லிங்கா



தமிழக மக்களுக்காக ஆங்கிலேயர் பென்னி குவிக் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டினார். தென் தமிழக மக்களால் கடவுளாகவே கருதப்படும் அவரே ஒரு இந்தியராக இருந்தால்..?

அதுதான் ‘லிங்கா’!பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் படித்துப் பட்டம் பெற்ற கலெக்டராகவும் இந்திய சமஸ்தானம் ஒன்றின் ராஜாவாகவும் கம்பீரம் காட்டுகிறார் லிங்கேஸ்வரன். கிராம மக்கள் நலனுக்காக ஒரு அணையைக் கட்ட அவர் அனுமதி கேட்க, அதை மறுக்கிறது பிரிட்டிஷ் நிர்வாகம்.

இதனால் கலெக்டர் வேலையைத் துறந்து, ஒரு ராஜாவாக தன் சொந்தச் செலவில் அணை கட்டக் களமிறங்குகிறார் லிங்கேஸ்வரன். பிரிட்டிஷ் அதிகாரி ஒருவரின் சதியை மீறி அணையைக் கட்டி முடித்தாலும், தன் சொத்துக்களை எல்லாம் இழந்து, தான் நேசித்த கிராம மக்களிடமே கெட்ட பெயரும் வாங்கி வெளியேறுகிறார். 70 ஆண்டுகள் கழித்து, ஊழல் அரசியல்வாதிகளால் அந்த அணைக்கு ஆபத்து வருகிறது. அப்போது அணை காப்பாற்றப்பட்டதா என்பதே க்ளைமேக்ஸ்.

கலெக்டராக, ராஜாவாக, எஞ்சினியராக, சமையற்கட்டில் சாமானியனாக நான்கு நிலைகளில் நச்சென்று லிங்கேஸ்வரன் ரஜினி. திருட்டு, ஜாலி, கேலி என யூத்ஃபுல்லாக ‘லிங்கா’ ரஜினி. இப்போதும் ‘சேச்சே... பொருத்தமில்லை’ எனச் சொல்லும்படி எந்த வேஷமும் இல்லை ரஜினிக்கு. அச்சு அசல் ராஜாவாக ரஜினி நடந்து வரும் காட்சி, அப்படியே மனசில் நிற்கிறது. சில்லறைத் திருடனிலிருந்து ராஜா வரைக்கும் தனித்தனியாக வேறுபட்டு இன்ச் பை இன்சாக உழைத்திருக்கிறார் ரஜினி. இத்தனை ஆர்வமும், முயற்சியும், உழைப்பும் இன்றைய தலைமுறை நடிகர்கள் படிக்க வேண்டிய பாடமப்பா!

ரஜினி படங்களுக்கே உரிய நட்சத்திரப் பட்டாளம் இதிலும் ஆஜர். இண்டு இடுக்குகளில் வருபவை கூட தெரிந்த முகங்கள். ஒரே ஒரு காட்சிக்கு வரும் ரயில் டிரைவர் கூட மனோபாலா. வசனமே தேவைப்படாமல் ஒரு ஓரமாக கருணாகரன். ரஜினி என்ற ஆளுமைக்கும் அதன் பவருக்கும் மட்டுமே இது சாத்தியம்!

சந்தானம், ‘லிங்கா’ ரஜினியின் நண்பர். பக்கத்திலேயே நின்று சென்டிமென்ட் சிமென்ட்டுகளை சிரிப்பு கமென்ட்டுகளால் உடைக்கிறார். அந்தக் கொடுப்பினை, ராஜா லிங்கேஸ்வரனுக்கு இல்லை. ‘எப்படி வாழ்ந்தவர்... இப்படி ஆகிட்டார்’ என ‘முத்து’, ‘படையப்பா’வில் நாம் பார்த்த அதே சென்டிமென்ட், லிங்கேஸ்வரனையும் தூக்கி நிறுத்துவது கே.எஸ்.ரவிக்குமாரின் மேஜிக்!

அனுபவ சாந்தம் சொட்டும் வார்த்தைகளை ரஜினி சொன்னால்தான் எடுபடுகிறது. படத்தின் சாதாரண டயலாக் கூட, அவர் சொல்லும் தோரணையில் புது வடிவம் எடுப்பது உண்மை. எது எப்படியிருந்தாலும் ரஜினியின் ப்ரசன்ஸே மிரள வைக்கிறது.

தமிழ் சினிமாவின் ட்ரேட் மார்க் காதலியாக சோனாக்ஷி சின்ஹா... சாதாரண அறிமுகம். நெருங்கிய நண்பரின் மகளை சாதாரணமாகத் தொடக்கூட ரஜினி தயங்குவது, சேர்ந்திருக்கிற அத்தனை சந்தர்ப்பங்களிலும் வெட்ட வெளிச்சம். அதனால் கொஞ்சம் கூட சுவாரஸ்யம் இல்லாத காதல் அத்தியாயம்! தப்பிக்கிறார் அனுஷ்கா. சோனாக்ஷி விட்ட இடத்தை நிரப்புவதில் நிறைகிறார். டி.வி ரிப்போர்ட்டராக வந்தாலும் கொஞ்சமே கொஞ்சமான காதல் நெருக்கத்தைக் காட்டியதில்...

அப்பாடா, பயங்கர ரிலீஃப்!திருட்டு நண்பர்களாக இருந்த ரஜினி, சந்தானம், கருணாகரன் கூட்டணி கொஞ்சம் கொஞ்சம் சிரிக்க வைக்கிறது. அதிலும் சந்தானம் கையே ஓங்க, மற்றவர்கள் என்ன செய்வதென்றே தெரியாமல் அதிகம் விழிக்கிறார்கள்.ரஜினியே ஹீரோ என்றாலும் இப்படிப் பழகிய - பழைய கதை தவிர வேறு கிடைக்கவில்லையா? பென்னி குவிக் எனும் உண்மை வரலாற்றை மறைக்க முயல்வது தப்பில்லையா? முதல் பாதியின் ஜாலியை மறு பாதியில் தேட வேண்டியிருக்கிறது.

1939 என்ற ஃபீல் தரவும், ரயில் சண்டைக் காட்சியிலும் ரஹ்மான் ரொம்ப உழைத்திருக்கிறார். பாடல்களும் அதைக் காட்சிப்படுத்திய விதமும் ஒரு ஆல்பமாகப் பார்க்க ஓஹோ. ‘மோனா மோனா’ பாடல், கேட்க சௌகரியமாகவும், பார்க்க ரம்மியமாகவும் இருக்கிறது. ரத்னவேலுவின் கேமரா கதையின் பலவீனங்களை மறக்கடிக்கிறது.

அணையின் விஸ்தாரமான காட்சிகளில் பிரமாண்டமாக உழைத்திருக்கிறார் அவர். சுதந்திரத்துக்கு முந்தைய கால ரயில், கார் என சிக்கல் விஷயங்களைக் காட்டியதில் கலை இயக்குநர் அமரன் சாதித்திருக்கிறார்.எக்கச்சக்க லாஜிக் மீறல்களைத் தாங்கிக்கொண்டு, ரஜினிக்காக மட்டுமே மூணு மணி நேரம் உட்கார வைப்பது ரொம்ப ஓவர் பாஸ்!

- குங்குமம் விமர்சனக் குழு