ஈராக் பயணம்... திக் திக் தருணம்!



வாழும் கலை ஸ்ரீஸ்ரீரவிசங்கர்

ஈராக்... பெயர் சொல்லும்போதே ஈரக்குலை நடுக்கும் பிரதேசம். அங்கே, ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் பிடியில் இந்திய நர்ஸ்கள் பணயக்கைதிகளாக சிக்கியபோதுதான் நாமெல்லாம் பதறினோம். ஆனால், ஈராக் மக்களுக்கு எப்போதுமே தீவிரவாதம் தந்திருப்பது நித்ய கண்டம்... அல்ப ஆயுசுதான். அங்கே ஒரு நாள் குண்டு வெடிக்கவில்லை என்றால்தான் அது செய்தி. அப்படியொரு ரத்த பூமிக்குச் சென்று வந்த அனுபவத்தைச் சுமந்திருக்கிறார்... ஆன்மிகவாதியான ‘வாழும் கலை’ ஸ்ரீஸ்ரீரவிசங்கர்!

அந்த அனுபவத்தைப் பகிரக் கேட்டோம் அவரிடமே...‘‘ஈராக்கின் சிஞ்சாரு மலைப்பகுதி யசிடிஸ் அகதிகள் முகாம். ஈராக் சென்றவுடன் முதலாவதாக இங்குதான் பயணம் செய்தேன். அங்கு இருந்த சூழ்நிலையைப் பார்த்தபோது, என்னால் வாய்விட்டுக் கூட பேச முடியவில்லை. செய்திகளில் அறிந்தவைதான் என்றாலும் நேரில் பார்த்த காட்சிகள் மிகக் கொடூரமானவை. பாதிக்கப்பட்டவர்களிடம் பேசினேன். ஆறுதல் சொன்னேன். இதன் பின்புலத்தை அலசினேன். வடக்கு ஈராக்கில் கிறிஸ்தவர்கள், குர்து இனத்தவர்கள், அரேபியர்கள், யசிடிஸ் மதத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம். சமீபத்தில் அந்த இடங்களை ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் சுற்றி வளைத்து, அனைவரையும் தங்கள் நம்பிக்கைக்கு மாறும்படி வற்புறுத்தியிருக்கிறார்கள்.

 மக்கள் அதற்கு ஒப்புக்கொள்ளாததால், ஆத்திரமடைந்த தீவிரவாதிகள், கண்டபடி உயிர்களைப் பலி கொண்டு வெறியைத் தீர்த்துக்கொண்டனர். இதில் பயந்து தப்பியோடிய மக்கள்தான் சிஞ்சாரு மலை அகதிகள் முகாம், குர்திஷ் முகாம்களில் இருந்தவர்கள். சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களை இந்த முகாம்களில் பார்க்க முடிந்தது. வட ஈராக்கில் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் 74 முறை போர்த் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் இந்தப் பகுதியில் பலர் அகதிகளாக வெளிநாடுகளுக்கு தப்பி ஓடி விட்டனர்;

பலர் தீவிரவாதிகளின் துப்பாக்கிக்கு இரையாகி விட்டனர். இதில் குடும்பங்களை இழந்து, வெளியில் எங்கும் போக முடியாமல் தவிப்பவர்கள்தான் அங்கேயே அகதிகளாகி விட்டனர். மயானம் போன்ற வெறுமையோடு பல கிராமங்கள் இருக்கின்றன. உயிர் பயத்தோடு அகதிகள் முகாம்களில் தஞ்சம் புகுந்திருக்கும் மக்களுக்குள் ஒரு பதற்றம், பயம் எப்போதும் நீடித்துக்கொண்டே இருக்கிறது.

 ஏதாவது ஒரு சத்தம் கேட்டாலும், அவர்களை மரண பயம் ஆட்கொள்கிறது. வாகனங்களின் சத்தம் கேட்டாலே பாதுகாப்பான இடம் நோக்கி ஓடுகின்றனர்’’ என மிகுந்த மன வேதனையோடு அந்தச் சூழலை விவரிக்கும் ஸ்ரீஸ்ரீ, இந்தத் தாக்குதல்களில் அதிகம் பலியாகும் யசிடிஸ் இன மக்களின் வாழ்க்கை முறை பற்றியும் விவரிக்கிறார்...

