அழியாத கோலங்கள்



வக்கீல் வேலைக்கு கிட்டத்தட்ட முழுக்கு போட்டுவிட்டு, கமல் கஜானாவிலும்... சுஹாசினி கஜானாவிலும்... இடது கையை நுழைத்து, அகப்பட்டதை சுருட்டி வலது கையால் செலவு செய்த நாட்கள்.

இரண்டு நடிகர்களுக்கும் நற்பெயர் இருந்ததோ இல்லையோ... கடைத்தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையார்களுக்கு உடைத்து, ‘சாருஹாசன் ஒரு தர்மப்பிரபு’ என்று ஓரிரண்டு பத்திரிகையாளர்களிடமிருந்து புகழை கிடைத்த விலைக்கு வாங்கிக்கொண்ட நேரம்...

என் கடைசிப் பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்தாகிவிட்டது. அவள் கணவர் அன்று, இந்திய விமானப்படையில் விங் கமாண்டராக... பர்னாலா என்ற பஞ்சாப் மாநிலப் பகுதியில் பணி செய்து கொண்டிருந்தார். பஞ்சாப் தீவிரவாதிகள் விமானப்படை பணியாளர் தங்குமிடத்தை தாக்கக் கூடுமோ என்று பயந்து என் மகளை சென்னைக்கு அனுப்பி வைத்திருந்தார். அவருடன் பணிபுரியும் நண்பருடைய தந்தை, சென்னையில் மத்திய வனத்துறை உயர் அதிகாரி.

பலமுறை என்னை அவர் சந்திக்க வந்தும் என் மகளை மட்டும்தான் சந்திக்க முடிந்ததாம்... பஞ்சாப்பிலிருந்து புறப்பட்ட குற்றச்சாட்டு, சென்னை வந்தடைந்து என் மூன்றாவது மகளை அடைந்ததும் ஒரு புயலாக மாறியது. என் போன்ற கோழை மனம் படைத்தவனை ‘உடனடியாக அவர் வீட்டிலேயே போய் பார்த்து விடலாமே?’ என்று ஒரு புயல் நிவாரணத் திட்டத்தையும் வெளியிடச் செய்தது.

கிழப்பருவமானாலும் அது நானே கார் ஓட்டிச் சென்ற நாட்கள். புறப்படும்போதே 15 நிமிடங்கள் பின்தங்கியிருந்தோம். புத்தாடையும் மேக்கப்பும் நடிகனுக்குத் தேவையோ, இல்லையோ... மகளுக்கு இல்லை என்று கூற முடியுமோ? போகும்போது மகள் ஒரு வழி காட்டினார். ‘‘அது ஒரு வழிச்சாலை...

நான் சட்ட விரோதமாக செல்ல மாட்டேன்’’ என்றேன். ‘‘பாருங்க, மற்ற எல்லாரும் போயிட்டிருக்காங்க? நீங்க அங்க நிக்கிற கான்ஸ்டபிளுக்கு பயப்படுறீங்க?’’ என்று கடிந்துகொண்டாள் பெண்ணரசி. காலை வெயில் வேறு சுட்டது. கொஞ்ச தூரம் போனதும், எதிரே தெரிந்த இன்ஸ்பெக்டர் புல்லட்டில் வந்து மறித்து நிறுத்தினார். தெரிந்த பழைய அறிமுகம்தான்!

நான் தலையை வெளியே நீட்டி, ‘‘என்னய்யா, என்னை ‘மோட்டர் வெஹிக்கிள் ஆக்ட்’ல புக் பண்ணறதைத் தவிர, வேற வேலையே இல்லையா?’’ என்று கேட்டேன்.இன்ஸ்பெக்டர், ‘‘என்ன சார்? உங்க மூடே சரியில்ல போல இருக்கு! ஒரு ‘ஷோ காஸ் நோட்டீஸ்’ ஹை கோர்ட்லேருந்து வந்திருக்கு?

ஒரு கன்ஸல்டேஷன்! உங்களை எப்ப வந்து பார்க்கலாம்?’’‘‘நீ வராதேய்யா... இப்பவே நீ என்னை டிராஃபிக் அஃபென்ஸுக்கு புக் பண்ற மாதிரி கூட்டம் கூடுது! ஒன் குவாட்டர்ஸ்தான் எனக்குத் தெரியுமே? நானே வர்றேன்?’’
‘‘வேண்டாம் ஸார், எனக்கு ஒரு டைம் மாத்திரம் சொல்லுங்க!’’

‘‘நீ வழிய விடறியா? இல்லே... ஒரு நூறு ரூபாய் நோட்டை எடுத்து நீட்டி உன் மானத்தை வாங்கட்டுமா?’’இன்ஸ்பெக்டர் ஒரு மிதியில் புல்லட்டை ஸ்டார்ட் செய்து பறந்து விட்டார்.சிறிது தூரம் சென்றதும் ஒரு பிரபல இயக்குனரின் உதவி டைரக்டர் என் காரை நிறுத்தி கொஞ்ச நேரத்தைப் போக்கியதில் ஒரு தந்தை-மகள் யுத்தம் உச்சக்கட்டத்தை அடைந்தது.முதல் ராம பாணம்.

