தமிழ் ஸ்டுடியோ அருண் 38
அமாவாசையும் பழைய சோறும்கதைகளைக் குறித்து அதிகம் கவலைப்படத் தேவையில்லை. எல்லாக் கதைகளும் முன்னரே சொல்லப்பட்டுவிட்டன. எதுவுமே புதிதாக முளைக்கப் போவதில்லை. ஒரு கதையை உருவாக்கினால்தான் சினிமா எடுக்க முடியுமென்று நம்ப வேண்டிய தேவையுமில்லை.

அதனை நான் ஒப்புக்கொள்ளவும் மாட்டேன். ஒரு சினிமா என்பது வெறும் கதை அல்ல. அது வாழ்க்கையின் வெவ்வேறு உணர்வு நிலைகளை, ஒலி - ஒளியின் கூட்டுக் கலவையில் சொல்லக் கூடியது.
- ஹங்கேரிய திரைப்பட இயக்குனர் பெலட்டர்இலக்கியத்திலும் சினிமாவிலும் ஒரு கதையை எத்தனை தூரம் நுட்பமாகச் சொல்கிறோமோ, அந்த அளவிற்கு அந்தக் கதை வாசகன் அல்லது பார்வையாளன் மனதில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. காரணம், நாம் ஒருபோதும் புதிதாக ஒரு கதையை உருவாக்கி விட முடியாது. எங்கோ ஓரிடத்தில், ஏதோ ஒரு மொழியில் முன்னமே சொல்லப்பட்ட ஒன்றைத்தான் நாம் மீள் உருவாக்கம் செய்கிறோம்.
அதனை நாம் எந்த அளவிற்கு நம்முடைய சமூக, கலாசார, மொழிக்கு நெருக்கமாகச் சொல்கிறோம் என்பதுதான் முக்கியம். அந்த நெருக்கமும், நுகர்வோரின் மனதில் அந்த படைப்பு பதியும் வீரியமும்தான் அதன் ஆயுட்காலம். குழந்தைகள், முதியவர்களை வைத்து ஒரு படைப்பை உருவாக்கும்போது மிக முக்கியமாக அவர்களின் உலகத்தில் பிரவேசிக்க வேண்டிய கட்டாயம் படைப்பாளனுக்கு ஏற்படுகிறது.
ஜப்பான் இயக்குனர் ஒஜுவின் ‘டோக்கியோ ஸ்டோரி’ திரைப்படம் இந்த வகையான படைப்பிற்கு சிறந்த உதாரணம். வயதான தம்பதியினர் அவர்களது பிள்ளைகளைப் பார்க்க நகரத்திற்குப் பயணிக்கிறார்கள். பிள்ளைகள் அவர்களை எப்படி அணுகுகிறார்கள், முதுமையும் ஆற்றாமையும் எப்படி சக மனிதர்களால் புறந்தள்ளப்படுகிறது என்பதை எவ்வித புகார்களும் இல்லாமல் இயல்பாகப் பதிவு செய்கிறது இந்தத் திரைப்படம்.
சக மனிதர்களின் மீது, அவர்களின் இயல்புகள் மீது எவ்வித புகார்களும் இல்லாமல் வாழ்வது என்பது இன்னொரு மனிதனுக்கு வாய்ப்பற்ற ஒன்றாகவே அமையும். ஆனால் படைப்புகள் அதனை வலியுறுத்துகின்றன. இந்த வகையில் ஒரு தந்தையின் புகார்களற்ற வாழ்க்கையை தமிழில் ‘விரதம்’ குறும்படம் பேசுகிறது.
நாஞ்சில் நாடனின் ‘விரதம்’ சிறுகதையை அதே பெயரில் குறும்படமாக எடுத்திருக்கிறார்கள். ஒரு பெரியவர் குளித்துக்கொண்டிருக்கிறார். அவரது நண்பர், ‘‘என்ன வோய், இவ்வளவு சீக்கிரம் குளிக்க?’’ என்று கேட்டதும், ‘‘அமாவாசையாச்சே, அதான் நேரமா குளிச்சிட்டேன். தவிர, மனைவிக்கு சுகமில்லாமக் கெடக்கு.