‘‘ஏர்பில் பகுதியில் இருந்த யசிடிஸ் இன மக்கள்தான் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளால் அதிகளவு கொல்லப்பட்டுள்ளனர். இந்த யசிடிஸ் மக்களின் வாழ்க்கை முறை தமிழர்களைப் போன்று இருக்கும். ஒவ்வொரு நிகழ்ச்சியின் தொடக்கத்திலும், அன்னப்பறவையால் ஆன குத்துவிளக்கைத்தான் பயன்படுத்துவார்கள். மயிலைத்தான் தேசியப் பறவை போன்று வணங்கி வந்தனர். அந்தப் பண்பாட்டைக் கைவிடக் கோரி தீவிரவாதிகள் எச்சரித்தனர். உயிரை விட பண்பாட்டை அதிகளவு நேசித்ததால்தான் அவர்கள் துப்பாக்கிக்கு இரையாகிவிட்டனர். உயிர் பிழைத்தவர்கள், சிஞ்சாரு மலைப்பகுதியில் தஞ்சம் புகுந்துவிட்டனர்.’’

‘‘அங்கே உங்கள் பணி என்ன?’’‘‘வாழ்விழந்து தவிக்கும் அந்த அகதிகளுக்கு உணவு, உளவியல் பலம் இரண்டையும் நாங்கள் தர வேண்டியிருந்தது. நான் நேரில் சென்று ஆறுதல் கூற வேண்டுமென்று ஈராக் அரசும் விரும்பியது. அவர்களுக்கான நிவாரணப் பணிகளில் அகில உலக மனிதநேயக் குழுவும், வாழும் கலையுடன் சேர்ந்து செயல்பட்டது.’’
‘‘அங்கே பெண்கள், சிறுமிகளின் நிலை என்ன?’’

‘‘மதம் மாற மறுத்ததும், ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் ஆண்களைத்தான் குறி வைத்துக் கொன்றார்கள். அவர்களின் மனைவி மற்றும் 9 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளைக் கடத்திச் சென்றுவிடுவார்கள். சிறு குழந்தை என்றும் பார்க்காமல், பலர் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தச் சிறுமிகளை பணத்திற்கு விற்கும் கொடூரமும் நடக்கிறது. இவ்வாறு கொடுமைகளுக்கு ஆளாகும் குழந்தைகள், பெண்களை, தீவிரவாதிகளுக்குத் தெரியாமல் நாங்கள் மீட்டு வந்திருக்கிறோம். கடந்த மாதம் மட்டும் 250க்கும் மேற்பட்ட பெண்களை மீட்டுள்ளோம். சாகசங்கள் நிறைந்த இந்த மீட்புப் பணியில் அமெரிக்கா, ஈராக் மற்றும் ஐரோப்பிய நாடுகள் உதவி செய்தன.’’

‘‘உங்களுக்கு ஏதும் ஆபத்து வரவில்லையா?’’
‘‘கடந்த 2003ம் ஆண்டிலிருந்து ‘வாழும் கலை’ அமைப்பு ஈராக்கில் சேவை செய்து வருகிறது. இப்போது நான் அங்கே சுற்றுப்பயணம் சென்றபோது, ஈராக் பிரதமரைச் சந்திக்கச் சென்றேன். எங்களுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது. பிரதமர் அலுவலகத்திற்குச் செல்லும் வழியில் திடீரென்று குண்டு ஒன்று வெடித்தது. பதறிப் போய்ப் பார்த்தால் எங்களுக்கு முன்பாக 5 அடி தொலைவில் சென்ற ஒரு வாகனம், குண்டுவெடிப்பில் சிக்கி தீப்பிடித்து வானில் பறந்தது.

பாவம், எங்களுக்குப் பாதுகாப்பாக வந்த 6 ராணுவ வீரர்கள் உயிரிழந்துவிட்டனர். உடனடியாக நாங்கள் மாற்று வழியில் பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டோம். பிரதமர் கூறிய பின்னர்தான் தெரிய வந்தது, அது எங்களைக் கொல்ல நடந்த தற்கொலைப்படைத் தாக்குதல் என்று. அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்து வந்தோம்.

ஆபத்துக்கு பயந்தால் இப்படிப்பட்ட இடங்களில் எப்படி சேவை செய்ய முடியும்?’’கொடுமைகளுக்கு ஆளாகும், குழந்தைகள், பெண்களை, தீவிரவாதிகளுக்குத் தெரியாமல் நாங்கள் மீட்டு வந்திருக்கிறோம். கடந்த மாதம் மட்டும் 250க்கும் மேற்பட்ட பெண்களை மீட்டுள்ளோம்.

-ஸ்டாலின் ஜெபசிங்