக சர்ப்ரைஸ் ஹிட் கொடுத்தவர், இப்போது சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் கேமராமேன். பாலிவுட்டை பொறுத்தவரை ‘ராஞ்ஜனா’, ‘ஹாலிடே’ என இவர் கேமரா தொட்ட படமெல்லாம் வேற லெவல்! ‘‘தமிழில் மறுபடி உங்க கேமராவுக்கு வெல்கம்!’’ என்றால் முகம் மலர்ந்து புன்னகைக்கிறார்!‘‘ ‘யூத்’ படத்துக்குப் பிறகு 12 வருஷம் கழிச்சு, மறுபடி விஜய் படத்துக்கு கேமரா பண்றீங்க... எப்படியிருக்கு ஃபீல்?’’

‘‘முன்னாடி ‘யூத்’ பண்றப்பவே அவர் மாஸ் ஹீரோ. அவரோட நட்பு அங்கேதான் கிடைச்சது. ‘துப்பாக்கி’யில் ‘வெண்ணிலவே...’ பாட்டு மட்டும் ஷூட் பண்ணிக் கொடுத்தேன். அதுக்காக ஐரோப்பால ஒரு சிகரத்துக்கு ஹெலிகாப்டர்ல போயிட்டிருந்தோம். நான், விஜய் சார், அவரோட அசிஸ்டென்ட், முருகதாஸ் சார்னு நாலே பேர்தான். மேலே பறந்துகிட்டிருந்தப்ப எங்க ஹெலிகாப்டரை நோக்கி பெரிய பனிமூட்டம் வந்துக்கிட்டிருந்தது. பைலட் கிட்ட கேட்டப்போ ஷாக்! ‘இதெல்லாம் பிரிட்டிஷ் வெதர்ல சகஜம்தான்.

அந்தப் பனி மூட்டம் நெருங்கறதுக்குள்ள நாம லேண்ட் ஆகலைன்னா, மலை மேல மோதிடுற அபாயம் இருக்கு’ன்னார். நாங்க ஆடிப்போயிட்டோம். உடனே முருகதாஸ் சார், ‘நாம எல்லோரும் சேர்ந்து கடைசியா ஒரு செல்ஃபி எடுத்துக்கலாம்’னு செல்ஃபி எடுக்க, அந்த திடுக் திடுக் சூழ்நிலையிலும் சிரிச்சிட்டோம். அப்பவே விஜய், ‘ரொம்ப இன்ட்ரஸ்ட்டிங்கான படம் ஒண்ணு பண்ணப் போறேன். அதுக்கு நீங்கதான் கேமரா பண்ணணும்’னு சொன்னார். அவரால வந்த வாய்ப்புதான் இது!’’‘‘சிம்புதேவன் - விஜய் - ஸ்ரீதேவின்னு கலக்கலான காம்பினேஷனா இருக்கே?’’

‘‘போட்டு வாங்கப் பாக்குறீங்களா... ‘படத்தைப் பத்தி நாம யாரும் இப்போ எதுவும் மீடியாகிட்ட ஷேர் பண்ணிக்க வேணாம்’னு மென்மையா சிரிச்சுக்கிட்டே சொன்னார் சிம்புதேவன். ரொம்ப அமைதியான மனிதர். முதல்நாள் ஸ்பாட்டுல விஜய் சாரே, ‘வாங்க ப்ரோ’ன்னு ஸ்மைலியா வரவேற்றார். ஸ்ரீதேவி மேம்க்கு என்னை நல்லா தெரிஞ்சிருக்கு. ‘தமிழ்ல நீங்க ஹீரோவா நடிச்ச படம் ஹிட்னு கேள்விப்பட்டேன்’னு சொல்லி முதல் சந்திப்பிலேயே என்னை ஆச்சரியமாக்கினாங்க.

ரசிகர்கள் மேல விஜய் சாரும், அவர் மேல ரசிகர்களும் வச்சிருக்கற பாசத்தை ஸ்பாட்ல நேரடியா பார்த்து அசந்துட்டேன். ஒருநாள் ‘விஜய் சாரை பார்க்கணும்... போட்டோ எடுக்கணும்... இல்லேன்னா பிளேடால கையைக் கீறிக்குவோம்’னு ரசிகர்கள் துடியா துடிச்சிக்கிட்டிருந்தாங்க.

