நடைவெளிப் பயணம்



அல்வாவுக்கு கடுகு தாளிப்பது

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களுக்கு ஒரு சகோதரர் உண்டு. என்.எஸ்.திரவியம். அவர் சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தமிழ்த் திரைப்படம் எடுத்தார். ‘நீதிபதி’. அந்த நாளில் தமிழ் சினிமாக்களில் நிறைய நீதிபதிகள் வருவார்கள்.

 அந்த நாளில் நீதித்துறை அவ்வளவு முக்கியமாகக் கருதப்பட்டதன் ஓர் அடையாளமாக இதை வைத்துக் கொள்ளலாம். எனக்குத் தெரிந்து 1940களிலிருந்தே சமூகப் படங்கள் என்றால் நிச்சயம் ஒரு கோர்ட் சீன் வரும். அதென்ன சமூகப் படம் என்று சிலர் கேட்கக் கூடும்! சமகாலத்தைப் பிரதிபலிப்பதாகத் தயாரிப்பாளர் கருதும் படம். நீதிபதி இல்லாத கோர்ட் ஒரு கோர்ட்டா?

இது ஒருபுறமிருக்க, என்.எஸ்.கிருஷ்ணனின் சகோதரர் எடுத்த படத்திலும் ஒரு நீதிபதி வருவார். மீண்டும் எஸ்.வி.சஹஸ்ரநாமம். ‘பராசக்தி’ படத்தில் அவர்தானே தம்பிக்கும் தங்கைக்கும் கொலை, கொலை முயற்சிக் குற்றங்களுக்காக நீதி கூறும்படி நேர்கிறது? ‘பராசக்தி’ ஓடின ஓட்டத்தில் பாதியாவது இந்தப் படம் ஓடக்கூடாதா?ஆனால் ‘நீதிபதி’ விசேஷமாக ஓடவில்லை.

மிக நீளமான படம். ஜெமினி கணேசனும் கே.ஆர்.ராமசாமியும் சேர்ந்து நடித்த படம் அது ஒன்றுதான் என்று நினைக்கிறேன். ஆனால் படம் ஓடாததற்கு அது காரணம் அல்ல. நான் பார்த்தேன். ஆனால் இன்னொரு தகவல் ஆச்சரியமாக இருக்கும். இந்தப் படத்தை இந்தியில் எடுக்கப் போட்டா போட்டி நடந்தது. இப்படிப் போட்டி வந்தால் இறுதியில் யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்து விடுவார்.

ஜெமினியில் ‘அபூர்வ சகோதரர்கள்’ என்றொரு படத்தை எடுத்தார்கள். இதை பம்பாயில் ஏ.ஆர்.கர்தார் என்பவர் 1947 அளவிலேயே எடுக்கத் திட்டமிட்டு இருந்திருக்கிறார். ஆனால் போட்டா போட்டி காரணமாக அதைக் கைவிட வேண்டியிருந்தது. அதன் பிறகு ‘லவ்ஸ் ஆஃப் கார்மன்’ என்ற படத்தை எடுக்கத் திட்டமிட்டார். அதே படத்தைத் தெற்கில் ஒருவர் பானுமதியைக் கதாநாயகியாக வைத்துத் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் எடுத்துக் கொண்டிருப்பதாக விளம்பரம் செய்தார். இம்முறை கர்தார் விட்டுக் கொடுக்கவில்லை. ‘லவ்ஸ் ஆஃப் கார்மன்’ படத்துக்கு அமெரிக்காவிலேயே பெரிய வெற்றி கிட்டவில்லை. ஆனால் இந்தியாவில் போட்டா போட்டி!

இங்கு ஒரு தமிழ்ப் படத்தை இந்தியில் எடுக்கப் போட்டி. ஒருவரும் விட்டுக்கொடுக்கவில்லை. அன்று காப்புரிமைச் சட்டங்கள் பற்றிப் பரவலாகத் தெரியாது. ஐ.எஸ்.ஜோஹர் என்பவர் எந்த ஹாலிவுட் படம் நன்றாக ஓடினாலும், அதை அப்படியே தழுவி உடனே ஓர் இந்திப் படத்துக்குத் திரைக்கதை எழுதிவிடுவார்.

