அவன் அவள் unlimited



கள்ளக்காதலுக்கு மரபணு காரணம்?

தன் ஆதாயத்துக்காக ஒருவரை ஏமாற்றுவது... அதைத்தான் உலகம் காதலென்று சொல்கிறது!
- ஆஸ்கர் வைல்டு

திருமணத்துக்கு வெளியே உறவு தேடுதல், இங்கே காலம் காலமாக நடந்து வந்திருக்கிறது. காமக்கிழத்தி, காதற்பரத்தை கான்செப்ட்களை கண்டுபிடித்ததே நாம்தானே. பொருந்தாத காமத்துக்கென்றே தனியாக ஒரு திணை இருந்திருக்கிறது நம் இலக்கியங்களில்.

‘அரசனை நம்பி புருஷனைக் கைவிட்ட மாதிரி’, ‘காத்திருந்தவன் பொண்டாட்டிய நேத்து வந்தவன் தட்டிட்டுப் போனான்’, ‘அண்ணன் பொண்டாட்டி அரை பொண்டாட்டி’ என்பன போன்ற பழமொழிகளின் உட்பொருள் கள்ளக்காதல்தான்!

‘நான் போட்ட பூமாலை மணம் சேர்க்கவில்லை... நீதானே எனக்காக மடல் பூத்த முல்லை...’
‘அடடா எனக்காக அருமை குறைஞ்சீக... களங்கம் வந்தாலென்ன பாரு... அதுக்கும் நெலான்னுதான் பேரு...’‘ஒரு நீரோடை மீனுக்கு கரை மேல் ஆசை வந்ததே... இனி என்னென்ன நேர்ந்திடுமோ!’

‘பூவுக்குள்ளும் நாகம் உண்டு... சாமிக்கும்தான் வீடு ரெண்டு!’ இப்படி கள்ளக் காதலுக்காகவே உணர்வுபூர்வ வரிகளை வார்த்துத் தந்திருக்கிறது நம் சினிமா. ஆனால், இதெல்லாம் பெரும்பாலும் திருமணம் ஆன ஆண், வெளியில் காதலைத் தேடும் கதைதான். பெண் திருமணத்தைத் தாண்டி காதலிக்கிறாள் என்பதை எந்த சினிமாவாலும் நியாயப்படுத்த முடிந்ததில்லை. நிதர்சன வாழ்விலேயே ஆண்களின் ஒழுக்க மீறல்களை நாம் சின்ன கிண்டலோடு காமெடியாக ஏற்றுக்கொள்கிறோம். பெண்ணின் ஒழுக்க மீறல் அப்படியில்லை.

இதற்கான காரணத்தை மேலோட்டமாகப் பார்த்தால், ஆணாதிக்கம். ஆழமாய்ப் பார்த்தால், இது உயிரியல் சார்ந்தது. ஆண் பெண் சமத்துவம் அதிகபட்சம் நிலவும் அமெரிக்காவிலேயே க.காதலில் ஆணும் பெண்ணும் சமமில்லை.

அங்கே, ‘‘40 சதவீத ஆண்கள் திருமணம் தாண்டிய உறவில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்றால், பெண்களில் 25 சதவீதம் பேர்தான் எல்லை தாண்டுகிறார்கள்’’ எனப் புள்ளிவிவரம் சொல்கிறார், ஹெலன் ஃபிஷர் எனும் பரிணாம உளவியலாளர். ‘நாய் மனிதனைக் கடித்தால் சாதாரணம், நாயை மனிதன் கடிப்பதுதான் செய்தி’ என்பார்கள். அரிதாக நடப்பதால் பெண்ணின் ஒழுக்கக் கேடு செய்தியாகிறது.

இதை மேலும் நுட்பமாகப் பார்க்கிறார் ஹெலன். ‘‘இந்த உலக வாழ்வானது ஒரு புதையல் வேட்டை என்றால், பெண்ணின் உடல்தான் இங்கே மறைத்து வைக்கப்பட்ட பொக்கிஷம்!’’ என வாதிடுகிறார் அவர். ஆண் எனும் காட்டு விலங்கை வீட்டு விலங்காக மாற்ற பெண்ணுடலை மறைத்து வைப்பது தேவையாக இருக்கிறது.

