மனக்குறை நீக்கும் மகான்கள்



ஸ்ரீஅரவிந்த அன்னை

மனிதன் தெய்வீகத்தன்மையைப் பெற மூன்று
விஷயங்களோடு தொடர்பில் இருக்க வேண்டும்.
அவை: இயற்கை... இசை... இறைவன்!

‘மிரா ஏன் இப்படிச் சொன்னாள்?

உலகத்தையே சுமந்து கொண்டிருக்கிறாயா என்று கேட்டால், ஆமாம் என்கிறாளே... இந்த அளவுக்கு ஒரு சிறுமிக்கு முதிர்ச்சி இருப்பது சாத்தியமா?மோரிஸ் அன்று தோட்டத்தில் மிராவைப் பற்றி சொன்னபோது பட்டும்படாமல் பேசினோமே... உண்மையில் இவள் என் மகள்தானா? இல்லை... எல்லாரும் சொல்வது போல... நம்பிக்கொண்டிருப்பது போல... உலகத்தின் துன்பத்தை எல்லாம் துடைக்க கடவுள் இந்த தேவதையை அனுப்பி இருக்கிறானா?

இவள் என்னோடு நீடித்திருப்பாளா? இல்லை, என்னை விட்டுவிட்டுப் போய்விடு வாளோ?’ - மதில்தா மனதில் அச்சமும் கேள்விகளும் அலை அலையாய் பொங்கின.உடல் நடுங்கியது. கால்கள் தரையில் பதிய மறுத்துத் துவண்டன. கண்கலங்க மிராவை அணைத்துக் கொண்டாள் மதில்தா. தாயின் நெஞ்சில் சாய்ந்த மிரா, இரண்டு கைகளாலும் மதில்தாவை வளைத்துக்கொண்டாள். அப்போதே அன்னையின் மன ஓட்டத்தையும் கணித்தாள்.

‘‘அம்மா கவலைப்படாதே... நான் உன்கூடத்தான் இருப்பேன். எங்கேயும் போய்விட மாட்டேன். என்னால இங்கிருந்தே எல்லாத்தையும் பார்த்துக்க முடியும்’’ என்றாள்.திடுக்கிட்ட மதில்தா, மிராவின் கன்னத்தை ஏந்தி முகத்தை நிமிர்த்தினாள். மகளின் கண்களை கனிவோடு நோக்கினாள். பளிச்சென்ற சிரிப்போடு எதிர்கொண்ட மிராவின் கண்களைப் பார்க்கும்போதே மதில்தாவின் மனசு லேசானது.

இதுவரை மனதை சலனப்படுத்திய விஷயங்களெல்லாம் மறைந்து மகளின் மலர்ந்த முகம் மட்டும் மனதில் நின்றது. பனித்த கண்களைத் துடைத்துக்கொண்டாள். ‘‘என் கூடவே இருப்பியா பட்டுக்குட்டி? அது போதும் செல்லம்’’ என முத்தமிட்டாள். அன்னையாய் மலர்ந்த மிராவின் கண்களுக்கு இருந்த அன்பின் சக்தி முதன்முதலாக மதில்தாவுக்கு தரிசனமானது. கோகுலத்துக் கண்ணனின் சக்தி யசோதைக்கு உணர்த்தப்பட்டது போல!

மிரா தெய்வீக சக்தியுடன் தொடர்பில் இருந்தாலும் மனிதர்களைப் படிக்கத் தவறவில்லை. இந்த உலகில் மனிதர்கள் எப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் எப்படியெல்லாம் நடந்து கொள்கிறார்கள் என கவனித்தாள். அதன் சாதக, பாதகங்களை தனக்குள்ளாகவே குறித்துக்கொண்டாள். ஒரு நாள் மிரா வீட்டின் கூடத்தில் இருக்கும் ஜன்னல் வழியாக தோட்டத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். அண்ணன் விளையாடிக் கொண்டிருந்தான்.

