சீஸன் சாரல்



பாபனாசம் அசோக்ரமணி

மார்கழியிலும் மழை பொழியும் விநோத வருடத்தில் இருக்கிறோம். அந்த மழைக்கு நடுவிலும் இசை மழை பொழியத் தொடங்கிவிட்டது சபாக்களில்! அந்த சாரலின் துளிகளில் வாரா வாரம் நனைவோம் வாருங்கள்... கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் இசை விழாவில் ‘இசைப் பேரொளி’ பட்டம் சாகேதராமனுக்கும், ‘நடனமாமணி’ பட்டம் அன்வேஷ தாஸ் என்ற இளம் நடனக் கலைஞருக்கும் வழங்கப்பட்டது.

அதே கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் சார்பில் சுதா ரகுநாதன் கச்சேரி. நாரத கான சபை அரங்கு நிறைந்திருந்தது. ரசிக வெள்ளம் ‘சதா’, சுதாவிற்கு வருவதற்கு காரணம் அவருடைய தொடர்ந்த உழைப்பு, குரல் வளம், குருபக்தி எனப் பல.

பாலக்காடு மணி ஐயரிடம், ‘‘சிறந்த கலைஞர் என்பதற்கு அர்த்தம் என்ன?’’ என்று கேட்டபோது, ‘‘30 வருடங்களுக்கு மேல் திறமையாகத் தொடர்ந்து பாடி வருபவர்களைச் சொல்லலாம்’’ என்றார்.

அப்படிப்பட்ட சிறந்த கலைஞரான சுதாவின் அன்றைய கச்சேரிக்கு, ராகவேந்திர ராவ் வயலின், திருவாரூர் வைத்தியநாதன் மிருதங்கம், குருபிரசாத் கடம்.ஸஹானா வர்ணத்துடன் கச்சேரி ஆரம்பம். பிறகு சுதா பாடிய, ‘ரமா ரமண’ என்ற வஸந்த பைரவி கீர்த்தனையும், ‘எவரிதோ’ என்ற மானவதி ராக கீர்த்தனையும் தியாகராஜரின் அபூர்வ சிருஷ்டிகள்.

இந்த ராகத்துக்கு ஒரு கீர்த்தனைதான். பாடினால் புரியும் ராகம் என்று வழங்கியவர் தியாக ராஜர். கச்சேரியில் முதல் இரண்டு கீர்த்தனைகளாக தியாகராஜருடையதைப் பாடினாலே கச்சேரியின் தரம் உயரும் என்பது நிச்சயம். சுதாவின் குரலில் இந்த இரண்டு கீர்த்தனைகளும் ரசிகர்களுக்கு ‘இதோ வருகிறது அருமையான கச்சேரி’ என்ற முன்னோட்ட மாக மிளிர்ந்தன.

தன்யாசி ராகத்தை படிப்படியாக சுதா பாடியதில் சொக்கி, ‘தன்யனானேன்’ என்று ராகவேந்திர ராவ் வயலினில் இழைந்தார். ராகத்தை விவரித்து, மனோதர்மத்தின் எல்லை என்ன என்று காட்டும் வித்தை சுதாவிற்கு கை வந்த கலை. அந்த ‘தன்யாசி’யைக் கேட்டபோது, குரு எம்.எல்.வி அவர்களின் ‘ஆசி’ பரிபூர்ணமாக சுதாவிற்கு எப்போதும் உண்டு என்றே தோன்றியது.

தீட்சிதரின் ‘மாயூரநாதம்’ கீர்த்தனையை சுதா பாடியபோது, ‘இந்தக் கீர்த்தனையைக் கேட்டு எவ்வளவு நாளாச்சு?’ என்றது மனம். மாயவரத்தில் மாயூரநாதராக உள்ள சிவனின் மேல் எழுதப்பட்ட அருமையான முத்துஸ்வாமி தீட்சிதரின் கீர்த்தனை இது. திருவாரூர் வைத்தியநாதன் மிருதங்க நாதத்தில் இந்தக் கீர்த்தனையை, சுதாவின் குரலோடு சேர்ந்து கேட்டபோது ரசிகர்கள் சொக்கித்தான் போனார்கள்.

சிவ பெருமானின் சாபத்தினால் பெண் மயிலான அன்னை பார்வதி, மயிலாப்பூரிலும், பிறகு மாயவரத்திலும் சென்று மயூரநாதரை வழிபட்டதில் சாபம் விடுபட்டு அபயாம்பாள் என்று பெயர் பெற்றது புராணம்.

இங்கே சுதாவின் பாட்டைக் கேட்ட ரசிகர்கள் மெய் மறந்து, மயிலாப்பூரிலிருந்து மாயவரத்துக்கு பயணித்தது போல கட்டுண்டு இருந்தனர். மெயின் ராகம் கல்யாணி. ‘ஏதாவுனரா’ கீர்த்தனையை வைத்தி - குருபிரசாத் குழு அருமைப்படுத்தியது.

கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் சார்பில் ஓ.எஸ்.அருண் கச்சேரி, நாரத கான சபையில். வைத்தியநாதன் மிருதங்கம், கார்த்திக் கடம் என்று மேடையில் ஒரே கார்த்திகை தீபப் பிரகாசம். கச்சேரியை தன் சிரிப்பினாலேயே கவர்ந்திழுக்கும் முல்லை வாசல் சந்திரமௌலி, வயலின். இப்படி தெய்வீகப் பெயர்களைக் கொண்டவர்களின் கூட்டணியில் அந்தக் கச்சேரி எப்படி இருந்திருக்க முடியும்! ‘ஓ... யெஸ்!’ அமர்க்களம்தான்.

