ழூட நம்பிக்கை



‘‘வாசப்படி எதிர்லயே செருப்பை விட்டா, வீட்டுக்கு வர்ற லட்சுமி வருமா?’’ - நாங்கள் குடியிருக்கும் வீட்டு ஓனர் கற்பகாம்பாளின் கண்டிப்புக் குரல் இது. அவர் எப்போதுமே இப்படித்தான்.

வாடகைக்குக் குடியிருக்கும் பாவத்துக்காக, நமது அடிப்படை சுதந்திரத்தைக் கூடப் பறிக்கும்படி, சாஸ்திரம், சகுனம் என்று குறை சொல்லிக்கொண்டே இருப்பார். ‘‘விடிஞ்ச பின்னாடியும் தூங்கிட்டு இருந்தா வீட்டுக்கு மூதேவி பிடிக்காம என்ன செய்யும்?’’ என சண்டே அதிகாலைப் பொழுதின் அழகைக் குலைப்பார்.

மாலையில் வேலை மும்முரத்தில் வாசல் விளக்கு போட மறந்தாலும், அவர் வீட்டுக்கு வர வேண்டிய மகாலக்ஷ்மியை நாம் கஸ்டம்ஸில் மடக்கி வைத்த மாதிரி கத்துவார். ஹவுஸ் ஓனராச்சே...

இதெல்லாம் மூடநம்பிக்கை என்று சொல்லவா முடியும்?ஒருநாள், என் கணவர் பைக்கில் செல்லும்பொழுது, குறுக்கே நாய் வந்ததால் கீழே விழுந்து கையில் அடிபட்டுக்கொண்டார். அவரைப் பார்க்க வந்த என் மாமியார்... ‘‘இந்த வீடு ராசியே சரியில்லை. ‘வீடு மாறினா எல்லாம் சரியாயிடும்’னு ஜோசியர் சொன்னார்’’ என வீட்டுக்காரம்மாவுக்கு கேட்கும்படியே பேசினார்.கற்பகாம்பாள் பேயறைந்த மாதிரி நின்றார்.

நா.கோகிலன்