அப்போது யாரோ மதில்தாவை அழைப்பது கேட்டது. மதில்தா தன் பணியாளரை அழைத்தாள். ‘‘நான் வீட்டில் இல்லை என்று சொல்’’ எனச் சொல்லி அனுப்பினாள்.அமைதியாக கவனித்துக் கொண்டிருந்த மிராவுக்கு இது அதிர்ச்சியாக இருந்தது.‘அம்மா வீட்டில் இருந்து கொண்டே இல்லை எனப் பொய் சொல்லச் சொல்கிறாளே...’ என வருந்தினாள் மிரா. ஏன் பொய் சொன்னாள்? எதற்காகச் சொன்னாள் என்பது எல்லாவற்றையும் தாண்டி அம்மா சொன்னது பொய் என்பது அவளது உள்ளத்தில் ஆழமாகப் பதிந்தது.

அதேபோல மற்றொரு நாள் மிரா வீட்டில் தனியாக அமர்ந்திருந்தாள். அண்ணன் மத்தயோ வந்தான்.‘‘மிரா இங்க வா... இந்த ஸ்டூலில் ஏறு.’’ஏறினாள்.‘‘அந்த அலமாரி மேல ஒரு பொட்டலம் இருக்கு பாரு. அதை எடு’’ என்றான்.எடுத்துக் கொடுத்தாள்.அதை கீழிருந்து வாங்கிக்கொண்ட மத்தயோவின் முகத்தில் அத்தனை பிரகாசம்.

இருக்காதா பின்னே! அது மிட்டாய் பொட்டலம்.‘‘மிரா, இதை நான்தான் எடுத்தேன்னு அம்மாகிட்ட சொல்லக் கூடாது’’ என்றபடி கை நிறைய மிட்டாய்களை எடுத்து மிராவிடம் நீட்டினான். மிரா, ‘‘வேண்டாம்’’ என்று வாங்க மறுத்தாள்.

மிரா மிட்டாயை வாங்கிக் கொள்ளாததால் மத்தயோவுக்கு பயம். ‘‘மிரா, அம்மாட்ட சொல்லிடாத’’ என்று கெஞ்சினான். மௌனமாக அந்த இடத்தை விட்டு அகன்றாள் மிரா.
மாலை. மதில்தா கடுங்கோபத்தோடு இருவரையும் அழைத்தாள்.‘‘அலமாரியில நான் வச்சிருந்த மிட்டாய் பொட்டலம் எங்கே? நான் வச்ச இடத்தில் காணோமே’’ எனக் கேட்டாள்.
மத்தயோ எனக்குத் தெரியவே தெரியாது என சாதித்தான்.

மிரா உண்மை தெரிந்தும் மௌனம் காத்தாள். பொய் சொல்வது மாத்திரமல்ல; தனக்குத் தெரிந்த உண்மையை மறைப்பது கூட எத்தனை வேதனை என்பது மிராவுக்குப் புரிந்தது. வாய்மையின் மகத்துவம் அந்தப் பிஞ்சு மனதில் ஆழமாய் பதியமானது! அம்மாவுக்குத் தெரியாமல் எடுத்துச் சாப்பிட்ட அந்த மிட்டாய் கசக்காதா என்கிற கேள்வியோடு அண்ணனைப் பார்த்தாள்.அவன் தலை கவிந்து நின்றான்.

மிராவுக்கு அண்ணன் மீது பிரியம் அதிகம். அவனது குறும்புகள், சின்னச் சின்ன திருட்டுகள் எல்லாவற்றையும் தாண்டி, அவனை ஆழமாய் நேசிக்கவே செய்தாள். பள்ளிக்கூடம் போன புதிதில் அவனுடன் தெருவில் நடந்து சென்றாள்.அப்போது சுவரில் வண்ணமய மான பெரிய பெரிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. அதில் பொறிக்கப்பட்டிருந்த எழுத்துக்களைச் சுட்டிக் காட்டி, ‘‘இது என்ன அண்ணா?’’ என்று கேட்டாள் மிரா.

