All about வில்லங்கச் சான்றிதழ்!



‘அவன் வில்லங்கமான ஆளு’ என்பார்கள் நம் ஊரில். வில்லன் என்பதைத்தான் அப்படிச் சொல்கிறார்களோ என்று நினைத்திருப்போம். நமக்கென ஒரு வீடோ நிலமோ வாங்கப் போகும்போதுதான், ‘வில்லங்கம் பார்த்தாச்சா’ என்ற விசாரணையை எதிர்கொள்வோம்.

 சொத்து வாங்குகையில் இந்த வில்லங்கச் சான்றிதழ்தாங்க ஹீரோ! ஒரு நிலத்தின் பூர்வாங்க ஜாதகத்தையே புட்டுப் புட்டு வைத்துவிடும் வில்லங்கச் சான்றிதழ் பற்றி விளக்கம் தருகிறார் சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞர் சண்முகசுந்தரம்...

* ஏன் வில்லங்கச் சான்றிதழ்?

வில்லங்கச் சான்றிதழை ஆங்கிலத்தில் என்கம்பரன்ஸ் சர்ட்டிஃபிகேட் என்பார்கள். சுருக்கமாக இ.சி. எந்தச் சொத்து வாங்கும்போதும், இந்தச் சான்றிதழை வாங்கி சரி பார்ப்பது கட்டாயம். ஒரு நிலத்தின், சொத்தின் மேல் இருக்கும் கடன், அடமானம், பிரிவினை என சகல விதமான பரிவர்த்தனைகளையும் இந்த வில்லங்கச் சான்றிதழ் தெள்ளத் தெளிவாகச் சொல்லிவிடும். சட்டச் சிக்கல் உள்ள நிலத்தை வாங்கிவிட்டு பிறகு கோர்ட் கேஸ் என்று அலைவதை விட இ.சி பார்த்து நிலம் வாங்குவதே ஈஸி!

* விண்ணப்பிக்கும் முறை

வில்லங்கச் சான்றிதழுக்காக விண்ணப்பிக்க இரண்டு வழிமுறைகள் உண்டு. ஒன்று, நேரடியாக பதிவாளர் அலுவலகங்களில் விண்ணப்பிப்பது. இரண்டாவது, ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை. நேரடியாக விண்ணப் பிக்கிறவர்கள், அந்த சொத்து அடங்கியிருக் கும் சார்பதிவாளர் அலுவலகத்திலோ, அல்லது சம்பந்தப்பட்ட மாவட்ட பதிவாளர் அலுவலகத்திலோ அல்லது சென்னை தலைமை பதிவாளர் அலுவலகத்திலோ நேரடியாக விண்ணப்பிக்கலாம்.

பொதுவாக, காலையில் விண்ணப்பித்தால் மாலை ஐந்து மணிக்கே வில்லங்கச் சான்றிதழைப் பெற்றுவிடலாம். சில சமயம் அடுத்த நாள் வரை ஆகலாம். அதற்கு மேல் ஆகாது! 1987ம் ஆண்டு முதல் உள்ள ஆவணங்கள் எல்லாம் தற்போது கணினி மயமாக்கப்பட்டுவிட்டன. அதற்குள் உள்ள விவரங்களை எந்தப் பதிவாளர் அலுவலகத்திலும் விண்ணப்பித்து உடனே பெற்றுக்கொள்ளலாம்.

ஒருவேளை அதற்கு முந்தைய வில்லங்கத்தையும் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால்... அதாவது, இன்றிலிருந்து 27 வருடங்களுக்கும் முந்தைய வரலாறு உங்களுக்கு வேண்டுமென்றால், சொத்து எந்த வரம்பிற்குள் வருகிறதோ, அந்த சார்பதிவாளர் அலுவலக த்தில் நேரடியாக விண்ணப்பிப்பதே சரி.

* ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாமா?