இப்படித்தான் ஒரு முறை ட்வென்டியத் செஞ்சுரி ஃபாக்ஸ் நிறுவனம் எடுத்த ‘நாக் ஆன் வுட்’ என்ற படத்தைத் தழுவி ஜோஹர் ஒரு திரைக்கதை எழுதி, அதை ஒருவர் இந்திப் படமாக எடுத்தார். ஃபாக்ஸ்காரர்கள் வழக்குத் தொடர்ந்து தீர்ப்பில் கடுமையான நஷ்ட ஈட்டைப் பெற்றனர். அன்றி லிருந்து ஜோஹருக்கு நிறைய ஓய்வு நேரம் கிடைத்தது.

என்.எஸ்.திரவியம் இரு முறை பணம் பெற்றாரா என்று தெரியாது. ஆனால் ‘நீதிபதி’ திரைப்படத்தைத் தழுவி இரு இந்திப் படங்கள் வெளியாகின. இரு தயாரிப்பாளர்களும் மிகவும் திண்டாடியிருப்பார்கள். காரணம், இரு படங்களுக்கும் ஒரே நடிகர்தான் கதாநாயகன்! கிஷோர் குமார். ஒரு படத்தில் கதாநாயகன் பாடும் ஒரு பாட்டில் ‘நீலக் குடைக்காரன் பெரிய சி.ஐ.டி’ என்று வரும். நீலக் குடைக்காரன்தான் கடவுள்.

கடவுளை நீலக் குடைக்காரன் என்று சொல்லும் வர்ணனை ஒரு இந்திப் பழமொழி யில் வருகிறது. ‘படாயி சி.ஐ.டி. ஹை நீலிச் சத்திரிவாலா’. இன்னொரு பழமொழி, ‘ஒவ்வொரு தானியத்தின் மீதும் அதை உண்ணப் போகிறவன் பெயர் எழுதி யிருக்கிறது’. அது, ‘தானே தானே பே லிக்கா கானே வாலேக்கா நாம்’.

இன்றைய தமிழ்ப்படங்களில் பழமொழிகளுக்கு இடம் இல்லை என்று நினைக்கிறேன்; இந்திப் படங்களிலும் இல்லை. இலக்கியச் சுவை தேவைப்படும் திரைப்பாடல்கள் நம் தயாரிப்பாளர்கள் எடுக்கும் ‘சமகால’ப் படங்களில் அல்வாவுக்குக் கடுகு தாளித்துப் போடுவது போல. ஆனால் ஆண்டுதோறும் நடக்கும் இந்தியத் திரைப்பட விழாவில் பல முறை தமிழ்ப் பாடலாசிரியர்கள் தேசிய விருது வாங்கியிருக்கிறார்கள்.

ஒவ்வொரு தங்கப் பதக்கத்திலும் அதைப் பெறுபவர் பெயர் எழுதி யிருக்கும்இன்று காலம் மிகவும் மாறியிருக்கிறது. அண்ணனுக்காக உயிரை விடும் தங்கை, அம்மாவுக்காகக் காதலைத் தியாகம் செய்யும் நாயகன், அப்பா செய்த குற்றத்துக்காகச் சிறை செல்லும் மகன் போன்ற சூழ்நிலைகள் வேறொரு தலைமுறையைச் சார்ந்தவை.

ஆதலால் தத்துவப் பாடல்கள் இன்று காண, கேட்க முடியாது. முன்பு அது ஒரு ‘ஸ்டண்ட்’ சினிமாவாக இருந்தால் கூட ஒரு தத்துவப் பாட்டு இருக்கும். ‘தேவதாஸ்’ படமானால் காதலை விட உலகம், வாழ்க்கை, துணிந்த மனம், துணியாத மனம் என வண்டி யளவு தத்துவம் சூறாவளிப் புயலாகப் பொழியும்.