‘‘இது கூட உனக்குத் தெரியாதா?’’ என மத்தயோ கேலி செய்தான். மிரா மனம் வருந்தினாள். ‘தனக்குத் தெரிந்ததை அடுத்தவருக்குச் சொல்லித்தர வேண்டும் என்கிற எண்ணம் ஏன் அண்ணனுக்கு இல்லை?’ என்று வருந்தினாள்.

‘அண்ணன் மனம் மாற வேண்டும்’ என விரும்பினாள்.அடுத்து சில நாட்களில் ஒரு படக்கதை புத்தகத்தை வைத்துக்கொண்டு மத்தயோ பார்த்துக் கொண்டிருந்தான். தனக்குத்தானே ஏதோ சொல்லி சிரித்தான்.

அங்கு வந்த மிரா, ‘‘என்ன அண்ணா? தனியா சிரிக்கறே! எனக்கும் சொல்லேன்’’ என்றாள்.என்ன ஆச்சர்யம். மத்தயோ தங்கையை அருகில் அமர்த்தி சித்திரக் கதையை விளக்கிச் சொல்ல ஆரம்பித்தான். எழுத்துக்களைப் பற்றி விளக்கினான். மிராவுக்கு மிகுந்த சந்தோஷம். ஆர்வமாகக் கற்றுக்கொண்டாள். அண்ணனிடம் ஏற்பட்ட மாற்றம் அவளுக்குள் குதூகலமாய் இருந்தது.மிராவுக்குத் தெரியாமலேயே அவளது எண்ணம் செயலாவதை யாரும் அறியவில்லை.

அந்த வகுப்பிற்கு புதிதாய் ஒரு மாணவன் வந்திருந்தான். ரொம்பவும் வால் பையன். எல்லோரையும் வம்புக்கு இழுத்துக்கொண்டே இருப்பான். பெண்களின் ஜடையை இழுப்பது. முதுகில் அடிப்பது என அவனது சேட்டைகள் எல்லை மீறின.பெண்கள் பலவீனமானவர்கள் என்பது அவனது எண்ணம்.

ஆகவே வகுப்பில் மாணவிகளைத் துன்புறுத்துவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தான்.ஒருநாள் அவனுக்கு நேரம் சரியில்லை போலும். மிராவிடம் வந்தான். வம்பிழுத்தான். தொணதொணவென ஏதேதோ பேசினான்.

எப்போதும் தியான மனநிலை யில் இருக்கும் மிராவால் இதை சகித்துக்கொள்ள முடியவில்லை. ‘‘அமைதியாக பேசாதிரு சகோதரா!’’ என சொல்லிப் பார்த்தாள் மிரா.
கேட்கவில்லை.பொறுமை எல்லை தாண்ட, ‘‘அமைதியாய் இருன்னா கேட்க மாட்டியா?’’ என்றபடி அவனை அப்படியே தூக்கிக் கீழே போட்டாள்.பையன் வெலவெலத்துப் போனான். தன்னைவிட இரண்டு மடங்கு அதிக எடையுள்ள பையனைத் தூக்கி வீசுவது சாதாரணமா என்ன?மிரா உக்கிரமாய்த் தெரிந்தாள். ‘‘இனிமே இப்படிச் செய்ய மாட்டேன்’’ என்று மன்னிப்புக் கேட்டு விட்டு ஓடி ஒளிந்தான் அந்த போக்கிரிச் சிறுவன்.

மிராவோ எதுவும் நடக்காதது போல வகுப்பறையில் இருந்து நகர்ந்தாள்.அன்று ஞாயிற்றுக்கிழமை. பள்ளி விடுமுறை. இளவெயில் மிக இதமாய் இருக்க, மிராவின் நண்பர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தார்கள். ‘‘மிரா, இன்னைக்கு நல்லா வெயில் அடிக்குது. நாம எல்லாம் ஒண்ணா விளையாடலாம். என்ன விளையாடலாம்னு நீயே சொல்லேன்’’ என்றபடி சூழ்ந்துகொண்டார்கள்.

