ஷாக் அடிக்கும் கரன்ட் பில்!



சமாளிக்க சில வழிகள்

தமிழகமே கொந்தளிக்கிறது. மின் கட்டணத்தை 15 சதவீதம் அதிரடியாக உயர்த்தி மக்களுக்கு ‘ஷாக்’ கொடுத்திருக்கிறது மின்சார ஒழுங்குமுறை ஆணையம். சனியை விட வேகமாக, மூன்றாண்டுகளில் இரண்டாவது முறையாய் நடந்திருக்கும் இந்த மின்சார விலை பெயர்ச்சி, பல தரப்பினரையும் போராட்டத்தில் குதிக்க வைத்துவிட்டது.

இதில் ஒரே ஆறுதல், ‘500 யூனிட் வரை பயன்படுத்துவோரை கட்டண உயர்வு பாதிக்காது’ என்ற அறிவிப்புதான். ஆனால், ஏ.சி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்றவை மிடில் க்ளாஸ் அத்தியாவசியங்கள் ஆகிவிட்ட பின், 500 யூனிட்டுக்குள் எப்படிக் குடும்பம் நடத்துவது? ‘‘முடியும்’’ என்கிறார் ஓய்வுபெற்ற மின்வாரிய கூடுதல் தலைமைப் பொறியாளரான சீனிவாசன். அதற்கு அவர் கூறும் வழிகள் இதோ...

பல்புகள்

வீட்டில் நாம் அதிகம் பயன்படுத்துகின்ற மின்பொருள் டியூப் லைட். ஆனாலும், வாசல், குளியலறை போன்றவற்றில் இன்னும் டங்ஸ்டன் குண்டு பல்புகளைப் பயன்படுத்துகிறார்கள். அதிக மின்சாரத்தை உறிஞ்சுகிற இவற்றைத் தவிர்க்க வேண்டும். இதற்கு பதிலாக சி.எஃப்.எல். பல்புகள் பயன்படுத்தி மின்சாரத்தை சேமிக்க முடியும்.

ஆனால், அதன் வாழ்நாள் குறைவு. 2 வருடம் மட்டுமே வரும். தற்போது சிறு சிறு எல்.இ.டி பல்புகளைக் கொண்டு செய்யப்படும் பெரிய பல்புகளும் டியூப்லைட்டுகளும் வந்துவிட்டன. சாதாரண டியூப் லைட் 36 வாட்ஸ் என்றால், எல்.இ.டி டியூப் லைட் 16 வாட்ஸ்தான். ஆனால், டியூப் லைட்டை விட தெளிவான வெளிச்சத்தைத் தரும்.

இதனால், ஐந்து லைட்கள் எரியும் ஒரு வீட்டில் 100 வாட்ஸ் வரை சேமிக்க முடியும். அதேபோல் சாதாரண டியூப் லைட்டின் ஆயுட்காலம் 4 ஆயிரம் மணி நேரம்தான். ஆனால், எல்.இ.டி. லைட்டுகள் 18 வருஷங்கள் வரை உழைக்கும்.

எல்.இ.டி. விளக்குகள் விலை அதிகம் என்றாலும், அதிக உழைப்பும் மின் சிக்கனமும்தான் இப்போது நமக்கு முக்கியம். இரவில் தூங்கும்போது, நாம் பயன்படுத்தும் ஜீரோ வாட்ஸ் பல்பு, உண்மையில் 15 வாட்ஸ் கொண்டது. இதற்கு பதில், அரை வாட்ஸுக்கும் குறைவான எல்.இ.டி பல்புகள் குறைந்த விலையிலேயே கிடைக்கின்றன.

ஃபேன் மோட்டாரில் காயில் அமைப்புதான் மின்சார விரயத்துக்கு அத்தாரிட்டி. ஆக, பழுதாகும் பழைய ஃபேன்களை, லோக் கல் ரீ-வைண்டிங் செய்யாமல், அதை மாற்றிவிட்டு புது ஃபேன் வாங்குவது நல்லது. இதனால், நிறைய மின்சாரம் மிச்ச மாகும். இப்போது பி.இ.இ. எனப்படும் பீரோ ஆஃப் எனர்ஜி எஃபிஷியன்ஸி அமைப்பு, எல்லா மின் உபகரணங்களுக்கும் ஒரு ஸ்டார் ரேட்டிங்கைக் கொடுக்கிறது. ஃபேன், ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்றவற்றின் விளம்பரங்களிலேயே இந்த ரேட்டிங் தரப்படுகிறது.

இதில், 5 ஸ்டார் குறியீடு இருந்தால் அந்தப் பொருள் 40 சதவீத மின்சாரத்தை சேமிக்கும். 4 ஸ்டார் - 30 சதவீதம், 3 ஸ்டார் -20 சதவீதம், 2 ஸ்டார் - 10 சதவீதம் என கணக்கு வைத்திருக்கிறார்கள். ‘ஏ.சியில்தான் 5 ஸ்டார் வேண்டும். ஃபேனுக்கெல்லாம் எதற்கு?’ என அசட்டை காட்டாமல், அனைத்திலும் ஸ்டார் பார்த்து வாங்கினால் ஜோர்!

5 ஸ்டார் ரேட்டிங் உள்ள ஒரு டன் ஏ.சி., 1100 வாட்ஸ். ஆனால், ஒரு ஃபேன் 40 வாட்ஸ் தான். ஆக, ஒரு ஏ.சி 27 ஃபேன்களுக்கு சமமாகிறது. எனவே, நம் அறைக்கு என்ன அளவு ஏ.சி தேவை என்பதில் தொடங்கி, பல விஷயங்களிலும் சிக்கனம் தேவை.

