மெல்லமாக மேக்கப்பை கலைத்துக்கொண்டு பூனைக்குட்டி வெளியே வருகிறது. ‘சிவன் கோயில் இருந்த இடத்திலதான் தாஜ்மஹாலை கட்டியிருக்காங்க’ன்னு சொல்லியிருக்காரு உத்தரப் பிரதேச மாநில பா.ஜனதா தலைவர் லட்சுமி காந்த் பாஜ்பாய்.

நல்லவேளை, ஷாஜகானின் உண்மையான பெயர் சந்தோஷ் சுப்பிரமணியம், மும்தாஜோட உண்மையான பெயர் மம்தா மோகன்தாஸ்னும் அண்ணன் சொல்லாம விட்டாரு. இப்படியே விட்டாக்கா, கிணத்தூர் என்பதே காஷ்மீராக மாறிச்சு, செந்திலாண்டவர் கோயில் இருந்த இடத்தில்தான் செங்கோட்டை கட்டுனாங்க,
இந்த குதுப்மினார் கட்டுறதுக்கு முன்னால அங்க காளியம்மன் கோயில்தான் இருந்திச்சு, திருநாவுக்கரசு திருநாவுக்கரசர் ஆனா மாதிரி, பாபா என்பவரே நியூமராலாஜி பார்த்து தன் பெயரை பாபர்னு மாத்திக்கிட்டாரு, ஐயப்பன் கோயில் இருந்த இடத்துலதான் ஆக்ரா கோட்டை கட்டுனாங்க, முருகர் கோயில் இருந்த இடத்துலதான் முஹல் கார்டன் கட்டுனாங்கனு எல்லாம் சொன்னாலும் சொல்வாங்க.

நாட்டுல பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், கல்லூரிகள், கழிப்பறைகள்னு மக்களுக்காக கட்ட வேண்டிய விஷயங்கள் நிறையா இருக்கும்போது, இப்போ எதுக்குண்ணே ஏற்கனவே கட்டிய கட்டிடங்களைப் பற்றிய ஆராய்ச்சி?
சில பல பாடல்களை கேட்கிறப்ப, சில வார்த்தைகள் மாறினா நம்ம தினசரி வாழ்க்கைக்கு இன்னமும் பொருத்தமானதா இருக்கிற மாதிரி தோணும். இந்த ‘முஸ்தபா முஸ்தபா’ பாட்டுல ஒரு வரி வரும், ‘இன்பம் வரலாம் துன்பம் வரலாம்... நண்பன் ஒருவன் பங்கு பெறலாம், கல்லூரி நட்புக்கில்லை முற்றுப்புள்ளியே’, இதுல ‘கல்லூரி’ வர இடத்துல ‘கடன் தரும்’னு போட்டு பாடிப் பாருங்க... பொருத்தமா இருக்கும்.
‘பூவே உனக்காக’ படத்துல வர்ற ‘ஆனந்தம் ஆனந்தம் பாடும்’ பாட்டுல வர்ற ‘மனதில் நின்ற காதலியே மனைவியாக வரும்போது சோகம் கூட சுகமாகும், வாழ்க்கை இன்ப வரமாகும்’ லைன்ல ‘காதல் முதல்ல பொணமாகும், வாழ்க்கை ரொம்ப ரணமாகும்’ன்னு மாத்திப் பாடிப் பாருங்க, இன்னமும் பிச்சுக்கும்.
இந்த ‘எதிர்நீச்சல்’ல வர்ற ‘மின்வெட்டு நாளில் இங்கே மின்சாரம் போலே வந்தாயே’ பாட்டுல, ‘மின்சார’த்துக்கு பதிலா ‘சம்சாரம்’னு போட்டு பாடுங்க, இன்னைக்கு பஜ்ஜி புழிய பயன்படுற பல நாளிதழ்களில் வரும் கள்ளக்காதல் செய்திகளுக்கு மேட்சிங்கா போகும்.
இந்த வார குட்டிச்செவுரு போஸ்டர் பாய்ஸ்...
பூக்களின் மீது எதுக்கு போர்? மழலைகள் மீது எதுக்கு மதம்?
வளரும் குழந்தைகள் மீதும் வஞ்சத்தைக் காட்டிய பெஷாவர் தாக்குதல் நடக்குமளவு மனிதத்தை நிறுத்தியிருக்கும் வளர்ந்த பெரியவர்கள் நாம் எல்லோருமே!
பல வருஷங்களுக்கு முன்னால சில தாத்தாக்கள், ‘பாம்பு பால் குடிக்கும்... பழிவாங்கும்... முட்டை சாப்பிடும்’னு கலர் கலரா ரீல் விட்டாங்க. ‘எத்தனை நாள் பாம்பு பச்சை முட்டையவே சாப்பிடும், ஒரு ஆம்லெட், ஆப்பாயில், முட்டை மாஸ் போட்டுத் தரமாட்டீங்களா?’ன்னு கலாய்ச்ச பின்தான் அவங்க ஒதுங்கினாங்க.
அப்புறம் சில அப்பாக்கள் சில வருஷங்களுக்கு முன்னால, ‘பிள்ளையாரு பால் குடிச்சாரு’ன்னு டகால்டி புகால்டி செஞ்சாங்க. ‘ஏன்டா, புள்ளையாரு வெறுமனே பாலை மட்டும் குடிச்சா பாவமில்லையா? ஒரு காபி, டீ, ஹார்லிக்ஸ் போட்டுத் தரமாட்டீங்களாடா’ன்னு அதாரு விட்டதுக்கு அப்புறம்தான் அவங்க உதார் விடுறத நிறுத்துனாங்க.
இப்போ பேரன்கள், புதுசா கொஞ்ச வருஷமா ஒரு மேட்டர கொண்டு வந்திருக்காங்க. இது பல வருஷமா ஓடுனாலும், இரண்டரை வருஷத்துக்கு ஒரு தடவை சனிப்பெயர்ச்சி நடக்கிறப்ப, அந்த புல்லரிக்க வைக்கும் செய்தி ஈமெயில், வாட்ஸ்சப், ட்விட்டர், பேஸ்புக்குனு எல்லாத்தையும் செல்லரிச்சுட்டு போகும்.
விஷயம் என்னன்னா, எந்த நாட்டின் செயற்கைக்கோள் என்றாலும், சனி பகவான் இருக்கும் திருநள்ளாறு கோயில் மேல் பறக்கையில், 3 வினாடிகள் ஸ்தம்பித்துவிட்டு போகுமாம். தமிழினத்துக்கே தந்தையா பெரியார வச்சுக்கிட்டு, இப்படி முட்டை போண்டாக்குள்ள முட்டை எப்படி போச்சு ரேஞ்சுலையே சிந்திக்கிறீங்களேடா? உங்களையெல்லாம் ஒன் தவுசண்ட் பெரியார் வந்தாலும் திருத்த முடியாதுடா!