நியூஸ் வே



*‘ஐ’ ரிலீஸ் ஆகப் போகிறது. அடுத்தடுத்து தனுஷ், உதயநிதி படங்களில் வரிசை கட்டி நடிப்பதால், சென்னைக்கும் லண்டனுக்கும் பறப்பதை விட்டு விட்டு, மும்பையில் வீடு பார்த்து செட்டில் ஆகும் ஐடியாவில் இருக்கிறார் எமி. ‘‘கோலிவுட்டில் பிஸியாக இருக்கும் பொண்ணுக்கு மும்பையில் வீடு ஏன்?’’ என கேட்காதீங்க ப்ளீஸ். மும்பையில் வீடு இருந்தா, பாலிவுட் பக்கம்தானே...

*விஜய் நடிக்கிற, சிம்புதேவன் டைரக்ட் செய்கிற படம், ஒரு நாள்கூட இடைவெளி இல்லாமல் கடகடவென வளர்ந்து வருகிறது. கேமரா கோணங்கள் கூட முன்பே தீர்மானிக்கப்பட்டு விட்ட
தாலும், ஸ்கிரிப்ட் பக்கா என்பதாலும், செட் என்பதாலும், காட்சிகள் வேகமாக சுடப்படுகின்றன. படத்தின் இந்தி ரைட்ஸ் அதற்குள் ஸ்ரீதேவி கைகளுக்குப் போய் விட்டது.

*ஒவ்வொரு படமும் ரிலீஸ் ஆகும்போதும் அதன் வெற்றி, ரசிகர்கள் வரவேற்கும் விதம், வசூல், மைனஸ் பற்றியெல்லாம் முக்கியமான விநியோகஸ்தர்கள், நண்பர்களிடம் ரஜினி கேட்டுத் தெரிந்து கொள்வார். ‘லிங்கா’ பற்றி அப்படியொரு விசாரணை அவர் பக்கம் இருந்து வரவேயில்லை என ஆச்சரியப்படுகிறார்கள் நண்பர்கள். அவர் மனசில் என்ன நினைப்போ?

*‘காவியத்தலைவன்’ கை கொடுக்காததால் கன்னடத்திற்கு செல்கிறார் வேதிகா. அங்கே சிவராஜ்குமாரை வைத்து, பி.வாசு இயக்கும் ‘சிவலிங்கா’வில் வேதிகாதான் ஹீரோயின். 

*நிஜ ஜோடியாகிவிட்ட பஹத் ஃபாசில் - நஸ்ரியா திருமணத்திற்கு முன்பு நடித்து ஹிட் அடித்த ‘பெங்களூர் டேஸ்’ இப்போது தெலுங்கிலும் தமிழிலும் ரீமேக் ஆகிறது. ‘பொம்மரிலு’ பாஸ்கர் இயக்குகிறார். சித்தார்த் - சமந்தா ஜோடி சேரும் இப்படத்தில் ஆர்யாவும் கமிட் ஆகியிருக்கிறார்.

*விஜய்சேதுபதி நடிக்கும் ‘நானும் ரவுடிதான்’ சூடு பிடிக்கும் வேகம்... ஆச்சரியம். பாண்டிச்சேரி யில் அல்லும்பகலுமாக ஷூட்டிங் நடக்கிறது. 10 கிலோ மெலிந்த சேதுபதி, தன் இஷ்ட ஹீரோயினோடு உற்சாகமாக நடித்துக் கொண்டிருக்கிறார். மற்ற ஷூட்டிங் எல்லாவற்றுக்கும் விட்டாச்சு லீவு! இதற்குத் தான் ஆசைப்பட்டாயா பாலகுமாரா?

*செல்போன் நம்பரை மாற்றியிருக்கிறார் கானா பாலா. ‘‘பழைய நம்பர் எல்லாருக்கும் தெரியும். அதனால லோக்கல் கால்ல இருந்து ஐ.எஸ்.டி. கால் வரை கண்ட நேரத்திற்கு போன் வரும். தூக்கமே போச்சு. அதான் நம்பரை மாத்திட்டேன்’’ என்கிறார் ஹாட்டாக!

*பிரியதர்ஷனுடனான பிரிவிற்குப் பிறகு மீண்டும் நடிக்க வருகிறார் லிசி. ‘தங்கமீன்கள்’ ராம் இயக்கி வரும் படத்தில் 45 வயது பெண் கேரக்டரில் நடிக்கிறார் லிசி. அவரது சினிமா என்ட்ரியை தோழிகள் பலரும் வரவேற்றுள்ளனராம்.