ஆணுக்கு இயற்கை எந்தப் பொறுப்பையும் தரவில்லை. ‘பெண் உடல் வேண்டும்’ என்ற வேட்கையைத்தான் தந்திருக்கிறது. அதை துருப்புச் சீட்டாக வைத்து அவன் மேல் பொறுப்புகளைச் சுமத்த வேண்டும். ‘பெண் உடல் வேண்டும் என்றால், திருமணம் என்ற ஒப்பந்தத்துக்குள் வந்தாக வேண்டும்... சில பொறுப்புகளைச் சுமந்தாக வேண்டும்’. இந்த நிர்ப்பந்தத்தை சமூகம் ஆணுக்காக உருவாக்குகிறது. நம்மூரில் கல்யாணத்தை ‘கால்கட்டு’ என்றது இதனால்தான்.

திருமணத்துக்கு வெளியே எளிதாகப் பெண் உடல் கிடைத்துவிட்டால், அவன் பொறுப்புகளைச் சுமக்கமாட்டான். ஸோ, அது கிடைக்காமல் பார்த்துக்கொள்வது சமூகத்தின் கடமை. திருமணத்துக்கு வெளியே பெண்ணுடலை ஆணுக்குக் கிடைக்காமல் செய்வதுதான் எல்லா கலாசாரத்துக்கும் பொதுவான நோக்கம்.

எத்தனை வெற்றிகரமாக அதைச் செயல்படுத்துகிறது என்பதுதான் அந்தக் கலாசாரத்தின் வெற்றி. அந்த விதத்தில் நம் கலாசாரம் வெற்றிகரமாக பெண்ணுடலை மறைத்து வைத்திருக்கிறது. வியாபாரிகள் எல்லோரும் பேசி வைத்து சர்க்கரையைப் பதுக்கி வைத்தால், அதன் விலை ஆட்டோமேட்டிக்காக ஏறும் இல்லையா? அப்படித்தான் பெண்ணுடலின் மதிப்பு இங்கே ஏறிக் கிடக்கிறது.

‘எனக்கு வாழ வழியில்லை; என் உடலை விற்றுப் பிழைத்துக்கொள்ளக் கொள்ளப் போகிறேன்’ என்ற விரக்தி முடிவை ஒரு ஆண் எடுக்கவே முடியாது. ‘கடை விரித்தேன்... கொள்வாரில்லை’ என்பது போல் அவன் உடலுக்கு எந்த மதிப்பும் இல்லை. ஆனால், பெண் உடலுக்கு மதிப்பு அதிகம்.

மறைத்து வைக்கும் வரைதான் அதற்கு மதிப்பு. திருமணத்துக்கு வெளியே ஒரு பெண் தன் உடலை ஆணுக்குக் கொடுக்கிறாள் என்பது ஒப்பந்தத்தை மீறிய செயல். சர்க்கரை பதுக்கிய வியாபாரிகளில் ஒருவன் மட்டும் அதைத் திருட்டுத்தனமாய் விற்பது போன்ற துரோகம் அது. இப்போதும் சக பெண்ணொருத்தி திருமணம் தாண்டிய உறவில் சிக்கினால், பெண்களே இழித்தும் பழித்தும் பேசுவது இதனால்தான். சீரியல் பார்த்து நம் பெண்கள், ‘கலி முத்திப் போச்சு பார்த்தியா?’ எனக் கலாய்ப்பதற்கும் அங்கலாய்ப்பதற்கும் பின்னால் இவ்வளவு உளவியல் இருக்கிறது.

அதுதான் பிடிக்கலையே... இந்த மாதிரி கதைகளை பார்க்காமலே இருக்கலாம் இல்ல..?

‘‘அதெப்படி? நாம் எல்லோருமே அடுத்தவர் பிரச்னையில் நீதிபதியாகவும் நம் பிரச்னைகளில் வக்கீலாகவும் இருக்கிறோம். பக்கத்து வீட்டு பாலியல் பிறழ்வு என்பது நம்மை நீதிபதியாக்கி, உத்தமர் இமேஜ் கொடுக்கிறது. அதனால் அது பிடிக்கத்தான் செய்யும்’’ என்கிறார் சென்னையைச் சேர்ந்த மனநல மருத்துவரான அசோகன். மனைவியை விட, திருமணம் தாண்டிய உறவை ஒருவன் அதிகம் நேசிக்க என்ன காரணம்? அதற்கும் விடை இவரிடம் கிடைத்தது.