அருணின் குரல் குளுமை ரசிகர்களை மெய்மறக்கச் செய்தது. ‘ஹரி...’ என்று அந்த மேல் ஸட்ஜமத்தில் நிற்கும்போது, அனைவரும் சரணாகதி. ஹமீர்கல்யாணி ராகத்தில் மேதை டி.ஆர்.சுப்ரமணியத்தின் வர்ணம்.

கரஹரப்ரியா ராகத்தை விஸ்தாரமாகப் பாடி, ‘செந்தில் ஆண்டவன்’ என்ற பாபனாசம் சிவனின் கீர்த்தனையைப் பாடியபோது, பக்தி ரசம் பொங்கியது. பாபனாசம் சிவன் இந்த முருகன் மேல் பாட்டு எழுதும்போது, அதில் பல சரித்திரப் பின்னணிகளையும் பல அர்த்தங்களையும் ஒற்றை வரியில் கோர்த்துக் கொடுத்துவிட்டுச் சென்றவர்.

‘உந்தி கமல பெருமான் திருமால் மருகன்’ என்ற அனுபல்லவியில், ‘ பிரம்மாவின் உந்தியிலிருந்து உதித்த திருமாலின் மருமகன்தான் முருகன்’ என்கிறார். எப்படியெல்லாம் செந்திலாண்டவன் தொடர்பை வெளிப்படுத்த முடியுமோ, அப்படியெல்லாம் பாடிய பல மகான்களில் ஒருவர் அவர்.

இந்த கரஹரப்ரியா கீர்த்தனையை மிகவும் விரும்பிக் கேட்ட பலருள் ஒருவர், முருகனுடைய மாமன் ‘கிருஷ்ணர்’. நாரத ‘சாமி’ கானத்தை விரும்பிக் கேட்பவரான அவர், வருடம் முழுக்க ரசிகர்கள் இசை வெள்ளத்தைக் கேட்கும்படி அனுக்ரஹித்தவர். ‘ஸ்ரீவல்லி தேவஸேனாபதே’ நடபைரவி ராகம் மெயின். அருண் குரலில் இந்தப் பாட்டு நடமாடியது. அன்று கச்சேரி கேட்டவர்கள் திருவண்ணாமலை தீபத்தை நேரில் கண்டது போன்ற பாக்கியசாலிகள்.

தியாக பிரம்ம கான சபையில் சிக்கில் குருசரண் கச்சேரி. ப்ரியா சகோதரிகள், கத்ரி கோபால்நாத் போன்ற கலைஞர்களை துவக்க நாளில் ‘வாணிகலா சுதாகர’ விருதளித்து கௌரவித்தனர். ‘நின்னே பஜன’ கீர்த்தனையிலிருந்து குருசரணின் கச்சேரி கடைசி வரைக்கும் விறுவிறுவென்று இருந்தது.

எம்.நர்மதா வயலின், நெய்வேலி நாராயணன் மிருதங்கம், எஸ்.வி.ரமணி கடம் என அருமையான காம்பினேஷன். குருசரண் கச்சேரி என்றுமே சக்ஸஸ்தான். காரணம், குரல் இனிமை. ‘பரிபாலயமாம்’ கீர்த்தனை, கோபால ஐயரின் ‘தாமதம் தகாத ய்யா’ கீர்த்தனை என்று ஒவ்வொன்றும் மிளிர்ந்தது.

மோஹனகல்யாணி ராகத்தை குருசரண் கையாண்ட விதம், அருமையோ அருமை. நர்மதாவின் கையில் அந்த ராகம் விளையாடியது. ‘பாலிஞ்சு காமாக்ஷி’ மெயின். மத்யமாவதி ராக ஆலாபனை, நிரவல், நாராயணன் - ரமணி தனி ஆவர்த்தனம்... இப்படி கச்சேரி எங்கேயோ சென்று உயரத்தைத் தொட்டது.

இளம் கலைஞர் அனன்யா அசோக் கச்சேரி ஆர்.ஆர்.சபை சார்பில் நடந்தது. நல்ல குரல் வளமும், பாடாந்திர சுத்தமும் உள்ள அனன்யாவிற்கு சங்கீத உலகில் நல்ல எதிர்காலம் உண்டு என்று அந்தக் கச்சேரி உறுதிப்படுத்தியது. பந்துவராளி வர்ணம், ‘ஸ்வாமிநாத பரிபாலய’ நாட ராக கீர்த்தனை, ‘ராமநந்நு’ ஹரிகாம்போதி, ‘கனகசைல’ என்ற புன்னாகவராளி... இப்படி சம்பிரதாயச் சுத்தமாகப் பாடினார். சாவேரி ராக ஆலாபனையும், லலிதா தாசர் இயற்றிய ‘இனியாகிலும்’ கீர்த்தனையும் அருமை. தாளம் சற்று இழுப்பு, ஓட்டம் இருந்தபோதும் அக்ஷய் மிருதங்கம் மிளிர்ந்தது. இளம் வயலின் கலைஞர் விஜய் அருமை.

படங்கள்: புதூர் சரவணன்