ராத்திரி வெச்ச பழைய சோறுதான் வீட்டில் இருக்கு. அமாவாசையும் அதுவுமா பழைய சோறு சாப்பிடலாமா? அதான் நேரமா குளிச்சிட்டு, மகளோட வீட்டில் போய் சாப்பிட கௌம்பிட்டேன்’’ என்று பதிலளிக்கிறார். பெரியவருக்கு இரண்டு மகள்கள். மூத்த மகளின் வீட்டிற்குச் சென்றதும், ‘‘என்ன, இந்த வேகாத வெயில்ல வர்றீங்க? அமாவாசைன்னா சாப்பிட்டுட்டு வீட்ல படுத்து ஓய்வு எடுக்க வேண்டியதுதானே’’ என்று அவரது வயோதிகம் மீது அக்கறையைப் பொழிகிறாள்.
அருகில் மாப்பிள்ளையும் இருப்பதால், மேற்கொண்டு எதுவும் பேசாமல் சின்ன மகளின் வீட்டிற்குச் செல்கிறார். ஆனால் சின்ன மகளோ, ‘‘என்னப்பா? நேரா அக்கா வீட்டுக்குப் போயிட்டு வர்றீங்களா... எத்தனை முறை சொல்லியிருக்கேன், நேர இங்கன வாங்கன்னு. அங்க போய் சாப்பிட்டுட்டு இங்க வர்றீங்களா?’’ என்று கடிந்து கொள்கிறாள். முதியவர்களுக்கே உரித்தான மனச் சஞ்சலத்தால், மேற்கொண்டு மகளிடம் ‘‘சாப்பிட வந்தேன்’’ என்று சொல்லாமல், பெரியவர் தன் வீட்டிற்கே வந்து பழைய சோற்றைச் சாப்பிடுகிறார்.
இதில் மிக முக்கியமானது, படத்தில் வரும் எந்தக் கதாபாத்திரமும் எதிர்மறையானது கிடையாது. சூழ்நிலையும், மனச் சஞ்சலமும் மட்டுமே இங்கே பிரதான எதிர்மறைக் கதாபாத்திரமாக உருவகிக்கப்படுகிறது; மனிதர்கள் அல்ல. சிறுகதையைப் படிக்கும்போது ஏற்படும் உணர்வும், அதனைக் குறும்படமாகப் பார்க்கும்போது ஏற்படும் உணர்வும் ஒரே நிலையில் இருக்க வேண்டிய அவசியமில்லை.
அப்படி இருக்கவும் முடியாது. ஆனால் ஒரு சிறுகதையை சினிமாவாக எடுக்கும்போது, அதன் ஆன்மா சிதையாமல் எடுக்க வேண்டும் என்பார் இயக்குனர் பாலுமகேந்திரா. இந்தக் குறும்படம் சிறுகதை யின் ஆன்மாவை அப்படியே வைத்திருக்கிறது. மேலும் காட்சி பூர்வமாக கொஞ்சம் பாய்ச்சலையும் நிகழ்த்தியிருக்கிறது.
சிறுகதையில், ‘மூத்த மகளின் வீட்டிற்குச் செல்லும் தந்தையிடம் மகள் பேசிக்கொண்டிருப்பாள்; அவளது கணவன் உள்ளே இருந்து எட்டிப் பார்ப்பார்’ என்று இருக்கும். ஆனால் குறும்படத்தில் கணவன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, அப்பா வீட்டிற்கு வருகிறார். ஏன் குறும்படத்தில் கணவன் சாப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டும்? கடுமையான வெயிலில் அலைந்து திரிந்து வரும் பெரியவருக்கு உணவு எத்தனை தூரம் முக்கியமானது என்பதை பார்வையாளர்களுக்கு உணர வைக்க இந்தக் காட்சி முக்கியமானது. மேலும், கதையில் இருக்கும் சில நுட்பங்களைக் குறும்படத்திலும் பதிவு செய்திருக்கிறார்கள்.