மகள்: அங்கே வந்து உங்கள் பழைய கிரிமினல் கேஸ் கட்டுகளைப் பிரித்து இ.பி.கோ. 302ன் பொருள் விளக்கம் செய்ய வேண்டாம்.
(30 ஆண்டுகளாக அந்த ஞிணிதிமிழிமிஜிமிளிழி எனக்கே புரியவில்லை... இப்படி ஒரு அடியா?)
நான்: சரி(தோல்வியை ஒப்புக்கொண்டது போதவில்லை போலிருக்கிறது)

மகள்: அரசியலும் சினிமாவும் என்று கம்பேரிட்டிவ் ஸ்டடி கொடுக்க வேண்டாம்.
நான்: சரி
மகள்: உலக மதங்களில் நாத்திகர்கள் பங்கு என்று லெக்சர் அடிக்காதீர்கள்!
நான்: நான் என்னதான் பேசணும்? நீயே சொல்லேன்!
மகள்: ஒண்ணுமே சொல்ல வேண்டாம். டிபன், காபி கொடுப்பாங்க... அதை சாப்பிட மட்டும் வாயைத் திறந்தால் போதும்...

இந்த உத்தரவுடன் பயணம் வனத்துறை உயர் அதிகாரி வீட்டு வாசலில் இனிதே முடிந்தது என்று வைத்துக்கொள்வோம். கொஞ்ச நேரம் அவர் பேசப் பேச, நான் சில ‘ஆம்’களும் சில ‘ஓஹோ’க்களும் ஒன்றிரண்டு ‘அப்படியா’க்களும் சொன்னேன். அந்த ஃபாரஸ்ட் ஆபீஸர் பொறுமையிழந்து, ‘‘என்ன சார், ஒண்ணுமே பேச மாட்டேங்கறீங்க?’’ என்றார். ‘‘நீங்க பாட்டுக்கு சொல்லிடுவீங்க... ஃப்ரீயா பேசுங்கன்னு..!

அங்கே பாருங்க, ஒங்க பொண்ணும் என் பொண்ணும் ஏதோ பேசற மாதிரி பேசுறாங்களே தவிர, என் மகள் கண்ணும் காதும் என் பக்கம்தான் இருக்கு. ஏதாவது உளறிடுவேனோன்னு! உங்க பொண்ணும் அப்படித்தான்னு நினைக்கிறேன்’’ என்றேன் நான்.‘‘அவ பாச்சாவெல்லாம் என்கிட்ட பலிக்காது. அதை நான் பாத்துக்கிறேன்!’’ என்றார் அவர்.

நான் பேசுவது என்று முடிவு செய்துவிட்டால் முதுகுளத்தூர் சப்மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் பெட்ரோமாக்ஸ் ஏற்றி வைக்கும் வரை பேசுபவன். விடுவேனா? ‘‘எனக்கு இந்த பிராப்ளம் 4 வயசுல ஆரம்பிச்சது. அந்த வெள்ளைக்காரி மிஸஸ் நெல்ஸன் வீட்டில ஒரு கேக்கை சாப்பிட்டு, அந்த சமயக்கார மாமாவிடம் இரண்டாவது கேக் கேட்டு வாங்கி சாப்பிட்டதுக்கு, எங்கம்மா ‘இன்னொண்ணு கேப்பியா?’ என்று சொல்லி உதை... பின்னாடி இன்னொரு வீட்டுல ‘ஒரே ஒரு கேக் குடுங்க... ரெண்டாவது கேக்கமாட்டேன்’ என்று சொன்னதுக்கும் டபுள் மடங்கு உதை!’’

வன அதிகாரி வயிறு குலுங்கச் சிரித்தார். என் பயம், நடுக்கம் எல்லாமே ஓடி ஒளிந்துவிட்டது.‘‘கல்யாணத்துக்கு அப்புறம் அம்மாவின் உதைகள் திட்டாகக் குறைந்தது மட்டுமில்லாமல், அந்த உரிமையை தாயார் என் மனைவிக்கு தர்ம சாசனம் செய்துவிட்டார். என் பெண்கள் இன்று ஆக்கிரமிப்பு செய்து தங்கள் உரிமையாக்கிக் கொண்டார்கள். இதைப் பாருங்கள், ‘உங்கள் வீட்டில் வந்து வாயைத் திறக்கக் கூடாது...

இட்லி, தோசை, காபிக்கு மட்டும் வாயைத் திறக்கலாம்’ என்று என் மகள் சொன்னாள். நீங்க வெறும் பனானா சிப்ஸும் ஜூஸும்தான் கொடுத்தீங்க... வீட்டுல போய் இதைப் பத்தி பேசினாலும் திட்டுவாங்க’’ என்றேன்.வீட்டுக்கு வந்ததும், ‘இந்த அப்பா வீட்டை விட, பர்னாலா தீவிரவாதியே தேவலை’ என பஞ்சாப் மெயிலைத் தேடி போய்விட்டாள் என் பெண்ணரசி.

‘‘கல்யாணத்துக்கு அப்புறம் அம்மாவின் உதைகள் திட்டாகக் குறைந்தது மட்டுமில்லாமல், அந்த உரிமையை தாயார் என் மனைவிக்கு தர்ம சாசனம் செய்துவிட்டார். என் பெண்கள் இன்று ஆக்கிரமிப்பு செய்து தங்கள் உரிமையாக்கிக் கொண்டார்கள்.’’

(நீளும்...)

சாருஹாசன்