ஆன்லைன் மூலம் உட்கார்ந்த இடத்தில் இருந்துகொண்டே வில்லங்கச் சான்றிதழுக்காக விண்ணப்பிக்கலாம். ஆனால், சான்றிதழை கணினி வழியாகப் பெற முடியாது. தபால் மூலம் பெறுவது, சம்பந்தப்பட்ட பதிவாளர் அலுவலகத்தில் நேரடியாகச் சென்று வாங்கிக்கொள்வது என இதற்கு இரண்டே ஆப்ஷன்தான்.

பொதுவாக தபாலில் வாங்கிக்கொள்ளும் முறையை இப்போது யாரும் விரும்புவதில்லை. நேரடியாக வாங்கிக்கொள்வது என்ற ஆப்ஷனை க்ளிக் செய்த உடனேயே எந்த மாவட்ட தலைமை பதிவாளர் அலுவலகத்தில் போய் வாங்க வேண்டும் என முகவரியுடன் ஒப்புதல் ரசீது வரும். இந்த ரசீது 7 நாட்கள் வரை செல்லுபடியாகும். இதைக் கொண்டுபோய் மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் கொடுத்து சான்றிதழைப் பெற்றுக்கொள்ளலாம். 7 நாளில் சான்றிதழ் கிடைக்காவிடில் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

* விண்ணப்பிக்க என்ன தேவை?

வில்லங்கச் சான்றிதழுக்காக விண்ணப்பிக்கும்போது சொத்து பற்றிய முழு விவரத்தையும் தரவேண்டியது விண்ணப்பதாரரின் கடமை. அந்தச் சொத்தின் சர்வே எண், சர்வே எண்ணின் உட்பிரிவு, மனை எண், தெருவின் பெயர், கிராமத்தின் பெயர், தாலுகா பெயர், மாவட்டத்தின் பெயர், எந்தத் தேதி... எந்த மாதம்... எந்த வருடத்திலிருந்து எந்த வருடம் வரை சொத்து விவரம் வேண்டும் என்பன போன்ற தகவல்களைக் கொடுக்க வேண்டும். பொதுவாக, கடந்த 15 வருடங்களுக்கான சொத்து பரிவர்த்தனைகளைக் கேட்பது நல்லது.

* என்னென்ன தெரியும்?

ஒரு சொத்து கை மாறியுள்ளதைக் காண்பிக்கும் கிரயப் பத்திரங்கள், செட்டில்மென்ட் பத்திரங்கள், ஒரு சொத்தில் எனக்கு பாகம் வேண்டாம் என்று சொல்லும் விடுதலைப் பத்திரங்கள், சொத்தின் மேலுள்ள நீதிமன்ற தீர்ப்புகள், குத்தகை பத்திரங்கள், பவர் ஆஃப் அட்டார்னி எனப்படும் அதிகாரப் பத்திரங்கள், அடமானப் பத்திரங்கள், பாகப்பிரிவினைப் பத்திரங்கள், கொடைகள் போன்ற பரிவர்த்தனைகளை வில்லங்கச் சான்றிதழ் தெள்ளத் தெளிவாகச் சொல்லிவிடும்.

* விண்ணப்பிக்காமலே தெரிந்து கொள்ள...


‘இவ்வளவு ஆழமாக வேண்டாம், ஒரு சொத்து பற்றி மேலோட்டமாக சில விவரங்களைத் தெரிந்துகொண்டாலே போதும்’ என்கிறவர்களுக்காகவே ஆன்லைன் வசதி ஒன்று உள்ளது. இதன்படி, ஒரு சொத்தின் சர்வே நம்பரை உள்ளிட்டாலே அதன் உட்பிரிவு நிலங்கள் அனைத்தையும் பட்டியலாக கணினித் திரையில் பார்க்கலாம். இதன் மூலம் நம் நிலம் பதிவில் உள்ளதா எனப் பார்க்கலாமே தவிர, யார் பெயரில் உள்ளது என்பன போன்ற தகவல்கள் இதில் கிடைக்காது.

- டி.ரஞ்சித்