முக்கியமாக, அப்பா குளித்து முடித்து திருநீறு அணிந்தால் சாப்பிட்டதாக அர்த்தம். அது அவரது ஐம்ப தாண்டு காலப் பழக்கம் என்று மூத்த மகள் தன்னுடைய கணவனிடம் சொல்கிறாள். இந்தப் பழக்கமே, அவர் வீட்டிற்குள் நுழையும்போது சாப்பிட்டுவிட்டு வந்திருக்கிறார் என்று மகளை நம்ப வைக்கிறது.கதையில் இருக்கும் பசுமையும் எள்ளலும் குறும்படத்தில் இல்லை. கதையில் சிறுவர்களின் வருகை இருந்துகொண்டே இருக்கிறது.
பசுமையும் ஊரின் செழிப்பும் மெச்சப்பட்டுக் கொண்டே இருக்கிறது. ஆனால் குறும்படத்தில், சிறுவர்களின் கொண்டாட்டம் இல்லை. அடர் பசுமைகூட கொஞ்சம் சோகத்தை ஏற்படுத்தும் டின்ட் வண்ணக் கலவையாகவே பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெரியவரின் ஆற்றாமையை, அல்லது பார்வையாளனிடம் ஒருவித சோகத்தை ஏற்படுத்த இந்த வகையான காட்சிப்படுத்துதல் முறை கையாளப்பட்டுள்ளது. இந்த வகையான காட்சியமைப்புகள் அதன் எல்லையை உணர்ந்து, மென் சோகமாகவே கதையை நகர்த்துகிறது.
ஆனால் குறும்படத்தை இன்னும் காட்சிப்பூர்வமாகவே அணுகி யிருக்கலாம். உதாரணமாக, குறும்படத்தின் முதல் காட்சியில் அணில் சோறு உண்ணும் காட்சி வருகிறது. அதற்கடுத்து வரும் காட்சியில், குளித்துக்கொண்டிருக்கும் பெரியவரிடம் அவரது நண்பர் கேள்வி கேட்பதும், அதற்கு பெரியவர் ‘‘இன்று அமாவாசை’’ என்று சொல்லி தொடர்வதுமான உரையாடலைத் தவிர்த்திருக்கலாம்.
அணில் சோறு உண்ணும் அந்தக் காட்சியோடு இன்னும் சில நுட்பமான காட்சிகளை வைத்து காட்சி ரீதியாக அமாவாசை என்பதை உணர்த்தியிருக்கலாம். பெரியவரின் நண்பராக வருபவர், இரண்டு மகள்கள்... என இந்த மூவரின் வசன உச்சரிப்பு, உடல் ஏற்ற இறக்கங்களை இன்னும் செம்மைப்படுத்தியிருக்கலாம். டப்பிங் பேசுவதைப் போல அப்பட்டமாக இருக்கிறது அவர்களின் வசன உச்சரிப்புகள்.
படம்: விரதம்
இயக்கம்: ப்ரித்வி கே.ராஜ்
நேரம்: 11.11 நிமிடங்கள்
ஒளிப்பதிவு: ஜோ
இசை: எம்.எஸ்.ஜோன்ஸ்
கதை: நாஞ்சில் நாடன்
படத்தொகுப்பு: முகன் வேல்
என்னப்பா? நேரா அக்கா வீட்டுக்குப் போயிட்டு வர்றீங்களா... எத்தனை முறை சொல்லியிருக்கேன், நேர இங்கன வாங்கன்னு. அங்க போய் சாப்பிட்டுட்டு இங்க வர்றீங்களா?’’
(சித்திரங்கள் பேசும்...)
ஓவியம்: ஞானப்பிரகாசம்
ஸ்தபதி