2015 பூனம் பஜ்வாவிற்கு பிரகாசமான ஆண்டு. ரீ-என்ட்ரி யில் ஜெயம் ரவியுடன் ஒரு படம், விஷாலுடன் ஒரு படம் என முடித்திருக்கிறார். இதில் விஷாலின் ‘ஆம்பள’யில் ஒரு பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டு குஷிப்படுத்தியிருக்கிறார் பளபள பஜ்வா.

*சொந்த வாழ்க்கைப் பிரச்னைகளி லிருந்து மீண்டு, யுவன் புதுத்தெம்புடன் இயங்க ஆரம்பித்திருக்கிறார். ‘‘இனி அவர் அடுத்தடுத்து ஹிட் கொடுப்பார்’’ என்கிறார்கள் அவரது நெருங்கிய வட்டத்தினர். வாங்க, கலக்குங்க!

*மக்களுக்காக உழைத்த முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர்களின் சுவாரஸ்யமான வாழ்க்கைப் பின்னணிகளைத் தேடிக் கண்டுபிடித்துப் படிக்கிறார் கமல். அடுத்த படத்துக்கான ஐடியா?

*இனி சினிமாவில் கவனம் செலுத்தும் முடிவுக்கு வந்துவிட்டார் அமீர். அதற்காகவே பெப்ஸி வேலைகளை விட்டு ஒதுங்கியாச்சு. அமீர் அண்ணனுக்கு தம்பி ஆர்யா கைகொடுத்து கால்ஷீட் கொடுத்திருக்கிறார்.

*ஒருவழியாக ஹாரிஸ் ஜெயராஜ், ‘என்னைஅறிந்தால்’ படத்திற்கு பாடல்களை முடித்துக் கொடுத்துவிட்டார். ‘மாண்டேஜ்’ பாடல் என்பதால் அனுஷ்காவை வைத்து கடகடவென முடித்துவிட்டார்கள். இந்தப் பொங்கலுக்கு ‘தல’ கண்டிப்பாக வர்றார்.

*தமிழில் பாக்ஸராக நடிக்கும் படத்திற்காக நீண்ட தலைமுடி, தாடி, மீசை என பல மாதங்களாக வித்தியாச கெட் அப்பில் இருந்தார் மாதவன். அந்த படத்தை முடித்ததும் பழைய பன்னீர்செல்வமாக மாறி இந்திப் படங்களில் நடித்து வருகிறார் மேடி. ‘‘ஷேவ் பண்ணி, தலைமுடி வெட்டின பிறகு புதுப்பிறவி எடுத்தது போல் இருக்கிறது’’ என்கிறார்.

*சிம்புவின் ‘இது நம்ம ஆளு’வில் இரண்டு பாடல்கள் தவிர மற்ற எல்லாம் முடிந்து விட்டது. குறளரசன் அந்தப் பாடல்களை முடித்துக் கொடுத்தால்தான் படம் முடியும். அவருக்காக யூனிட்டே காத்திருக்கிறது.

*அனிருத் இரண்டு மாதம் ஜாலியாக லண்டன் வரைக்கும் போய் சுற்றிவிட்டு வந்திருக்கிறார். இது இசை சம்பந்தப்பட்ட டூர் இல்லை. நேரம், காலம் இல்லாமல் உழைத்ததற்கு இது ரிலாக்ஸ் பயணம். ‘‘செலவான தொகை எக்கச்சக்கம்’’ என அவரது நண்பர்கள் கூட்டம் கண் சிமிட்டுகிறது.

*விஜயகாந்தின் மகன் சண்முகப்பாண்டியன் ஹீரோவாக அறிமுகமாகும் ‘சகாப்தம்’ படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. தாய்லாந்து நாட்டில் பட்டாயா கடற்கரையில் ஒரு ஃபைட் சீனை 60 லட்சம் ரூபாய் செலவில் எடுத்திருக்கிறார்கள். 20 தாய்லாந்து ஃபைட்டர்கள் அதில் பங்கேற்றுள்ளனர். இதுதவிர அந்நாட்டின் பாரம்பரிய வாள் சண்டை வீராங்கனைகளோடும் மோதி கேப்டனின் பெயரைக் காப்பாற்ற முயன்றிருக்கிறாராம் சண்முகப்பாண்டியன்.