‘‘ஆண் ஒரு வேட்டை விலங்கு. கஷ்டமான காரியத்தைச் செய்து முடிப்பதில் சந்தோஷப்படுபவன். அதில் மார்தட்டிக்கொள்பவன். மனைவி அவன் கட்டிலிலேயே இருக்கிறாள். திருமணம் தாண்டிய உறவுதான் கஷ்டமான இலக்கு. ரிஸ்க் எடுத்து பறித்துக் கொண்டு வந்த திருட்டு மாங்காயின் சுவை அதில் உண்டு’’ என்கிற டாக்டர் அசோகன், செக்ஸுக்கு இதில் முக்கிய பங்கிருப்பதாக அறுதியிட்டுச் சொல்கிறார்.

‘‘செக்ஸுவல் ஃபேன்டஸி என்பார்கள். அதாவது வழக்கமான செக்ஸ் போரடித்து, விதவிதமாக அதில் முயற்சித்துப் பார்ப்பது... வக்கிரங்களையும் கலப்பது. இதை மனைவியிடம் / கணவனிடம் காட்டிக் கொள்ளாத பலரும் திருமணம் தாண்டிய உறவில் காட்டுகிறார்கள்!’’ என்கிறார் இவர்.செக்ஸுவல் ஃபேன்டஸி நமக்கொன்றும் புதிதல்ல. நம்மூர் கோயில் சிற்பங்களிலேயே அது ஓரளவு உண்டு. அதை ஏன் மனைவியிடம் காட்டக் கூடாது? இதற்கும் காரணம் இருக்கிறது.

மனைவியோடு யாரும் செக்ஸை மட்டும் பகிர்வதில்லை. செக்ஸ் வக்கிரங்களை இரவில் காட்டிவிட்டு பகலில் அவளோடு சகஜமாகப் பழகுவது கஷ்டம். செக்ஸை மட்டும் பகிரக் கூடிய இன்னொரு உறவென்றால் சங்கோஜங்களைக் களையலாம் என்பது உலகம் முழுவதுமுள்ள உளவியலாளர்கள் கருத்து.

ஏன், திருமண உறவை விட, கள்ள உறவின்போது ஆணுக்கும் பெண்ணுக்கும் ‘நிடித்த’ இன்பம் கிடைப்பதாகக் கூடச் சொல்கிறார்கள். இதற்குக் காரணம், அந்நேரம் ஏற்படும் பயமாம். அப்போ பயமிருந்தால் பலான மாத்திரைகள் தேவையில்லையா?இதென்ன புதுக்கதை?

பெண் உடல் வேண்டும் என்றால், திருமணம் என்ற ஒப்பந்தத்துக்குள் வந்தாக வேண்டும்... சில பொறுப்புகளைச் சுமந்தாக வேண்டும். இந்த நிர்ப்பந்தத்தை சமூகம் ஆணுக்காக உருவாக்குகிறது.

ஜீன் பண்ணும் சதி

திருமணம் தாண்டிய உறவுக்கு மனக்காரணங்கள் ஆயிரம் இருக்கலாம். உடல் காரணம் தேடிய ஹாசே வாலம் என்ற ஸ்வீடன் நாட்டுக்காரர், ஸிஷி3-334 என்ற மரபணுவை குற்றவாளியாக அறிவித்தார். ஆண்களின் உடலில் இந்த மரபணு ஒன்றிரண்டு இருந்தால் கூட அவர்கள் குடும்ப உறவில் நம்பிக்கை இன்றி, ‘கோபியர் கொஞ்சும் ரமணா’ ஆவார்களாம். ‘எல்லாம் ஜீன் பண்ணும் சதி’ என பார்ட்டிகள் இதை வைத்து தப்பிக்க முயற்சிக்கலாம்!

நம்ம அபார்ட்மென்ட்டுக்கு புதுசா வந்திருக்குற ஆபீசர் பொண்டாட்டி,  எப்பவும் போனும் கையுமாவே இருக்கா. ‘ஓரகத்தி’ சீரியல் ஹம்சா மாதிரி அக்கம் பக்கத்துல யாரோடவாவது பத்திக்கிச்சோ!


- தேடுவோம்...