‘போட்டோஸ்தானே? வாங்க எடுத்துக்கலாம்’னு சொல்லி, கிட்டத்தட்ட 3 மணி நேரம் ரசிகர்கள் ஒவ்வொருத்தர் கூடவும் போஸ் கொடுத்துட்டே இருந்தார். ஒரு மனிதரால தொடர்ந்து அவ்வளவு மணி நேரம் சிரிச்சுக்கிட்டே எப்படி போஸ் கொடுக்க முடியுதுன்னு நினைக்கவே பிரமிப்பா இருந்துச்சு!’’‘‘ஹீரோவா உங்க ‘கதம் கதம்’ எப்படி வந்திருக்கு?’’

‘‘ரொம்ப நல்லா வந்திருக்கு. ‘சதுரங்கவேட்டை’ ஷூட்டிங் சமயம் இயக்குநர் மகேந்திரன் சாரை மீட் பண்ணி பேசிட்டிருந்தேன். அவர் மூலமா கிடைச்ச படம்தான் ‘கதம் கதம்’. ‘வைதேகி காத்திருந்தாள்’ படத்தோட தயாரிப்பாளர் தூயவன் சாரோட மகன், பாபு தூயவன் இயக்கியிருக்கும் படம்.

நேர்மையான போலீஸா நந்தாவும், நேர்மையில்லாத போலீஸா நானும் நடிச்சிருக்கோம். ‘கதம்’னு ஒரு குறள் தொடங்குது. கதம்னா ‘சினம்’னு ஒரு அர்த்தம் உண்டு. நந்தாவுக்கும் நல்ல பெயர் கிடைக்கக் கூடிய படம் இது.’’‘‘பாலிவுட், கோலிவுட்னு நிறைய ஹீரோக்களைப் பார்த்துட்டீங்க... உங்களுக்குப் பிடிச்ச ஹீரோ யாரு?’’

‘‘எனக்கு ஹீரோன்னா எங்க அப்பாதான். என் அண்ணன், ரெண்டு அக்காக்கள் மாதிரி நானும் டிகிரி முடிச்சு, மேற்படிப்பு படிக்கணும்னு அப்பா விரும்பினார். ஆனா, நான் +2 முடிச்சதே பெரிய சாதனைதான். ‘சதுரங்க வேட்டை’ பார்த்துட்டு அப்பா என்னைப் பாராட்டினதை பெரிய சந்தோஷமா நினைக்கறேன்...’’ ‘‘அடுத்து?’’

‘‘நாலு கதைகள் ரெடியா இருக்கு. விஜய் சார் படத்தோட வொர்க் வருகிற மார்ச், ஏப்ரல்ல முடியும். அப்புறம் நான் ஹீரோவா நடிக்கிற படங்களோட ஷூட்டிங் வரிசையா வெயிட்டிங். 2015ல எப்படியும் 3 படமாவது ரிலீஸ் ஆகும்னு எதிர்பார்க்கலாம். ‘தகடு தகடு’ பட இயக்குநரோட ஒரு படம், என் நண்பனும் ‘மிளகா’ பட டைரக்டருமான ரவிமரியா டைரக்ஷனில் ஒரு படம்னு அடுத்தடுத்து நடிக்கப்போறேன்!’’

‘‘ ‘புறம்போக்கு’ டைட்டில் உங்களோடதுன்னு சொன்னீங்களே... இப்போ, அதைப்பத்தி நீங்க பேசுறதில்லையே?’’‘‘உண்மைதான். ‘புறம்போக்கு’ என்னோட டைட்டில்தான். தயாரிப்பாளர் கவுன்சில்ல அதை ரிஜிஸ்டர் பண்ணியிருந்தேன். ஜனநாதன், தனஞ்செயன், ஆர்யா, விஜய்சேதுபதின்னு எல்லாரும் நண்பர்களா போனதால, அந்த டைட்டிலை அவங்களுக்குக் கொடுத்துட்டேன். ‘கதை என்னுது. டைட்டில் என்னுது’ன்னு சொல்லி காசு வாங்குறது இப்போ ஃபேஷனா ஆகிடுச்சே. எனக்கு அப்படி ஒரு பெயர் வந்திட விரும்பல.

‘உனக்கு வேணும்னா நீயே அந்த டைட்டிலை வச்சுக்கோ’ன்னு ஜனா சாரும் சொன்னார். ஆனா இது இல்லேன்னா, இன்னொண்ணு. ‘கெட்ட பையன்சார் இவன்’னு டைட்டிலை மாத்தி வச்சிட்டேன். சினிமாவில் எல்லாருமே எனக்கு நண்பர்கள்தான். விட்டுக்கொடுக்கிறவன் கெட்டுப்போறதில்லைன்னு பெரியவங்க சொல்வாங்க!’’

- மை.பாரதிராஜா