இந்தத் தத்துவப் பாட்டுகள் சூரியகுமாரி நடித்த படங்கள் (1937) காலத்திலிருந்து இருக்கின்றன. அப்புறம் பிச்சைக்காரர் பாட்டு. ராண்டார் கை என்ற எழுத்தாளர் ‘‘ ‘ஐயா சிறு பெண் ஏழை என்பால் மனமிரங்காதா’ என்ற பாட்டை நிஜ வாழ்க்கையில் பாடாத பிச்சைக்காரனே கிடையாது’’ என்று எழுதியிருப்பார்.

கதாநாயகியோ, கதாநாயகனோ, மிகுந்த துக்கத்துடன் ரயிலில் போய்க் கொண்டிருக்க, அவர்கள் மனநிலைக்கேற்ப ஒரு குருட்டுப் பிச்சைக்காரன் ஒரு சிறுமி வழிகாட்ட... ரயிலில் பாடியபடியே வருவான். எம்.எம்.மாரியப்பா என்பவர் இந்தத் தத்துவப் பாட்டுகளுக்குப் பெயர் போனவர். நாகையா ஒரு படத்தில் மேடையிலேயே ‘விதியின் விளையாடல்’ என்று பாடுவார்.

இந்திப் படங்களில் சைகல், பங்கஜ் மல்லிக், கே.சி.டே போன்றவர்கள் தத்துவப் பாடல்களுக்குப் பெயர் போனவர்கள். (மன்னா டே என்ற புகழ்பெற்ற வட இந்திய சினிமாப் பாடகர், கே.சி.டேயின் மகன்.) பக்திப் பாடல்களுக்கும் தத்துவப் பாடல்களுக்கும் வேறுபாடுகள் உண்டு. நான் ‘சிந்தாமணி’ என்ற படத்தைப் பார்த்தபோது எட்டு வயது இருக்கும். அதில் ‘பஜனை செய்வோம் கண்ணன் நாமம்’, பக்திப் பாட்டு. ‘ஞானக்கண் ஒன்று இருந்திடும் போதினிலே’ தத்துவம். இரண்டையும் தியாகராஜ பாகவதர் பாடுவார். நிஜ வாழ்க்கையில் அவருடைய கடைசி நாட்களில் இப்படிப் பாடிய
படியே இறந்தார்.

தமிழில் தத்துவப் பாடல் எழுதும் பாடலாசிரியர் யாரும் பாட்டை எழுதி, அவரே பாடுவேன் என்ற நிபந்தனை விதித்ததில்லை. இந்தியில் பிரதீப் என்ற பாடலாசிரியர் அவரே பாடுவேன் என்று பிடிவாதம் பிடிப்பார். ஒன்று சொல்ல வேண்டும். அவர் பாடல்கள் மிகவும் பிரபலமடைந்தன. ‘மனிதன் மாறி விட்டான்’ என்ற தமிழ்ப் பாட்டின் ஒரிஜினல், பிரதீப் பாடிய ஒரு இந்திப் பாடல். அவர் மாறவே இல்லை, கடைசி வரையில்.

இன்று காலம் மிகவும் மாறியிருக்கிறது. அண்ணனுக்காக உயிரை விடும் தங்கை, அம்மாவுக்காகக் காதலைத் தியாகம் செய்யும் நாயகன், அப்பா செய்த குற்றத்துக்காகச் சிறை செல்லும் மகன் போன்ற சூழ்நிலைகள் வேறொரு தலைமுறையைச் சார்ந்தவை.

படிக்க

என் இரு நூல்களைச் சிபாரிசு செய்கிறேன். இவை விரைவில் வெளியாகிவிடும். ஒன்று, சென்னை நற்றிணைப் பதிப்பகம் வெளியிடும் சிறு நாவல்: ‘இந்தியா 48’. பெயரில் நாடும் ஆண்டும் இருந்தாலும் இது தனி நபர்களின் கதை. இரண்டாவது, நாகர்கோவில் காலச்சுவடு பதிப்பகம் வெளியிடும் சிறுகதைத் தொகுப்பு, ‘இரண்டு விரல் தட்டச்சு’. இக்கதைகள், நாவல்
யாவும் கடந்த இரண்டு ஆண்டுகளில் எழுதப்பட்டவை.

(பாதை நீளும்...)

அசோகமித்திரன்