‘‘ஸ்கூல்லயும்தான் விளையாடறோம். இங்கேயுமா? வேற ஏதாவது செய்யலாம். என்ன செய்யலாம்னு சொல்லுங்க’’ என சாய்ஸை நண்பர்களுக்கே தந்தாள் மிரா.
‘‘பார்க் போகலாம்... நூலகம் போகலாம்...’’ என ஆளுக்கு ஒரு ஐடியா  சொல்லிக்கொண்டே போக, மிரா நிறுத்தினாள்.

‘‘நாம எல்லாம் இன்னைக்கு பக்கத்துல இருக்கற காட்டுக்குள்ள போறோம். இப்ப போய் மாலை வரைக்கும் அந்த வனத்தை சுத்திப் பார்க்கறதுதான் வேலை’’ என்றாள்.‘‘காட்டுக்குள்ளயா? ஐயோ நான் வரலைப்பா. எனக்கு பயமா இருக்கு. அம்மாவுக்குத் தெரிஞ்சா அடிப்பாங்க’’ என்றாள் ஒருத்தி!‘‘அட! நாம இத்தனை பேர் இருக்கும்போது பயப்படலாமா? எல்லாம் ஒண்ணா போறோம்னு சொன்னா திட்ட மாட்டாங்க. பொய்தான் சொல்லக் கூடாது!’’ - தைரியம் தந்தாள் மிரா.எல்லோரும் கலைந்தார்கள்... அவரவர் வீட்டுக்குச் சென்று குடிக்கத் தண்ணீர், தின்பண்டங்கள் என சேகரித்துக்கொண்டு திரும்பினார்கள்.

மிரா ஒரு தளபதி போல பேசத் தொடங்கினாள்.‘‘யாரும் தனியா போகக் கூடாது; கண்டதைப் பறித்து, எடுத்து சாப்பிடக் கூடாது; அழகாய் இருக்கும்... ஆனால் அது விஷப் பழமாகவும் இருக்கலாம். தரையைப் பார்த்து நடக்கணும்” - குறிப்புகள் சொல்லிக்கொண்டே... “சரி போகலாம்’’ என உத்திரவாய் சொன்னாள். எல்லோரும் பின் தொடர்ந்தார்கள், மிராவின் வாழ்வில் இன்றொரு அதிசயம் நடக்கப் போகிறது என்பதை அறியாமலே! அந்தக் குன்றும் பள்ளத்தாக்கும் மட்டும் காற்றை சப்தமாய் எதிரொலித்துச் சொன்னது... ‘வா... மிரா... வா!’

வரம் தரும் மலர்கள்

மனக்கவலை நீக்கும் வெள்ளை அரளி!


உண்மையாக யோசித்துப் பார்த்தால், 90 சதவீத மனக்கவலை நாமே உருவாக்கிக் கொண்டதாகவே இருக்கும். திட்டமிட்டுச் செயலாற்றுதல், மற்றவர்களை மதித்தல், உண்மையாக இருத்தல் ஆகிய நல்ல பண்புகளை வளர்த்துக்கொண் டால் மனக்கவலை மாயமா கும். இந்த நல்ல பண்புகளை நமக்கு அன்னையிடமிருந்து பெற்றுத்தரும் சக்தி வெள்ளை அரளிப் பூவுக்கு இருக்கிறது. அன்னைக்கு வெள்ளை அரளிப்பூவை சமர்ப்பித்து, பிரார்த்தனை செய்துகொள்ள,  நம்முள்ளும் நல்ல மாற்றம் நிகழும். எதிரிகளால் உண்டாகும் மனக்கவலையும் நீங்கும்!

(பூ மலரும்)

எஸ்.ஆர்.செந்தில்குமார்