 ஃபில்டர்களை சுத்தமாக்காமல் விடுவது, அறைக்கதவைத் திறந்தே வைப்பது, அடிக்கடி வெப்பநிலையை மாற்றி வைப்பது போன்றவை ஏ.சி.யை கரன்ட் குடிக்கும் அரக்கனாக்கும். ஏர் கண்டிஷன் போட்டபிறகு சிலர் ஃபேன் போடக்கூடாது என்பார்கள். அது தவறு. ஃபேனும் கை கோர்த்தால் அறை சீக்கிரமே குளிர்ந்து விடும். ஏ.சியும் சீக்கிரம் ஆஃப் ஆகிவிடும்.

ஒரு வீட்டில் அதிக மின்சாரத்தை எடுப்பது ஃபிரிட்ஜ்தான். ஏனெனில், 24 மணி நேரமும் ஓடிக் கொண்டே இருக்கும் மின்சாதனம் அது. நிறைய பேர், ஃபிரிட்ஜை சுவருக்கு ஒட்டியபடியே வைக்கின்றனர். இதனால் கம்ப்ரஸர் வெப்பமாகி, அதிக மின்சாரம் செலவாகிறது. ஃபிரிட்ஜ் கதவை அடிக்கடி திறந்து மூடும்போதும் அதிக மின்சாரம் இழுக்கும். புதிதாக ஃபிரிட்ஜ் வாங்குபவர்கள் ஸ்டார் ரேட்டிங் பார்த்து வாங்கி மின் சிக்கனத்தைக் கடைபிடிக்கலாம்.

டி.வி, கம்ப்யூட்டர் மானிட்டர் ஆகியவற்றில் எல்.இ.டி.யைப் பயன்படுத்தலாம். நிறைய பேர் டிவியை ரிமோட் வழியாகவே ஆஃப் செய்துவிட்டு படுத்துவிடுகிறார்கள். சுவிட்சை ஆஃப் செய்வதில்லை. இதனால், டி.வி.யின் சர்க்யூட் குறைந்த அளவு மின்சாரத்தை விரயமாக்கிக் கொண்டே இருக்கும்.

அடுத்து நிறைய பேர் செய்கிற தவறு, மொபைல் போனை சார்ஜ் செய்தபிறகு அதனை சுவிட்ச் ஆஃப் செய்யாமல் விடுவது. இதனாலும், மின்சாரம் செலவாகிக்கொண்டே இருக்கும். ஒரு வீட்டில் இதெல்லாம் குறைவாகத்தானே மின்சாரத்தை எடுக்கும் என நீங்கள் நினைக்கலாம். ஆனால், இப்படி தமிழகம் முழுவதும் நடக்கும்போது நிறைய மின்சாரம் வீணாகும். எனவே, அனைவரும் சிரமப்படாமல் சுவிட்ச் ஆஃப் செய்தால் அதிக யூனிட்கள் சேமிக்க முடியும்.

இவை தவிர, கிரைண்டர், மிக்சி, வாஷிங் மெஷின் போன்றவை எவ்வளவு லோடு தாங்குமோ அந்த அளவைத் தெரிந்து, சரியாகப் பயன்படுத்த வேண்டும். கூடவோ, குறைவோ போட்டு அரைத்தால் மின்சார விரயம்தான்.

வாட்டர் ஹீட்டருக்கு பெரும்பாலும் சோலார் வாட்டர் ஹீட்டர்களைப் பயன்படுத்தலாம். நிறைய பேர் விலை குறைவு என்பதற்காக தண்ணீரில் மூழ்கடிக்கும் கம்பி வகை வாட்டர் ஹீட்டர்களைப் பயன்படுத்துகின்றனர். இது ஆபத்தானது மட்டுமல்ல... நீர் சூடாகவும் நீண்ட நேரம் பிடிக்கும். இதனால், மின்சாரமும் அதிகம் உறிஞ்சும்.

சிக்கனமாக இருந்து இரண்டு மாதங்களுக்கு 500 யூனிட்டுக்குள் பயன்படுத்தினால், மின் கட்டணம் கையைச் சுடாது. 500 யூனிட் என்றாலும் அதிகபட்சம் 1330 ரூபாய்தான். ஐந்நூறைத் தாண் டி,  501 யூனிட் என்றாலும் கட்டணம் சுமார் இரண்டாயிரம் ரூபாய். நிஜமான ‘லட்சுமண ரேகை’யாக 500 இப்போது இருக்கிறது. ‘நீங்கள் சொல்லும் வழிகளில் எல்லாம் என்ன பெரிதாக சேமித்துவிட முடியும்?’ என நினைக்க வேண்டாம்.

மொத்த தமிழ்நாட்டில் சுமார் இரண்டரை கோடி மின் இணைப்புகள் உள்ளன. இதில் ஒருவர் தினம் 40 வாட்ஸ் சேமித்தாலே போதும். ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். நம் மாநிலத்தில் நிலவும் மின் தட்டுப்பாடே சுமார் ஆயிரத்து ஐந்நூறு மெகாவாட்தான்! இந்தத் தட்டுப்பாடுதான் திரும்பத் திரும்ப மின் கட்டணத்தை உயர்த்தக் காரணமாக இருக்கிறது; இதைத் தவிர்த்தால், கட்டண உயர்வையும் தடுக்கலாம்! 

 பேராச்சி கண்ணன்